நடிகர் விஜய் மாஸ் ஹீரோ! முதல்வர் விஜய் ஹீரோவா – வில்லனா?

மிச்சம் மீதி இருக்கும் சிறிய கிளினிக்குகளும் ஆய்வகங்களும் பிசியோதெரபிஸ்ட் கூடங்களும் மறையப் போகின்றன. அல்லது கார்ப்பரேட் மருத்துவமனைகளின் காலடியில் போய் “அடிமையாக சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று கெஞ்சப் போகின்றன. இதற்காகத்தான் மோடி அரசு புதிய விதிகளை புகுத்தி வருகிறது.

1

யக்குனர் அட்லீ இயக்கத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான “மெர்சல்”  படம், ஏழை மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் (ஒரு ரூபாய்) மருத்துவம் பார்க்கும் ‘வெற்றி’ என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருந்தார்.

அப்படத்தில் அவர் மருத்துவம் தருவதை விரும்பாத மருத்துவ கார்ப்பரேட்டுகள் அவரை அழிக்க துடிப்பதாகவும் அவர்களை மோதி அழிப்பதாகவும்  நடித்திருப்பார்.

அந்த நடிகர் விஜய் தான் தற்போது தமிழகத்தின் முதலமைச்சர். முதலமைச்சர் விஜய் ஒரு ரூபாயில் மருத்துவம் பார்ப்போர் பக்கமா? அல்லது அந்த மருத்துவரை அழிக்க துடித்த கார்ப்பரேட்டுகள் பக்கமா?

சுற்றி வளைக்கும் கார்ப்பரேட் மலைப் பாம்பு!

இந்திய அரசு ஒட்டுமொத்த நாட்டையே, நாட்டில் உள்ள அனைத்து துறைகளையுமே கார்ப்பரேட்டுகளுக்கு எழுதித் தந்து விட வேண்டும் என்று வெறி கொண்டு அலைகிறது.

பிரியாணியில் லெக் பீஸ் போடு என்று கேட்டு வாங்குவது போல கார்ப்பரேட்டுகள் விரும்பி கேட்பது மருத்துவத்துறை. இங்கு மட்டும்தான் மக்கள் பேரமே பேசாமல் பணத்தை கொட்டுகிறார்கள்.

நோயைப் பற்றியோ, நோய்க்கு தரப்படும் சிகிச்சை பற்றியோ, ஐசியூவுக்குள் என்ன நடக்கிறது என்பதை பற்றி எல்லாம் பெரும்பான்மையான மக்களுக்கு புரிந்து கொள்ளும் மருத்துவ அறிவு கிடையாது. அப்படிப்பட்ட புரிதல் உள்ளவர்களாக நம்மை பயிற்றுவிக்கவும் இல்லை.

எனவேதான் விற்பதற்கும் அடமானம் வைப்பதற்கும்  வீடோ, தோட்டமோ அல்லது நகைகளோ இல்லாத ஏழை மக்கள் அரசு மருத்துவமனைக்கு ஓடுகிறார்கள்; அல்லது நேரடியாக மருந்து கடைகளில் நோயை சொல்லி மாத்திரைகளை வாங்கி முழுங்குகிறார்கள். அல்லது சிறிய கிளினிக்குகளை நடத்தி வரும் மருத்துவர்களை நாடுகிறார்கள்.

கையேந்திபவன்களாக கை கொடுக்கும் சிறிய கிளினிக்குகள்!

இந்தத் துறையில் கார்ப்பரேட்டுகளுக்கு தொல்லையாக இருப்பது சிறிய அளவில் நடத்தப்பட்டு வரும் மருத்துவமனைகளும் பரிசோதனை நிலையங்களும் பிசியோதெரபி கூடங்களும் ஆகும். இவை கார்ப்பரேட் மருத்துவமனையில் ஒப்பிடும் பொழுது மலிவான செலவில் சிகிச்சையை வழங்குகின்றன. அதாவது விஜய்யின் ஒரு ரூபாய் டாக்டரை நினைவு படுத்துகின்றன.

கார்ப்பரேட்டுகளின் அடியாளான மோடியின் அரசானது, இந்த சிறிய மருத்துவமனைகளையோ, பரிசோதனை கூடங்களையோ, பிசியோதெரபி கூடங்களையோ விரும்பவில்லை. மருத்துவ கார்ப்பரேட்டுகளின் ஆலோசனையின் படி இவற்றை ஒழிக்க புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது.

கோடீஸ்வரர்களையே புலம்ப வைக்கும் கட்டண கொள்ளை!

