அரசே, அறநிலையத்துறையை காப்பாற்று!
அறநிலையத்துறையே, கோவில்களை காப்பாற்று!!


க. கனகராஜ்

ன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான அறநிலையத்துறை கோவில்கள் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அறநிலையத்துறை அதிகாரிகளும் உள்ளூர் சங்பரிவார் ஆட்களும் ஒப்பந்தம் செய்து கொண்டு பக்தர்களையும், கோவில் வருமானத்தையும் அறநிலையத்துறை ஒதுக்கீடுகளையும் கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். கோவில்களின் பெயராலும், தெய்வங்களின் பெயராலும் சங்கங்கள் என்ற போர்வையில் ஆக்கிரமிப்பு செய்து அதன் மூலம் வருமானம் சேர்ப்பதும் அதை பங்குபோட்டுக் கொள்வதும் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் அன்றாட நடவடிக்கையாக இருக்கிறது.

சமீபத்தில் மண்டைக்காடு அம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஹைந்தவ சேவா சங்கம் என்கிற பெயரில் சமய மாநாடு என்று தலைப்பிட்டு ஒரு அழைப்பிதழ் விநியோகிக்கப்பட்டிருந்தது. அதில் பாஜக தலைவர் அண்ணாமலை, பொதுச் செயலாளர் ராமசீனிவாசன், முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக சட்டமன்றக்குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், ஆர்.எஸ்.எஸ். தென்மண்டல பிரச்சாரக், நாகர்கோவில் நகராட்சி முன்னாள் தலைவர் மீனா தேவ் உட்பட பாஜக, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இவர்களுக்கும் ஆன்மீகத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இவர்கள் எப்படி சமய மாநாட்டில் அதுவும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் விழா நடக்கும் அத்தனை நாட்களும் கலந்து கொள்ள முடியும்?.

அரசியல் நோக்கங்களுக்காக அடாவடி

கடந்த ஆண்டு பாஜக தலைவர் அண்ணாமலை மண்டைக்காடு கோவிலில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு என்ன பேசினார் என்பது சமூக வலை தளங்களில் உள்ளது. திமுக அரசாங்கத்தையும், அமைச்சர்களையும் மிக மோசமாக விமர்சித்துள்ளார். இதற்கும், இந்து சமூகத்திற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?. இது சமயத்தின் போர்வையில் அரசியல் நடத்துவதைத் தவிர வேறொன்றும் இல்லை. ‘அரசே ஆலயங்களை விட்டு வெளியேறு’ என்ற கூப்பாடு போட்டுக் கொண்டு ஒரு அரசியல் கட்சியும் அதை வழிநடத்துகிற ஆர்.எஸ்.எஸ்-சும் கோவில் வளாகங்களை தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக சட்டவிரோதமாக கைப்பற்றி அடாவடித்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தான் இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு சமய சொற்பொழிவு நடத்துவோரை மட்டும் வைத்து இன்னொரு அழைப்பிதழை வெளியிட்டிருக்கிறது. தங்கள் பிழைப்பில் மண் அள்ளிப் போடுகிறார்கள் என்று பதறிய சங்பரிவார் கும்பல் குய்யோ, முறையோ என கூச்சலிட ஆரம்பித்தார்கள். அதைச் செய்யப்போகிறோம், இதைச் செய்யப்போகிறோம் என்று மிரட்டல் விடுக்க ஆரம்பித்தார்கள். சாமியார் என்கிற போர்வையில் உள்ள ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் மண்டைக்காடு அயோத்தியாக மாறும்; 1982ஐப் போல இன்னொரு துப்பாக்கிச் சூடு நடைபெறும்; தமிழ்நாடு முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்திற்குள்ளேயே நுழைய முடியாது; இதை தடை செய்தால் மத்திய அமைச்சர்கள் பல்வேறு மாநில ஆளுநர்களும் கலந்து கொள்வார்கள், முடிந்தால் தடுத்துப் பாருங்கள்’ என்று சவால் விட்டிருந்தார். இவர் ஒன்றும் சாமியார் அல்ல. ஆர்.எஸ்.எஸ்.சைப் பொறுத்தமட்டில் அவர்கள் ஒரு வேலைப்பிரிவினையை வைத்திருப்பார்கள். சிலருக்கு சாமியார் வேலையும், சிலருக்கு சண்டியர் வேலையும், சிலருக்கு அரசியல் வேலையும் கொடுத்திருப்பார்கள். அதில் ஒருவர் தான் இந்த நபர்.

