‘மே தினம்’ வரலாற்றுக் கட்டுரை தொடர்!
மே தினம்’ வரலாற்றுக் கட்டுரை தொடர்! – 2
மே தினம்’ வரலாற்றுக் கட்டுரை தொடர்! – 3

தொடர்ச்சி…

முதல் உலகப்போரின் போது மே தினம்

போரின் போது சமூக ஜனநாயக கட்சித் தலைவர்கள் செய்த துரோகம் 1915-ம் ஆண்டு மே தினத்தின் போது வெளிப்படையாக தெரிந்தது. இது 1914 ஆகஸ்டில் ஏகாதிபத்திய அரசாங்கங்களோடு அவர்கள் செய்து கொண்ட சமரசத்தின் தத்துவார்த்த வளர்ச்சியாகும். ஜெர்மன் ஜனநாகயகவாதிகளோ தொழிலாளிகளை வேலை செய்யுமாறு கூறினார்கள். பிரெஞ்சு சோஷலிஸ்டுகளோ ஒரு பிரத்தியேக அறிக்கையில் அதிகார வர்க்கத்திடம் மே தினம் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்று கூறுகிறார்கள். போர் நிகழ்ந்த மற்ற நாடுகளிலும் பெரும்பாலான சோஷலிஸ்டுகளிடையே இதே நிலைதான் காணப்பட்டது. ரஷ்யாவில் போல்ஷ்விக்குகளும், மற்ற நாடுகளில் சிறுபான்மையாய் இருந்த புரட்சி சக்திகளுமே சோஷலிசத்திற்கும், சர்வதேசியத்திற்கும் உண்மையாக இருந்தனர். லெனின், ல்கஸம்பர்க், லீப்ஹனெட் ஆகியோர் குருட்டுத்தனமான சமூக வெறிக்கு எதிராக குரல் கொடுத்தனர். 1916, மே தினத்தன்று நடந்த சிறு திரளான தொழிலாளர் ஊர்வலமும், தெருவில் நிகழ்ந்த வெளிப்படையான சிறு சண்டைகளும் போர் நிகழும் நாடுகளில் தொழிலாளர்கள் துரோகத் தலைவர்களின் விஷப்பிடியிலிருந்து தானாகவே வெளியேறி வருகின்றனர் என்பதை காட்டுவதாய் இருந்தது. லெனினும் மற்ற எல்லா புரட்சிவாதிகளும் சந்தர்ப்பவாதத்ததின் அழிவு (இரண்டாம் அகிலத்தின் அழிவு: ஆர்) தொழிலாளர் இயக்கத்திற்கு நன்மை பயக்கும் என்று நம்பினர். துரோகிகளிடமிருந்து மீள்வதற்கும் புதிய அகிலத்துக்கான லெனினுடைய அழைப்பிற்கும் ஏற்ற நேரமாக அது இருந்தது.

ஜிம்மர்வால்டு (1915), கிந்தால் (1916) ஆகிய இடங்களில் நடந்த சோஷலிச மாநாடுகள், லெனினுடைய முழக்கமான ஏகாதிபத்திய போரை உள்நாட்டுப் போராக மாற்றுவோம் என்பதற்கு ஆதரவாக சர்வதேச புரட்சிகர கட்சிகள் மற்றும் சிறு சக்திகள் திரளுவதற்கு வழிவகுத்தன. 1916 மே தினத்தன்று கார்ல் லீப் ஹ்னெட்டும் மற்ற அவரது சோஷலிச இயக்க ஆதரவாளர்களும் சேர்ந்து பெர்லினில் போலிஸின் தடையுத்தரவையும் கட்சியின் அதிகாரபூர்வ தலைமையையும் மீறி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி தொழிலாளி வர்க்கம் உயிருள்ள சக்தி என்பதை நிரூபித்தனர்.

