‘கோயில் சொத்து கல்விக்கு ஆகாது’ :
“நான் முழு சங்கியே தான்!”
நிர்வாணமாக நிற்கிறார் எடப்பாடி!

துவக்கத்திலேயே எம்ஜிஆரையும் ஜெயாவையும் கைவிட்ட எடப்பாடி!


‘மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்!’… என்று எதுகை மோனைக்காக முழக்கத்தை வைத்துக்கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக ஜூலை 8-ல் மேட்டுப்பாளையம் ‘பத்ரகாளியம்மன் கோவிலில்’ வழிபட்டு தனது பயணத்தை தொடங்கினார் எடப்பாடி. இந்த வழிகாட்டுதலுக்கு மூல காரணம் ஆர் எஸ் எஸ் – பாஜக கும்பலே.

திராவிட இயக்கப் பாரம்பரியம் கொண்டவர்கள் என ஒப்புக்கு அறிவித்துக் கொள்ளும் வேளையில், அவர்கள் இப்படிப்பட்ட பணியை தொடங்குகின்ற பொழுது எம்ஜிஆர் – ஜெயா சமாதிகளில் வழிபட்ட பிறகே பயணப்படுவார்கள். தற்போது மிச்ச சொச்சம் வைத்திருந்த சுயமரியாதையையும் முற்றாக மோடி-அமித்ஷா- மோகன் பகவத் காலடியில் வைத்து சரணாகதியாகி விட்டதால், தம்மையும் தம் கூட்டத்தையும் நிர்வாணமாக நிற்க வைத்து சங்கிகளாகவே பிரகடனப்படுத்தி விட்டார் எடப்பாடி.

‘கோயில் சொத்தை கல்விக்குச் செலவழிப்பதா?’ – எடப்பாடி குமுறல்!

‘கோயிலைக் கண்டாலே கண்ணை உருத்துகிறது அவர்களுக்கு. அதில் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கிறார்கள். கோயில் கட்டுவதற்காக நல்ல உள்ளம் படைத்தவர்கள் தெய்வ பக்தி உள்ளவர்கள் உண்டியலில் பணம் போடுகிறார்கள். அந்தப் பணம் அறநிலையத் துறைக்கு சேருகிறது. எதற்காக? அந்தக் கோயில்களை அபிவிருத்தி செய்வதற்காகத்தான். அந்தப் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள். ஏன், அரசாங்கப் பணத்தில் கல்லூரி கட்டினால் வேண்டாம் என்போமா?

வேண்டுமென்றே அறநிலையத் துறை நிதியை எடுத்து செலவு செய்வது எந்த விதத்தில் நியாயம்? இதையெல்லாம் சதிச் செயலாகத் தான் மக்கள் பார்க்கிறார்கள்’.
… இவ்வாறாக எடப்பாடி திருவாய் மொழிந்து இருக்கிறார்.

முன்பு ராமகோபாலன், எச். ராஜா, அர்ஜுன் சம்பத், வானதி, தமிழிசை உட்பட ஆர் எஸ் எஸ் – பாஜக – சங் பரிவாரக் கும்பல் இதைத்தான் விடாது ஓலமிட்டனர். ஓலமிட்டு வருகின்றனர். ஏப்ரல் 22 மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிலும் தீர்மானம் நிறைவேற்றி விட்டனர்.

‘இந்து சமய அறநிலையத் துறையைக் கலைத்துவிட்டு கோவில்களை இந்துக்களிடம் ஒப்படை’! என்பதே சங்கிகளின் தொடர்ச்சியான கோரிக்கை மற்றும் முழக்கம்!

தற்போது தமது கட்சி கொடியில் அண்ணா படத்தைப் பொறித்து வைத்துக் கொண்டு, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து கொண்டு வேடம் போடும் எடப்பாடி அதையே வாந்தி எடுத்திருக்கிறார். தான் ஒரு சங்கிதான் என்பதனை ஒவ்வொரு அசைவிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி.

தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் எத்தனை கல்வி நிலையங்கள்?

முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் காலத்தில்:
1)1963-ல் அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, திண்டுக்கல்.
2)1964-ல் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, திருநெல்வேலி.
3)1964-ல் பூம்புகார் கல்லூரி, நாகை.
4)1965-ல் ஸ்ரீதேவி குமரி மகளிர் கல்லூரி, கன்னியாகுமரி.
கலைஞர் கருணாநிதி ஆட்சியில்:
5) அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, திண்டுக்கல்.
MGR ஆட்சியில்:
6) அருள்மிகு பழனியாண்டவர் பல் தொழில் நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.
(இக்கல்லூரியில் தான் 2017ல் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு அன்றைய முதல்வர் எடப்பாடியால் திறந்து வைக்கப்பட்டது.
திரு மு. க. ஸ்டாலின் காலத்தில் :
7) அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை.
இத்துடன் சேர்த்து பழனி உட்பட பல்வேறு ஊர்களில் மருத்துவம், தொழில்நுட்பம், உயர்நிலைப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், வேத யாகசம், இசை உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆக, இவ்வித கல்வி நிலையங்களின் மொத்த எண்ணிக்கை 55.

இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1960 பிரிவு 66 இன் படி கோவில் வருமானம் மற்றும் பிற சொத்துக்களை கல்வி நிறுவனங்கள் போன்ற மக்கள் நலன் சார்ந்தவற்றிற்கு செலவு செய்யலாம் என்று தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் எதையுமே தெரியாமல் வாய்க்கு வந்ததை உளறிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி.

கோவில் சொத்துக்கள் திருடு போகாமல் இருக்க அறநிலையத்துறை அவசியம்!

கோவில் சொத்துக்கள் அனைத்தும் உண்டியல், வெகுமதியாளர்கள் மூலமாக கிடைப்பது மட்டுமல்ல; ஏற்கனவே பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பு மன்னர்கள் இறை நம்பிக்கையின் பாற்பட்ட எண்ணத் தூண்டுதல்களால் எண்ணற்ற கோவில்களை பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் கடுமையான உழைப்புக்களால் நிறுவியதோடு ஒவ்வொரு கோயிலுக்கும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், நகைகள் இன்ன பிற சொத்துக்கள் சேர்த்து வைக்கப்பட்டுள்ரளன. அவற்றில் பழங்காலத்தில் பல லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் களவாடப்பட்டதை அறிந்தே நீதி கட்சி காலத்திலேயே முன்மொழியப் பெற்று பனகல் அரசர் காலத்தில் அறநிலையத் துறை என்ற ஒன்றினை ஏற்படுத்தி கோவில் சொத்துக்கள் களவாடப்படாமல் தடுக்கவும், வரவு செலவுகளை கண்காணிக்கவும், உரிய முறைகளில் கோயில்களை பராமரிக்கவும், செலவினங்கள் செய்யவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

படிக்க:

 அரசே, அறநிலையத்துறையை காப்பாற்று! அறநிலையத்துறையே, கோவில்களை காப்பாற்று!!

அதிலும் தற்போதுள்ள அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வேறு எந்த சங்கிகளை விடவும் குறை வைக்காத அளவுக்கு அனைத்து கோவில்களிலும் பல லட்சம் செலவு செய்து குடமுழுக்கு நடத்துவது, ஆகம பூஜைகள் நடத்துவது, கும்பாபிஷேகம் நடத்துவது, அன்னதானம் கொடுப்பது என எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். எதிலும் குறைவின்றி, பக்தர்கள் மனம் குளிரும்படியே நடவடிக்கைகள் சென்று கொண்டிருக்கின்றன. அதற்கு அண்மை உதாரணம் திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு நிகழ்வாகும். மேலும் சேகர்பாபு இந்த பொறுப்பிற்கு வந்த பிறகு அரசின் புள்ளி விவரங்களின்படியே சில தனியார்கள், கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டிருந்த பலவற்றையும், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் மீட்டு இருக்கிறார்கள். 5000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இப்படி மிஞ்சி இருக்க கூடிய தொகையின் ஒரு பகுதியை பெரும்பகுதி இந்து மாணவ- மாணவியர் பயன்படுத்தக்கூடிய வகையிலான கல்லூரிகளுக்கும், கல்வி நிலையங்களுக்கும் ஒதுக்கி முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் காலம் முதலே செயல்பட்டு வருகின்றன.

