
செங்குன்றத்தில் ஒரு கோர சம்பவம் நிகழ்ந்து அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காந்திநகர் பகுதியில் உள்ள அரிசி ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவில் சிக்கி சிறுவன் உயிரிழந்துள்ளான். லுக்கேஷ் எனப்படும் 7 வயது சிறுவன் காணவில்லை என்று அவனது குடும்பத்தினர் மூன்று நாட்களாக தேடிவந்த நிலையில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி உடல் சிதைந்த நிலையில் மீட்டுள்ளனர்.
மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு சிறுவனின் உடல் சென்ற நிலையில் அரிசி ஆலையை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள். இதில் காவல்துறை மற்றும் அரசியல்வாதிகள் பேச்சுவார்த்தை நடத்தி சொற்ப தொகையை அரிசி ஆலை நிர்வாகத்திடம் இருந்து பெற்று கொடுப்பதாக வாக்குறுதி அளித்து பிரச்சினையை ஊத்தி மூடியுள்ளனர்.
தமிழ்நாட்டின் அரிசி உற்பத்தியில் முன்னிலை வகிப்பது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் தான். தமிழ்நாட்டில் உணவு தேவைக்கான அரிசியில் கிட்டத்தட்ட 75 சதவீதம் செங்குன்றத்தில் இருந்து தான் செல்கிறது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் ஆந்திராவில் உற்பத்தி செய்யப்படும் நெல் செங்குன்றம் வந்து தான் வியாபாரத்திற்கு சென்றாலும், 1978 முதல் அரிசி உற்பத்தின் நிரந்தர சந்தையாக செங்குன்றம் உள்ளது.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் நெல் வரத்து செங்குன்றம் வருகிறது. இங்கு நெல் மதிப்பு கூட்டப்பட்டு அரிசியாக மாற்றப்பட்டு தமிழ்நாடு உள்ளிட்டு பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டின் அரிசி உற்பத்தியின் மையமாக இருப்பதால் செங்குன்றம் உள்ளடக்கிய பகுதிகள் அரிசி ஆலைகள் நிறைந்து காணப்படுகின்றன. ஆரம்ப காலத்தில் விவசாயிகளிடம் நேரடியாக சென்று நெல்லை வாங்கி வந்த அரிசி ஆலை முதலாளிகள், பசுமைப் புரட்சியின் விளைவால் விவசாயிகளின் வறுமை நிலையை அறிந்து அவர்களையே நெல் மண்டிக்கு வரவைத்தார்கள். இதன் மூலம் சரக்கு போக்குவரத்து செலவையும் மிச்சப்படுத்தினார்கள் அரிசி ஆலை அதிபர்கள். நெல்லை விளைவித்த விவசாயிகளுக்கு லாபம் இல்லாமல் போகலாம் ஆனால் அரிசி ஆலை அதிபர்களுக்கு இந்த பிரச்சினை இல்லை.
படிக்க:
♦ ஆந்திரா ஆலைப் படுகொலை 17 பேர் பலி! இன்னும் எத்தனை பேரை பலி கொடுப்பது?
♦ தொடரும் ஆலைச்சாவுகள் ஆந்திரா ஆலை விபத்து!
செங்குன்றத்தில் 2017 நிலவரப்படி 40 நெல் மண்டிகள், 50 அரிசி மண்டிகள் இருந்தன. செங்குன்றம், புள்ளிலைன், தீர்த்தகிரையம்பட்டு, வடகரை, கிராண்ட்லைன், காந்திநகர் என சுற்றுவட்டாரங்களில், 110க்கும் அதிகமான நவீன அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. ஒரு லாரிக்கு, 250 – 300 மூட்டை நெல் வீதம், தினமும், 80 முதல், 100 லாரிகளில் நெல் வரத்து நீடிக்கிறது. இந்த அரிசி மண்டிகளை சார்ந்து பல்வேறு தொழில்களும் அதற்கான தேவைகளும் இன்று வரை நீடித்து வருகிறது எனலாம்.
மனித வாழ்வின் அடிப்படை உற்பத்திகளில் ஒன்றான உணவு அரிசி உற்பத்தி அவசியம் என்றாலும், முதலாளிகள் தங்கள் லாப நோக்கத்திற்காக கழிவுகளை அகற்றுவதில் உரிய விதிகளைப் பின்பற்றுவதில்லை. அரிசி அவியல் மற்றும் அரவை ஆலைகள் இயங்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும். இடையில் விதிமுறை மாற்றம் இருப்பின் அதையும் ஆலைகள் நிறைவேற்ற வேண்டும் என்பது போன்ற 35 நிபந்தனைகள் மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அரிசி ஆலைகள் இயக்க கட்டுபாடு விதித்து உள்ளது. இவை அனைத்தையும் பூர்த்தி செய்தால் மட்டுமே ஆலையை இயக்க அனுமதி கிடைக்கும்.
ஆனால் இந்த சமூக கட்டமைப்பில் அரசின் அதிகார மையங்களில் புரையோடிபோயிருக்கும் லஞ்ச லாவண்யங்களை பயன்படுத்திக் கொண்டு இயற்கைக்கும் உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கும் வகையில் சில அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன.
சில அரிசி ஆலைகளில், மொத்த பயன்பாட்டில், ஒரு பங்கு விறகும், இரண்டு மடங்கு உமியும் பயன்படுத்தப்படுகிறது. உமி எரிக்கப்பட்டு, வெளியாகும் உலர் சாம்பல் திறந்தவெளியில் குவித்து வைக்கப்படுகிறது.

அப்போது அவை, காற்றில் பறந்து, சுற்றுவட்டாரங்களில் வீடு, கடைகளிலும், அவற்றில் பயன்படுத்தப்படும் உணவு, குடிநீர் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள், வாகனங்கள் மீதும் படிந்து, சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. பலர் தங்கள் வீட்டு ஜன்னல்களை திறப்பதற்கே அஞ்சுகின்றனர்.
ஆலைக் கழிவுகள் பொதுவெளியில் திறந்து விடப்படுவதால் செங்குன்றம் பகுதியில் நிலத்தடி நீரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்கள் இதற்கு எதிராக தவறிழைக்கும் அரிசி ஆலை முதலாளிகளிடம் முறையிட்டாலும் எந்த பலனும் கிடையாது. காற்றில் மாசு கலப்பது ஒருபுறம் என்றால், மறுபுறம் கழிவு நீர் உமி சாம்பலுடன் சேர்ந்து வெளியேறும் போது ஆடு, மாடு உள்ளிட்ட உயிரினங்கள் அதில் சிக்கி இறந்துப் போவதும் நிகழ்கிறது.
சிறுவன் லுக்கேசின் மரணத்துடன் இது நிற்க போவதில்லை. காசை கொடுத்து மக்கள் வாயை மூடியதால் மீண்டும் இதுபோல் அசம்பாவிதம் நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் இதனை பற்றி எந்த ஊடகமும் வாய் திறக்கவில்லை. அந்த அளவுக்கு அதிகார பலமிக்கவர்களாக அரிசி ஆலை முதலாளிகள் உள்ளனர் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது. அரசியல்வாதிகளின் செல்வாக்குடனேயே அரிசி ஆலை முதலாளிகள் வலம்வருகிறார்கள்.
ஆனால் அதிகார வர்க்கம், ஆளும் வர்க்கம், முதலாளிகள் கூட்டாக இணைந்து சுகாதாரத்தை சீரழிப்பதை செங்குன்றம் பகுதி மக்கள் வேடிக்கை பார்க்காமல் இந்த கூட்டிற்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதன் மூலமே பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.
- ஊடகபிரிவு