1917-ம் ஆண்டு அமெரிக்காவில் போர் பிரகடனப்படுத்தப்பட்ட போது அதனால் மே தினம் நிறுத்தப்படவில்லை. அப்போது ஏப்ரலில் நடந்த செயின்ட் லூயிஸ் அவசர மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட யுத்த எதிர்ப்பு தீர்மானத்தை முழுமூச்சுடன் எடுத்துக் கொண்டு மே தினத்தை அதற்காக பயன்படுத்தினர். பின்னர் 1919 மே முதல் நாள் கிலிவலேண்டில் சார்லஸ் ரத்தன்பர்க் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம் குறிப்பிடும் படியான போர்க்குணத்தோடு இருந்தது. இவர் உள்ளூர் சோஷலிஸ்டு கட்சி ஸ்தாபகர்களில் ஒருவருமாவார்.

அப்போது பொது சதுக்க வீதியிலே 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணிவகுத்து சென்றனர். பின்னர் இன்னும் பல்லாயிரக்கணக்கானவர் அத்தோடு சேர்ந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தை போலிஸ் காட்டுமிராண்டித் தனமாக தாக்கியது. அதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். இன்னொரு தொழிலாளி கடுமையாக காயப்படுத்தப்பட்டார்.

1917-ம் ஆண்டு மே தினமும், ஜுலை மாதத்து நாட்களும் இறுதியாக அக்டோபர் மாதத்து நாட்களும் ரஷ்யப் புரட்சிக்கு படிப்படியாக ஒரு நினைவைக் கொடுத்தது. மனிதகுல வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கிய ரஷ்ய புரட்சியானது, மே தினத்திற்கு புதிய உத்வேகத்தையும் முக்கியத்துவத்தையும் தந்தது. 1890-ம் ஆண்டு மே தினத்தின் போது நியூயார்க் யூனியன் சதுக்கத்தில் அமெரிக்க தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களிடையே பின்வருமாறு முழங்கினர். “8 மணி நேர வேலை நாளுக்காக போராடும் இதே நேரத்தில் தமது இறுதி லட்சியமான இந்த கூலி (முதலாளித்துவ) அமைப்பை தகர்த்தெறிவதிலிருந்து விலக மாட்டோம்”. இந்த முழக்கம் முதன் முறையாக உலகின் ஆறில் ஒரு பகுதியில் பாட்டாளி வர்க்க சக்தியின் வெற்றியாக நினைவாக்கப்பட்டது.

இந்த லட்சியத்தை அடைந்ததிலே முதலானவர்கள் என்பதை ரஷ்ய தொழிலாளர்கள் நிரூபித்துக் காட்டினர். ஆனால் 1917-ம் ஆண்டின் போது, அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர்கள், தாங்கள் 1890-ல் முழங்கிய குறிக்கோளிலிருந்து வெகுதூரத்தில் இருந்தார்கள். அவர்களின் முக்கிய நோக்கம் முதலாளித்துவ அமைப்பை பாதுகாப்பதும், அமெரிக்க ஏகாதிபத்திய வளர்ச்சிக்கு சுலபமான வழிவகுப்பதுமாக இருந்தது. உலகத் தொழிலாளர் ஒற்றுமை, முதலாளித்துவ அமைப்பிலிருந்து விடுதலை போன்ற பிரகடனங்களை முழங்கிய மே தினத்திற்கு புதிய சக்தியை வழங்கிய ரஷ்ய புரட்சியினால் அமெரிக்க தொழிலாளர்கள் உத்வேகம் பெறுவதை அந்த தலைவர்கள் விரும்பவில்லை.

1923ம் ஆண்டு மே தினத்தின் போதுதொழிலாளிஎன்ற வார பத்திரிகையின் ஆசிரியர் சார்லஸ் ரத்தன்பர்க் பின் வருமாறு எழுதுகிறார். “மே தினம் உலகெங்கிலுமுள்ள முதலாளிகளின் உள்ளத்திலே அச்சத்தையும், தொழிலாளிகளின் உள்ளத்திலே நம்பிக்கையும் உருவாக்கும் தினம். வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அமெரிக்காவில் கம்யூனிஸ இயக்கம் பலமாக இருக்கும். மாபெரும் சாதனைகளுக்கான பாதை தெரிவாக இருக்கிறது. அமெரிக்காவிலும், உலகின் மற்ற பகுதிகளிலும் எதிர்காலம் என்பது கம்யூனிஸத்திற்கே உரியதாய் இருக்கும்”.

