ந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை பெற்றுத் தன்னாட்சி அமைத்தது. இந்திய அரசியலைக் கூட்டாட்சித் தத்துவத்திற்குள் கொண்டு வந்தவர் மாமேதை டாக்டர் அம்பேத்கர். இந்தியாவிற்கென்று அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த 1950, ஜனவரி 26 ஆம் நாளுக்கு முன்பிருந்தே, தென்னிந்தியாவில் ‘திராவிட நாடு’ கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. இன்னும் சொல்லப்போனால், பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கையை எழுப்பும் முன்பே சுயமரியாதை இயக்கம், திராவிட நாடு கோரிக்கையை எழுப்பியது. திராவிட நாடும், பாகிஸ்தானும் பிரிவினை கோருவது குறித்த கலந்துரையாடல், 1940 ஆம் ஆண்டு, பம்பாயில் முகமது அலி ஜின்னா இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், அறிஞர் அண்ணா உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இந்திய விடுதலைக்குப் பின்பு இக்கோரிக்கை இந்தியப் பாராளுமன்றத்தில்,1962 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாவால் எழுப்பப்பட்ட போது, பிரிவினைத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனிநாடு கோரிக்கைகள் கைவிடப்பட்டன. என்றாலும், அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்று பாராளுமன்றத்தில் வாதிட்ட அறிஞர் அண்ணா, அதற்குத் தீர்வாக ‘மாநில சுயாட்சி’க் கோரிக்கையை முன் வைத்தார். இன்று வரையிலும் அது கோரிக்கையாகவே தொடர்கிறது.

அதேபோல மத்திய – மாநில உறவுகள் சீராக நீடிக்க வேண்டுமெனில், கூட்டாட்சித் தத்துவம் முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதும் அண்ணாவின் நிலைப்பாடாக இருந்தது. “மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி” என்ற முழக்கமும் முன்வைக்கப்பட்டது. இந்த ஜனநாயகக் குரலைப் பாராளுமன்றத்தில் அண்ணா எழுப்புவதற்கு அடிப்படையாக அமைந்தது, கூட்டாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட, டாக்டர் அம்பேத்கர் முன்வைத்த அரசியலமைப்புச் சட்டங்கள் தான். அதை வலியுறுத்தும் விதத்தில், மாநிலங்களுக்கு மத்திய ஏஜெண்டுகளாக ஆளுநர்கள் தேவையில்லை என்றும், “ஆட்டுக்குத் தாடியும் ஆளுநர் பதவியும்” தேவையற்ற ஒன்று என்றும் அண்ணா கூறினார்.

அறிஞர் அண்ணாவின் கூற்று, பல மாநிலங்களிலும், பல ஆளுநர்களாலும் நிரூபிக்கப்பட்டு வந்துள்ள செய்திகள் நிறையவே உள்ளன. அதை மீண்டும் ஒரு முறை அனுபவிக்கும் நிலையைத் தற்போது தமிழ்நாடு பெற்றிருக்கிறது. இந்தியச் சாத்திரங்களின் தொகுப்பு தான் திருக்குறள் என்று மீண்டும் திருவாய் மொழி அளித்திருக்கிறார் திருவாளர் “ஆட்டுத்தாடி”.

“ஆட்டுக்குத் தாடி அவசியமா?” (2)

மக்களாட்சி நாடாக இதுவரை இழுத்துப் பறித்துக் கொண்டிருந்த இந்தியாவை, முற்றிலும் ‘இந்துத்துவ’ பாசிச நாடாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு தற்போது தங்களின் ஆளுநர்களையே ஏவுநர்களாக மாற்றி வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, தேர்தெடுக்கப்பட்ட அரசாங்கம், அமைச்சரவை, சட்டமன்றம் இருந்தும் மாநிலங்களில் ஆளுநர்களின் தனிப்பட்ட ராஜாங்கம், மத்திய அரசின் “கடைப்பார்வை”யுடன் மிக வெளிப்படையாக நடந்து வருகிறது.