இன்றைய அளவில் அறநிலையத் துறைக்குட்பட்ட கல்வி நிலையங்களில் 35 ஆயிரம் மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இதில் சுமார் 90 விழுக்காடுக்கும் மேற்பட்டவர்கள் இந்துக்களே. அப்படி இருக்கின்ற பொழுது இதில் இன்று திடீரென தமது முந்தைய தலைவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயா கருத்துகளுக்கும் மாறுபட்டுகூட, இன்று எடப்பாடி சங்கிகளின் குரலை வழிமொழிந்து அவர்களையும் முந்திக் கொண்டு, முன் வரிசையில் நின்று கூவத் துவங்கி உள்ளார் என்றால் உறுதியாக இப்பொழுதே ‘ஏக்நாத் ஷிண்டே’ -யாக உருவெடுத்துவிட்டார் எடப்பாடி என்பது தெளிவாகத் தெரிகிறது அல்லவா?

சங்கிகளே புகழ் பாடும் பாரதி என்ன சொன்னான்?

“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னர் உள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாயினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”….

அப்படியானால் ஏழை எளிய இந்து மாணவ மாணவியருக்கு கல்வி கற்பித்தலுக்கான அனைத்து வகை செல்வங்களையும் பயன்படுத்த முனைந்து நிற்பதே மிகச்சரியாகப் பயணிப்பதாகும் என்பதை பாரதியாரே வலியுறுத்திக் கூறி இருக்கிறான்.

‘அறநிலையத் துறையில் இருந்து செல்வங்கள் களவாடப்படுகின்றன; மூட்டை கட்டி வீட்டுக்கு கொண்டு போகிறார்கள்…’ இது போன்ற குற்றச்சாட்டுகளை எடப்பாடி பட்டியலிட்டு வகைப்படுத்து வாரேயானால், ஆகச்சிறந்த முன்னுதாரணமாக இருந்திருக்கும். மக்களும் ஆதரிப்பர்.

அதை விடுத்து ஏழை எளிய இந்து மாணவ மாணவியர் பயன்பெறும் கல்வியைப் பிடுங்க எத்தனிக்கும் எடப்பாடியின் குரல் சந்தேகமே இல்லை; அது சங்கிகளின் குரலே! ஆம்!

ஏழை எளிய பிள்ளைகளை ஆடு மாடுகள் மேய்க்கவும், அப்பன் தொழிலையே பிள்ளைகளும் செய்ய வேண்டும் என்ற முற்கால பார்ப்பன ஆதிக்கத்திற்கு உட்பட்டு அடிமைகளாக்க விரட்டவுமேயாகும்.

முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு?

அன்று கடைசிக் காலத்தில் ‘மோடியா? இந்த லேடியா?’…’ இனி எக்காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்றார் ஜெயா.

அண்மையில் ஈரோடு தனது சம்மந்தி ராமலிங்கம் வீட்டில் அமித்ஷா ‘புண்ணியத்தால்’ அவரது கூட்டு உறுப்பான அமலாக்கத்துறை ஏவி விடப் படுவதற்கு முன்பு வரை ‘பாஜகவுடன் சட்டமன்றத் தேர்தல் மட்டும் அல்ல; பாராளுமன்றத் தேர்தல் மட்டும் அல்ல; கடைசி வரையிலும் கூட்டணி என்ற பேச்சிக்கு இடமில்லை…’ என்று கொக்கரித்து அறிவிப்பு கொடுத்து வந்தார் எடப்பாடி. அமலாக்கத் துறையில் இனி சம்மந்தி மட்டுமல்ல; தானும், தனது மகனும் மாட்டுவோம் என்பதனை அமித்ஷா மூலமாக புரிந்து கொண்ட மறுநிமிடமே, ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதல்வர் நாற்காலியில் அமர ஊர்ந்தே சென்று சசிகலா காலைப் பிடித்தது போல், இன்று அங்கப்பிரட்சனம் செய்து அமித் ஷா காலைப்பிடித்து முதல்வர் நாற்காலிக்காக ஏங்கிக் கிடக்கிறார் எடப்பாடி.