அதிகாரிகளை மிரட்டி பயன்படுத்தி…

அதன் பிறகு, கடந்த 21.2.2023 அன்று மீண்டும் ஹைந்தவ சேவா சங்கத்தின் சார்பில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் பெயரை மட்டும் வைத்து அத்தனை சங்பரிவார் அமைப்புகளின் நபர்களின் ஒருவரின் பெயரையும் விடாமல் மீண்டும் ஒரு அழைப்பிதழ் வெளியாகி அதன்படி இப்போது நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசு சங்பரிவாரின் பங்கேற்பு இல்லாமல் முழுக்க, முழுக்க சமயம் சார்ந்த நிகழ்ச்சியாகவே நடத்துவது என்று முடிவு செய்த பிறகு சங்பரிவார் ஒரு சதிவேலையில் ஈடுபட்டது. மாவட்டத்தில் உள்ள உளவுப்பிரிவு காவல்துறையினர் மூலம் ஹைந்தவ சேவா சங்கத்தை இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்கவில்லை என்றால் மாவட்டங்களில் பெரிய கலவரப் பூமியாகிவிடும் என்று தொடர்ச்சியாக ‘அறிக்கைகள்’ அனுப்பியிருக்கிறார்கள். அரசு இதை கவனத்தில் கொண்டு ஹைந்தவ சேவா சங்கம் வழக்கம்போல் நடத்திக் கொள்ளட்டும் என்று அனுமதியளித்திருப்பதாகத் தெரிகிறது. இப்படி சதி செய்து அறிக்கைகள் என்கிற பெயரில் தங்களுக்கு வேண்டிய முறையை சில அதிகாரிகளை பயன்படுத்தி மிரட்டல் கடிதங்களை அனுப்ப வைப்பது சங்பரிவாரின் வழக்கமான பணிகள் தான். இப்படித்தான் 1947இல் அயோத்தியில் திருட்டுத்தனமாக நள்ளிரவில் ஒரு ராமர் சிலையை வைத்து விட்டு அரை நூற்றாண்டு காலம் அதையே ஒரு பிரச்சனையாக்கி பாபர் மசூதியை தரைமட்டமாக்கி நீதிமன்றத்தை வைத்து ஒரு கோவிலை அரசின் செலவில் கட்டி அதையே மீண்டும் தேர்தல் பிரச்சனையாக்கி வெற்றிபெற நினைக்கிறார்கள். அன்றைய தினமே அது அகற்றப்பட்டிருந்தால் இந்த பிரச்சனை இவ்வளவு பெரியதாக மாறியிருக்காது.

காவல்துறைக்கு அழுத்தமும் காவல்துறையின் அழுத்தமும்

சமீபத்தில் சிஐடியுவின் மாநில மாநாடு கன்னியாகுமரியில் நடைபெற்றது. 2022 நவம்பர் 6-ந் தேதி நாகர்கோவிலில் மாநாட்டு நிறைவு நாள் பேரணி நடைபெறுவதாக இருந்தது. அந்த தினத்தில் ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்பு நடத்த அனுமதி கேட்டிருந்தார்கள். சிஐடியு பேரணிக்கும், பொதுக்கூட்டத்திற்கும் 2022 ஆகஸ்ட் 12ஆம் தேதியே நாகராஜா திடலுக்காக மாநகராட்சியில் பணம் செலுத்தி காவல்துறையிடமும் விண்ணப்பித்திருந்த நிலையில் பேரணிக்கு ஒருவாரம் முன்பாக 2022 நவம்பர் 6-இல் ஆர்.எஸ்.எஸ். பேரணி இருக்கிறது. எனவே நீங்கள் தேதியை மாற்றுங்கள் அல்லது இடத்தை மாற்றுங்கள். இல்லையென்றால் பெரிய பிரச்சனையாகிவிடும் என்று சிறப்பு பிரிவு காவல்துறை சொல்லியிருப்பதாக மாவட்ட காவல்துறை அழுத்தம் கொடுத்தது. தென்மண்டல ஐ.ஜி. தலையிட்ட பிறகும் இதே பூச்சாண்டியை காவல்துறையினர் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