ஆளுநர்கள், பதவி வழி, மாநிலப் பல்கலைக்கழகங்களில் வேந்தர்களாகப் பதவி வகிப்பது உண்டு. அதையே சாக்காக வைத்து, துணைவேந்தர் நியமனங்களையும் ஆளுநர்களே மேற்கொள்ளும், மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரான போக்கு, பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது.

மாநில சட்டமன்றங்கள் தீர்மானம் இயற்றினால் அதற்கு ஆளுநரும், குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்த பின் அது சட்டமாவது தான் நடைமுறை. ஆனால் இப்போது மாநில அரசின் தீர்மானங்களை அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருப்பது ஆளுநர்களின் ‘பேஷன்’ ஆக மாறிவிட்டது.


இதையும் படியுங்கள்: ஓயாத மோடியின் வாய்சவடால்! சாதித்தது என்ன?


இது மக்களாட்சி, கூட்டாட்சித் தத்துவங்களுக்கு உலை வைக்கும் செயல் என்பதை நன்றாக அறிந்திருந்தும், மத்திய அரசு, தங்கள் செல்லப் பிள்ளைகளான ஆளுநர்களைத் தட்டிக் கொடுக்கிறது. பெற்றோர்கள் அரவணைப்பிலேயே போக்கிரிகளாக மாறும் சில மாணவர்களைப் போல், மாநிலங்களின் ஆளுநர்கள் மாநில அரசாங்கங்களின் நேரடி எதிர்ப்பாளர்களாகவே செயலாற்றி வருகின்றனர்.

“ஆட்டுக்குத் தாடி அவசியமா?” (3)

தற்போதைய தமிழ்நாடு ஆளுநரின் மாளிகை, இந்துத்துவப் போர்வை போர்த்திய மதக்கூடாரமாக மாறிப் போயிருக்கிறது. வெளியில் மட்டும் என்ன வாழ்கிறது? செல்லும் இடங்களில் எல்லாம் அரசு விழாக்களில் ஆளுநரின் பேச்சும் அவ்வகையிலேயே அமைந்திருக்கிறது.

ஆன்மிகத்தை வடக்கிலிருந்து வந்து போதிக்க வேண்டிய அவசியம் இல்லாத நாடு தமிழ்நாடு. இந்தியாவின் ஆழங்கால் பட்ட பழைய சமயங்கள் வேர் விட்டுத் தழைத்த இடம் தமிழ்நாடு. அதேபோலப் பகுத்தறிவு மார்க்கம் செழித்து வளர்ந்த இடமும் தமிழ்நாடு. என்றாலும் அனைவரும் தமிழர்களே என்று மனிதநேயம் காக்கும் மாண்பினை மரபாகக் கொண்டிருப்பது தமிழ்நாடு.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் மூவாயிரம் ஆண்டுச் சங்கப் பாடல் மரபு இதற்கு சாட்சி என்பதை இந்தியப் பிரதமரே பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். ஆனால் பேசுவது ஒன்றும், செய்வது ஒன்றுமான போக்குதான் மதமாச்சரியத்தில் மிகச் சாதாரண நிகழ்வு போலும்.

வடக்கிலும், வடமொழிகளிலும் இலக்கியங்களை விடச் சாத்திரக் குப்பைகளே அதிகம். “சூத்திரனுக்கு ஒரு நீதி; தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறோர் நீதி; சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரமன்று; சதி என்று கண்டீர்” என்று பாரதியார் பொங்கி எழுந்து கவிதை வடித்தார். அவருடைய படத்தை முன்னிறுத்தும் இந்துத்துவவாதிகள் அவருடைய இந்த கவிதை வரிகளைப் புரிந்து கொள்ளவில்லை.

தமிழின் சங்க இலக்கியங்களில் சாத்திரக் குப்பைகள் இல்லை. புராணக் குப்பைகள் இருக்கின்றன. என்றாலும், தரமுள்ள இலக்கியங்கள் வடபுலத்தை விடத் தமிழில் தான் அதிகம். “நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும்” (452) என்று வள்ளுவர் கூறியது போல, இந்த மண்ணின் இயல்பான குணங்கள் அதன் இலக்கியங்களில் வெளிப்பட்டு இருக்கின்றன.

(தொடரும்…)

முனைவர் சிவ இளங்கோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here