‘வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணிக்கு சிறுபான்மையினர் வாக்கு வங்கி 98 சதவீதத்திற்கு குறையாமல் ‘இல்லை’ என்ற நிலையை எட்டி விட்டது’. இத்தருணத்தில் எடப்பாடிக்கு சங்கிகள் போதித்திருப்பதென்னவென்றால் ‘வட மாநிலங்களில் நாங்கள் இந்துத்துவக் கொள்கையை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்ததன் மூலமாகவே ஒட்டுமொத்த இந்து வாக்கு வங்கியையும் சேமித்துக் கொள்ள முடிந்தது; அந்த வழியை( மதக் கலவர – வெறுப்பு பிரச்சாரத்தை) தமிழ்நாட்டில் பின்பற்ற முன்வராவிட்டால் அதிமுக மிகுந்த பின்னடைவைச் சந்திக்கும்’ என்பதுதான் அந்த யுத்தி. அந்த அடிப்படையில் தான் எடப்பாடி துணிச்சலாக தமிழ் மக்களுக்கு எதிரான படுபாதக இந்துத்துவ காவி அரசியல் கொள்கைகளை பரப்ப முனைந்து விட்டார் எடப்பாடி.

எனவே,

‘மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்!’ என்ற முழக்கங்களை நீக்கிவிட்டு
‘தமிழர்களைத் திரட்டுவோம்! மோடி அமித்ஷா காலடியில் வீழ வைப்போம்!’

என்ற முழக்கத்தை எழுப்பியவாறு எடப்பாடி ‘யாத்திரை’ செல்வதே மேலானது; பொருத்தமானது!

அப்படிச் செய்வார் என்று எதிர்பார்ப்போமாக!

தமிழர்களே, தமிழ்நாட்டில் கலவரத்தின் மூலமாக காவி மயப்படுத்த முன் நிற்கும் சங்கிகளோடு முழுமையாக கரைந்து விட்டன எடப்பாடி அண்ட் கோ. ஏற்கனவே இந்து முன்னணி நடத்திய கலவரத்துக்கான மாநாட்டில் பங்கேற்றது. தற்போது கோயில் சொத்தில் கல்லூரி கூடாது என்கிறது. அண்ணா திமுக என்பது அமித்ஷா திமுகவாக மாறிவிட்டது. இதனைப் புரிந்து கொள்வோம். பிறருக்கும் புரிய வைப்போம். அதிமுக- பாஜக கூட்டணியின் கலவர நோக்கம் தமிழகத்தில் செல்லாது என்பதை உறுதி செய்வோம்.

  • எழில்மாறன்

4 COMMENTS

  1. அதிமுக அடிமையான எடப்பாடி தற்போது வைத்துள்ள பிரச்சாரம் முழக்கம் ஆர்எஸ்எஸ் இன் துக்ளக் குருமூர்த்தி எழுதி கொடுத்தது போல் அட்சு அசலாக உள்ளது, பார்ப்பனியம் உழைக்கும் மக்களை படிக்க விடாது, அதை தான் ஒருபுறம் சீமான் மூலமாகவும் மறுபுறம் அதையே தான் இந்த அடிமை எடப்பாடி மூலமாக செய்ய பார்க்கிறது, கடந்த ஆட்சியில் பாஜக ஆளும் மாநிலங்களில் செய்யக்கூடாத நடத்த முடியாத செயல்களை எல்லாம் எடப்பாடி செய்தார் உதாரணமாக ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு அப்படி இருக்க பாஜகவிற்கு அடிமையை யாகாவிட்டால் தேசிய நெடுஞ்சாலை காண்ட்ராக்ட் ஊழல் வழக்கு போட்டு உள்ளே போக வேண்டி வரும் அந்த அடிப்படையில் கடந்த மாதம் முருகன் பக்தர் மாநாடு என்ற பெயரில் பாஜக சங்கதிகள் நடத்திய மாநாட்டில் அதிமுக அமைச்சர்கள் முன்னிலையில் பெரியாரையும் அண்ணாவையும் இழிவாக பேசியபோதும் வாய்மூடி அமர்ந்திருந்தனர்,தன்னுடைய கட்சியின் கொள்கை என்ன எந்த பெயரில் கட்சி உள்ளது என்ற துளி கூட கல்வியறிவு இல்லாத பழமைவாத பிற்போக்குத்தனம் கொண்ட இந்த எடப்பாடி கும்பல் பாஜகவின் சிறந்த அடிமையாக செயல்பட மக்களை முட்டாளாக்க பார்க்கின்றது இதன் ஒரு பகுதியாக எதிர்வினையாக கல்லூரி மாணவர்கள் போராடி வருகின்றனர் காவி பாசிசத்திற்கு வேர் இதுபோன்ற பழமை வாத சாதி ஆதிக்கம் கொண்ட அடிமைகள் இதனை பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் காவி பாசிச கும்பல் கால் பதிக்க நினைக்கிறது இதனை தமிழக மக்கள் விரட்டி அடிப்பார்கள் கட்டுரை சிறப்பு வாழ்த்துக்கள்.

