ராகுல் காந்தியின் கேள்விகளான மோடிக்கும் அதானிக்கும் உள்ள உறவு என்ன? வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து சுமார் 20,000 கோடி மதிப்பிலான முதலீடுகள் அதானி நிறுவனத்துக்கு வந்துள்ளதே அந்த நிறுவனங்கள் மற்றும் அந்தப் பணம் யாருடையது? என்ற கேள்விகள் மக்களிடையே பரவத்தொடங்கியது. சுதாரித்துக் கொண்ட நரேந்திர தாமோதர்தாஸ் தலைமையிலான காவி பாசிஸ்டுகள் அதைத் தடுக்க ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலின் பேரில் இதுவரை எங்கும் கண்டிராத ஒரு வழியை பின்பற்றினர்! அதுதான் ஆளுங்கட்சியே நாடாளுமன்றத்தை முடக்குவது.

மக்கள் என்ன பார்க்க வேண்டும்? என்ன பேச வேண்டும்? என்ன கேட்க வேண்டும்? என்ன சிந்திக்க வேண்டும்?என்ன சாப்பிட வேண்டும்?என்ன உடுத்த வேண்டும்? என்ன படிக்க வேண்டும்? என்பதை நிர்ணயிக்கும் காவி பாசிஸ்டுகள், உலகமே தங்களை காறித்துப்புவதை உணர்ந்து, பின்னர் 2019-ல்’ பூர்ணேஷ் மோடி ‘ என்ற குஜராத்தின் பாஜக எம்எல்ஏ, ராகுல் காந்தி மீது தொடுத்து பின்னர் தடையாணை பெற்றிருந்த அவதூறு வழக்கை தூசிதட்டி, G.R. சுவாமிநாதன் போன்று, தங்களுக்கு சாதகமான ஒரு நீதிபதியை உடனடியாகப் பதவியில் அமர்த்தி, தங்களுக்கான தீர்ப்பை எழுதி வாங்கிக்கொண்டனர்.

பின்னர் என்ன? வழக்கம் போல எல்லா இந்திய ஊடகங்களும் ‘பிபிசி ஆவணப்படம்’ ‘ஹிண்டன்பர்க் அறிக்கை’ என்ற விவாதங்களில் இருந்து திசை திரும்பி தற்போது ராகுல் காந்தியின் தகுதிபறிப்பு பற்றி பேசிக்கொண்டிருக்கின்றன. கார்ப்பரேட்-காவி பாசிசத்தின் துலக்கமான வெளிப்பாடுகளாக, மக்கள் மத்தியில் போய்ச்சேர வேண்டிய காவி காலிகளின் மனிதகுல விரோத படுகொலைகளை அம்பலப்படுத்திய ‘பிபிசி ஆவணப்படமும்’, மோடி-அதானி கூட்டுக்கொள்ளையை அம்பலப்படுத்திய ‘ஹிண்டன்பர்க் அறிக்கை’யும் இன்னும் மக்களிடையே போதுமான அளவுக்கு சென்றடையவில்லை.

“இந்தியாதான் உலகிற்கே ஜனநாயகத்துக்கான விஸ்வகுரு” என்று வாய்கிழிய பேசிய நரேந்திர தாமோதர்தாஸ் ஆட்சியில், பாராளுமன்றத்தில் கேள்வி கேட்ட ராகுல் காந்தியின் தகுதி பறிப்பு, இந்துத்துவா பொய்களால் கட்டமைக்கப்பட்டது என்று அம்பலப்படுத்திய சேத்தன் குமார் என்ற கர்நாடக நடிகர் கைது, டெல்லியில் “மோடியை அகற்றுவோம், தேசத்தை காப்போம்” என்று சுவரொட்டி ஒட்டிய வழக்கில் அச்சு நிறுவன முதலாளிகள் உட்பட 200 பேர் கைது, அசாமில் பர்ஸாஸ்ரீ என்ற ஒரு கல்லூரி மாணவி கவிதை எழுதியதால் கைது, மகாராஷ்டிராவில் ஔரங்கசீப் என்ற முகலாய மன்னனை புகழ்ந்து வாட்ஸப் பதிவு போட்ட ஒரு இஸ்லாமியர் மேல் வழக்கு, ஜார்க்கண்டில் இறந்துபோன ஒரு பெண்ணை அவர் மதம் மாறிவிட்டார் என்று அவரது உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்தது போன்ற தொடர்ச்சியான பல சம்பவங்களினால் விஸ்வகுருவின் ஜனநாயகம் சந்தி சிரிக்கிறது.

