தீஸ்தா செதல்வாட் கைது ! | SKM பத்திரிக்கைச் செய்தி

0

சம்யுக்தா கிசான் மோர்ச்சா

பத்திரிகை செய்தி

27 ஜூன் 2022

ன்றிய அரசின் அறிவுறுத்தலின் பேரில், விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புடைய டஜன் கணக்கான ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதை சம்யுக்தா கிசான் மோர்ச்சா கடுமையாக கண்டிக்கிறது !

தீஸ்டா செடல்வாட், ஆர்பி ஸ்ரீகுமார், சஞ்சீவ் பட் ஆகியோருக்கு எதிரான கைது நடவடிக்கையை, சம்யுக்தா கிசான் மோர்ச்சா கண்டிக்கிறது !

ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின் பேரில் விவசாயிகள் போராட்டத்துடன் இணைந்த @kisanektamorcha, டிராக்டர் டு ட்விட்டர் போன்ற ட்விட்டர் கணக்குகள் உட்பட, இந்தியாவில் உள்ள சுமார் ஒரு டஜன் ட்விட்டர் கணக்குகள் எந்த எச்சரிக்கையும் இன்றி முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால், இந்த விவசாயி விரோத நடவடிக்கையை எடுப்பதற்கு ஒன்றிய அரசு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட நாளைத் தேர்ந்தெடுத்ததுதான். 1975 ஜூன் 25/26 அன்று இரவு நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட நாள். அந்தநாள் இந்திய சனநாயகத்தில் கருப்பு நாளாகக் கருதப்படுகிறது. மக்கள் விரோத அவசரநிலையின் மூலம், இந்திய அரசாங்கத்தால் ஒரு சர்வாதிகார ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது; அரசாங்கத்திற்கு எதிராக எழுப்பப்பட்ட குரல்கள் நசுக்கப்பட்டன. அதேபோன்று, இன்று இந்த ட்விட்டர் கணக்குகள் அரசாங்கத்தைக் கேள்வி கேட்பதால், அவற்றை முடக்க ட்விட்டரை பாஜக நிர்பந்தப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இந்த கணக்குகளை ட்விட்டர் முடக்கியுள்ளது.

விவசாயிகள் போராட்டம் தொடங்கியபோது, ​​அந்த இயக்கத்திற்கு எதிராக பல்வேறு வகையான தவறான தகவல்களும், பொய்யான செய்திகளும் பரப்பப்பட்டன. விவசாயிகள் இயக்கத்தில் தீவிரமாக இருந்த இளைஞர்கள் “கிசான் ஏக்தா மோர்ச்சா”, “டிராக்டர் டு ட்விட்டர்” போன்ற புதுவிதமான நடவடிக்கைகள் மூலம் விவசாயிகளின் குரலை உலகிற்குக் கொண்டு செல்ல முயன்றனர். இந்த கணக்குகளை மில்லியனுக்கு அதிகமானோர் பின்தொடர்கிறார்கள். ஓராண்டுக்கும் மேலாக நீடித்த விவசாயிகள் போராட்டத்தின் போது, ​​இந்தக் ட்விட்டர் கணக்குகள் துணிச்சலுடனும், விடாமுயற்சியுடனும் போராட்டத்தின் செயல்பாடுகளைப் பற்றி அறிவித்தன. மேலும் விவசாயிகளின் போராட்டம் மற்றும் போராடுபவர்கள் எவ்வாறு அரசாங்கத்தால் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற பிரச்சினைகளையும் எழுப்பின. இந்த சேனல்கள் மூலம், விவசாயிகளின் குரல் டிராக்டரில் இருந்து ட்விட்டர் வரை கிராமத்திலிருந்து பெரிய நகரங்கள் மற்றும் உலகம் முழுவதும், சரியான அர்த்தத்தில் எதிரொலித்தன.

விவசாயிகள்-தொழிலாளர்களின் இத்தகைய வலுவான குரலை, டிஜிட்டல் தளங்களில் அரசாங்கம் தடை செய்வது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது மட்டுமல்ல; அவசரநிலைக்கு ஒரு உயிர்ப்பான உதாரணமும் ஆகும். விவசாயிகள் போராட்டத்துடன் இணைந்த ட்விட்டர் கணக்குகளுக்கு ஒன்றிய அரசு விதித்துள்ள தடை, இந்த அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கு எதிரான பெரிய தாக்குதலின் ஒரு பகுதியாகும்.

இதைப்போல, 2002 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி போராடிய மனித உரிமை ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் மற்றும் முன்னாள் நிர்வாக அதிகாரி ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோரும் ஜூன் 26 அன்று கைது செய்யப்பட்டனர். அதே நேரத்தில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த சர்வாதிகாரப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஜனநாயக விரோதமாகவும், நியாயமற்ற முறையிலும் முடக்கிவைக்கப்பட்டுள்ள, கிசான் ஏக்தா மோர்ச்சா, டிராக்டர் டு ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து ட்விட்டர் கணக்குகளையும் மீண்டும் செயல்பட வைக்க வேண்டும் என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா கோருகிறது. டீஸ்டா செடல்வாட், ஆர்.பி.ஸ்ரீகுமார் மற்றும் சஞ்சீவ் பட் ஆகியோரை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்றும், குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்ய வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

அறிக்கையை வழங்கியவர்கள் 

டாக்டர். தர்ஷன் பால், ஹன்னன் மொல்லா, ஜக்ஜித் சிங் தலேவால், ஜோகிந்தர் சிங் உக்ரஹான், ஷிவ்குமார் சர்மா (காக்கா ஜி), யுத்வீர் சிங், யோகேந்திர யாதவ்.

சம்யுக்தா கிசான் மோர்ச்சா

மின்னஞ்சல்: samyuktkisanmorcha@gmail.com

வெளியீடு :

ஐக்கிய விவசாயிகள் முன்னணி, தமிழ்நாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here