  2. கோவில் சொத்து கல்விக்கு ஆகாது என அதிமுக எடப்பாடி பழனிச்சாமி பிஜேபியின் நேரடி சங்கியாகவே பேசுகிறார் என்கின்ற இந்த கட்டுரை தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சங்கி கும்பல் கோவில் நிலத்தையும் கோவில் வருமானத்தையும் கோவில் சொத்துக்களை இந்துக்களிடம் ஒப்படைங்கள் என்று கூறுவதற்கும் எடப்பாடி தற்போது பேசுவதற்கும் வேறுபாடு இல்லை என்றும் அதேபோல் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் பொழுது எந்த காலத்திலும் பிஜேவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று ஆணித்தரமாக கூறினார் மோடியா! இந்த லேடியா! என்று சவால் விட்டார் இன்று அந்த கட்சியை எடப்பாடி பழனிச்சாமி அமைச்சா இடம் அடகு வைத்துள்ளார் அமிச்சாவின் ஒட்டு பிறவியான இ.டி. க்கு பயந்து. எடப்பாடி சம்மந்தி தன் மகன் தானும் இ.டி. யால் தங்களுடைய சொத்துக்கள் பறிபோயிடும் என்ற நோக்கத்திற்காக அதிமுக கட்சியையும் தொண்டர்களையும் பிஜேபி இடம் அடகு வைத்து பிஜேபியின் நேரடி ஏஜென்ட் ஆக பேசி வருகிறார் எடப்பாடி மக்களைக் காப்போம் !தமிழகத்தை மீட்போம் !என்ற முழக்கத்தை கைவிட்டு தமிழர்களை திரட்டுவோம் அமித்ஷா காலில் விழ வைப்போம் என்ற முழக்கத்தை எடப்பாடி எடுத்தால் சரியாக இருக்கும் என்ற ஒப்பீடும் பாரதியாருடைய ஒப்பிடும் மிகவும் பொருத்தமாக உள்ளது ஆகவே கட்டுரை மிகப்பெரிய கட்டுரையாகவும் பல உதாரணங்கள் உண்மைகளை ஒப்பிட்டு அருமையாக எழுதப்பட்டுள்ளது கட்டுரை எழுதிய ஆசிரியர் தோழர் எழில் மாறன் அவர்களுக்கு மிக்க நன்றி.

  3. ஒரு வேண்டுகோள்

    தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் அவர்களும் அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் இருவருக்குமான பிரச்சனை கட்சியை உடைத்து தனித்தனியாக கட்சியை உருவாக்குவது எதற்காக இந்த சண்டை என்பது புரிந்து கொள்ள முடியவில்லை இந்த சம்பவம் குறித்து ஒரு கட்டுரை எழுதினால் சரியாக இருக்கும் என ஆலோசனையாக கூறுகிறேன்
    நன்றி

    • இது தொடர்பாக ஏற்கனவே ‘அப்பன் மகன் சண்டை’ என்ற தலைப்பில் முகநூலில் ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். இருப்பினும் அண்மைக்கால அவர்களது அசிங்கமான மோதல் குறித்து விரிவான கட்டுரை ஒன்றினை தேவையை அனுசரித்து நமது தளத்தில் எழுத முயற்சிக்கின்றேன் தோழர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here