கௌதம் அதானி உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராக தற்கொலை செய்து கொள்ளும் இந்தியர்கள்!

ஆகஸ்ட் 31ஆம் தேதி தினகரன் நாளிதழை படித்துக் கொண்டிருந்த பொழுது அதன் எட்டாவது பக்கத்தில் இந்தியாவில் நடக்கும் தற்கொலைகள் குறித்த கொடுமையான செய்தி வந்திருந்தது.  அதைப் பற்றிய சிந்தனை உடன் அடுத்தடுத்த பக்கங்களை படித்துக் கொண்டிருந்த பொழுது 12வது பக்கத்தில் ஆசியாவில் எந்த ஒரு பணக்காரரும் செய்துவிடாத சாதனையை அதானி செய்து விட்டதாக புகழ்ந்து இன்னொரு செய்தி வந்திருந்தது. இந்த இரு செய்திகளுக்கு இடையில் உள்ள தொடர்பை குறித்து நாம் பார்ப்போம்.

உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் அதானி!

கௌதம் அதானி ஆசிய பணக்காரர்கள் வரிசையில் நான்காவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறி விட்டாராம். அதானியின்  சொத்து மதிப்பு தற்போது ரூ. 10 .85 லட்சம் கோடியாக ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை ஆசியாவில் யாரும் செய்யாத சாதனையை கௌதம் அதானி செய்துள்ளதாக புகழ்கிறது தினகரன். அதிலும் குறிப்பாக பில்கேட்ஸையே ( பில்கேட்ஸ் சொத்து மதிப்பு  ரூ. 9.24 லட்சம்கோடி) கௌதம் அதானி பின்னுக்குத் தள்ளிவிட்டதாக தினகரன் புகழ்கிறது.

எப்படி வந்தது இவ்வளவு சொத்து ?

நெற்றி  வேர்வை நிலத்தில் சிந்த பாடுபட்டதால் தான் அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்ததா?  என்று நாம் கேட்கவில்லை. ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு மூளையை கசக்கி வேலை செய்ததால் தான் சொத்து மதிப்பு உயர்ந்ததா?  என்று நம்மால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

இந்திய நாட்டின் வளங்களை இந்திய மக்களின் நலன்களை பாசிச மோடி தனது நண்பர்களான  அதானிக்கும் அம்பானிக்கும் விற்றுக் கொண்டிருக்கிறார். இவர்கள் கொள்ளை அடித்து கொழுப்பதற்கு தடையாக உள்ள சட்டங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார். இவர்கள் இப்படிப்பட்ட விசுவாசமான நண்பரை பிரதமராக்கியதே  நாட்டின் வளங்களை கொள்ளை அடித்து உலகப் பணக்காரர்கள் வரிசையில் முன்னேறுவதற்காக தானே?  என்னும் பொழுது இவர்கள் சொத்து மதிப்பு உயர்வதில் ஆச்சரியம் இல்லை.

நாட்டு மக்களின் தற்கொலைகள்!

சரி, நமது மக்கள் பிரச்சனைக்கு வருவோம்.

இந்தியாவில் 2021 ஆம் ஆண்டில் மட்டும் 1.64 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  தற்கொலை செய்து கொண்டவர்களில்  64%   ( 1,05,242) பேர்  ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்கள்;  31.6% (51,812) பேர் ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள்; தற்கொலை செய்து கொள்பவர்களில் நான்கில் ஒருவர் தினசரி ஊதியம் பெறுபவர்கள் (அதாவது அன்றாடம் காட்சிகள்)  என்கின்றன புள்ளி விவரங்கள்.

நிலக்கரி இறக்குமதியில் கௌதம் அதானிக்கு கொள்ளை லாபம். பெட்ரோலியப் பொருட்களில் ரிலையன்ஸ் அம்பானிக்கு கொள்ளை லாபம். என்று இவர்கள் சொத்துப் பெருகுவதற்கான  காரணங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.


இதையும் படியுங்கள் : அதானியின் எழுச்சி! இந்திய மக்களுக்கு வீழ்ச்சி!!


இதன்  எதிர் விளைவாக நாட்டில் வறுமை, வேலை இல்லா திண்டாட்டம், கடன் பட்டு போண்டியாதல் அதிகரிக்கின்றன. எனவே நாட்டு மக்களின் தற்கொலைகள் அதிகரிக்கின்றன. செய்திகளுக்கு இடையிலான தொடர்பை புரிந்து கொள்ள இயலாத வரை, அரசியல்வாதிகள் அதிகாரிகள் கார்ப்பரேட்டுகளுக்கு இடையிலான உறவை மக்கள் புரிந்து கொள்ளாத வரை இவர்களின் சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கும் மக்களின் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். நாம் மக்களுக்கு புரிய வைப்போம். உழைக்கும் மக்களுக்கான இந்தியாவை படை க்க மக்களைத் திரட்டுவோம்.

  • பாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here