அதேதொழிலாளிபத்திரிகையில் ஒரு தலைமுறைக்கு முன் 1907-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் நாள் மே தினம் குறித்து யூகின் டெப்ஸ் என்பவர் பின்வருமாறு எழுதுகிறார். “இந்த தினம்தான் முதலாவதும், ஒன்றேயுமான உலகத் தொழிலாளர் தினம். இந்த நாள் புரட்சிக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட தொழிலாளி வர்க்கத்துக்குரிய நாளாகும்

மே தினத்தின் வளர்ந்து வரும் போர்க்குண பாரம்பரியத்தை எதிர்க்கும் வகையில், செப்டம்பர் முதல் திங்கட்கிழமையை மே தினத்துக்கு பதிலான தொழிலாளர் தினமாக கொண்டாடுவதாக அமெரிக்க கூட்டமைப்பின் தலைவர்கள் ஊக்குவித்தனர். இந்த தினம் முதன் முதலில் 1885-ல் உள்ளூர் அளவில் கொண்டாட்டங்களை முறியடிக்கும் வகையில் நடத்தப்பட்டது.

இதே போன்று மே தினத்துக்கு எதிராக, ஹூவர் நிர்வாகம் அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்போடு சேர்ந்து மே முதல் நாளை குழந்தைகள் நல தினமாக அறிவித்தது. குழந்தைகள் நாளில் திடீரென்று பிறந்த இந்த அக்கறையின் உண்மையை நாம் 1928-ம் ஆண்டு அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் மாநாட்டில் நிர்வாகக்குழு சமர்ப்பித்த அறிக்கையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அந்த அறிக்கை பின்வருமாறு சொல்கிறது.

கம்யூனிஸ்டுகள் மே முதல் நாளை தொழிலாளர் தினமாக கொண்டாடுகிறார்கள். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இனிமேல் மே முதல் நாளை, அமெரிக்க மக்கள், குழந்தைகளை தினமாக கொண்டாடும்படி அழைக்க வேண்டும் என்று தலைவரைக் கேட்டுக் கொள்கிறது. ஆண்டு முழுவதும் குழந்தைகள் நலனை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம். இதுதான் மிகுந்த பயனுள்ள நோக்கமாகும். அதே நேரத்தில் இனி மே தினம் கம்யூனிஸ்டு தினமாகவோ அல்லது வேலை நிறுத்த தினமாகவோ அறியப்படமாட்டாது.”

1929-ல் ஏற்பட்ட நெருக்கடி

முதல் உலகப் போருக்குப் பத்தாண்டுக்குப் பின்னும் லட்சோபலட்ச மக்கள் முதலாளித்துவ அழிவுப் பாதையில் சிக்கியிருந்தார்கள். அனுபவங்களிலிருந்து பாடம் பெற மறுத்த பிற்போக்கு தொழிற்சங்கத் தலைவர்களோ இந்த மக்களைத் திரட்டுவதற்கு பதிலாக முதலாளித்துவத்தின் கீழ் நிரந்தர செழுமை என்ற மாயையை பரப்புவதில் தீவிரமாய் இருந்தார்கள். 1929 இறுதியில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டது. அப்போது சொத்துடையவர்களும், ஏகபோகவாதிகளும் எல்லா சுமையையும் தொழிலாளர்கள் தலையின் மீது சுமத்தப் பார்த்தார்கள். அப்போது தொழிலாளர்களுக்கு ஒரே பாதுகாப்பாக இருந்தது வேலை நிறுத்தமும், வேலையில்லாதவர்களின் வெகுஜனப் போராட்டமுமேயாகும். கம்யூனிஸ்டுகள் இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கினர். இதனால் அமெரிக்கத் தொழிலாளர்கள் பெரும் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டனர். அவர்களின் ஜனநாயக உரிமைகள் விரிவுப்படுத்தப்பட்டன. என்றுமில்லாத அளவுக்கு அமெரிக்க தொழிலாளர் வரலாற்றில் 1930-களில் புதிய முன்னேற்றங்களை ஏற்படுத்த முடிந்தது. 1935-ம் ஆண்டு சி... துவக்கப்பட்டது. பெரும் தொழிற்சாலைகள் வேகமாக ஸ்தாபனப்படுத்தப் பட்டன. இவையெல்லாம் அமெரிக்க முக்கியத்துவத்தை தந்தது. அமெரிக்க தொழிலாளர்களின் இந்த எழுச்சியால் நீக்ரோ மக்களின் சம உரிமைக்கான போராட்டம் நடத்துவதற்கான காலம் ஏதுவானது. அதன் காரணமாக அமெரிக்க ஜனநாயக முன்னணி மேலும் வலுவடைய முடிந்தது.

