கர்நாடக மாநிலத்தில் தென் பகுதியில் உள்ள தர்மஸ்தலாவில் பல பத்தாண்டுகளாக பாலியல் வல்லுறவுகளும் படுகொலைகளும் நடந்து வருவதாக தற்போது ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.
தெட்சிணக் கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்கு படுகொலை செய்யப்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்களின் பிணங்களை நான்தான் புதைத்தேன் என்றும், நிர்வாகிகள் தன்னை அப்படி செய்ய கட்டாயப்படுத்தினர் என்றும் கோயில் ஊழியர் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தான் புதைத்ததற்கு சான்றாக எலும்புக்கூடை தோண்டி எடுத்து பாதுகாத்து வைத்திருப்பதை காண்பித்துள்ளார்.
தர்மஸ்தலா யாரின் பிடியில் உள்ளது?
தர்மஸ்தலாவானது சமணர்களால் உருவாக்கப்பட்டது. நாடெங்கும் சமண கோயில்களை விழுங்கிய பார்ப்பனர்களின் (சைவ வைணவ சமயம்) ஆதிக்கமே இதிலும் மேலோங்கியுள்ளது. இக்கோயில் மூலவர்களாக மஞ்சுநாதரும் (சிவனும்), சமண சமயத்தின் எட்டாவது தீர்த்தங்கரான சந்திரபிரபாவும், கோயில் காவல் தெய்வங்களாக குமாரசுவாமியும் மற்றும் கன்னியாகுமரி எனும் யட்சினியும் உள்ளனர்.
மத நல்லிணக்கத்திற்கு உதாரணம் என்று “போற்றப்படும்” தர்மஸ்தலா கோயிலின் நிர்வாகத்தை சமண சமய வீரமன்னா பெர்கடே என்பவரின் வழிவந்த குடும்பத்தினர் மேற்பார்வையிடுகின்றனர்ஆனால் மத்வரின் துவைத மரபை பின்பற்றும் வைணவ அந்தணர்கள்தான் கோயில் பூசைகளை செய்கின்றனர். தற்போது மையமான பிரச்சனை யார் பூஜை செய்கிறார்கள் என்பதல்ல; யாரின் நிர்வாகத்தில் கோயில் உள்ளது என்பதுதான்.
தற்போது நூற்றுக்கணக்கில் படுகொலைகள் நடந்திருப்பதாக அடுத்தடுத்து புகார்கள் வெளிவரும் நிலையில் அதை நிர்வகிப்பது யார் என்பது முதன்மையான கேள்வி ஆகிறது.
தர்மஸ்தலாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போல் மேல்முறையீட்டுக்கு இடமில்லாத தீர்ப்பை வழங்குபவராகவும், மாநில முதல்வர்களுக்கு இணையாக நிர்வாகப் பணிகளில் தலையிடுபவராகவும், தர்மஸ்தலாவின் அதிபராகவும் கொலோச்சி வருபவர் தான் வீரேந்திர ஹெக்டே.
பா.ஜ.க.வின் தொடர்பினால் மாநிலங்களவை உறுப்பினரான வீரேந்திர ஹெக்டே தனது 21ஆவது வயதிலேயே தர்மஸ்தலாவின் நிர்வாகியானவர். 50 ஆண்டுகளையும் கடந்தும் கோவிலை மட்டுமின்றி அந்த ஊரையே ஆளும் பொறுப்பில் நீடிப்பவர்.
சங்கிகளின் பிடியில் உள்ள எந்த நிறுவனமும் பக்தர்களுக்கோ, இந்துக்களுக்கோ, நாட்டு மக்களுக்கே நல்லது செய்வதாக வரலாறே இல்லையே. கோவைக்கு ஈஷாவின் ஜக்கி வாசுதேவன் என்றால் தென்கர்நாடகத்தின் தர்மஸ்தலாவிற்கு வீரேந்திர ஹெக்டே.
ஆன்மீக தலங்கள் பாதுகாப்பானதா – ஆபத்தானதா?
எந்த ஒரு கோயிலோ ஆன்மீக தலமோ எளிமையானதாக, அனைத்து இடங்களுக்குள்ளும் சாதாரண பக்தர்கள் நுழைந்து வரும் வகையில் வெளிப்படையானதாக இருக்கும் வரை பெரிதாக பிரச்சினை வந்ததில்லை.
பக்தியின் பெயரால் ஆன்மீக கார்ப்பரேட்டுகளாக கோயிலின் குருக்களோ, ஆசிரமங்களின் சாமியார்களோ பிரம்மாண்டமாக வளரும்போது, அதன் துணை விளைவாக கிரிமினல் குற்றங்களும் பெருகுகின்றன.
கோயிலிலோ, ஆசிரமங்களிலோ நவீன சொகுசு விடுதிகளின் தரத்தில் கட்டுமானங்கள் எழுப்பப்பட்டு சொகுசு வசதிகள் உருவாக்கப்பட்டு, அது சாமானிய பக்தர்களின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டு, கார்ப்பரேட்டுகளின், மேட்டுக்குடிகளின், அதிகார வக்கத்தினரின் தேவைக்கானதாக பாதுகாக்கப்படும்போது அனைத்து அனைத்து கிரிமினல் தனங்களின் பிறப்பிடங்களுக்கு பொருத்தமானதாக மாறுகிறது.
