‘அடிமனை அனைத்தும் அரங்கனுக்கே சொந்தம்’ என்று திருச்சி நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பானது ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் திருவானைக்காவல் கோவில் ஆகியவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருக்கும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை நிம்மதியை தொலைத்து கட்டி உள்ளது.

மன்னர்கள் காலத்தில் கோவில்கள் கட்டப்பட்டாலும் அந்த கோவில்களை கட்டுவதற்கு உழைத்த உழைப்பாளிகள், அந்த கோவிலில் உள்ள ‘ஆண்டவர்களுக்கு’ மூன்று வேளை அல்லது ஐந்து வேளை அல்லது ஏழு வேளை பூஜை நடத்துவதற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கான செலவுகளை தனது ரத்த வியர்வை சிந்தி நிலங்களில் உழுதுப் பயிரிட்டு கொடுக்கின்ற விவசாயிகள் வாழ்க்கையோ இன்னமும் எந்த மாற்றமும் இல்லாமல் நெருக்கடியில் சிக்கி உள்ளது.

தமிழகத்தில் உள்ள கோவில்களில் அதிக வருமானமும், சொத்துக்களும் உள்ள கோவில்களில் ஒன்று திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். சைவர்களுக்கு சிதம்பரம்; வைணவர்களுக்கு ஸ்ரீரங்கம் என்பது ஆன்மீகவாதிகளின் நம்பிக்கை. ரங்கநாதர் கோவிலின் திரண்ட சொத்துக்கள் அனைத்தும் காவிரி டெல்டா மாவட்டங்களிலும், திருச்சிக்கு அருகாமையில் உள்ள விழுப்புரம் போன்ற மாவட்டங்களிலும், இலங்கையிலும் உள்ளதாக அறநிலையத்துறை செய்திகள் தெரிவிக்கின்றன.

இது ஒரு புறம் இருக்க கோவிலைச் சுற்றி உள்ள நான்கு புறங்களிலும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வசித்து வருகின்ற உழைக்கும் மக்கள் வயிற்றில் அடிக்கின்ற வகையில் திருச்சி நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

இந்த ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வெளியில் நான்கு உத்தரவீதிகள், நான்கு சித்திரவீதிகள், நான்கு அடையவளைஞ்சான் (கோவில் பிரகாரத்தைச் சுற்றியுள்ள வீதிகள்) உள்பட 329 ஏக்கர் நிலத்தில் சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் கோவில் நிலங்களை ‘அடிமனை’ என கோவில் நிர்வாகம் கூறுகிறது. 1998ஆம் ஆண்டு இனாம் ஒழிப்பு தீர்ப்பாயத்தின் தீர்ப்பிலும் இதே வார்த்தையை நீதிபதி பயன்படுத்தியுள்ளார். மனையின் அடியில் உள்ள நிலம் என்பதைக் குறிக்கும் வகையில் ‘அடிமனை’ என்ற வார்த்தைப் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறுகிறார் ஸ்ரீரங்கம் நகர நலச் சங்கத்தின் தலைவர் சுரேஷ் வெங்கடாச்சலம்.

கோவிலின் பராமரிப்பு செலவுக்காக தேவதாயம் (Devadayam) என்ற பெயரில் சுற்றியுள்ள நிலங்கள் மானியமாக வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான விவரங்கள் 1864 ஆம் ஆண்டு இனாம் காட்சிப் பதிவேட்டில் (Inam Fair Register) பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 1963 ஆம் ஆண்டு இனாம் ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி 1969 ஆம் ஆண்டு இனாம் ஒழிப்பு தாசில்தார் விசாரணை நடத்தி கோவில் நிலத்தில் குடியிருந்த மக்களுக்கு பட்டா வழங்கியுள்ளார்.

இவ்வாறு சுமார் 1500 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்றும், அது இனாம்தாரர் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வராது, அதாவது கோவில்களின் நிலங்கள் எதுவும் இனாம்தார் ஒழிப்புக்கு கீழே வராது என்ற அடிப்படையில் ஸ்ரீரங்கம் கோவில் தேவஸ்தானம் 1981 ஆம் ஆண்டு இனாம் ஒழிப்புத் தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளது.

