மேற்குவங்கம் மாநிலத்தில் “புது ஜல்பைகுரி” என்ற இடத்தில் 17-6-2024 அன்று கஞ்ஜன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் 60 பேருக்கும் மேலானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. இது நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

கஞ்ஜன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பின்னால் வந்த சரக்கு ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது மோதியதில் எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. அதில் ஒரு பெட்டி மீது இன்னொரு பெட்டி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருகிறது.

இந்த ரயில் விபத்திற்கு ரயிலின் ஓட்டுனர் சிக்னலை கவனிக்காமல் ரயிலை இயக்கியதே காரணம் என்றும் சிக்னல் சரியாக வேலை செய்யாதது தான் காரணம் என்றும் இருவேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன.

விபத்திற்கு காரணம், சிக்னல் கோளாறோ அல்லது ஓட்டுனரின் கவனக்குறைவோ, எதுவாக இருந்தாலும் அதனால் விபத்து ஏற்படாமல் தடுத்து இருக்க முடியும். அதற்கான ஒரு தொழில்நுட்ப அமைப்பு தான் “கவாச்.”

கவாச் என்பது இரண்டு ரயில்கள் மோதுவதை தடுக்கும் ஒரு தானியங்கி தொழில்நுட்ப அமைப்பு. ஒரு ரயில் செல்லும் பாதையில் மற்றொரு ரயில் இருந்தாலோ அல்லது அந்த ரயில் பாதையில் வேறொரு ரயில் எதிரில் வந்து கொண்டிருந்தாலோ ரயிலின் ஓட்டுனர் ரயிலை நிறுத்தாவிட்டாலும் கூட இந்த கவாச் தொழில்நுட்பம் ரயிலை தானாக நிறுத்திவிடும். இதனால் விபத்து தடுக்கப்பட்டு விடும்.

இப்படிப்பட்ட “கவாச் தொழில்நுட்பம் இதுவரைக்கும் 1500 கிலோ மீட்டர் பாதைகளில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 3000 கிலோமீட்டர் பொருத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு 3000 கிலோமீட்டர் பொருத்த திட்டமிடப்பட்டு உள்ளது” என்று ரயில்வே வாரியத்தின் சேர்மனும் CEO வுமான ஜெயவர்மா சின்ஹா அவர்கள் தற்போது தெரிவித்திருக்கிறார்.

இந்திய ரயில்வே சுமார் 70 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுடையது. எனில் இந்திய ரயில்வே முழுமைக்கும் இந்த கவாச் தொழில்நுட்பத்தை பொருத்த எத்தனை வருடங்கள் ஆகும்? சுமார் 10 – 15 வருடங்கள் ஆகும். அதுவரைக்கும் ரயில்கள் மோதிக் கொள்வதை தடுக்க முடியாது என்பது தானே உண்மை? இதுதான் இந்திய ஆட்சியாளர்கள் மக்கள் உயிரை மதிக்கும் லட்சணம்.

இந்திய ஆட்சியாளர்கள் மக்களின் உயிரை கூந்தல் அளவிற்கு கூட மதிப்பதில்லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் ரயில்வே துறையில் உள்ளன.

இந்திய அரசு, ஆட்சியாளர்கள் அப்படியெல்லாம் அலட்சியமாக இருந்து விடமாட்டார்கள் மக்கள் செத்து மடிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று யாராவது கூறினால் அது மிகப் பெரிய மடத்தனம்.

இப்படி கூறுவது தவறு என்று நினைப்பவர்கள் 2023 ஆம் ஆண்டில் ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் 228 பேர் மரணம் அடைந்த நிலையில் 900 திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததையும் அதே 2023 ஆம் ஆண்டு ஆந்திராவில் நடந்த கோரமான ரயில் விபத்தில் 14 பேர் மரணமடைந்த நிலையில் 54 பேர் படுகாயமடைந்ததையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இந்திய ரயில்வே துறையை ஆய்வு செய்து 2022 ல் வெளியிடப்பட்ட சிஏஜி அறிக்கையில் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கக்கூடிய பல்வேறு புள்ளி விவரங்கள் வெளிவந்திருக்கின்றன.

