கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக செய்திகளில் முக்கிய விவாதப்பொருளாக திருப்பதி கோயிலில் வழங்கப்படும் லட்டு மாற்றப்பட்டுள்ளது. நாம் அற்ப விசயம் என்று பேச விரும்பாவிட்டாலும் அதுபற்றி பேசவேண்டிய நிர்பந்தத்தை காவிகள் திட்டமிட்டு உருவாக்கிவிட்டனர்.
கர்நாடக பால் கூட்டமைப்பான KMF தான் நந்தினி நெய்யை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கி வந்தது. 2019 இல் மட்டும் 1,700 டன்களை தந்துள்ளது. தற்போது ஏலத்தில் KMF க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கலப்பட நெய் – லட்டு பிரச்சனையை கிளப்பிய பின்னர் மீண்டும் தனக்கான வாய்ப்பை மீட்டெடுத்துவிட்டது. அதேபோல் ஆண்டுக்கு 2,300 கோடிக்கு விற்று முதல் ஈட்டும் சந்திரபாபுவிற்க்கு சொந்தமான ஹெரிடேஜ் நிறுவனமும் இப்போட்டியில் உள்ளது.
தமிழகத்தின் திண்டுக்கல்லில் உள்ள பால் நிறுவனம் மூலம் தான் கலப்பட நெய் சப்ளையானது எனவும் அவதூறு பரப்பபட்டது. AR டெய்ரி ஃபுட் நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்பு துறையினர் சோதனைக்கும் சென்றனர். கூடுதலாக , தமிழக சங்கிகளும் அவர்களின் B டீம்களும் பழனி பஞ்சாமிர்தம் வரை விரிவாக்கி கூவியும் பார்த்தனர். சிலர் வதந்தியை பரப்பியதற்காக தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
எவ்வித ஆதாரமும் இல்லாமல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு (நாயுடு) இப்பிரச்சினை கிளப்பி உள்ளார். துணை முதல்வர் நடிகர் கார்த்தியை எச்சரித்து வானத்துக்கும் பூமிக்கும் எகிறிக் குதிக்கிறார். கோமியத்தால் தீட்டுக்கழித்த காவிக் கும்பலானது திருமலை கோவிலை இந்துக்களிடம் ஒப்படையுங்கள் என்கின்றது. இப்பொழுது கிறித்தவர்களா நிர்வகிக்கின்றனர்? என அவர்கள் பின்னே நாம் போகக்கூடாது. காவிகளின் நோக்கம் எது? பார்ப்போம்.
இரண்டு லட்டு: மத ரீதியாக பிளவுபடுத்துதல், முக்கிய பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்பல்!
வெளிப்படையாக பார்த்தால் மாட்டுக்கொழுப்பு கதையை கட்டிவிட்டதில் கர்நாடக நெய் விற்பனையிலுள்ள கார்ப்பரேட்டுகளின் தொழில் போட்டி ஒரு காரணமாக தெரிகிறது. ஆனால் பொருளாதார அம்சமான இது முதன்மையானதல்ல. மறைபொருளையும் அலச வேண்டும்.
இப்பிரச்சினை கிளப்பட்டு நாம் நரம்பு புடைக்க விவாதித்துக் கொண்டிருக்கும்போதுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக உயர்மட்டக்குழுவின் பரிந்துரைகளை அமைச்சரவை ஏற்பதாக மோடி அரசு முடிவெடுத்து அறிவித்துள்ளது.
படிக்க:
♦ திருப்பதி லட்டு விவகாரமும்! சந்தி சிரிக்கும் உண்மைகளும்!.
♦ விநாயகர் சதுர்த்தி வசூல் வேட்டையில், திருப்பூரில், அடித்து நொறுக்கப்பட்ட தள்ளுவண்டி கடை!
இது குறித்து ராம்நாத் கோவிந்த் குழுவுக்கு பதில் அனுப்பிய 47 அரசியல் கட்சிகளில் 15 கட்சிகள் ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சிக்கும் எதிரானது என முன்வைத்துள்ளன. எனவே இதை திசைதிருப்பி நிறைவேற்ற வேண்டிய நெருக்கடியில் பாஜக கூட்டணி அரசு உள்ளது. இதற்கு லட்டு பிரச்சினை கைகொடுத்தும் உள்ளது.
பிரகாசம் தடுப்பணையில் இருந்து 11 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. 2015 சென்னை பெரு வெள்ளத்தால் 4,800 கோடிக்கு காப்பீடு பெற விண்ணப்பங்கள் தரப்பட்டன. தற்போது விஜயவாடாவிலும் வாகனங்கள் சேதமாகி காப்பீடு நிறுவனத்தின் கதவை தட்டுகின்றனர். 1,96,000 ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் 2.4 லட்சம் விவசாயிகள் இழப்பீடு கேட்டு கையேந்துகின்றனர். எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களினால் எதிர்ப்புகளாகவும், கண்டனங்களாகவும், போராட்டங்களாகவும் உருவெடுக்கும்.
