துப்புரவுத் தொழிலாளர் போராட்டம்! கிழிந்து தொங்கிய திமுகவின், ’சமூக நீதி!’


சென்னை மாநகராட்சிக்கு எதிராக துப்புரவுத் பணியாளர்கள் நடத்திய போராட்டத்தைப் பற்றி, ”இது பாஜகவினால் தூண்டி விடப்பட்டது” என்று தனது ஆய்வு கண்டுபிடிப்பை முன் வைத்தார் முற்போக்காளர் ஒருவர்.

”திமுகவின் ஆட்சிக்கு கெட்ட பெயரை உருவாக்கவும், எதிர்வரும் தேர்தலில் திமுகவை தோற்கடிக்கவும், எதிர்க்கட்சிகள் குறிப்பாக பாஜக-அதிமுக உள்ளிட்ட சக்திகள்” துப்புரவுத் தொழிலாளர்களை தூண்டி விடுவதாக முனகிக் கொண்டுள்ளனர் திமுக ஆதரவு அறிவுஜீவிகள்.

காஷ்மீரில் இன ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுகின்ற போராளிகளின் போராட்டங்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தூண்டிவிடுகிறார்கள்; மத்திய இந்தியா பகுதியில் கனிம வளங்களையும், காட்டு வளங்களையும் பாதுகாக்கப் போராடுகின்ற பழங்குடி மக்களை மாவோயிஸ்டுகள் தூண்டி விடுகிறார்கள்; போராட்டங்கள் எதையும் விரும்பாத அமைதியான வாழ்க்கை வாழ விரும்புகிறவர்களை சமூக செயல்பாட்டாளர்கள் போராடுவதற்கு தூண்டி விடுகிறார்கள்.

சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்கச் செய்து, புரட்சி சமூக மாற்றம் என்ற சொற்றொடர்கள் மூலம் மக்களை போராடுவதற்கு, ’அர்பன் நக்சல்கள்’ முதல் புரட்சிகர அமைப்புகள் வரை தூண்டி விடுகிறார்கள்.

இதுபோன்று தூண்டி விடுகிறார்கள் என்ற ஊத்தைவாதத்தை கடந்த சில ஆண்டுகளாக நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

அதிமுக ஆட்சிக் காலம் வரை சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிகள் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் (NULM – National Urban Livelihoods Mission) அடிப்படையில் சென்னை மாநகராட்சின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் பத்து மண்டலங்களின் தூய்மைப் பணி ஒப்பந்த அடிப்படையில், உர்பசெர் சுமீட் (Urbaser Sumeet), ராம்கி என்விரோ எஞ்சினியர்ஸ் லிமிடெட் (Ramky Enviro Engineers Ltd) ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தாரைவார்க்கப்பட்டது. இதனால், தூய்மைப் பணியாளர்களுக்கு கிடைத்துவந்த குறைந்தபட்ச சலுகைகள், அடிப்படை ஊதியம் கூட பறிக்கப்பட்டு அவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நவீன கொத்தடிமைகளாக்கப்பட்டனர்.

பாஜகவின் கொத்தடிமையான எடப்பாடி ஆட்சியில் இருந்தபோது இவ்வாறு தனியார்மையமாக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை உத்தரவாதம் மற்றும் பணி பாதுகாப்பு ஆகியவற்றை தான் ஆட்சிக்கு வந்தால் உத்திரவாதப்படுத்துவதாக தி.மு. கழகத்தின் சார்பில் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார்.

சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள அனைத்து மண்டலங்களில் பணியாற்றுகின்ற துப்புரவுத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யப் போவதாகவும் வாக்குறுதி கொடுத்தார் ஏனென்றால் அப்போது அவர் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பணி நிரந்தரம் கோரி துப்புரவுத் தொழிலாளர்கள் போராடி வருகின்ற சூழலில் தற்போது திடீரென்று சென்னை V, VI ஆகிய மண்டலங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது. அந்த மண்டலங்களில் பணியாற்றி வந்த துப்புரவுத் தொழிலாளர்களை நள்ளிரவில் அழைத்த அதிகார வர்க்கம் நாளை முதல் நீங்கள் மாநகராட்சியின் கீழ் வேலைக்கு வர வேண்டாம். புதிதாக ஒப்படைக்கப்பட்டுள்ள காண்ட்ராக்டர் தலைமையின் கீழ் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று உத்தரவு போட்டது.

ஏற்கனவே பல ஆண்டுகளாக போராடிப் பெற்ற உரிமைகள் மற்றும் ஊதிய உயர்வு ஆகியவற்றை ஒரு நொடியில் ஒழித்துக் கட்டுகின்ற இந்த உத்தரவானது தொழிலாளர்கள் பெற்று வந்த 23 ஆயிரம் சம்பளத்தை 15,000 ஆக குறைக்கின்ற மிகவும் கேடான நடவடிக்கையாகும்.

பணி பாதுகாப்பை உத்திரவாதப்படுத்துவதற்கு வக்கற்ற திமுக அரசாங்கம் ஏற்கனவே வேலை செய்து வந்த சூழலை மாற்றி தனியார் கார்ப்பரேட்டுகளிடம் குப்பை அள்ளுகின்ற பொறுப்பை ஒப்படைத்ததன் மூலம் தங்களது பணி நிரந்தர கோரிக்கை ஒழித்துக் கட்டப்படுவது மட்டுமின்றி ஏற்கனவே வாங்கிய ஊதியம் குறைக்கப்படுவதை கண்டு துப்புரவுத் பணியாளர்கள் கொதித்து எழுந்தனர்.

