புரட்சி பல்லாக்கு!

பல்லக்கு பவனி என்பது பார்ப்பனிய பண்பாடு. மனிதனை மனிதன் தூக்கி சுமப்பது தீண்டாமை வடிவம். இதற்கு முடிவு கட்டுவது குறித்து தன் கவிதை வரிகளில் சொல்லியுள்ளார் புதியவன்.

0

புரட்சி பல்லாக்கு!

பல்லாக்கு இனிமை
குருபீடத்தின் மகிமை
மகிமை நீ எனில்
எம் மனிதம் சிறுமையோ
ஆதினம் மேல் எனில்
மானிடம் கீழ்தானோ
இனி கீழ் செய்த நாவினம்
எம் முன்னே ஆடுமோ!

எம் தோள்களில் அமரவா
சொகுசு பல்லாக்கு
உலகை படைத்த எம் தோள்கள்
இனி சுமக்க இசைவதில்லை நாங்கள்

உன்னை பீடம் என்கிறாய் நீ
பீடை என்கிறோம் நாங்கள்

எம் தோள்களை வதைப்பது
பல்லாக்கு வன்மம்
அந்த பீடையின் அழுத்தமோ
ஆயிரமாண்டு கதை சொல்லும்
அடிமையாய் மூச்சிழந்த
பாட்டிமாரின் வதை சொல்லும்

படிக்க:

♦  புழுவே, வணக்கம் ! – கவிதை
♦  மனித குலமே தற்காத்துக் கொள்! – கவிதை

வாயிலும் மார்பிலும்
தொடையிலும் சூத்திலும்
விதவிதமாய் பிறப்பென்ற
சனாதன வக்கிரம்
கோர நகமாய் அழுத்தும்
பல்லாக்கு இதயம்வரை கீறும்

உடன்கட்டை நெருப்பிலே பொசுங்கிய தேகம்
பெண்களின் ஓலத்தை கட்டைகள் பாடும்
பல்லாக்கு தகனம் உயிரெல்லாம் நடுங்கும்

சாதியின் விளக்கிட்டு வடதிசை காட்டும்
மதவெறி கைநீட்டி தென்திசை காட்டும்
இரண்டுக்கும் நேரிட்டு இலாபவெறி சேரும்
கார்ப்பரேட் காலடிதான் பல்லாக்கின் ஜாலம்

எம் தோள்களில் சுமந்தது மானிட கேடு
பள்ளத்தில் வீசினால் தலைமுறைக்கு நாடு

அனுமன் வைத்த தீ
கதையோடு அணைந்தது
எம் மக்கள் வைத்த தீ
அலரி மாளிகை அலறுது

பல்லக்கின் மோகம்
இனியும் தொடரும் எனில்
108ல் பவனி

வீதிகள் முழங்கிடும்
மக்கள் விடுதலை பாட்டு
மக்கள் அதிகாரம் அமர்ந்தது
புரட்சி பல்லாக்கு.

  • புதியவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here