அப்படித்தான் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (நவம்பர் 26 இல்) புகழ்ந்துள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் உயிர்ப்புடன் விளங்கும் முற்போக்கு ஆவணம் என்றும், 1949ம் ஆண்டின் இதே நாளில் தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டதாகவும் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் விவரித்துள்ளார்.
உண்மை என்ன?
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான அம்பேத்கரே தான் ஒரு வாடகை காரனை போல வேலை செய்ததாகவும், தனது விருப்பத்திற்கு விரோதமாகவே அரசியல் அமைப்பு சட்டம் எழுதப்பட்டதாகவும், அதை எரிப்பதெனில் முதல் ஆளாக தான் முன் வருவதாகவும்” செப்டம்பர் 2, 1953 இல் நாடாளுமன்றத்திலேயே அறிவித்தார்.
தந்தை பெரியாரோ ஒரு படி மேலே சென்று “இந்த அரசியல் நிர்ணய சபை நம் அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அல்ல ; இந்த அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ள அவையும் நம் அனைவராலும் வாக்களிக்கப்பட்டு உருவாக்கப்பட்டதும் அல்ல; நாம் தேர்ந்தெடுக்காத ஒன்றான இந்த அவை திணிக்கும் எதையும் நாம் ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை” என்று தெளிவுபடுத்தினார்.
அதாவது ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக இருந்த தரகு முதலாளிகள் மற்றும் நிலப் பிரபுக்களின் – பண்ணையார்களின், உயர்சாதியினரின் பிரதிநிதிகள் தான் ஆட்சியில் அமர்ந்துள்ளனர் என அன்றைய பாராளுமன்றத்தின் வர்க்க சார்பை இதன்மூலம் திரை கிழித்ததோடு, அரசியலமைப்பு சட்டத்தையும் 1957 ல் பகிரங்கமாக கொளுத்தினார்.
இந்த வரலாறு எல்லாம் நமக்கு எங்கே தெரியப் போகிறது என்ற திமிரோடு தான், இன்று பாசிஸ்டுகள் துணிச்சலாக நம் காதில் பூ சுற்ற பார்க்கிறார்கள்.
போலி பெருமிதம்!
பாசிஸ்ட் நரேந்திர மோடியோ, இந்திய அரசியலமைப்புச் சட்டம் விடிவெள்ளியாக திகழ்வதாக பெருமிதப்பட்டுள்ளார். “நாடு சிறந்த மாற்றத்தை அடைந்து வரும் சூழலில் அதற்கு வழிகாட்டியாக அரசமைப்பு சட்டம் திகழ்கிறது” என்கிறார்.
படிக்க: 2024 நாடாளுமன்றத் தேர்தலும்! ஜனநாயகத்துக்குக் கட்டப்பட்டுள்ள கல்லறையும்!
“இந்தியர்களுக்கு விரைவான நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. தண்டனை அடிப்படையிலான சட்ட நடைமுறை மாற்றப்பட்டு நீதி அடிப்படையிலான முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது” என்றும் பாசிஸ்ட் மோடி “பெருமிதம்” கொண்டுள்ளார்.
ஆனால் இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையையே பார்ப்பன பேரரசை நிறுவ துடிக்கும் சங்கிகளால் ஏற்க முடியவதில்லை. அதாவது “ஜனநாயக குடியரசு” என்று எழுதப்பட்டதையும் பின்னர் பிரதமர் இந்திரா காந்தியினால் “சோசலிச” “மதசார்பற்ற” ஆகியவை இணைக்கப்பட்டதையும் சங்கிகளால் எப்படி ஜீரணிக்க முடியும்?
“மதசார்பற்ற” என்றிருப்பதை இந்துராஷ்டிரம் அமைக்க துடிப்பவர்களால் சகிக்க முடியுமா? இதனால்தான், தான் ஒழிக்க வேண்டிய ஒன்றை, மிகவும் மதிப்பதாக பகல் வேஷம் போட்டே அழிக்க முற்படுகிறார்கள்.
இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரையில் சோசலிச, மதசார்பற்ற ஆகிய வார்த்தைகளை உச்சரிக்கவே இல்லை. இதை திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு விமர்சித்து, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
ஆனால் ஜனநாயகத்தை புதைக்கும் பழியை மட்டும் தம்மை விமர்சிக்கும் உரிமையை கேட்கும் எதிர்க்கட்சியின் மீதே சுமத்துகின்றனர். தினமணி போன்ற கோடி மீடியாக்கள் அதையே முதல் பக்க தலைப்புச் செய்தியாக்குகின்றனர்.
‘ஜனநாயக’த்துக்கு “அச்சுறுத்தல்”!
இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட “சிறப்பு வாய்ந்த” இந்நாளில், அவையின் செயல்பாடுகள் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் “புனிதம்” கெட்டு விட்டதாக மக்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவரும் நீலிக்கண்ணீர் வடித்துள்ளனர்.
“நாடாளுமன்ற அலுவல்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வியூகம் ஜனநாயக அமைப்புகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது” என்றும், “நமது ஜனநாயக கோயிலின் புனிதத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது” என்றும், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பாராளுமன்றத்தில் நடந்தது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவோ, “அரசியல் நிர்ணய சபையால் நிறுவப்பட்ட ஆக்கப்பூர்வமான கண்ணியமான விவாதங்களின் மரபை கடைபிடிக்க உறுதியளிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் என்ன நடந்தது?
மோடியின் நண்பர் கௌதம் அதானியின் ஊழல், லஞ்ச முறைகேடு, அமெரிக்காவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.
படிக்க: மணிப்பூர் கலவரம்: நெருப்பை அணையாமல் பாதுகாக்கிறது பாஜக!
