கட்டுப்பாடு! அடிமைத்தனமாக
பண்ணையார் பாணி அரசியல்!
முரண்பாடாய், சுயமுரண்பாடாய்
ஒரு செய்தி சொல்ல வந்துள்ளேன்.
சுயமுரண் தவறானதா?
முரண்பட்டதால் தான்
விதை செடியானது
நான் கூற வந்துள்ள
கருத்துக்கு முரண்பாடு
கொள்வீராக!
தலைமை கூறினால் சரிதான்
என்ற பார்வை
மந்தை நிலை.
இனி வேண்டாம் அதை
பகுத்துப் பார்த்து
செய்யும் வேலையை நேசித்திட
நேசம் என்ற தலைப்பில்
செய்தி கூற வந்துள்ளேன்.
நேசம் கொண்ட அனைவருக்கும், வணக்கம்.
நேசம் கொள்ள தூண்டிய மார்க்சிய -லெனினிய-மாவோ சிந்தனைக்கு நன்றி! நேசம் படைக்கவுள்ள அனைவருக்கும்
நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துக்கள்.
வாசிப்பை சுவாசம் போல
நேசிக்க வேண்டும் என்ற கருத்து
சமூகத்தை நேசிக்க கூறியது
அமைப்பையும், நமக்கான அரசியலையும்
நேசித்து வருகிறோம்.
நமது நேசிப்பு உண்மையாக இருக்கிறதா?
உண்மையில் நேசிக்க வேண்டிய
மனிதத்தை நேசித்தோமா?
இல்லை என்றே தோன்றுகிறது எனக்கு!
நேசிக்கும் பண்பில் உண்மையாக இருக்கும் பெரும்பான்மை.
சிறுபான்மையோ எப்படி இருக்கிறது.
சீர் தூக்கி பார்த்தால்
சீர் செய்ய வேண்டியுள்ளது.
சீர் செய் இயக்கம் என்றார்
தோழர் மாவோ.
அதனை அப்படியே காப்பியடித்து
சீர் செய்ய சொன்னார்கள் சிலர்
தம்மை சீர் செய்யாமலேயே!
அதன் விளைவு
40 ஆண்டு கால உழைப்பு
வீணாய் போனது.
பாட்டாளி வர்க்க பண்பு வேண்டும்
என்ற சொல்லாடல் அணிகளுக்கு!
தாம் வரித்துக்கொண்டதோ
முதலாளித்துவத்தின் சீழ் பிடித்த அதிகாரத்துவ மமதை!
அம்மட்டோ!
முதலாளித்துவத்தின் எச்சமான
அடுத்துக் கெடுப்பது, முறைகேடு,
குறை காணும் பண்பே மிச்சமானது.
எதைப் பார்த்தாலும் குறை மட்டுமே காண்பது
இதனால், நிறையை காணவே தெரியவில்லை எமக்கு!
உழைத்தவரை உருவாக்கிட தெளிவில்லை.
பெரும்பான்மை அதற்கே பலியானது.
மந்தையாகிப் போனது.
மந்தையானதால்,
நம்மிடம் நேசம் இல்லை.
துணையிடம் நேசம் இல்லை
உறவிடம் நேசம் இல்லை
ஏன் தோழமையுடன் கூட நேசமில்லை.
அப்படியெல்லாம் வாய் புளித்ததோ,
மாங்காய் புளித்ததோ என்று
பொத்தாம் பொதுவாய்
கூறாதீர்கள் கூவுகின்றது
சில குரல்கள்
மிக்க மகிழ்ச்சி,
அக்குரலை ஏற்கிறேன்
நேசம் கொள்ள முயல்கிறேன்
அதற்காய் முன்னிற்க முயல்கிறேன்.
அப்படியே முடிந்து விட்டால்
சொல்ல வந்ததை
சொல்லாமல் விட்டுவிட்டதாக
இருந்திட கூடாதல்லவா
பார்த்ததை, கேட்டதை, உணர்ந்ததை
உரைக்க சில.
பாட்டாளி வர்க்க பண்பு – அது
உண்ண உணவு
உடுக்க உடை
உட்கார உறைவிடம்
இதற்காக உழைப்பதே
பாட்டாளிவர்க்க பண்பு எனலாம்.
