இந்திய உழவர்களின் உலகம் காணா போராட்டத்தின் வெற்றி விழா ! தொடங்கும் போருக்கான முன்னறிவிப்பு!

ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மாபெரும்
பேரணி – பொதுக் கூட்டம் 29.12.2021 அன்று திரூவாருரில் நடைபெற்றது.
ஐக்கிய விவசாயிகள் முன்னணியில் அங்கம் வகிக்கிற விவசாய சங்கங்கள், அமைப்புகள், இயக்கங்கள் அனைவரும், அன்று மாலை 3 மணி அளவில் திருவாரூர் ரயிலடியில் திரண்டார்கள். SKM யில் உறுப்பு வகிக்கும் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்களும் திரண்டனர். மக்கள் அதிகாரம் பெயர் பொறித்த பனியன்கள் அணிந்து செங்கொடிகளுடன் தோழர்கள் குவிந்தனர்.

தாரை, தப்பட்டை, பறை முழங்க விண்ணதிர முழுக்கங்களுடன் ஊர்வலம் துவங்கியது. பல்வேறு அமைப்புகளும் கொடிகள், பேனர்கள் தாங்கி சென்றார்கள். அதில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவின் தலைமையில் தோழர்கள் அனைவரும் அணிவகுத்து சென்றனர். சிறுவர்கள், பெண்கள் இளைஞர்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
தெலுங்கானா, நக்சல்பாரி பாரம்பரியத்தில் உருவான புரட்சிகர அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி புதிய எழுச்சியோடு மாநில அமைப்பாளர் தோழர்.கம்பம் மோகன் தலைமையில் அணிவகுத்தது. திருவாரூர் பொதுமக்கள் வைத்த கண் வாங்காமல் வியப்புடன் பேரணியைக் கண்டுகளித்தனர்.
சிறுவர்களின் சிலம்பாட்டம்,நடனம், பறையிசை,வெற்றி முழக்கங்கள், உயர்ந்து பறந்த செங்கொடிகள் என பேரணி வண்ணமயமாய்த் திகழ்ந்தது.
பேரணி இறுதியில் திருவாரூர் தெற்கு வீதியில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையை அடைந்தது. மேடையில் பறையாட்டத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. மகஇக மையக் கலைக்குழு தோழர்.கோவன் தலைமையில் நடத்திய கலை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்து முத்தாய்ப்பாக அமைந்தது.

வரவேற்புக் குழு செயலரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க(சி.பி.ஐ) மாநிலச் செயலர் தோழர். பி.எஸ். மாசிலாமணி அனைவரையும் வரவேற்று பேசினார்.

SKM மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலகிருஷ்ணன் உடல் நலக் குறைவால் நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை. அதனால் தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த SKM யின் செயற்குழு உறுப்பினரான தோழர். கி.வெ. பொன்னைய்யன் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.

இதில் இடதுசாரி கட்சிகளின் விவசாய சங்கங்கள், பல்வேறு விவசாய அமைப்புகள், ஜனநாயக இயக்கங்களின் பிரதிகள் விவசாய போராட்டத்தின் வெற்றி குறித்து சுருக்கமாகப் பேசினர்.

சிறப்பு விருந்தினர்களாக SKM-மின் முன்னணித் தலைவரும் ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவின் உறுப்பினருமான தோழர் அசோக் தவ்லே,அகில இந்திய விவசாயிகள் சங்கப் பொதுச்செயலர்( சி.பி.அய்) தோழர். அதுல் குமார் அஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தோழர் அசோக் தவ்லே , போராடிய விவசாயிகள் மீது மோடி அரசு நடத்திய தாக்குதல்கள், அவதூறுப் பிரச்சாரம் இவற்றை முறியடித்து வெற்றி பெற்றதை விளக்கியதோடு,இப்போது ஒரு சண்டையில் மட்டுமே வெற்றி எட்டப்பட்டிருக்கிறது, இறுதிப்போர் இன்னும் முடியவில்லை.

அனைத்துக் கோரிக்கைகளையும் வென்றெடுக்கும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறினார்.தோழர் அதுல் குமார் அஞ்சன் மோடி அரசு குறைந்த பட்ச ஆதார விலையில் எவ்வாறு விவசாயிகளை வஞ்சிக்கிறது என்பதை விளக்கினார்.

மக்கள் அதிகாரம் மாநில பொருளாளரும் SKMன் மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர். காளியப்பன் விவசாயிகள் போராட்டத்தின் இறுதி வெற்றி என்பது மோடி அரசின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளையும், இந்து மதவெறிக் கும்பலையும் முற்றாக ஒழிப்பதிலே தான் அடங்கியிருக்கிறது என்றார். இறுதியாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க( சி பி எம்) பொதுச்செயலர் தோழர். பி சண்முகம் உரையாற்றினார்.

பேரணி- பொதுக்கூட்டம் விவசாயிகள் போராட்ட வெற்றியைக் கொண்டாடுவதொடல்லாமல் மக்களுக்கு புதிய உற்சாகத்தை நம்பிக்கையும் ஊட்டுவதாக அமைந்தது. கார்ப்பரேட்-காவி பாசிஸ்டுகளை வீழ்த்த வேண்டிய கடமையை முன்னிறுத்தியது.

செய்தி:
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு-புதுச்சேரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here