ஏகாதிபத்திய யுத்தம், புரட்சி முன்னெப்போதும் இருந்திராத பொருளாதார நெருக்கடி இவைகள் பதினைந்து ஆண்டுகளுக்குள் முதலாளித்துவத்தை ஆட்டங்காண வைத்தன. இதனால் அது பெரும் நெருக்கடிக்குள்ளானது. முதல் உலகப் போருக்கு காரணமாய் இருந்த ஏகாதிபத்திய போட்டிகள் இப்போது இன்னும் தீவிரமாயின. மேலும் உலகின் ஆறில் ஒரு பகுதியில் முதலாளித்துவம் துடைத்தெறியப்பட்டதும், காலனி நாடுகளில் நடந்த விடுதலைப் போராட்டங்களின் அதிகரிப்பும், வளர்ந்து விட்ட முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் ஜனநாயக உரிமைக்காகவும் தீவிரமாக போராடியதும் இந்த பொதுவான முதலாளித்துவ நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தியது. இதனால் தங்கள் அரசியல் பொருளாதார வாழ்வை காத்துக் கொள்ளவும் தவிர்க்க முடியாத வரலாற்று வளர்ச்சியினை தடுத்து நிறுத்தவும் வேறு வழியின்றி முதலாளிகளும் ஏகபோக வாதிகளும், பாசிச பயங்கர சர்வாதிகாரம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்தார்கள். தோற்கடிக்கப்பட்ட ஜெர்மனி, மற்ற நாடுகளில் தொழிலாளர் மற்றும் முற்போக்கு சக்திகளிடையே இருந்த பலவீனம் மற்றும் ஒற்றுமையின்மையாலும், ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள், இந்த நாடுகளில் இருந்த பாசிச சக்திகளை ஊக்குவித்தாலும், இந்த நாடுகளில் பாசிசம் வெற்றி பெற ஏதுவாகிறது. நூற்றாண்டு காலமாய் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற ஜனநாயக உரிமையை அழிப்பதற்கு உலகம் முழுவதுமான ஏகபோக மூலதனத்தின் முயற்சியை இது காட்டுவதோடு, இரண்டாவது உலகப் போருக்கான பாதையையும் இது தெளிவாக்குகிறது.

பாசிசத்திற்கு எதிரான யுத்தம்

1933-லிருந்து 1939 வரை ஜெர்மன் பாசிசம் உலகெங்குமுள்ள பிற்போக்குத்தனத்தின் முன்னோடியாய் திகழ்ந்தது. சோஷலிச நாடுகளுக்கு எதிராக ஆங்கில அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் நாஜி ஜெர்மனியை ஆதரித்தன. ஜெர்மனி பாசிசமோ உலகம் முழுவதையும் தன் கீழ் கொண்டு வர எண்ணியது. இதன் காரணமாக இரண்டாம் உலக யுத்தத்துக்கான தயாரிப்புகள் முறைப்படி செய்யப்பட்டன. அதே நேரத்தில் ஜப்பானிய ஏகபோகவாதிகளும் தங்கள் சொந்த நலனுக்காக இந்த சதியில் கை கோர்ந்து நின்றனர். இந்த யுத்தம் அதன் சொந்தத் தன்மை காரணமாக ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் சுதந்திரத்திற்கு எதிராக திருப்பப்பட்டது. இச்சூழ்நிலையில் மனித குல முன்னேற்றத்தின் விதி மற்ற இடங்களில் உள்ள விவசாய மற்றும் ஒடுக்கப்பட்ட காலனி மக்களோடு இணைகின்ற தொழிலாளர்களின் கையிலேதான் உள்ளது என்பது மிகத் தெளிவாக தெரிய ஆரம்பித்தது. ஏகபோக முதலாளிகள் வளர்ந்து வரும் அழிவு சக்தியை தடுக்கும் பொருட்டு ஜனநாயக மற்றும் தேசிய சக்திகளை திரட்டுவது என்பது இவர்களின் முயற்சி, ஒற்றுமை, எதிர்பு ஆகியவற்றின் அடிப்படையில்தான் இருந்தது. எனவே முப்பதுகள் முழுவதும் நடந்த மே தினம், புதிய உலக அழிவை தடுக்கும் பொருட்டு, பாசிச ஆக்ரமிப்புக்கு எதிராக, உலக மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் ஒற்றுமைக்காக குரல் கொடுப்பதாக இருந்தது.

