புதிய ஜனநாயகம் ஜுலை இதழ்

ந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை வெறியாட்டங்களைப்பற்றியும், அதற்கான அடிப்படையைப்பற்றியும் ஜூன்-2023 புதிய ஜனநாயகம் இதழில் எழுதியிருந்தோம். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மணிப்பூர் தொடர்ந்து பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இந்தியா சுதந்திரம் வாங்கியதாக சொல்லப்பட்ட பிறகு வடகிழக்கு மாநிலங்களை இந்திய ஒன்றியத்துடன் இணைப்பதற்கு அரசு பயங்கரவாத ஒடுக்குமுறையை ஏவியது இந்திய ஒன்றிய அரசு. தனி மாநில அந்தஸ்து என்பதை தாண்டி தனிநாடு கோரிக்கையை முன்வைத்து போராடியது மணிப்பூர். அங்கிருந்த மார்க்சிய லெனினிய புரட்சியாளர்கள் விடுதலைப் பிரதேசத்தை அறிவித்து இந்தியாவிற்கே முன்னுதாரணமான செயல்பாட்டை முன்வைத்தனர். இந்தியாவில் நக்சல்பாரி இயக்கம் துவங்கிய காலத்தில் மணிப்பூர் முன்னுதாரணமாக ஆயுத குழுக்களை கட்டியது, தனியாக தளப் பிரதேசம் ஒன்றை உருவாக்குகின்ற முயற்சியில் மார்க்சிய லெனினிய குழுக்கள் செயல்பட்டு வந்தது.

உடனே சீனாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி கம்யூனிஸ்டுகள் சதி செய்கிறார்கள், நாட்டிற்கு விரோதமாக ஆயுதப் போராட்டம் நடத்துகிறார்கள் என்று பலவகையான முகாந்திரங்களில் கம்யூனிஸ்டுகளை நரவேட்டையாடியது இந்திய ஒன்றிய அரசு.

அத்தகைய வீரம் செறிந்த மணிப்பூர் மக்கள் தற்போது இரண்டு பிரிவாக பிரிந்து தங்களுக்குள் மோதிக் கொண்டுள்ளனர். இது இயல்பாக உருவாகிய மோதல் அல்ல, மாறாக ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல் தன்னுடைய பதவி வெறிக்காகவும், இந்தியாவின் நுழைவாயிலாக உள்ள மணிப்பூர் மாநிலத்தை நிரந்தரமாக இந்து மதவெறியர்களின் கோட்டையாக மாற்றுவதற்கும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுதான் மணிப்பூர் வன்முறை.

மணிப்பூரில் 1970-களில் வங்கதேசம் மற்றும் மியான்மரில் இருந்து குடியேறிய குகி இனத்தவர்களை அடையாளம் காண்பது என்ற பெயரில் மலை, காடுகளில் உள்ள அவர்களை கணக்கெடுக்கின்றோம் என்ற போர்வையில் மலைகளில் இருந்து அவர்களை அப்புறப்படுத்த தீவிரமாக முயற்சி எடுத்தது பாரதிய ஜனதா கட்சி.

மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு குகி இனத்தைச் சார்ந்த ஆயுதக் குழுக்கள் சில ஆதரவு தெரிவித்தனர் என்ற போதிலும், மலைகளில் இருந்து பழங்குடி மக்களை வெளியேற்றுவது அதற்கு மலைகளில் (பாப்பி) கசகசா பயிரை சட்டவிரோதமாக பயிரிட்டு வருகிறார்கள். இதனால் அடுத்த தலைமுறையினரான இளைஞர்களின் வாழ்க்கை சீரழிகிறது என்று பொய்யான ஒரு காரணத்தை முன் வைத்துள்ளார் மாநிலத்தின் முதலமைச்சர் பைரோன் சிங்.

மலைகளில் வசிக்கின்ற 42.8 சதவீத பழங்குடி மக்களும், 20 சதவீத நிலப்பரப்பில் உள்ள 57.2 சதவீத மெய்தேய் மக்களுக்கும் இடையில் நடக்கின்ற இந்த வன்முறையானது பாரதிய ஜனதா கட்சியின் மூலம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பதை நிரூபிப்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.

