வேலூர் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம்! CPI(M-L), NDLF தோழர்கள் கைது!

டெட்ரா பாக்கெட், மால்களில் வெண்டிங் மிஷின் மூலம் சரக்கு விற்பது என மக்களுக்கு விரோதமாக வியாபார நோக்கில் சிந்திக்க ஆரம்பித்தது.

19.11.2024 அன்று வேலூரில் டாஸ்மாக்கிற்கு பூட்டு போடும் போராட்டத்தில் தோழர்கள்

நேற்று முன்தினம் (19.11.2024) வேலூரில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தில் கலந்துக் கொண்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் இடதுசாரி அமைப்பு தோழர்கள் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ஏற்பாடு செய்திருந்த பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்குப் பூட்டு போடும் போராட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வேலூர் மாவட்ட தோழர்களும், பாலாறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் ஏ.ஐ.சி.சி.டி.யு ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்துக் கொண்ட பெண்கள், சிறுவர்கள் உட்பட 60 பேர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். மாலை வரை காத்திருந்த போலீசு இந்த போராட்ட்த்திற்கு தலைமை தாங்கிய 7 பேரை ரிமாண்ட் செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளது. இதில் புஜதொமுவை சேர்ந்த மாவட்ட செயலாளர் தோழர் சரவணன், மாவட்ட தலைவர் தோழர் செல்வம் மற்றும் மாவட்டப் பொருளாளர் தோழர் பாபு ஆகியோரும் தற்போது சிறையில் உள்ளனர்.

2015-ல் காந்தியவாதி சசி பெருமாள் மரணத்திற்கு பின் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றன. பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக்கை சூறையாடியதால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் டாஸ்மாக்கிற்கு எதிரான மனநிலை உருவாக ஆரம்பித்த பிறகு அப்போதைய எதிர் கட்சியாக இருந்த திமுக 2016 சட்டமன்ற தேர்தலில் பூரண மதுவிலக்கு வாக்குறுதியை அறிவித்தது. ஆட்சியில் இருந்த ஊழல் குற்றவாளி ஜெயா வேறு வழியில்லாமல் படிப்படியான மதுவிலக்கு என்று வாக்குறுதி அளித்தார்.

அந்த தேர்தலில் மீண்டும் வெற்றிப் பெற்று ஆட்சியமைத்த ஜெயா அரசு மக்களிடம் இருந்த கொந்தளிப்பை அடக்க முதலில் 500 டாஸ்மாக் கடைகளை மூடி உத்தரவிட்டது. அதன் பிறகு ஜெயா மரணத்திற்கு பின்பு முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி மோடிக்கு எடுபுடி வேலைப் பார்ப்பதை முழுநேரமாக செய்ததால் டாஸ்மாக் பற்றி கண்டுக் கொள்ளவேயில்லை.

2021-ல் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ள ‘திராவிட மாடல்’ என புகழ்பாடக் கூடிய திமுக பூரண மதுவிலக்கு என்ற அறிவிப்பை முற்றிலுமாக கைவிட்டு அதனை நவீனமாக்கும் வேலையில் இறங்கியது. டெட்ரா பாக்கெட், மால்களில் வெண்டிங் மிஷின் மூலம் சரக்கு விற்பது என மக்களுக்கு விரோதமாக வியாபார நோக்கில் சிந்திக்க ஆரம்பித்தது. கிட்டத்தட்ட மதுவிலக்கு என்ற சொல் பதத்தையே வெறுத்தது எனலாம்.


படிக்க: ‘மதுவிலக்கு’ அமைச்சரே!


ஆனால் டாஸ்மாக்கால் தினம்தினம் பாதிக்கப்படும் மக்கள் நிலைமை மட்டும் மாறவேயில்லை. காலையிலேயே பிளாக்கில் விற்கும் சாராயத்தை வாங்கிக் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் தானும் கெட்டு தனது குடும்பத்தையும் நடுத்தெருவில் நிறுத்தும் குடிமகன்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் டாஸ்மாக்கிற்கு எதிராக தமிழ்நாட்டில் சில இடங்களில் மக்கள் போராட்டம் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.

அன்று டாஸ்மாக்கிற்கு எதிராக போராடினாலே சிறை என மகஇக தோழர் கோவனை தேசத்துரோக வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது ஜெயா அரசு. இன்று பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக்கிற்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்தினால் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிடமாடல்’ அரசு.

மக்களை சீரழிக்கும் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடினால் கொலை குற்றவாளிகளை போல் கைது செய்வது தான் ‘திராவிட மாடலா’? இதற்கு திமுக அரசு பதில் கூற வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட வேண்டும். குடிநோயாளிகளை குணப்படுத்த சிறப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும். டாஸ்மாக்கிற்கு எதிராக போராடி சிறை சென்றவர்களை விடுவிப்பதோடு அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

  • மக்கள் அதிகாரம் ஊடகம்

1 COMMENT

  1. சுருக்கமானதாக இருந்தாலும் சிறப்பான அம்பலப்படுத்தும் கட்டுரை. கள்ளக்குறிச்சி சாராயச் சாவுகளுக்கு பிறகும் கூட இந்த அரசு மதுவிலக்கு தொடர்பாக தீர்க்கமான முடிவு எடுக்க முன்வரவில்லை என்றால் இது என்ன ‘திராவிட மாடலோ’? உரியவர்கள் தான் பதில் கூற வேண்டும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here