ஆந்திர வெள்ள சேதத்தை, மீட்பு, நிவாரப்பணிகளில் வெளிப்பட்டுள்ள தவறுகளை, இழப்பீடுகளை காப்பீட்டு நிறுவங்களிடமிருந்து பெற்றுத்தருவதில் தவறுகள் நடப்பதை விமர்சிப்பதிலிருந்து அனைவரையும், அனைத்தையும் திசைதிருப்பவேண்டிய அவசியமும் சந்திரபாபுவுக்கு உள்ளதுதான்.
மோடியின் நண்பரான அதானியின் குழுமம் மட்டும் 25 கோடி நிதியை ‘நாயுடுகாருவிடம்’ வழங்கியுள்ளது. இதன்மூலம் துறைமுகங்களை மொத்தமாக சுருட்டவே இந்த உதவி என விமர்சனங்களும் வருகின்றன.
இன்னொரு புறம் ஜெகன்மோகன் கிறிஸ்துவர் அதனால்தான் லட்டு தயாரிப்பில் தவறு நிகழ்ந்துள்ளது என மத ரீதியான பிளவுபடுத்தலையும் செய்கின்றனர்.
கழுத்தை நெரிக்கும் காவிப் பாசிசம்!
மெய்யழகன் படத்தின் தெலுங்கு பதிப்பை பிரபலப்படுத்த நடிகர் கார்த்தி ஆந்திராவுக்கு சென்றபோது அவர் லட்டு குறித்து சொன்னதை துணைமுதல்வர் பவன்கல்யான் பிரச்சனையாக்கினார். லட்டு ஒரு சென்சிட்டிவ் விசயம் அதுபற்றி பேச வேண்டாம் என்றுதான் கார்த்தி கூறியுள்ளார். அதற்கே கார்த்தியை மன்னிப்பு கேட்க வைத்துள்ளார் பவன்கல்யாண். உணவு கலப்பட பிரச்சினையில் மதத்தை கலக்காதீர்கள் பவன் கல்யாண் எனப் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜையும் மிரட்டிப் பார்த்தார். அவரிடம் பவன் கல்யாணின் வாய்வீச்சு பலனளிக்கவில்லை.
லட்டு பிரச்சினையையொட்டி நிகழும் சம்பவங்களை நகைச்சுவையாக கேள்விக்குள்ளாக்கிய பரிதாபங்கள் குழுவின் லட்டு பரிதாபங்கள் காணொளியையும் மிரட்டி நீக்கச் செய்துள்ளனர். ஏற்கனவே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்டுள்ளதன் தொடர்ச்சியாக இதை பார்க்க வேண்டும். பாசிஸ்டுகளை பகைத்துக்கொண்டால் தொழிலை நடத்த முடியாது என்ற அச்சமே சீனிவாசனை கைகூப்ப வைத்தது. மன்னிப்பு கேட்காவிட்டால் ஆந்திராவில் தனது படத்தை ஓட விடமாட்டார்கள் என்ற அச்சமே கார்த்தியை பணிய வைத்துள்ளது.
பாசிச கும்பல்களாலும், அவர்களின் கூட்டாளிகளாலும் திசைதிருப்ப வேண்டியவையும், மூடிமறைக்கப்பட வேண்டியவையும் சேர்ந்துதான் `மாட்டு கொழுப்பு லட்டுவாக` வெளிப்பட்டுள்ளது. இதை வைத்து குளிர்காய பார்த்த தமிழக சங்கிகளின் எத்தனிப்புகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
உணர்ச்சியை தூண்டி ஆதாயமடையப் பார்க்கும் வானதி சீனிவாசன், திரைத்துறையின் மோகன் ஜி போன்ற சங்கிகளுக்கு தமிழகத்தில் செல்வாக்கில்லை; ஆனால், தேசிய அளவில் பாசிஸ்டுகள் முன்னேறியே வருகின்றனர். எதிர்க்கட்சிகள் அவர்களின் பின்னே சென்று விமர்சிப்பதாகவே தேசிய அரசியல் களம் உள்ளது.
ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாசிஸ்ட்டுகளின் முன் சீனிவாசனோ, கார்த்தியோ, பரிதாபங்கள் குழுவோ அரசியல் பின்புலம் இல்லாமல் எதிர்த்து நிற்க முடியாது. நின்றால் தனிப்பட்ட இழப்புகளை கொண்டுவரும். எனவே தன்மீது தவறில்லை என தெரிந்தும்கூட அச்சத்தால் பணிகிறார்கள். பாசிசத்தால் பாதிக்கப்படும் அனைவரையும் ஒருங்கிணைத்து களம்காண்போம். அதற்கு பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டுவோம்.
இளமாறன்