மணிப்பூர் கலவரம் துவங்கியது முதல் கிட்டத்தட்ட 250 கிறிஸ்தவ தேவாலயங்கள், 17 இந்துக் கோயில்கள், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமாகியுள்ளன. கிராமங்கள் தீ வைத்துக் 200 கொளுத்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகள் முகாம்களில் தனது உயிரைப் பிடித்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து அகதிகளாக வெளியேறி உள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் உள்ள சொத்துக்கள் பொது சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் உள்ள மக்கள் பழங்குடி முன்னணியின் ஆலோசகராக இருக்கும் ஜெகத் தௌதம் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பழங்குடி மக்களின் மீது ஏறக்குறைய 3,000 எஃப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளன. ஆனால் இந்து மதவெறியைத் தூண்டி பேசுகின்ற ஆயுதங்களுடன் திரியும் அரம்பை தெங்கோல் உறுப்பினர்கள் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை.

இதையும் படியுங்கள்

குறிப்பாக பழங்குடி மக்களான குகிக்களுக்கும் சமவெளி பிரதேசத்தில் உள்ள மெய்தேய் மக்களுக்கும் இடையில் நடக்கின்ற போராட்டத்தை இந்து, கிறிஸ்தவர் இடையிலான வன்முறையாகவும் போராட்டமாகவும் சித்தரித்தது, குறிப்பாக மெய்தேய் இனத்தைச் சார்ந்த முதல்வர் பைரோன் சிங் துணையாக நிற்பது போன்றவை காரணமாக மணிப்பூர் பற்றி எரிகிறது.

இந்திய ஒன்றிய அரசை எதிர்த்து போரட்ட பாரம்பரியம் உள்ள மணிப்பூர் மக்கள் தமக்குள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதும், படுகொலை செய்து கொள்வதும் எப்படி நடந்தது. ஒற்றுமையாக இருக்கின்ற மக்கள் மத்தியில் எவ்வாறு பிரிவினையை ஏற்படுத்தி குளிர் காய முடியும் என்பதை விளக்குகின்ற வகையில் இந்த கட்டுரையை முன் வைக்கிறோம்.

சுருக்கமான
மணிப்பூர் வரலாறு!

பண்டைய இந்திய இராஜ்ஜியங்களில் மணிப்பூர் ராஜ்ஜிமும் ஒன்று. கி.பி. 1754 இல் மணிப்பூர் ராஜ்ஜியத்தை பர்மா ராஜ்ஜியத்தினர் கைப்பற்றினர். அதனால் மணிப்பூரை மீட்க மணிப்பூர் மன்னர் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் ராணுவ உதவியைக் கோரினார். மணிப்பூர் என்றால் இரத்தினங்களின் ஊர் என்று பெயராகும்.

1824 – 1826 ஆண்டுகளில் நடைபெற்ற முதலாம் ஆங்கிலேய பர்மியப் போரின் முடிவில் பர்மா ராஜ்ஜியத்திடமிருந்து மணிப்பூர் ராஜ்ஜியம் மீட்கப்பட்டது. இப்போரின்போது செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி 1824 முதல் மணிப்பூர் ராஜ்ஜியம் பிரிட்டிஷ் இந்தியாவிற்கு அடங்கிய சுதேசியான சமஸ்தானமாக இருந்தது. மேலும், 1824 இல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் வகுத்த துணைப்படை திட்டத்தை ஏற்றுக் கொண்ட மணிப்பூர் ராஜ்ஜிய மன்னர்கள், ஆண்டுதோறும் பிரிட்டிஷ் கம்பெனிக்காரர்களுக்கு கப்பம் செலுத்தி பிரிட்டிஷ் இந்தியாவின் பாதுகாப்பில் இருந்தனர்.