இந்த வழக்கின் மீது 1998 ஆம் ஆண்டு இனாம் ஒழிப்புத் தீர்ப்பாய நீதிபதியினால் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், ‘அடிமனை அரங்கனுக்கு சொந்தம்’ ‘மேலே இருக்கும் வீடுகள் மட்டும் உரிமையாளருக்கு சொந்தம்’ என்று இரண்டும்கெட்டான் தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பை எதிர்த்து மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்த அடிப்படையில் விசாரணை என்ற பெயரில் இழுத்தடிக்கப்பட்டு 2023 ஆம் ஆண்டு ஏற்கனவே கொடுத்த தீர்ப்பை உறுதி செய்துள்ளனர். இந்தத் தீர்ப்புகளுக்கு எதிராக அந்தப் பகுதியில் உள்ள மக்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு வழக்கு நடத்தி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் தரப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு கோவிலைச் சுற்றி வசிக்கும் 41 பேர் வசிக்கும் இடத்தைக் காலி செய்து தங்களிடம் நிலத்தை ஒப்படைக்குமாறு கோவில் நிர்வாகம் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.. அந்த வழக்கின் மீதான தீர்ப்பு 18 ஆண்டுகள் கழித்து தற்போது வெளியாகி உள்ளது அந்த தீர்ப்பில், ‘ஸ்ரீரங்கம் கோவில் அடிமனைகள் அனைத்தும் அரங்கநாத சுவாமிக்கு சொந்தம்’ எனவும், கோவில் நிலத்தின் குடியிருக்கும் மக்கள் மூன்று மாதங்களுக்குள் இடத்தைக் காலி செய்து நிலத்தை கோவிலுக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

படிக்க: ஸ்ரீரங்கம் : பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு ! – மீள்பதிவு

“ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமாக 330 ஏக்கர் நிலம் இருந்திருக்கிறது. ஆனால், தற்போது 24 ஏக்கர் மட்டுமே கோயில் நிலங்கள் உள்ளன. அந்த நிலங்கள் என்ன ஆகின, எப்படி ஆக்கிரமிக்கவிட்டார்கள் என்கிற விவரம் இன்று வரையிலும் தெரியவில்லை. எந்தக் காரணத்தைக் கொண்டும் கோயில் நிலங்களை அபகரிக்க நினைக்கும் யாராக இருந்தாலும் நாங்கள் விடப் போவதில்லை” என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார் அமைச்சர் சேகர் பாபு.

ஒரு வாதத்திற்கு கோவில்களின் நிலங்கள் அனைத்தும் ஆண்டவனுக்கே சொந்தம் எனும் போது கேட்பதற்கு நன்றாக தான் இருக்கிறது. ஆனால் ஆண்டவனோ நேரடியாக இந்த சொத்துக்களை அனுபவிப்பதில்லை. கோவில்களில் அர்ச்சகர்களாக பணி புரிகின்ற பார்ப்பனக் கும்பலும், தர்மகர்த்தாக்களாகவும், அறங்காவலர்களாகவும் செயல்படும் பார்ப்பனரல்லாத மேல் சாதி கும்பலும் தான் கோவில்களின் சொத்துக்களை பல நூற்றாண்டுகளாக அனுபவித்து தின்று கொழுத்து வருகின்றனர்.

கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் ஐந்து நட்சத்திர விடுதிகள் கட்டுவது; தங்குமிடங்கள் கட்டுவது மற்றும் உல்லாச விடுதிகள் கட்டுவது; பெரும் திருமண மண்டபங்களை கட்டி வாடகைக்கு விடுவது என்று கோவில்களின் திரண்ட சொத்துக்களை கொள்ளையடித்து வருபவர்கள் யார்? என்ற கேள்விக்கு இதுவரை நேர்மையான பதில் அளிக்கப்படவே இல்லை.

ஆனால் தனது ரத்த வியர்வையின் மூலம் உழைத்து அற்ப, சொறபச் சொத்துக்களை உருவாக்கியுள்ள உழைப்பாளி மக்கள் குடியிருக்கின்ற வீடுகளுக்கு குந்தகம் விளைவிக்க வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்புகளை சட்டத்தின்படியும், கோவில் அறநிலையத்துறை விதிகளின்படியும் உடனடியாக அமுல்படுத்த துடிக்கின்றனர்.