ராகுல் காந்தியின் மீது போடப்பட்ட வழக்கு போல காவி பாசிஸ்டுகள் மீதும் ஒருவேளை வழக்கு போடப்பட்டு, ஒருவேளை நேர்மையாக விசாரணை நடந்தால் பிரதமர் உட்பட பா.ஜ.க.-விற்கு ஒரு எம்.பி., எம்.எல்.ஏ. அல்லது ஒரு கவுன்சிலர் கூட பதவியில் இருக்கமுடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

பிபிசி ஆவணப்படம் மற்றும் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை, கார்ப்பரேட்கள் மற்றும் காவிகளின் கள்ளக்கூட்டை பகிரங்கமாக அம்பலப்படுத்துவதால், ஆட்டம்கண்டு போயுள்ளனர் காவிகள். பாசிஸ்டுகள் இயற்கையிலேயே கோழைகள் என்பதால் அவர்கள் கையில் கிடைத்துள்ள அதிகாரத்தை, பயத்தின் காரணமாக கண்டபடி பயன்படுத்தி கேள்வி எழுப்புவோர்களை ஒடுக்கி வருகிறார்கள்.

ராகுலின் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை, எம்.பி. பதவி பறிப்பு, 8 ஆண்டுகள் தேர்தலில் நிற்கத் தடை என்பதெல்லாம் காவி பாசிஸ்டுகளை மக்கள் அடையாளம்காண வழிவகுத்துள்ளது என்றால் மிகையாகாது. இந்த பிரச்சினை அடுத்தடுத்த கட்டங்களில் நியாயமாக நடத்தப்படுகிறதா என கவனித்து வருவதாக அமெரிக்கா, ஜெர்மன் ஆகிய நாடுகள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. ஆனால் அதே சமயத்தில் பிபிசி ஆவணப்படம் குஜராத்தில் காவிகள் நடத்திய படுகொலைகளையும், நாட்டின் பிரதமரே ஒரு தனிப்பட்ட முதலாளிக்கு தரகுவேலை பார்த்ததும், SBI, LIC போன்ற நிறுவனங்களிலுள்ள மக்கள் சேமிப்பை வாரி வழங்கி உலகிலேயே இரண்டாவது பணக்காரனாக ஊதிப்பெருக்கியதையும் மக்களிடம் சேர்க்க வேண்டியுள்ளது.

இதையும் படியுங்கள்:

ராகுல் காந்தியின் பதவிப்பறிப்பு என்று விவாதத்தை திசை திருப்பிய காவி பாசிஸ்டுகள் சந்தடி சாக்கில் தொழிலாளர் வைப்பு நிதியிலிருந்து மேலும் 8000 கோடிகளை அதானிக்கு தாரைவார்த்துள்ளனர். அது மட்டுமல்லாது மோடி-அதானியின் கொள்ளையால் நட்டமடைந்ததை சரிகட்ட சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தியும், சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தியும் இருக்கின்றனர்.

கார்ப்பரேட்களின் சேவைக்காகவே பதவியில் அமர்த்தபட்ட காவி பாசிஸ்டுகள், தங்களின் பிடியை இறுக்கி மக்களின் கழுத்தை நெருக்குகின்றனர். இனி வாழ்வதா? அல்லது வீழ்வதா? என்று முடிவுக்கட்டும் போராட்டத்தைப் நடத்த வேண்டிய காலம் நெருங்கிவிட்டது.

மக்களிடையே பிரிவினைவாதத்தை மூட்டி கலவரங்கள், படுகொலைகள், நிதிமோசடிகள், பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருள் கடத்தல், கட்டபஞ்சாயத்து, மிரட்டல் மூலமாக மக்கள் விரோதிகளாக நாடுமுழுவதும் பற்றிப்பரவி வரும் பாசிச சக்திகளை சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளைக் கடந்து வர்க்கமாக ஒன்றுபட்டு நாட்டைவிட்டே விரட்டி அடிப்போம்.

  • ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here