வடகிழக்கு இந்தியாவின் ஏழு மாநிலங்களில் மணிப்பூர் மாநிலமும் ஒன்று. இந்நிலப்பகுதி பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் மன்னராட்சிக்கு உட்பட்ட ‘மணிப்பூர் ராஜ்ஜியம்’ ஆக விளங்கியது. 1949-இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1956 வரை இந்தியாவின் ஒன்றியப் பகுதியாகவே இருந்தது. 1972 – இல் தனி மாநிலமாக ஆனது.

இதன் தலைநகரம் இம்பால் நகரமாகும். மணிப்பூரின் எல்லையை ஒட்டி இந்திய மாநிலங்களான நாகலாந்து, மிசோரம், அஸ்ஸாம், மாநிலங்களும், கிழக்கில் இந்தியாவின் அண்டை நாடான மியான்மரும் சூழ்ந்து உள்ளன.

இந்த மாநிலத்தில் பெரும்பாலான குடிமக்கள் ‘மெய்தோய்’ இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள், ‘மணிப்பூரி’ என்று அழைக்கப்படும் மைத்தி மொழியைப் பேசுகின்றனர். இம்மொழி 1992 – ஆம் ஆண்டில் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது.

22,327 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இம்மாநிலம் சிறப்பான நிர்வாகத்திற்காக 16 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய நாகா, குகி, மெய்தோய் போன்ற 30 வகையான குழுக்கள் பல்வேறு மொழி, பண்பாடு, கலாச்சாரம் கொண்டிருந்தாலும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

சுருக்கமான போராட்ட வரலாறு!

இந்த மக்களின் போராட்ட வரலாறு இரு வேறு அரங்குகளில் இருக்கின்றன. ஒன்று. இந்துமத வைணவத்தை எதிர்த்த மேய்தோய்களின் போராட்டம். இந்து மதத்தை எதிர்ப்பதை இந்திய ஏகாதிபத்தியத்தின் கலாச்சார அடக்குமுறையை எதிர்ப்பதாக மெய்தோய் தேசிய முன்னணி கூறுகின்றது. அரசியல் ரீதியாக இந்தியாவுக்கு அடிமைப்பட்டு இருப்பதையும், மணிப்பூர் இந்திய குடியரசின் காலனி என்றும் கூறுகிறது. இரண்டாவது, இந்த மணிப்பூர் பொதுவுடமை இயக்க போராட்டத்திற்கு முன்னுதாரணமாக உள்ளது. புரட்சியாளர்களின் இயக்கங்களாக இவை கிட்டத்தட்ட 50 வருட வரலாறு கொண்டவை.

1960-ஆம் ஆண்டுகளின் இறுதியில் மிசோராம் விடுதலை இயக்கம் தொடங்கப்பட்டபோது மணிப்பூர் புரட்சிகர அரசாங்கம் என்ற அமைப்பை மணிப்பூர் காடுகளில் கம்யூனிச புரட்சியாளர்கள் நிறுவினர். ஆனால் சீக்கிரமே அது செயலிழந்து 1972-லேயே கலைக்கப்பட்டது. பின்னர் 1978ல் மக்கள் விடுதலை படை ஒன்றை புரட்சியாளர் இணைப்பு மூலம் தோழர் விஸ்வேஸ்வரர் தலைமையில் புரட்சிகர போராட்டங்களை தொடங்கியது. இந்த அமைப்பு மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனையை தத்துவார்த்த அடிப்படையாகக் கொண்டு ஆயுத போராட்டத்தில் ஊன்றியது.