தவறான தகவல் தந்து சரியானதை தடுக்கும்…

இதுதான் குமரி மாவட்ட சிறப்பு பிரிவு காவல்துறையில் வழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் விக்டோரியா கௌரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டது குறித்த பிரச்சனையில் அவர் மீது தமிழக அரசு ஆட்சேபணை எதுவும் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்பட்டது. இயல்பாகவே, மாநில அரசாங்கம் காவல் துறையிடம் தான் அறிக்கை கேட்டிருக்கும். ஆனால், காவல்துறை விக்டோரியா கௌரி அவர்கள் கிறிஸ்துவர்களைப் பற்றியும், இஸ்லாமியர்களைப் பற்றியும் வெறுப்புப் பிரச்சாரம் செய்ததையோ அவரது செயல்பாடுகள் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருந்ததை பற்றியோ மாநில அரசுக்கு தெரிவிக்கவே இல்லை என்பதை தான் புரிந்து கொள்ள முடிகிறது. இதன் பொருள் மாவட்ட காவல்துறையின் சிறப்பு பிரிவில் கணிசமான பகுதியினர் ஆர்.எஸ்.எஸ் – பாஜக அல்லது அதன் சித்தாந்தத்திற்கோ அல்லது அதற்கு பயந்தோ தவறான தகவல்களை தருகிறார்கள் என்பது தான். எனவே, மாவட்ட காவல்துறையில் உள்ள சிறப்புப் பிரிவில் களையெடுக்க வேண்டிய அவசியத்தை மாநில அரசு உணர்ந்து கொண்டு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இல்லையெனில் மண்டைக்காடு பிரச்சனையில் சொன்னதைப்போன்று தவறான தகவல்களை கொடுத்து மாநில அரசு சரியான நடவடிக்கை எடுப்பதை தடுத்துவிடும் வாய்ப்புண்டு.

இதையும் படியுங்கள்: கன்னியாகுமரி: மண்டைக்காட்டில் கலவரத்தை தூண்டி வரும் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை கைது செய்!

ஆணையரின் தெளிவான வழிகாட்டலை மீறி…

கன்னியாகுமரி மாவட்ட அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்கள் பலவற்றில் கோவிலின் பெயராலேயோ அல்லது அங்கிருக்கும் கடவுன் பெயராலேயோ அல்லது பக்தர்கள் சங்கம் என்கிற போர்வையிலோ பல இடங்களில் சங்பரிவார் அமைப்புகள் வசூல் செய்வதும் அவற்றை தங்கள் சொந்த காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்வதும் நடந்து கொண்டேயிருக்கிறது. இந்த நிலையில் தான் 2002ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி அப்போதைய அறநிலையத்துறை ஆணையர் திரு. ஜெ.குமரகுருபரன், இந்து சமய அறக்கொடைகள் சட்டத்தின் கீழ் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் நன்கொடை வசூல் செய்வதை தடுத்திடவும், அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் மிகத்தெளிவான அறிவுரைகளை அளித்துள்ளார். “துறை அனுமதியின்றி திருக்கோயில் மற்றும் இறைவன் / இறைவி பெயரில் தொடங்கப்பட்ட சங்கம், அறக்கட்டளை மற்றும் குழுக்களை கண்டறிந்து மேற்கண்ட அமைப்புகளின் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை திருக்கோயில் மூலம் எடுக்கப்பட வேண்டும்” என்றும், அப்படி வசூலிக்கப்பட்ட தொகைகளை “அந்த அமைப்புகளின் கணக்குகளில் உள்ள தொகையினை திருக்கோயில் பெயருக்கு மாற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். வங்கி கணக்குகளை முடக்கி சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். திருக்கோயில் நிர்வாகத்தின் அறிவிப்பை மீறி நன்கொடை வசூலிக்கும் நபர்கள், அமைப்புகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றும் தெளிவாக அறிவுறுத்தியிருந்தார். இதன் பின்னரும் இந்தாண்டும் பல திருக்கோயில்களில் இத்தகைய அமைப்புகளின் பெயரில் நன்கொடை வசூலிப்பதும், அந்த நன்கொடை அளிக்க வேண்டுமென்று கோவிலில் உள்ள ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்பதும் நன்கொடை கொடுத்தவர்களின் பெயர்களை அறிவித்ததும் நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் அறநிலையத்துறை அதிகாரிகள் உடன்பட்டோ அல்லது பயந்தோ இவற்றை தடை செய்யாமலும், நடவடிக்கை எடுக்காமலும் இருந்து வருகின்றனர்.

