ந்தியாவில் ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில், வட இந்தியாவில் தசரா பண்டிகையும், தென்னிந்தியாவில் நவராத்திரி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாள் கொண்டாட்டத்திற்கு பிறகு இராவணனை ஒரு அரக்கனாக சித்தரித்து அவன் மீது அம்பு எய்தி அவனை அழிப்பதன் மூலம் நல்ல எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கை இந்து மதத்தை கடைபிடிக்கக் கூடிய மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் பக்தியில் மிகச்சிறந்தவனும், ஆதி சிவன் வழிபாட்டில் நம்பிக்கை உடையவருமான இராவணன் ஒரு கொடிய அரக்கன் என்பதே மிகப் பெரிய புராண புரட்டு ஆகும்..

நவராத்திரி என்பது இராமாயணத்தின் கொள்கைகளை தூக்கி நிறுத்தவே நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. அதாவது தீய சக்தியான இராவணன், இராமனால் அழிக்கப்பட்டதாக கூறப்படும் கோட்பாட்டின் அடிப்படையில்தான் இந்த நவராத்திரி எனப்படும் விஜயதசமி கொண்டாடப்படுகிறது என்கிறார்கள் இந்து மத வெறியர்கள். வட இந்தியர்கள் இதனை தசரா என்று கூறுகிறார்கள் ’தசரா’ என்பது தசா+ஹாரா என்பதிலிருந்து உருவான சொல்லாகும். இராவணன் என்பதற்கு பெயர் காரணம் வெறும் கர்ஜனை செய்பவன் என்றும், மற்றொரு இடத்தில் பெரும் கர்ஜனை செய்யும் பல தலைகள் கொண்ட அசுரன் எனவும் இழிவாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் இராவணன் என்றால் இரு ஆவணன் பேருரிமையுடையவன் என்று பொருளாகும்.

இந்தியத் துணைக்கண்டத்தில் இராம ராஜ்ஜியத்தை அமைப்பதற்காக இலக்கு வைத்து ஆர்எஸ்எஸ்-பாஜக சங்பரிவார கும்பல் ஒரு நூற்றாண்டு காலமாக வேலை செய்து வருகிறது. இராமன் ’ஒரு தேசிய நாயகன்’ என்பதை இராமாயணத்தின் அடிப்படையில் முன்வைக்கிறார்கள். தமிழில் கம்பன் எழுதிய கம்பராமாயணம் போல, வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணம், பௌத்த இராமாயணம் ஜைன இராமாயணம் கிறிஸ்தவ இராமாயணம் உள்ளிட்ட பல வகையான இராமாயணங்கள் உள்ளது.இந்த இராமாயணங்கள் அனைத்திலும் காப்பிய நாயகனாக இராமனை முன்னிறுத்தி வழிபடுகிறார்கள். ஆனால் இந்தியாவின் பூர்வ குடி மக்களாகிய, பழங்குடிகளின் தலைவன் இராவணனை அசுரர் குல தலைவன் என்றும், இராமனின் மனைவி சீதையை கவர்ந்து சென்ற கொடிய மனம் படைத்தவன் என்றும், சீதை இராவணனின் மகள் என்றும் இந்த இராமாயணங்கள் அனைத்திலும் ஒன்றுக்கொன்று முரணாக எழுதப்பட்டுள்ளது என்பது தனிக்கதை.

1990களில் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் முன் வைக்கப்பட்டபோது நாடு மறுகாலனியாக்கத்தை நோக்கி விரைவாக அடிமை படத் துவங்கியது. இந்த அடிமைத்தனத்தை மக்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே ஆர்எஸ்எஸ் கும்பலால் திடீரென்று கிளப்பப்பட்டது தான் இராம ஜென்ம பூமி விவகாரம். அயோத்தியில் இராமன் பிறந்தான் என்ற புராண கட்டுக் கதையை மையமாக வைத்து அதுவும் பாபர் மசூதி இருக்கின்ற இடத்தில் தான் இராமன் பிறந்தான் என்ற கற்பனைக் கதையை முன்வைத்து பாபர் மசூதியை இடித்து நொறுக்கினார். அந்த இடத்தில் தேசிய நாயகன் இராமனுக்கு கோவில் கட்டப் போவதாக அறிவித்து, 2023-ம் ஆண்டுக்குள் அந்த பணி முடிந்து விடும் என்று இராமர் கோவில் விவகாரத்தை வைத்து நாட்டை பிரிவினைக்குள்ளாக்கியுள்ள இராம பக்த- அனுமர்கள் கூட்டம் முன்வைத்துள்ளது.

