போலீசுக்கு துப்பாக்கியால் சுடும் அதிகாரம்!
மக்களை அடித்துக் கொல்லாது! சுட்டுக் கொல்லும்!


டந்த நவம்பர் 21-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ரோந்து பணியில் இருந்த எஸ்.ஐ. பூமிநாதன், ஆடு திருடியவர்களை பிடிக்கச் சென்ற போது, வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் இரு சிறுவர்கள் உட்பட மூன்று பேரைக் கைது செய்துள்ளது போலீசு. இறந்த எஸ்.ஐ. குடும்பத்துக்கு ஒரு கோடி இழப்பீடும், அரசு வேலையும் வழங்கியுள்ளது தமிழக அரசு.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தனது இனம் பாதிக்கப்பட்டவுடன் துடிதுடித்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, “ரோந்து பணியில் இருக்கும் போலீசார் கையில் துப்பாக்கி வைத்திருப்பதுடன், உயிருக்கு அச்சுறுத்தல் நேரும் தருணங்களில் அதைப் பயன்படுத்தத் தயங்கக் கூடாது.” என உத்திரவிட்டுள்ளார்.

கிரிமினல் குற்றச் சம்பவங்களில் இது போன்று போலீசு தாக்கப்படுவது என்பது விதிவிலக்கான சம்பவங்களில் தான் நடக்கிறது. இந்த கொலையைச் செய்த குற்றவாளிகள் பற்றி விசாரித்து தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை. ஆனால், விதிவிலக்கான சில சம்பவங்களைக் காரணம் காட்டி, போலீசு துப்பாக்கியைப் பயன்படுத்துவது என்பதை ஒரு விதியாக மாற்றினால் ஏற்படும் பயங்கரங்கள் சமூகத்தில் மோசமான விளைவுகளை அதிகரிக்கும்.

கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ பூமிநாதன்

 

துப்பாக்கியை மக்கள் மீது பயன்படுத்தும் அளவிற்கு போலீசுக்காரர்கள் நீதிமான்களோ, போலீசுத் துறை ஒன்றும் யோக்கியமான துறையோ அல்ல. ‘போலீசு உங்கள் நண்பன்’ என்று எழுதி வைத்து விட்டு, தனது கையில் வைத்திருக்கும் லத்தியைக் கொண்டு அன்றாடம் மக்கள் மீது போலீசு நிகழ்த்தும் வன்முறைகள் கொஞ்ச நஞ்சமல்ல!

சாதாரண மக்களை ’வாடா போடா’ என்பது, நியாயத்தைப் பேசினால், ’என்னிடமே சட்டம் பேசுகிறாயா?’ என்று ஏளனமாகவும், அதிகாரத் திமிரிலும் மிரட்டுவது முதல், ஏழை மக்களின் பிளாட்பாரக் கடைகளைச் சூறையாடுவது, பொதுவெளியில் கட்டி வைத்து அடிப்பது எனத் தொடங்கி ஸ்டேசனில் தலைகீழாக தொங்கவிட்டு அடிப்பது, நகக்கண்ணில் ஊசி குத்துவது என சித்திரவதை செய்வது, பெண்களை நிர்வாணப்படுத்தி அடிப்பது, கும்பல் பாலியல் வன்புணர்வு செய்வது என்பது வரை, வெறி நாய்கள் கடித்துக் குதறுவது போல், லாக்-அப் கொட்டடி கொலைகள் கொடூரங்களை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

சிதம்பரம் பத்மினி கொலை, வாச்சாத்தி பழங்குடியினர் படுகொலை, மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை, பரமக்குடி துப்பாக்கிச் சூடு, கூடங்குளம், ஸ்டெர்லைட் படுகொலைகள், சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் லாக்-அப் கொலை என பட்டியல் நீள்கிறது. கம்யூனிஸ்டுகள், ஜனநாயக முற்போக்கு சக்திகளால் வெளியில் கொண்டு வரப்பட்ட போலீசின் அதிகார வெறியாட்டங்களில் சில உதாரணங்கள் மட்டுமே இவை. ஆனால் அன்றாடம் போலீசு நிகழ்த்தி வரும் வெளியில் வராத கொடுங்கரங்களின் ரத்தவாடை சிவப்புக் கட்டிடத்தின் சுவர்களிலும், (தற்போது நீலமாக மாறி வருகிறது) உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்விலும் ரத்தக் கவுச்சியுடன் வீசுகிறது. சாதாரண மக்கள் மீது பாய்ந்து குதறும் போலீசு, அதிகார வர்க்க கிரிமினல்கள், ரவுடிகள், அரசியல்வாதிகளிடம் பம்மி குழைகிறது. விசுவாசமாக வாலட்டுகிறது.

காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யும் மோடி!

இப்போது திரைக்கு வந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஜெய்பீம் திரைப்படத்திற்காக, அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களைப் படிக்கும் போதே கண்ணீர் வருகிறது என்றனர் அதில் நடித்த நடிகர்கள். எனில் உண்மை எவ்வளவு கொடூரமாக இருந்திருக்கும். சாதாரணமாக லத்தியைக் கையில் வைத்திருக்கும் போதே, உழைக்கும் மக்களை அடித்துக் கொல்லும் போலீசிடம் தான், இப்போது கையில் துப்பாக்கியைக் கொடுத்துள்ளார் டிஜிபி. சைலேந்திர பாபு.

