கேசரிப் பருப்பு மிகவும் நச்சுத்தன்மை கொண்டது. இந்தப் பருப்பை மக்கள் உண்பதால் பக்கவாதம் ஏற்பட்டு கால்கள் முடமாகி ஊர்ந்து செல்ல வேண்டிய நிலையோ அல்லது கோல்களை ஊன்றி நடக்க வேண்டிய நிலையோ ஏற்படுகிறது . எனவே கேசரிப் பருப்பை விற்பதையும் சேமித்து வைப்பதையும் 1961 ஆம் ஆண்டு , உணவு கலப்பட தடுப்பு சட்டத்தின் கீழ், இந்திய அரசாங்கம் தடை செய்தது.

இப்படிப்பட்ட கொடூர விசம் கொண்ட,  பல்லாயிரக்கணக்கான மக்களை முடமாக்கிய  கேசரிப் பருப்பின்  மீதான தடையை பாசிச பாஜக அரசு இப்பொழுது நீக்கி உள்ளது.

 இந்திய நூல்களில் கேசரிப் பருப்பு:

கேசரிப் பருப்பின் நச்சுத்தன்மை குறித்து “ஐயினி அக்பரி”  என்ற முகலாயர்களின் நூலில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

இந்து மத வெறியர்கள் முகலாயர்களின் நூலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது அறிந்தது தான். ஆனால் அவர்கள் விரும்பும் சமஸ்கிருத நூல்களில் ( 16ஆம் நூற்றாண்டின் நூலான பாவப்பிரகாசத்தில்) கூட கேசரிப் பருப்பு மிகவும் நச்சுத்தன்மை  வாய்ந்தது;  மனிதர்கள் உண்ணக்கூடாதது ; என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பழம்பெரும் நூல்களில் ஒன்றான “சுஷ்ருத சம்ஹிதா”-வில் கேசரிப் பருப்பை உண்பதால் கை கால்கள் நடுக்கம் மற்றும் மூட்டுகளில் பாதிப்பு ஏற்படுவது குறித்து  தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

மேலும்  இந்தியாவின் பழமையான நூலான தர்மசாஸ்திரங்களின் ஒரு பகுதியான “சுக்ரானிதி சாரத்தில்” எதிரியை ஒழித்துக் கட்டுவதற்கு பாலாடை கட்டி, தேன் ஆகியவற்றுடன் கேசரிப் பருப்பை கலந்து கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பழம்பெரும் நூல்களைப் பார்த்த வரைக்கும் போதும், நடைமுறைக்கு வருவோம்.

விவசாயக் கூலிகளை முடமாக்கிய கேசரிப் பருப்பு:

கேசரிப் பருப்பின் விலை மிகவும் குறைவானது.  எனவே இந்திய நில உடமையாளர்கள்  கூலி ஏழை விவசாயிகளுக்கு  கூலியாக  கோதுமை போன்ற பொருட்களுடன் கேசரிப் பருப்பையும் கொடுத்தனர். பசியை போக்கிக் கொள்ள வேறு வழி இன்றி கேசரிப் பருப்பை மக்கள் உண்டனர்.

இதனால் வடக்கு மற்றும் மத்திய இந்திய மாநிலங்களில் உள்ள ஏராளமான கிராமங்களில் ஆயிரக்கணக்கானோர் கால்கள் முடமாகி தவழ்ந்து சென்றது மற்றும்  தடிகளை ஊன்றி நடந்து சென்றதற்கான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

பிச்சை எடுத்த கொத்தடிமை உழைப்பாளர்கள்:

வெள்ளைக்காரர்களின் ஆட்சியில் கூட, கொத்தடிமை தொழிலாளர்களுக்கு கேசரிப் பருப்பு உணவாக அளிக்கப்பட்டது.  கூலி ஏழை விவசாயிகளும் சாதியப்படி நிலையில் அடியில் இருந்த ஒடுக்கப்பட்ட– தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களும் தான் இதனால் பாதிக்கப்பட்டனர். கேசரிப் பருப்பை உண்பதால்  கால்கள் முடமாகி  எவ்வித வேலைகளிலும் ஈடுபட முடியாத நிலையில் அவர்களில் பலர்  பாட்னா, பெனாரஸ், ​​பம்பாய் மற்றும் கல்கத்தாவிற்கு இடம்பெயர்ந்து பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

கேசரிப் பருப்பை ஆயுதமாக்கிய ஹிட்லர்!

கேசரிப் பருப்பின் நச்சுத்தன்மையை அறிந்த ஹிட்லரின் நாஜிக்கள், இரண்டாம் உலகப்  போரின்போது, உக்ரைனில் இருந்த ஒரு சித்திரவதை முகாமில் 1200க்கும் மேற்பட்ட யூத கைதிகளுக்கு இந்த கேசரிப் பருப்பை உணவாக கொடுத்து அவர்களை முடமாக்கினர்.

கேசரிப் பருப்பின் நச்சுத்தன்மை குறித்து  இப்படி அடுக்கடுக்கான ஆதாரங்கள் இருந்த போதும், பார்ப்பன பாசிஸ்ட்டுகள் எதற்காக இந்த பருப்பின் மீதான தடையை நீக்கி உள்ளனர்?

தடையை நீக்கியதற்கான நோக்கம் என்ன?

புரதச்சத்தை தரக்கூடிய துவரம் பருப்பு முதலான பருப்பு வகைகளின் விலைகள் கடுமையாக ஏறிக்கொண்டே வருகின்றன. இதனை ஏழைகள் வாங்கி உண்பது மிகவும் கடினமானதாக மாறி வருகிறது. இந்த நிலையில் விலை மலிவாக கிடைக்கும் கேசரிப் பருப்பில் உள்ள புரதத்தை வைத்து ஏழை மக்களின் வயிற்றை  நிரப்ப திட்டமிடுகின்றனர். இதன் மூலம்  மக்கள் பட்டினியால் வாடுவது குறித்து கேள்வி எழுப்புவோரின்  வாயை மூட முயல்கிறார்கள்.

அதாவது பட்டினியால் வாடும் கோடான கோடி மக்களுக்கு உணவளிக்க வக்கற்ற பாஜக அரசு,  மக்களின் வயிற்றை விசத்தைக் கொண்டு நிரப்ப  முடிவு செய்துவிட்டது.

பாலன்

செய்தி ஆதாரம்: The wire

https://scroll.in/magazine/1044336/the-chequered-history-of-a-dangerous-dal-eaten-by-the-poor-across-india#:~:text=The%20chequered%20history%20of%20a%20%E2%80%98dangerous%20dal%E2%80%99%20eaten%20by%20the%20poor%20across%20India

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here