கூட்டுச் சதியும் கொள்ளையும்

இதேபோன்று, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு துறை 23.7.2021இல் அப்போது இணை இயக்குநராக இருந்த அன்புமணி, கண்காணிப்பாளர் அமர்நாத், மராமத்து கண்காணிப்பாளர் கே. அய்யப்பன், ஸ்ரீகாரியம் பி. செந்தில்குமார் ஆகியோர் திருக்கோவில் பராமரிப்புப் பணிகளை அறநிலையத்துறை செய்ததாக கூறி 3,48,000/- ரூபாயை எப்படி கூட்டாக சதி செய்து கொள்ளையடித்தார்கள் என்று குறிப்பிட்டு 6.8.2021இல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அன்புமணி பதவி உயர்வு பெற்று இப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பணி புரிந்து வருகிறார். மற்ற மூவரும் அதே மாவட்டத்தில், அதே இடங்களில் பணி செய்து கொண்டு ஆர்.எஸ்.எஸ்.சின் பணிகளை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் நடத்துவது தான் தங்களுக்கு இடப்பட்ட பணி என்பது போல நடந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரையிலும் அவர்கள் மீது துறைவாரி நடவடிக்கையும் இல்லை, அந்த வழக்கை விரைந்து நடத்துவதற்கான முயற்சிகளையும் இவர்கள் செய்யவில்லை.

நிலுவை வழக்கும் பதவி உயர்வும்

இதேபோன்று, 5.7.2021 அன்று அப்போதைய இணை இயக்குநர் எம். அன்புமணி மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ. 40,90,734/- மூன்றரை ஆண்டுகளில் சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கும் நிலுவையில் இருக்கிறது. ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இப்படி பல்வேறு உதாரணங்களை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். ஒருபக்கம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலை பயன்படுத்தியும், பக்தர்களை ஏமாற்றியும், சட்ட விரோதமான முறையில் நன்கொடைகள் வசூலித்தும், கோவில்களுக்குச் சொந்தமான இடங்களை முறைகேடாகப் பயன்படுத்தியும், சங்பரிவார் ஆட்களும் அவர்களுக்கு உடந்தையானவர்களும் முறைகேடு செய்து கொண்டிருக்கும் போது அந்த மாவட்டத்தில் உள்ள பல அதிகாரிகள் இதற்கு உடந்தையாகவும், பங்காளியாகவும் இருந்து கொண்டிருக்கிறார்கள். காவல்துறையின் ஒரு பகுதியினரும் இவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த முத்தரப்பு கூட்டும் தங்கள் சொந்த நலன்களுக்காக சட்டத்தை வளைப்பதும், அதிகாரிகளை பயன்படுத்தி அரசை மிரட்டுவதுமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு உரிய முறையில் விசாரணை நடத்தி மாவட்டத்தில் உள்ள சிறப்பு பிரிவு காவல்துறையினரின் சார்பு நிலையோடு செயல்படுவோரை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கும், உண்மை நிலையை அரசுக்கு தெரிவிக்கும் அதிகாரிகளை நியமிக்கவும், ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாக்களை ஆலயங்களில் அமல்படுத்திக் கொண்டிருக்கும் அலுவலர்கள் மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கும், ஊழல் செய்தவர்கள், ஊழலுக்கு துணைபோகிறவர்கள், ஊழலைக் கண்டுகொள்ளாமல் இருப்போர் மீது உரிய துறைவாரியான கிரிமினல் நடவடிக்கை எடுப்பதற்கும், அனைத்து ஆலயங்க ளையும் ஆர்.எஸ்.எஸ். நபர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் மேற்படி நபர்கள் அரசு நிர்வாகத்தை தவறாக வழி நடத்துவதோடு, அந்த மாவட்டத்தில் அமைதியை குலைக்கவும், கலவரங்களை ஏற்படுத்தவும் இவர்களே திட்டமிடுவார்கள் என்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு முதலமைச்சர், அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோரும் நேரடியாக தலையிட்டு ஆர்.எஸ்.எஸ்-சை ஆலயங்களிலிருந்து வெளியேற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here