இந்தியாவில் 2017 ஆண்டில் மட்டும் போலீசின் கொட்டடி கொலைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை-100, இது 2018-ல் 70, 2019-ல் 83, 2020-ல் 31. அதுபோலவே தமிழகத்தில் இதன் எண்ணிக்கை-2017-ல் 8, 2018-ல் 12, 2019-ல் 11, 2020-ல் 6 என்று கணக்கிடுகிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகம். அதாவது போலீசு கிரிமினல்கள் மாட்டிக் கொண்ட கொட்டடிக் கொலைகளின் எண்ணிக்கைதான் இது.

கடைநிலை போலீசு கான்ஸ்டபிள் முதல் கீழ்நிலை அதிகாரிகள், டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா வரை தங்களது மேலதிகாரிகளின் டார்ச்சரினால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. போலீசு துறையில் போலீசினால், போலீசுக்கே பாதுகாப்பில்லை என்பதே நிலைமை. நெல்லை மாவட்டத்தில் எஸ்.ஐ. அருணாச்சலம், மன உளைச்சலை வாட்ஸ்-அப்பில் வீடியோவாக வெளிட்டார். சுதந்திர தின அணிவகுப்பை முடித்த பிறகே தந்தையின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எஸ்.ஐ. மகேஸ்வரி விசமருந்தி தற்கொலைக்கு முயன்றார் என அங்கும் பட்டியல் மிக நீளம்.

மேலதிகாரிகள் டார்ச்சரால் தற்கொலை செய்துக் கொண்ட டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா

தனது உயரதிகாரி கொடுத்த செக்ஸ் தொல்லை மீதான விசாரணைக்கு போக முடியாமல் வழியிலேயே மிரட்டப்பட்டார் பெண் டிஎஸ்பி. ஒரு பெண் போலீசு அதிகாரியின் நிலையே இப்படித்தான் என்றால், அத்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களின் நிலை நம்மை நினைக்கவே பயமுறுத்துகிறது. கஞ்சா விற்பனை முதல் போலி மதுபான விற்பனை வரை போலீசு கிரிமினல்கள் செய்யும் குற்றங்களை எழுத பக்கங்கள் போதாது.

இப்படி போலீசு துறையிலும், சமூகத்திலும் போலீசால் நடத்தப்படும் சட்டவிரோத கொடூரங்கள், அத்துமீறல்கள் கணக்கிலடங்காதவை. ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்துக் கொண்டு போலீசு கையில் துப்பாக்கியைக் கொடுப்பது சரி என்கிறார், டிஜிபி சைலேந்திர பாபு. நாட்டை ஆளும் கார்ப்பரேட் உயரதிகாரியான, பாசிச மோடியோ 2014 ஆம் ஆண்டு பதவி ஏற்றது முதல் ஒவ்வொரு ஆண்டும் மாநில டிஜிபிக்களின் கலந்தாலோசனையில் தவறாமல் பங்கு கொண்டு, போலீசின் அதிகாரத்தை அதிகரிப்பது எப்படி என்று கண்காணிப்பு துறையை பாசிசமயமாக்கி வருகிறார்.

உண்மையில் போலீசுத் துறை சாதாரண மக்களது அமைதிக்காவோ, வாழ்வுரிமைகளைப் பாதுகாப்பதற்காகவோ உருவாக்கப்பட்டதல்ல. தனது வாழ்வுரிமைக்காகப் போராடும் மக்களை ஒடுக்குவதற்காக சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்ட அரசின் பயங்கரவாதப்படையே போலீசு. எனவே, போலீசு நேர்மையாக மாறி மக்கள் பிரச்சினையின் பால் நிற்கும் என்பதெல்லாம் கேழ்வரகில் நெய் வடிகிற கதை தான்.

எனவே, உழைக்கும் மக்கள் தங்களது பிரச்சினைகளைத் தீர்க்க தெருவில் இறங்குவதோடு, அன்றாடம் போலீசின் சித்திரவதைக்கும், பொய் வழக்குகள், அடக்குமுறைகளுக்கும் ஆளாகி, கொடுமைகளை அனுபவிக்கும் தங்களை பாதுகாத்துக் கொள்ள, ஆயுதம் ஏந்தும் ஜனநாயக உரிமையை பெறுவதற்காக போராடுவதும், அதிகார அத்துமீறலில் ஈடுபடும் சட்ட பூர்வ கிரிமினல் கும்பலான போலீசுத் துறையை ஒட்டுமொத்தமாக கலைக்கப் போராடுவதும் தான் ஒரே வழியாகும்.

’மூக்கு இருக்கும் வரை சளி ஒழியாது’ என்று கூறுவதைப் போல போலீசு துறை என்ற ஆளும் வர்க்கத்தின் அடியாட்படை இருக்கும் வரை அன்றாடம் இது போன்ற பிரச்சனைகள் ஒழியாது. அதனை நிரந்தரமாக சரி செய்ய ஜனநாயக, முற்போக்கு சக்திகள் அனைவரும் ஒருங்கிணைந்து போராடுவதே தீர்வாக அமையும்.

  • சமர் வீரன்.

குறிப்பு: 1989 ஆம் ஆண்டு போலீசு சட்டப்பூர்வ கிரிமினல் கும்பல் என்று புதிய ஜனநாயகம் இதழ் வெளியிட்ட படக்கட்டுரை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அனைவரும் படியுங்கள்! பரப்புங்கள் போலீசின் கிரிமினல் குற்ற செயல்களை எதிர்த்துப் போராடும் போர்க்குணத்தை பெறுவோம்.

போலீசு_சட்டப்பூர்வ_கிரிமினல்_கும்பல்_புத்தகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here