ர்.எஸ்.எஸ் எனும் அபாயகரமான ஆக்டோபஸ், விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள், ஸ்ரீராம் சேனா, இந்து முன்னணி என தன் கொலைக் கரங்களை பல்வேறு பெயர்களில் நீட்டுவதைப் போல, வித்யா பாரதி எனும் கரத்தை தனது கல்விப் பிரிவாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. நம்மில் பலருக்கும் தெரியாத அதிர்ச்சி செய்திதான் இது!

1977 – ல் நிறுவப்பட்ட  வித்யா பாரதி எனும் இந்த காவிக் கல்வி அமைப்பானது, தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை  இந்தியாவெங்கிலும் சுமார் 13 ஆயிரம் பள்ளிகளை நடத்துகிறது. இதில் சுமார் 34 லட்சம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். தமிழகத்தில் விவேகானந்தா கேந்திரா மூலமாக 217 பள்ளிகளை நடத்துகின்றனர். அதில் சுமார் 75 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். உ.பியில் மட்டும் 10,797 பள்ளிகளை நடத்துகிறது. அதில் சுமார் 6,80,000 மாணவர்கள் பயில்கின்றனர். பல்வேறு மாநிலங்களில் பாரதிய சிக்ஷா சமிதி என்ற பெயரிலும், சில மாநிலங்களில் இந்து சிக்ஷா சமிதி என்ற பெயரிலும் உள்ள நிறுவனங்களின் மூலமாக இதை ஆர்.எஸ்.எஸ் செயல்படுத்தி வருகிறது. தொடக்கப்பள்ளி தொடங்கி மேல்நிலைப்பள்ளி வரை நடத்தும் இவர்கள் அதில் பெரும்பாலும் சிபிஎஸ்சி பாடத் திட்டத்தைதான் பின்பற்றுகின்றனர்.

வித்யா பாரதியின் பொதுச்செயலாளர் ஸ்ரீ ராம் அரங்கர் சமீபத்தில் கூறுகையில், நாங்கள் புதிய தேசிய கல்விக் கொள்கையை  (NEP) செயல்படுத்துவதற்கு அரசுக்கு உதவுவதை முக்கிய நோக்கமாக  கொண்டுள்ளோம். மேலும் வித்யா பாரதி மூலமாக புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டோம் என்றார். ஆறாம் வகுப்பு முதல் “திறன் கல்வி”யில் தொழிலாளர்களின் கண்ணியத்தை ஊக்குவிப்பது பற்றியும் போதிக்கப் போகிறார்களாம்.

ஏதாவதொரு தொழிலைக் கற்றுக்கொண்டு, தொழிலாளியாகப் போய்விடு. உனக்கெல்லாம் படிப்பெதற்கு? என குலக்கல்வி முறையை புகுத்தும் முயற்சிதான் இது! உத்தரகாண்டின் கல்வி அமைச்சர் தன்சிங் ராபர்ட் “புதிய கல்விக் கொள்கையை மழலையர் வகுப்பிலிருந்து அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் உத்தர்காண்ட்தான். உயர் படிப்புகளிலும் இதை அமலாக்க இதுவரை 57 மீட்டிங் நடத்தியுள்ளோம்” என்கிறார்.

இப்போது ஊச் ஷிக்சா சன்ஸ்தான் எனும் அமைப்பின் மூலமாக பட்டப்படிப்புகளுக்காக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களையும் துவங்குகிறது ஆர்.எஸ்.எஸ். ஹரித்துவாரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வித்யா பாரதியின் அமைப்புச் செயலாளரான யதந்திர ஷர்மா, இந்தியாவில் ஐந்து புதிய பல்கலைக்கழகங்களை தொடங்க உள்ளதாக தெரிவித்தார். கல்வியில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வருவதே இதன் நோக்கமாம். இவைகளுக்கு நேர்மறை என்றால் அது நிச்சயம் நமக்கு எதிர்மறைதான். இந்த அமைப்பின் மூலமாக சென்ற ஆண்டு பெங்களூருவில் 125 ஏக்கரில் சாணக்யா பல்கலைக்கழகத்தை தொடங்கியுள்ளனர்.  டெல்லியின் அருகில் உள்ள குருகிராமில் அசோக் சிங்கால் பெயரில் வேத பல்கலைக்கழகம் ஒன்றையும் நிறுவியுள்ளனர். நவீன கல்வித் திட்டத்தில் வேதங்களின் சிறப்புகளை போதிப்பதே இதன் லட்சியமாம். விரைவில் கவுகாத்தியிலும் ஒன்றை தொடங்கவிருக்கின்றனர்.