மணிப்பூர், பற்றி எரிகின்ற போதும் அது குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி போராடிய போதும் பிரதமர் மோடி பாராளுமன்றத்திற்கு வரவில்லை. தற்போது தனது நண்பன் ஒரு பொருளாதார கிரிமினல் என அம்பலப்பட்டுள்ள சூழலில், உலக நாடுகள் கௌதம் அதானியின் நிறுவனங்களுடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து வரும் நிலையில், வெளிப்படையாக விவாதிக்க மட்டும் எப்படி முன் வருவார்? பாசிஸ்டுகள் தான் ஜனநாயகத்தை வெறுப்பவர்கள் ஆயிற்றே!
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பாராளுமன்றத்தில், உலக அளவில் அலசப்படும் கௌதம் அதானியின் குற்றங்கள் பற்றி பேசுவதற்கு கூட உரிமை இல்லை என்பதுதான் பாசிச மோடி நிலைநாட்டி இருக்கும் புதிய ஒழுங்கு.
காவி பாசிஸ்டுகளின் நண்பர்கள் உலக மகா திருடர்கள் என கையும் களவுமாக ஆதாரத்துடன் பிடிபடுகிறார்கள்.. அவர்களை பகிரங்கமாக காப்பாற்றுவதற்கு மோடி போன்றவர்கள் துணிந்து தான் நிற்கிறார்கள் . ஆனாலும் இந்த பாசிச அரசை எதிர்க்கட்சியினரால் உடனடியாக எதுவும் செய்து விட முடியாது.
பாசிசத்தின் பாதுகாப்பு கவசம் எது?
கார்ப்பரேட் காவி பாசிச கும்பலால் கலவரங்களை நடத்துவதும், படுகொலைகளை செய்வதும், ஊழல்களில் கோடிகளை குவிப்பதும், தேர்தல் தில்லுமுல்லுகள் மூலம் தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதும் எதன் மூலம் சாத்தியமாகிறது ? தற்போதுள்ள அரசியல் அமைப்பு சட்டத்தின் பொந்துகள் வழியே தான் சாத்தியமாகிறது .
ஜனநாயகத்தை வெறுக்கும் இந்து மத வெறி பாசிஸ்டுகளுக்கு “அனைத்து” வாய்ப்புகளையும் தாராளமாக வழங்கி வரும் இந்த அரசியல் அமைப்பு சட்டத்தை தான் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தீவிரமாக நிற்கின்றனர்.
இந்தியாவை சூறையாடி தாராளமாக கொழுத்து வரும் அம்பானி, அதானி உள்ளிட்ட தேசங்கடந்த தரகு முதலாளிகளின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முழு அனுமதியையும் பாதுகாப்பையும் தர முடிந்துள்ள இந்த அரசமைப்பை தான் அப்படியே பாதுகாக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணியினர் நினைக்கின்றனர்.
நம்மை காலனி ஆக்கி கொள்ளையடித்தவர்கள் தமது சுரண்டலை மறைமுகமாக தொடர சட்டபூர்வ வழி ஏற்படுத்தி கொடுத்துள்ள, அவர்களால் முன்மொழியப்பட்ட பிரிவுகளை உள்ளடக்கிய, மறு காலனியாக்கத்திற்கு ஏற்ப பல்வேறு திருத்தங்களால் மேலும் மோசமாக்கப்பட்டுள்ள தற்போதைய அரசியல் அமைப்புச் சட்டத்தையா நாம் பாதுகாப்பது?
சட்டமன்றம் பாராளுமன்றம் உள்ளிட்டவற்றின் அனைத்து மட்டங்களிலும், ED, ID, SC உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நுழைந்துள்ள கார்ப்பரேட் காவி பாசிஸ்டுகளை களை எடுப்பதோடு , அவர்கள் நுழைய காரணமான பொந்துகளையும் அடைத்தாக வேண்டும் .
பாசிஸ்டுகள் மீண்டும் அதிகாரத்திற்கும் பொறுப்புகளுக்கும் வராமல் தடுப்பதற்கு தற்போதைய அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தினால் போதாது; மாற்றி புதிதாக எழுதியாக வேண்டும் . அப்படி புதிதாக எழுத அரசியல் நிர்ணய சபை ஒரு தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இதற்கு முதல் படியாக, மோடி தலைமையிலான கார்ப்பரேட் காவி பாசிஸ்டுகளை அதிகாரத்திலிருந்து இறக்கிவிட்டு ஜனநாயக கூட்டரசை அமைக்க வேண்டும். அந்தக் கூட்டரசின் குறைந்த பட்ச செயல் திட்டத்தில் தற்போதைய அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றுவதும் இருக்க வேண்டும்.
- இளமாறன்
இந்திய அரசியலமைப்பு சட்டம் புனிதமானதா!
எதிர்க்கட்சிகள் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதை மறு பரிசீலனை செய்வார்களா! மாற்று அரசியலமைப்பு சட்டத்தைப் பற்றி சிந்திப்பார்களா! காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
கட்டுரை சிறப்பாக உள்ளது
அரசியலமைப்பு சட்டமானது
கார்ப்பரேட் கும்பலும் ,காவி கும்பலும் சட்ட ரீதியாக வளர்வதற்கான கேந்திரமாக பயன்படுகிறது என்பதை விளக்கிய கட்டுரை. சிறப்பு…
சாமானிய மக்களை சவக்குழியில் தள்ளும் அரசியலமைப்பு சட்டத்தை கிழித்தெறிவோம்!
சாமானிய மக்களை சவக்குழியில் தள்ளும் அரசியலமைப்பு சட்டத்தை கிழித்தெறிவோம்!
சாமானிய மக்களை சவக்குழியில் தள்ளும் அரசியலமைப்பு சட்டத்தை கிழித்தெறிவோம்!