மருத்துவமனைகளை நடத்துவதற்கான அனுமதியை 5 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். அனுமதி வாங்க வேண்டும் என்றால் புதிய விதிப்படி ஒவ்வொரு துறையிடமும் சான்றிதழ்கள் தேவை. இதனால் ஒவ்வொன்றுக்கும் லட்சக்கணக்கில் செலவு செய்தாக வேண்டி உள்ளது. இந்த செலவு தொகையை மூன்றடுக்கு  கட்டிடத்தில், பல்வேறு துறைகளுடன் கூடிய விரிவான 24 மணி நேர சேவை தரும் மருத்துவமனையை நடத்தும் நிர்வாகங்கள் கூட தாங்க முடியாமல் புலம்புகின்றன.

அப்படி என்றால் பத்துக்கு பத்து அறையில் இயங்கும் ஆய்வகங்களோ, அல்லது பத்துக்கு 20 அறையில் இயங்கும் தனியார் கிளினிக்குகளோ, பத்துக்கு முப்பது அடியில் இயங்கும் பிசியோதெரபிஸ்ட் கூடங்களோ எப்படி தாக்கு பிடிக்கும்?

சான்றிதழ்களுக்காக அலைய விடுவது!

கார்ப்பரேட்டுகள் சுற்றுச்சூழலை எவ்வளவு மாசுபடுத்துகிறார்கள் என்பது உலகறிந்த விஷயம். அங்கெல்லாம் பொல்யூஷன் சர்டிபிகேட் கேட்டு அவர்களின் கழுத்தை பிடிப்பதில்லை. ஆனால் சிறிய கிளினிக்குகளையோ, ஆய்வகங்களையோ, அல்லது பிசியோதெரபிஸ்ட் கூடங்களை நடத்துபவர்களிடம் பொல்யூஷன் சர்டிபிகேட் கேட்கிறார்கள்.

மருத்துவமனைகளில்தான் காயங்களை சுத்தம் செய்வார்கள். அறுவை சிகிச்சையும் செய்வார்கள். பிரசவமும் பார்ப்பார்கள். அந்த இடங்களில் உயிரிக் கழிவுகள் – பயோ மெடிக்கல் கழிவுகள் வரும். இது குறித்து நாம் ஏற்கனவே கேள்விப்பட்டு இருப்போம்.

கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் லாரியில் கொண்டு வந்து கேரள எல்லையை ஒட்டி உள்ள தமிழக கிராமங்களில் திருட்டுத்தனமாக கொட்டப்படுகிறது என்ற செய்தியை ஆங்காங்கே படித்திருப்போம்.

படிக்க:

 பாசிச பாஜக ஆட்சியில்  உயிர் காக்கும் மருத்துவத் துறையில் தலைவிரித்தாடும் போலி மருந்துகள்!

 அரசு மருத்துவர்- ஏழை நோயாளி முரண்பாடு: தீர்வுகாண வழி என்ன?

இத்தகைய கழிவுகள் மருத்துவமனைகளில் மட்டும்தான் உருவாகும். அதை சேகரித்து அழிப்பதற்கு என்று தனியாக ஒரு துறையும் உள்ளது. அந்தத் துறையிடம் சான்றிதழ் வாங்கியாக வேண்டும்.

உடலில் அடிப்பட்டு காயத்துடன் இருப்பவர்களை பிசியோதெரபிஸ்டுகள் தொட மாட்டார்கள். மருத்துவரும் காயம் குணமடைந்த பின்னர் தான் பிசியோதெரபிஸிடம் பரிந்துரைப்பார். அப்படி இருக்க பிசியோதெரபிஸ்ட் கிளினிக் நடத்துவதற்கு பயோமெடிக்கல் வேஸ்ட்டை சரியாகத்தான் கையாள்வதாகவோ, அல்லது அப்படி ஒரு கழிவே வரவில்லை என்றோ  (No objection) தடையில்லா சான்றிதழ் தர வேண்டுமாம். அதாவது அந்தத் துறையில் கப்பம் கட்டி விட்டு வா என்கிறது மோடி அரசு.

அதேபோல் தீயணைப்புத் துறையிடமும் சான்றிதழ் வாங்க வேண்டுமாம்.  இப்படி பல்வேறு துறைகளில் பின்னே அலையவிட்டு சிறிய கிளினிக்குகளை திணற அடிக்கிறார்கள்.

சித்தர்களின் வழிவந்தோர் ‘போலி மருத்துவர்கள்‘!

முன்பெல்லாம் ஆர்.எம்.பி. அதாவது ரெஜிஸ்டர் மெடிக்கல் ப்ராக்டிஸ்னர் என்ற பெயரில் சித்தா உள்ளிட்ட பாரம்பரிய வைத்தியங்களை குருவிடம் கற்றவர்கள் சிகிச்சை தந்து வந்தார்கள். அவர்களெல்லாம் போலி மருத்துவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு  ஒழித்துக் கட்டப்பட்டு விட்டார்கள்.