பார்ப்பன மதவெறியர்களால் தொடர்ந்து ’புரமோட்’ செய்யப்பட்ட இராமனைப் போல அல்லாமல் இந்தியாவில் பல இடங்களில் இராவண வழிபாட்டு முறை பழங்குடி மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தென்னிந்தியா மட்டுமின்றி குஜராத், மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஹிமாச்சல பிரதேசம் வரையில் இராவண வழிபாடு பரவியுள்ளது. குறிப்பாக கோண்டு மற்றும் பில்லா போன்ற 70 வகையான பழங்குடி மக்கள் மத்தியில் இராவண வழிபாடு இன்றளவும் நீடிக்கிறது. இந்த பழங்குடி மக்கள் அனைவரும், இராவணன் தன்னுடைய மூதாதையர், மாமன்னர் என்ற பெருமையுடன் இந்த வழிபாட்டை நடத்தி வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள விதிஷா என்ற ஊர் இராவணனின் மனைவி மண்டோதரி பிறந்த ஊர் என்பதாக நம்பப்படுகிறது. அந்த ஊரில் மக்கள் இராவணனுக்கு 35 அடி உயர சிலை வைத்து இன்றளவும் வழிபட்டு வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்திலும் இவ்வாறு இராவண வழிபாடு உள்ளது. இங்கு உள்ள கோண்டு இன மக்கள் பிஸ்ராக் என்ற இடத்தில் இராவணன் பிறந்தாக நம்புகின்றனர். இந்தியாவில் மட்டுமின்றி இலங்கையிலும் இராவணனை மாபெரும் மன்னராக வணங்குகின்றனர். மிராண்டா உபயசேகரா என்ற சிங்கள எழுத்தாளர் ராவணா ’கிங் ஆப் லங்கா’ என்ற நூலை எழுதியுள்ளார். இதில் இராவணனின் நல்ல பண்புகள் மட்டுமின்றி, நிர்வாக திறன், கட்டிடக் கலை நிபுணத்துவம், சுரங்கம் அமைத்து போர் புரியும் போர்க்கலை, இசையறிவு, நூல் பல இயற்றிய கல்வியறிவு போன்ற அனைத்தையும் புகழ்ந்து எழுதியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் இராவணன் சிலை!

வட இந்தியாவில் மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் பல இடங்களில் இராவண வழிபாடு உள்ளது. குறிப்பாக கேரளாவில் இராவணனுக்கு கோவில் கட்டி வழிபடுகின்றனர். அதுமட்டுமல்ல கர்நாடகாவின் கோலார் மட்டும் மண்டியா மாவட்டங்களில் இராவணனை முன்வைத்து சிவ வழிபாட்டின் ஒரு அங்கமாக விழாவை கொண்டாடி வருகின்றனர். அதேபோல தமிழகத்தில் குறிப்பாக நாடார் சாதியினர் இராவண வழிபாடு செய்ததாக 1885 சென்னை மாகாணத்தின் தன்மைகள் பற்றி பிரிட்டன் காலனியாதிக்க அரசு வெளியிட்ட நிர்வாக கையேட்டில் குறிப்புகள் உள்ளன.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை இராவணனை உயர்ந்த நற்குணங்கள் கொண்ட மன்னனாகவே பார்க்கின்றனர். இராமனை தேசிய நாயகனாக பார்ப்பன வெறியர்கள் முன் வைக்கும் கட்டுக்கதைகளை நம்புவது இல்லை. ஆனால் இந்த பார்ப்பன எதிர்ப்பு மரபு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. புராண இராமனுக்கு ஒரு வீடணன்தான் கிடைத்தான். ஆனால் இன்றோ பல வீடணர்கள் களத்தில் உள்ளனர், இதனை இனியும் நாம் அனுமதிக்க கூடாது.

“ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேலேந்தி திரிந்த வெறியனாக, பிறன்மனை நயந்த பேதையாக, இரக்கமில்லாத அரக்கனாக, பத்து தலைகளைக் கொண்ட பதராக நான் காட்டப்பட்டு வந்துள்ளேன். இதனால் எங்களுக்குள் வேறு பட்டிருந்த இன பகைவர்கள் என்னை வீழ்த்தியதை வாழ்த்திப் பேசும் மரபை வளர்த்தனர். தேவ குலத்தவர்களின் ஆட்சியில் கொடிகட்டிப் பறந்த சாதிச் சழக்கு, வம்பு வழக்கு, ஒரு குலத்தை உயர்த்தும் ஓர வஞ்சகம் – இவற்றையெல்லாம் நான் எதிர்த்தேன் என்பதற்காகவே என்னை அயல் இனத்தார் மிதித்து அழித்தார்கள். அசுர இன மக்களின் இந்த வரலாறு இதுவரை புதைக்கப்பட்டிருந்தது. அறியப்படாதுள்ள அசுரர்கள் கதை இது.

மூவாயிரம் ஆண்டுகளாக சாதியம் தலைவிரித்தாடும் அடங்காப்பிடாரியாக, அரசியலையும் கூட இன்று வரை தன் கையில் அடக்கி வைத்திருக்கிறது. ஆனால் இந்த உன்னதக் கதை ஒடுக்கப்பட்டவர்களின் உள்ளத்தின் ஓலங்களாக இன்றும் எங்கோ மதிக்கப்பட்டுதான் வருகிறது அசுரர் கள் தலைநிமிர்ந்து பிடர் சிலிர்த்துக்கொண்டு விடுதலை வேங்கைகளாக வடிவெடுப்பதற்குரிய வாய்ப்பு இப்பொழுதுதான் எழத் தொடங்கியிருக்கிறது” என்று இராவணனின் அசுரக் குரலாக ஒலிக்கிறார் எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன்.

“தென் திசை பார்க்கின்றேன் என் சொல்வேன் என்றன்
சிந்தனையெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்குதடா!
அன்றந்த இலங்கையினை ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன் புகழை வைத்தோன்
குன்றெடுக்கும் பெருந்தோளான், கொடை கொடுக்கும் கையான்
குள்ளநரி செயல் செய்யும் கூட்டத்தின் கூற்றம்
என் தமிழர் மூதாதை! என் தமிழர் பெருமான்!
இராவணன் காண்! அவன் நாமம் இவ்வுலகம் அறியும்.”

என்று இராவணன் பற்றி பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய எழுச்சி பாடலை வீதி எங்கும் பரப்புவோம்.

ஆரிய – பார்ப்பனக் கும்பலின் ஆதிக்கத்தை தகர்த்தெறியும் போராட்டத்தில், இராம ராஜ்ஜியத்தை அமைக்கத் துடிக்கும் ’இந்து ராஷ்டிர’, பாசிச பயங்கரவாத மனநோயாளிகளின் கூடாரத்தை விரட்டி அடிப்பதற்கு நமது கையில் கிடைத்துள்ள ஆயுதமாக இராவணனை நமது குறியீடாக ஏற்றி பேசுவோம்! தசரா பண்டிகை நாட்களில் மட்டுமின்றி, கார்ப்பரேட் – காவி பாசிசத்திற்கு முடிவு கட்டும் வரை இராவணனின் வாரிசுகளாக நின்று கொலைகாரன் இராமன் பெயரால் செய்யப்படும் அட்டூழியங்களுக்கு கொடுமைகளுக்கும் எதிராக சமர் புரிவோம்!

அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகம் எங்கும் ஒலித்த புலவர் குழந்தையின் இராவண காவியம் உயிர்த்தெழட்டும்! நடிகவேள் எம்ஆர் ராதாவின் கீமாயணம் மற்றும் ஆர்.எஸ் மனோகர் இயக்கிய இலங்கேஸ்வரன் இரண்டையும் தட்டி எழுப்புவோம்.. மயக்கமுற்று கிடக்கும் அண்ணாவின் நீதி தேவனின் மயக்கத்தை தெளிவிப்போம்! பழைய கற்காலத்தின் காட்டுமிராண்டி சமூகத்திற்கு இந்தியாவை கொண்டு செல்லும் இராம இராஜ்ஜியத்தின் யோக்கியதையை, உண்மையை உணர்த்துகின்ற ’அசுராயணத்தை’ வீதிகள் தோறும் பரப்புவோம். தசராவின் இறுதிநாளில் நம் முப்பாட்டன் இராவணனை எரிக்கும் அயோக்கியத்தனத்தை முறியடிப்போம். பெருமைமிகு இராவண லீலாவை வீதி எங்கும். எல்லோரும் கொண்டாடுவோம்!

  • பா.மதிவதனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here