ஆகஸ்ட் 1 முதல் நேற்று நள்ளிரவு வரை 13 நாட்கள் தொடர்ச்சியாக பனி, மழை, வெயில் என்று பாராமல் குடிக்க குடிநீரின்றி, முறையான உணவுகள் இன்றி, பாதுகாப்பான வாழ்க்கை ஏதும் இன்றி தங்களது போராட்டத்தை போர்க் குணத்துடனும் வீரியத்துடன் நடத்தி வந்தனர்.

படிக்க:தூய்மை பணியாளர்கள் போராட்டமும், திமுக அரசின் துரோகமும்!

ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் என்ற பெயரில் கொண்டாட்டங்களை திட்டமிட்டு வந்த தமிழக அரசு சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு இடையூறாக உள்ளது என்ற கண்ணோட்டத்திலும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவை அமல்படுத்துகிறோம் என்ற போர்வையிலும் போராடுகின்ற துப்புரவுத் தொழிலாளர்களை நூற்றுக்கணக்கான போலீசைக் குவித்து அவர்களை போராட்ட இடத்தில் இருந்து வன்முறையாகவும், அடாவடியாகவும் துரத்தி அடித்தது.

உறுதியாக நின்ற துப்புரவு போராளிகளை கைது செய்து வேனிலேயே நகரம் முழுவதும் சுற்றி வந்தது. இறுதியில் மண்டபத்தில் அடைத்து சித்திரவதை செய்துள்ளது.

போராட்டத்தில் திமுக அரசை கடுமையாக விமர்சித்த மாணவர் அமைப்பைச் சார்ந்தவர்கள், துப்புரவுத் தொழிலாள பெண்கள் சிலர் மீது மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று வன்மத்துடன் தாக்கியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

போராட்டக் களத்தில் இருந்த புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மட்டுமின்றி தொடர்ச்சியாக இந்த போராட்டங்களுக்கு ஆதரவளித்து வரும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சங்கத்தைச் சார்ந்த தலைவர் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை கைது செய்யப்பட்டவர்களை சந்திப்பதற்குக் கூட அனுமதி மறுத்து வெறியாட்டம் போட்டுக் கொண்டுள்ளது போலீசு.

”குப்பை நிரந்தரம்! பணியாளர்கள் தற்காலிகம்” என்ற முழக்கம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. துப்புரவுத் தொழிலாளர்கள் மீது தொடுக்கப்பட்ட இந்த காட்டுமிராண்டித்தனமான வன்முறையை கண்டித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது.

படிக்க: நள்ளிரவில் அப்புறப்படுத்தப்பட்ட “கூலி”கள்: படம் பார்த்து வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

திமுக முன்வைக்கின்ற ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் என்பது இதுபோல பணி நிரந்தரத்தை ஒழித்து கட்டுவது; வேலைவாய்ப்பு வசதிகளை கார்ப்பரேட்டுகள் கையில் ஒப்படைப்பது; கார்ப்பரேட்டுகளின் கொள்ளை மற்றும் சுரண்டலுக்கு தொழிலாளி வர்க்கத்தை பலி கொடுப்பது; போராடுகின்ற தொழிற்சங்க உரிமைகளை நசுக்குவது ஆகியவற்றை முன் நிபந்தனையாக கொண்டு உருவாக்கப்படுவது தான்.

இந்தப் போராட்டத்தில் துப்புரவுத் பணியாளர்கள் 13 நாட்களாக தொடர்ந்து போராடிய போதிலும் திமுகவின் ஆதரவு பெற்ற ஊடகங்கள் மற்றும் youtube சேனல்கள் அந்த பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை என்பது மட்டுமின்றி, தங்கள் ’வீட்டில் சேர்ந்த குப்பையுடன் தங்களது மனக்குப்பையையும்’ ஒன்றாக சேர்த்து வைத்துக் கொண்டனர்.

சமூக செயல்பாட்டாளர்களின் கருத்துரிமை மற்றும் ஜனநாயக உணர்வு, சாதி மற்றும் வர்க்கம் பார்த்துதான் பீறிட்டுக் கொண்டு வருகிறது என்பதை துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

13 நாட்களாக நீடித்த போராட்டத்தின் விளைவாக அவர்கள் மீது கடுமையான வன்முறையை ஏவிவிட்ட திமுக அரசு வேறு வழி இல்லாமல் 6 அம்சத் திட்டம் என்று ஒன்றை முன்வைத்து அவர்களை திருப்திப் படுத்த முயற்சிக்கிறது.

இத்தகைய திசை திருப்பல்கள், அவதூறுகள், வசவுகள் ஆகிய அனைத்தையும் தாண்டி தனது பணி நிரந்தரத்திற்காக, தனியார்மயமாக்கத்திற்கு எதிராக போராடுகின்ற துப்புரவுத் தொழிலாளர்களுடன் கரம் கோர்ப்போம்.

உழைக்கும் மக்களுக்கு விடிவின்றி பாசிசத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்பதை போலி முற்போக்குகள் மற்றும் திமுக ஆதரவு அறிவுஜீவிகளுக்கு புரிய வைப்போம். கார்ப்பரேட் ஆதரவுக் கட்சியான திமுகவின், ’சமூக நீதிக் கொள்கை’ இப் போராடங்களின் மூலமாக எவ்வாறு கிழிந்துத் தொங்கிறது என அம்பலமாக்குவோம்.

மருது பாண்டியன்.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here