தனது வாழ்வாதாரத்தை கோவிலை சுற்றி அமைத்துக் கொண்டு சிறு கடைகள் முதல் சிறு தொழில்கள் செய்து வாழ்ந்து வருகின்ற மக்களின் வசிப்பிட உரிமையை அதாவது குடியிருக்கும் உரிமையை மறுக்கின்ற இந்த அடிமனை விவகாரங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

கோவில்களின் நிலங்களில் நீண்ட காலமாக குடியிருந்து வருகின்ற மக்களுக்கு அதன் அடிமனையை படிப்படியாக பட்டா போட்டுக் கொடுக்க வேண்டும். ஏற்கனவே ஸ்ரீரங்கம் கோவில் விவகாரத்தில் இனாம் ஒழிப்பு என்ற முறையில் கொடுக்கப்பட்ட பட்டாக்கள் மீது வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும். அந்த நிலங்களில் குடியிருக்கும் அனைவருக்கும் முறைப்படி பட்டா வழங்கி அவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு உத்தரவாதம் தர வேண்டும்.

இதற்கு அடுத்த கட்டமாக கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் காலங்காலமாக உழுது பயிரிட்டு வருகின்ற நிலமற்ற கூலி ஏழை விவசாயிகளுக்கும், சிறு குறு விவசாயிகளுக்கும் ஒப்படைக்கின்ற வகையில் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.

கோவில்களின் பராமரிப்புக்கென்று பக்தர்கள் தரும் காணிக்கை மற்றும் வருவாய் ஆகியவற்றிலிருந்து பராமரித்துக் கொண்டு அதற்கு சொந்தமாக உள்ள நிலங்கள் மற்றும் வீட்டு மனைகள், அடிமனைகள் அனைத்தும் உழைப்பாளி மக்களுக்கு சொந்தமாக்கப்பட வேண்டும் என்பதை நோக்கி நமது போராட்டங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

இது ஸ்ரீரங்கம் மட்டுமல்ல! நாடு முழுவதும் உள்ள ஆதீனங்கள், மடங்கள் மற்றும் கோவில்கள் ஆகியவற்றுக்கு சொந்தமான லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள், ஆயிரக்கணக்கான ஏக்கர் அடிமனைகள் அனைத்தும் அதில் வசித்து வருகின்ற, அதில் வேலை செய்து உழைத்து பராமரித்து வருகின்ற மக்களுக்கே சொந்தம் என்பதை இந்த சமூக கட்டமைப்பிற்குள் ஒருபோதும் சாதிக்க முடியாது. மார்க்சிய லெனினிய அமைப்புகள் முன்வைக்கின்ற ஜனநாயக கூட்டரசு என்ற தற்காலிக இடைக்கால அரசாங்கத்தின் மூலம் மட்டுமே இத்தகைய பிரச்சனைகளுக்கு நிரந்தர முடிவு கட்ட முடியும்.

இந்தக் கண்ணோட்டத்தில் கோவிலைச் சுற்றி குடியிருக்கின்ற மக்களின் வீடுகளை ரங்கனுக்கு சொந்தம் என்ற பெயரில் அடித்துப் பிடுங்க நினைத்துக் கொண்டுள்ள கோவில் நிர்வாகம் மற்றும் தேவஸ்தானத்திற்கு எதிராக திருச்சி பகுதியில் செயல்படுகின்ற புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளை சேர்ந்த முன்னணியாளர்கள் அப்பகுதியில் குடியிருப்பவர்கள் சங்கம் ஒன்றை உருவாக்கி அதன் சார்பில் தொடர்ச்சியான போராட்டங்களையும், நீதிமன்ற வழக்குகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். இதனை ஆதரித்து நாமும் அவர்களுடன் கரம் கோர்ப்போம்.

  • பார்த்தசாரதி.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி 

1 COMMENT

  1. கட்டூரை சரியாக உண்மையான கருத்தின் அடிப்படையில் உள்ளது சிறப்பு,கடவுள் பெயரை சொல்லி கோவயில் கொள்ளையடித்து கொண்டிருக்கும் பார்ப்பன கும்பல், உழைக்கும் வர்க்கத்தினர்க்கே அவர்கள் குடியிருக்கும் நிலத்தை ஒப்படைக்க வேண்டும்,இப்படி தினங்கள்,மக்களிடம் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து அந்த இடத்தில் வசிக்கும் மக்களிடமே ஒப்படைக்க வேண்டும்.இதுதான் சரியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here