இந்த அமைப்பு நாகாலாந்து நாகர்களுக்கு, மிசோரம் மீசோக்களுக்கு போன்ற கருதுகோள்கள் பிற்போக்கானவை, புரட்சியின் தோல்விக்கு அது அடிப்படை காரணம் என மிகச் சரியாக எடுத்துரைக்கின்றது. அனைத்து தேசிய இனங்களின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது. இந்த ஒற்றுமை அருகில் உள்ள இந்திய மாநிலங்களை தட்டி எழுப்புவது மட்டுமின்றி இந்திய விவசாயிகளுக்கு உதவி வழிகாட்டி டெல்லியில் உள்ள பிற்போக்கு அரசு தூக்கி எறியப்பட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்து என்று கூறுகிறது. ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி செல்லும் கட்சியே இந்திய மக்களுக்கு மிகவும் அவசரமான தேவை என்று கருதுகிறது மக்கள் விடுதலைப் படை. குறைந்த எண்ணிக்கையிலான கொரில்லா வீரர்களை கொண்டிருந்தாலும் மிகுந்த அளவு ஒற்றுமையானது என்பதுதான் 80-களில் இருந்த நிலவரமாகும்.

அதுபோலவே மணிப்பூரின் விடுதலைக்காக அனைத்து பொதுவுடமை புரட்சியாளர் அமைப்பு காங்லீ பாக் புரட்சிகர மக்கள் கட்சி என்ற பெயரில் தேபக்சந்திரா தலைமையில் இயங்கி வருகிறது.

இந்தியாவுடன் மணிப்பூர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டாலும் மணிப்பூரில் உள்ள மக்கள் தனது சுய நிர்ணய உரிமைக்காகவும், மார்க்சிய லெனினிய அமைப்புகளின் தலைமையில் புரட்சிகரமான தளப் பிரதேசத்தை கட்டுவதற்கும் தொடர்ச்சியாக முயற்சித்து வந்தனர் என்ற வகையில் எப்போதும் அரசு பயங்கரவாத அடக்குமுறை மணிப்பூர் மக்களின் மீது ஏவப்பட்டுள்ளது.

மணிப்பூரில் நிரந்தரமாக கலவர தடுப்பு பகுதி என்ற பெயரில் ராணுவம் நிறுத்தப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து ஐரோம் ஷர்மிளா முதல் ராணுவமே எங்களை பாலியல் வன்முறை செய் என்று போராடிய மணிப்பூரின் வீரம் செறிந்த பெண்மணிகள் வரை மணிப்பூர் தொடர்ச்சியாக எவ்வாறு இந்தியாவின் காலனியாக அடிமைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.

வரலாறு நெடுக மணிப்பூர் மக்கள் தங்களது பன்முகத் தன்மை கொண்ட பாரம்பரியத்தை கட்டி காப்பதற்கும், பிரிட்டன் காலனி ஆதிக்கமாக இருந்தாலும் சரி! இந்தியாவின் காலனி ஆதிக்கமாக இருந்தாலும் சரி! அதனை எதிர்த்து வீரம் செறிந்த முறையில் போராடி வருகின்றனர்.

தங்களுக்குள் வேறுபாடுகள் இருந்தாலும் பெரிய அளவில் தமக்குள் மோதிக்கொள்ளாமல் தம்மை ஆதிக்கம் செய்பவர்களுக்கு எதிராக போராடிய போராட்ட மரபை கொண்ட மணிப்பூர் மக்கள் தற்போது சுயநலத்துடன் தங்களையும் பழங்குடிகளாக அறிவிக்க வேண்டும் என்று மெய்தோய் இன மக்களும், அதனை அங்கீகரிக்கக்கூடாது என்று குகி இன மக்களும் இரண்டாகப் பிரிந்து மோதிக் கொள்கின்றனர்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேசிய குடிமக்கள் பதிவேடு (CAA & NRC) என்ற மக்கள் தொகை கணக்கெடுப்பை அமல்படுத்தவும், அதையே சாக்காக கொண்டு சிறுபான்மை மக்களை அடக்கி ஒடுக்குவதற்கும் ஆர்எஸ்எஸ் -பாஜக என்ற பயங்கரவாத கும்பல் திட்டமிட்டுள்ளது என்பதே இன்றைய நிலைமைகள் நமக்கு உணர்த்துகிறது. இதனை எதிர்த்து போராடும் மணிப்பூர் மக்களுடன் ஒன்றிணைந்து போராடுவதுடன், மணிப்பூர் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து வீதியில் இறங்குவோம்.

  • ஞானசேகரன்

புதிய ஜனநாயகம் (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here