ஜேஎன்யு போன்ற முற்போக்கு கருத்துக்களுக்கும் இடமளிக்கும் பல்கலைக் கழகங்களை காவி மயமாக்கும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் இந்த கும்பல், மருத்துவக் கல்லூரிகளில் ஹிப்போகிரட்டஸ் உறுதிமொழிக்கு மாற்றாக சுஸ்ருதரின் பிற்போக்கான உறுதி மொழியை திணிக்கிறது. பல்கலைக்கழக துணை வேந்தர்களாக ஆர்எஸ்எஸ் பள்ளிகளில் உருவாக்கப்பட்ட சங்கிகளை நியமிப்பதன் மூலமாக முற்போக்கு அம்சங்கள் அடங்கிய பாடத்திட்டங்களை நீக்குவதும் பிற்போக்கு அம்சங்களை புகுத்துவதும் இவர்களது செயல்திட்டத்தில் உள்ளது. ஆதாரங்களின் அடிப்படையில் அறிவியல் பூர்வமாக இல்லாமல் புராண, இதிகாச, புனைவு குப்பைகளை உய்ர் கல்வியிலும் புகுத்தப் போகிறார்கள்.

இதையும் படியுங்கள்: அநீதியே சட்டமாகும் போது, அதனை எதிர்த்துப் போராடுவதே எங்கள் கடமை

தேசிய கல்விக் கொள்கை மூலமாக புதிய கல்விக் கொள்கையை நாடெங்கும் அமல்படுத்த முனையும் இந்த கும்பல், மும்மொழி கொள்கை என்பதன் மூலமாக ஹிந்தி பேசாத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சமஸ்கிருத, இந்தி மொழித் திணிப்பை புகுத்த எத்தனிக்கிறது. இந்த கல்விக் கொள்கையின் மூலமாக கல்வியில் தனியார் மயத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு தனியார் ‘அற’ நிறுவனங்கள் – அரசு பங்கேற்பு எனும் பெயரால் ஆர்.எஸ்.எஸ் – இன் கல்வி நிறுவனங்களை இதில் ஈடுபட வைக்கப் போகிறார்கள். தொழிற்கல்வி எனும் பெயரில் பழைய குலக்கல்வி திட்டத்தை அமலாக்குவதும், அனைத்து கல்லூரி சேர்க்கைக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வினை நடத்துவதும், கல்வித் துறையில் மாநில அரசின் அதிகாரங்களை முற்றிலுமாக பறிப்பதுமே இவர்களின் நோக்கமாக உள்ளது.

ஏற்கனவே மேலிருந்து நாட்டிலுள்ள பெயரளவிலாவது தனித்து இயங்கிய சிபிஐ (CBI), அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அதிகார நிறுவனங்களையும், உயர் மற்றும் உச்சநீதி மன்றங்களையும், ஊடகங்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்ட ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக காவி கும்பல், இப்போது கீழிருந்து தனது இந்துராஷ்டிர கனவை நிறைவேற்றும் வகையில் கல்வித் துறையை முற்றிலுமாக காவிமயமாக மாற்ற அனைத்து வகையிலும் முயற்சிக்கிறது. மிகத்தீவிரமான எதிர்ப்பை கட்டியமைப்பதின் மூலம் மட்டுமே இந்த காவி பாசிச அபாயத்தை வீழ்த்த முடியும்.

ஆக்கம்: குரு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here