ஆனால், நம்மை ஆளுவது
ஆளும் வர்க்கத்தின் பண்பு
என்று கூறினால் வருத்தம் கொள்வீரோ!
எதிரியின் ரத்தத்தில் கை நனைக்காதவன்
கம்யூனிஸ்ட் அல்ல.
அதனால் என்னவோ
யாருமே கம்யூனிஸ்டாய் இல்லையோ?
கண்ணதாசன் கூட இங்கு கம்யூனிஸ்ட்டாய் ஆனாரோ?
கறாராய் விமர்சனம், கட்டுப்பாடு
பார்ப்பனியம் குறித்த விளக்கம்
ஆயிரம் இருந்தும்
ஊருக்குத்தான் உபதேசம்
அது எனக்கில்லை என்ற இறுமாப்பு.
நீங்கள் தலைமையில் இருங்கள்
தலைமை என்றால் நான் தான்
நானே தான், ‘அகம் பிரம்மாஸ்மி’ என்னைத் தவிர
யாரும் இல்லை – என்பது
உடமை வர்க்க சிந்தனை இல்லையா?
உடமை வர்க்க சிந்தனை நமக்கு உகந்தது தானா?
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
சொல்லியது வள்ளுவம்
சொல்வது போன்று நடப்பார்கள்
என்று நம்பித்தானே, நிதி தந்தார்கள்
நிதியை பார்த்ததனால் மதிமயங்கினாரே
மக்கள் நம்பிக்கையை தகர்த்தாரே!
மக்களிடம் செல்லுங்கள்
மக்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்
அதில் உள்ள சிறப்பானதை எடுத்து
மார்க்சிய ஒளியில் பட்டை தீட்டி
கற்றுக் கொடுங்கள்
என்ற சிந்தனையை ஏன்
மறந்து போனோமா?
மறைத்துக் கொண்டோமா இல்லை?
ரகசிய தன்மைதான் காரணமா? ஆராய்கின்றனர் சிலர்.
யார் மீதும் யாருக்கும் நம்பிக்கை இல்லை
என் என் மீது எனக்கும் நம்பிக்கையற்றபோனது
தோழமையை நம்பாத தன்மை என்பது
தலைமையை கைப்பற்றி விடுவார்
என்ற கூற்று என் மீது எனக்கு
நம்பிக்கை இல்லை என்பதாகும்.
நம்பிக்கையற்ற உங்கள் வார்த்தை
எங்களுக்கு எதற்கு?
ஒரு தோழர் அங்கே குமுறுகிறார்.
குமுறலுக்கு பதிலும் உண்டு
மரம் ஓய்வை நாடினாலும்
காற்று விடுவதாய் இல்லை
என்ற பொன்மொழிக்கு ஏற்ப
எமது உணர்வை மிதிக்க நீங்கள் யார்?
யார் விட்டுச் சென்றாலும்
போதித்தவரே போட்டுச் சென்றாலும்
விடுதலைக்கான,
மனிதகுல விடுதலைக்கான
அந்தப் பணியை அப்படியே
விட்டுவிட்டு செல்வதாய் இல்லை.
அதன் பொருட்டு,
உயிருக்கு உயிரான செங்கொடி ஏந்தி வந்த
உங்களை சந்திக்க வந்தது.
எனது நம்பிக்கையை வளர்த்தெடுக்க
நேசத்தை வளர்த்தெடுக்க
ஒன்றாய் தோள் சேர்க்க
உங்களை நாடி வந்துள்ளேன்.
நேசம் வளர்ப்போம், அனைத்து தளங்களிலும்
வர்க்க பாகுபாடு களைய
நேசம் வளர்ப்போம்.
நேசம் வளர்க்க நேரம் ஒதுக்கிட உள்ளேன்.
இன்றைய தலையாய தேவை நேசமே
என்று கூறி
வாய்ப்பு நல்கிய நேச மிக்க தலைவருக்கும்
நேசம் கொண்ட அனைவருக்கும்
நன்றி பாராட்டி நிறைவு செய்கிறேன்.
- தோழர். அரசு.
(நவம்பர் தினக்கவிதை)