உழைக்கும் வர்க்கம் நாட்டின் முதுகெலும்பு என்பதை சந்தேகத்திற்கிடமின்றி இரண்டாவது உலக யுத்தம் நிரூபித்தது. உழைக்கும் மக்கள் மட்டும் பிளவுபட்டிருந்தால், பாசிசம் தனது அதிகாரத்திற்கு உலகையே நாசகர யுத்தத்தில் மூழ்கடித்திருக்கும். ஆனால் பாசிசத்தால் ஜனநாயகம் மற்றும் முன்னேற்றத்தை பாதுகாக்க உலகம் முழுவதிலுமுள்ள பெரும்பான்மையான ஜனநாயக சக்திகளை திரட்டும், போராடக்கூடிய உழைக்கும் வர்க்கத்தை வெற்றி கொள்ள முடியவில்லை.

சுதந்திரம் ஜனநாயகம், வளர்ச்சி இவற்றிற்காக இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் இருந்தது. இந்தப் போராட்டத்தின் முன்னணியில் சோவியத் யூனியன், மற்ற நாடுகளின் உழைக்கும் மக்கள் இருந்ததை உலகெங்கிலுமுள்ள ஜனநாயக சக்திகள் கண்டனர். யுத்தத்தின் போது வேலை நிறுத்தம் மூலமும், பாசிச படையை அழிப்பதற்கான ஆயுதங்களை தயாரிப்பதன் மூலமும் எல்லா இடங்களிலும் உழைக்கும் வர்க்கம் மே தினத்தை அனுஷ்டித்தது. 1945-ல் யுத்தம் முடிவுற்றபோது பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் விடுதலையும், வெற்றியும் அடைந்த ஐரோப்பிய நாடுகளில் மே தினங்களின் போது திரண்டதை எல்லா நாடுகளும் கண்டன. அந்த ஆர்ப்பாட்டங்களின் போது, பாசிசத்தின் மிச்ச சொச்சங்களை வேரோடு அழிக்க தொடர்ந்து போராடுவது என்றும், பாசிச ஆயுதத்தை மீண்டும் கையிலெடுக்காத வண்ணம் ஏகபோகத்தை அழித்தொழிக்க மற்ற முற்போக்கு சக்திகளோடு தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை பூரணமாக்குவது என்றும், ஜனநாயகத்தை பாதுகாத்து விரிவுபடுத்தவும், மக்கள் சக்தியை ஆட்சியாக்கவும், நிலையான அமைதியை உருவாக்கவும், சுரண்டலும் ஒழுங்கு முறையும் அற்ற சோஷலிச உலகை நிர்மாணிக்க பாதை வகுக்கவும் தொழிலாளி வர்க்கம் உறுதி பூண்டது.

மனித குலத்தின் அமைதி மற்றும் மகிழ்வான எதிர்காலத்திற்காக போராடுவதன் மூலமும் எல்லா நாட்டிலுள்ள தொழிலாளி வர்க்கம், சர்வதேச ஐக்கியம் மற்றும் தோழமையுணர்வு அடிப்படையில் மே தினத்தன்று உலக மக்களை வணக்கம் செய்கிறது.

முற்றும்

அலெக்சாண்டர் ட்ராச்டென்பர்க் எழுதிய மே தின வரலாறு 

(தமிழில் எம். சிவகுமார்)
நன்றிசவுத் விஷன் பதிப்பகம், சென்னை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here