2017-18 விருந்து 2020-21 வரையில் 1127 ரயில்கள் தடம்புரண்டுள்ளன. ரயில்கள் தடம்புரண்டதற்கான காரணங்களாக தண்டவாள பராமரிப்பில் சிக்கல், தண்டவாளங்கள் சீராக இல்லாது, பெட்டிகளில் உள்ள மெக்கானிக்கல் பிரச்சனை போன்றவற்றை சிஏஜி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இம்மாதிரியான சிக்கல்கள் எழுவதற்கு காரணம் என்ன? ரயில்வே துறைக்கு போதுமான நிதியை ஒதுக்காமல் புறக்கணிப்பது மற்றும் ரயில்வேயில் காலியாக உள்ள மூன்று லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது போன்றவைகள் தான் இதற்கு மிக முக்கிய காரணங்களாக உள்ளன.

படிக்க: 

♦ ரயில் விபத்தும் சங்கிகளின் கலவர புத்தியும்!

♦ கோரமண்டல் ரயில் விபத்தும், மேற்கு வங்க உழைக்கும் மக்களும்!

ரயில்வே சீரழிப்பதற்கு ஆட்சியாளர்கள் செய்து வரும் வேலைகள் குறித்து நாம் தெரிந்து கொள்ள சிஏஜி அறிக்கையில் உள்ளதை குறிப்பிட்டால் போதுமானது என்று கருதுகிறோம்.

Rashtriya Rail Sanraksha Kosh (RRSK) என்பதன் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து ரயில் பாதைகள் பாலங்களை புதுப்பிப்பது, ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவது போன்றவை செய்யப்படுகின்றன. இதுபோன்ற (முன்னுரிமை I க்கான)

வேலைகளுக்கான ஒட்டுமொத்த செலவினம் 2017-18ல் 81.55% ஆக இருந்தை 2019-20ல் 73.76% ஆகக் ஆட்சியாளர் குறைத்துவிட்னர்.

பாதை புதுப்பித்தல் பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை (2018-19ஆண்டில்) ரூ.9607.65 கோடியாக இருந்ததை 2019-20ல் ரூ.7417 கோடியாக குறைந்துவிட்டனர். இப்படி குறைவாக ஒதுக்கப்பட்ட தொகையையும் முழுமையாக பயன்படுத்தவில்லை என்று சிஏஜி அறிக்கை குற்றம் சாட்டி உள்ளது.

இந்த லட்சணத்தில் கவாச் தொழில்நுட்பத்தை இந்திய ரயில்வே முழுமைக்கும் நிறுவப்படுவதை மக்கள் நினைத்தாவது பார்க்க முடியுமா?

புல்லட் ரயில் விடுவதற்கும் பிரதமர் உலகம் சுற்ற தனியாக விமானம் வாங்குவதற்கும் ஏராளமான நிதியை மோடி அரசு செலவு செய்கிறது. அம்பானி அதானி வகையறாக்கள் நாட்டை கொள்ளை அடித்து லட்சக்கணக்கான கோடி ரூபாய் சொத்து சேர்ப்பதற்கு அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார் மோடி. கடந்த பத்து ஆண்டுகளில், மோடி இந்த உழைப்பில் ஒரு சிறு துளியையாவது இந்திய ரயில்வே துறையில் காட்டியிருந்தால் ரயில்வேயில் விபத்து நடந்திருக்காது.

24 லட்சம் கோடி ரூபாய் கடனை முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்தது பாஜக. இதில் ஒரு சிறு தொகையை ஒதுக்கி நேர்மையாக செயல்பட்டு இருந்தால் கூட இந்திய ரயில்வேயில் விபத்து நடப்பதை முற்றிலும் தடுத்து இருக்க முடியும். எனவே ஒன்றிய அரசிற்கு நிதி என்பது ஒரு பிரச்சனையே இல்லை. நிலைமை இப்படி இருக்க விபத்தை தடுப்பதற்கான பணிகளை செய்யாமல் புறக்கணித்து விட்ட ஆட்சியாளர்களை என்னவென்று சொல்வது, கொலைகாரர்கள் என்பதை தவிர?

குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here