அந்த வரிசையில்தான் மிச்சம் மீதி இருக்கும் சிறிய கிளினிக்குகளும் ஆய்வகங்களும் பிசியோதெரபிஸ்ட் கூடங்களும் மறையப் போகின்றன. அல்லது கார்ப்பரேட் மருத்துவமனைகளின் காலடியில் போய் “அடிமையாக சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று கெஞ்சப் போகின்றன. இதற்காகத்தான் மோடி அரசு புதிய விதிகளை புகுத்தி வருகிறது.

முதல்வர் விஜய் ஹீரோவா – வில்லனா?

இதுவே இரண்டரை மணி நேர சினிமாவில், திரையில் நடப்பதாக இருந்தால், ஹீரோ கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்யாக நடித்தால்,  விஜய்யின் கண்கள் சிவந்து இருக்கும்; கை நரம்புகள் புடைத்து இருக்கும்; உத்தரவு போட்ட வில்லனை (மோடியை) பந்தாடியிருப்பார். ஆனால் இது நிஜமாயிற்றே.

திரையில் ஹீரோவாக வலம் வந்தவர் நிஜத்திலும் ஹீரோவாக இருப்பாரா? அல்லது வில்லனின் அடியாளாக மாறப் போகிறாரா? பொறுத்திருந்து பார்ப்போம். நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கும் சிறிய கிளினிக்குகளுக்கு, ஆய்வகங்களுக்கு, பிசியோதெரபிஸ்ட் கூடங்களுக்கு நமது ஆதரவை தெரிவிப்போம்.

  • இளமாறன்

1 COMMENT

  1. நடிகர் விஜய் மாஸ் ஹீரோ!
    முதல்வர் விஜய் ஹீரோவா ? வில்லனா?

    அட்லீ இயக்கத்தில் 2017 இல் வெளிவந்த படம் மெர்சல் இந்த படத்தில் விஜய் டாக்டராக ஒரு ரூபாய்க்கு மருத்துவம் பார்ப்பார் அது படத்தில்

    தற்போது முதல்வர் ஆனவுடன் 8000 தனியார் மருத்துவமனியருக்கு அனுமதி அளித்துள்ளார் இதன் நோக்கம் என்ன மாஸ் ஹீரோவுக்கும் முதல்வர் ஹீரோவுக்குமான வித்தியாசத்தை அருமையாக இந்த கட்டுரை வெளிப்பட்டுள்ளது குறிப்பாக மருத்துவர்கள் சிறிய மருத்துவமனைகள் லேப்கள் பிசியோதெரபி நடத்தக்கூடிய சிறிய மருத்துவமனைகளை கார்ப்பரேட்டுகள் விழுங்க காத்துக் கொண்டு இருக்கிறார்கள்

    கார்ப்பரேட்டுகளுக்கு தங்கு தடை இன்றி சுற்றுச்சூழல் அனுமதி தீயணைப்பு அனுமதி அனைத்தும் தடை இல்லாமல் கிடைக்கிறது ஆனால் சிறிய கிளினிக் நடத்தும் மருத்துவர்கள் பிசியோதெரபிகள் ஆய்வகங்களை நடத்தும் லேபுகள் இவற்றுக்கு மருத்துவ சான்றிதழ் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் சுற்றுச்சூழல் சான்றிதழ் வாங்குவதற்கு அலை விடுகிறார்கள் என்று இந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

    ஏதுமற்ற உழைக்கும் மக்கள் அரசு மருத்துவமனைக்கு செல்கிறார்கள் அல்லது வீட்டிற்கு பக்கத்தில் பத்துக்கு பத்து அடியில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கு செல்கிறார்கள் இல்லையென்றால் பிசியோதெரபி இடம் செல்கிறார்கள் இந்த மருத்துவமனைகளுக்கு பாதிப்பு என்றால் உழைக்கும் மக்கள் எங்கே போவார்கள் கார்ப்பரேட் ஆதிக்கம் கட்டண கொள்ளை அதிகரிக்கும் ஏனென்றால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மருத்துவமனையில் மக்கள் பேரம் இல்லாமல் கேட்கும் பணத்தை கட்டுவார்கள் என்ற ஒரு நோக்கத்தோடு தனியார் மருத்துவமனைகளை அதிக அளவில் திறக்கிறார்கள்

    பல விவரங்களையும் செய்திகளையும் சேகரித்து கட்டுரையாக எளிமையாக தந்த கட்டுரை ஆசிரியர் தோழர் இளமாறன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here