தர்மஸ்தலா கோவிலும் இதுபோல் கோடிக்கணக்கில் சொத்துக்களை கொண்டதாக, மேட்டுக்குடி பக்தர்கள் வந்து சொகுசுடன் தங்கி, ‘ஆன்மீக பேரனுபவத்தை’ பெற்றுச் செல்வதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு எற்பவே இங்கு வழிபட வரும் பெண் பக்தர்கள் மற்றும் ஊரில் உள்ள பிச்சைக்காரர்கள் மாயமாவது தொடர் கதையாக நடந்துள்ளது.
கோயிலுக்குச் சென்ற மகள்களை காணாமல் பெற்றோர்கள் நேரில் வந்து விசாரித்தாலோ, காவல் நிலையத்தில் புகார் அளித்தாலோ ரவுடிகளால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். தர்மஸ்தலா காவல் நிலையத்தில் தரப்படும் புகார்கள் மூடி மறைக்கப்படுவது தான் வழக்கமாக இருந்துள்ளது. அதாவது ஆன்மீக கிரிமினல்களுடன் அதிகாரவர்க்கம் கைகோர்த்துள்ளது.
(அ)தர்மஸ்தலாவில் உள்ள பிச்சைக்காரர்களும் கூட மாயமாகியுள்ளனர். பெண்களை பாலியல் இச்சைக்கு பலியாக்குகின்றனர் என்றால், பிச்சைக்காரர்கள் அவர்களின் உள்ளுறுப்புகளுக்காக கடத்தப்படுகின்றனர் என்பதை யூகிக்க முடியும்.
இதுவரை எத்தனை பேர் மனித உறுப்புகளுக்காக கடத்தப்பட்டு மாயமாகினர் என்பது கண் துடைப்புக்காக இல்லாமல், நேர்மையாக நடத்தப்படும் புலனாய்வில் தான் வெளிவரும். அப்படிப்பட்ட ஒன்றை தற்போதைய காவி அரசு செய்யும் என்று ஒருவர் கூட நம்ப மாட்டார்கள்.
ஆன்மீக கிரிமினல்களை காப்பாற்றும் அதிகார வர்க்க கிரிமினல்கள்!
ஒரு ஆன்மீகத் தலத்தில் அடுத்தடுத்து பெண்கள் மாயமாவது தெரிந்தும் ஒரு புகார் கூட பதிவு செய்யப்படவில்லை; ஒருவரை கூட கைது செய்யவில்லை; ஒருவரை கூட தண்டிக்கவில்லை என்றால், இந்த குற்றங்களுக்கு துணையாக காவல் துறையும், அதிகார வர்க்கமும் உள்ளது என்பதை தனியாக விளக்கத் தேவையில்லை.
நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஆணிவேராக இருப்பது பொருளாதாரம்தான். சொத்துக்கள் யாரின் கைகளில் குவிக்கப்பட்டுள்ளன என்பதுதான். அதையே ஆசிரமங்களுக்கும் பொருத்தலாம்.
ஆசிரமங்களுக்கான பல்லாயிரம் கோடி நிதி யாரிடமிருந்து வருகிறது என்பதை கணக்கில் எடுக்க வேண்டும். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான், குறுகிய காலத்தில் பிரம்மாண்டமாக சொத்துக்களை குவிக்கும் தேசங்கடந்த தரகு முதலாளிகள் தான் இத்தகைய ஆசிரமங்களின் அறக்கட்டளைகளுக்கு வாரி வழங்குகின்றனர். தாமும் அறங்காவலர்களாக அறக்கட்டளை நிர்வாகிகளாக உள் நுழைகின்றனர்.
ஆன்மீகத்தின் பெயரால் அறக்கட்டளைகளை வைத்து உலகெங்கும் இருந்து நிதிகளை பெற்று இணை அரசுகளைப் போல் செயல்படுவதில் காவி பாசிஸ்டுகள் கைதேர்ந்தவர்கள்.
காவல்துறையோ, நீதித்துறையோ, பத்திரிக்கை மற்றும் ஊடக துறையோ எதுவாக இருந்தாலும் அதில் முன்னணியாக திகழ்பவர்களின் எஜமானவர்களாக கார்ப்பரேட்டுகளே உள்ளனர். கார்ப்பரேட்டுகளின் தேவைக்காகவே மடாதிபதிகளும், ஜகத்குருக்களும், அம்மாக்களும் வளர்த்தெடுக்கப்படுகின்றனர்.
அரசாங்கம், அதிகாரவர்க்கம் கார்ப்பரேட்டுகள் ஆகியவற்றுடன் கூடி குலவும் சாமியார்கள் தனது சொந்த தேவைக்காகவோ, அல்லது தனது எஜமானர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காகவோ சட்டத்தை மீறி எதையும் செய்யும் துணிச்சலை பெறுகின்றனர்.
உதாரணத்திற்கு வேலூரில் உள்ள பொற்கோயிலை எடுத்துக் கொள்ளலாம். வேலூரை அடுத்துள்ள ஸ்ரீபுரத்தில் திடீரென இந்நூற்றாண்டில் முளைத்துள்ளது. தங்க கோயில். கிலோ கணக்கில் தங்கத்தால் ஆன மூலவர் சிலை, டன் கணக்கில் வெள்ளியால் ஆன விநாயகர் சிலை, தங்க முலாம் பூசப்பட்டு தகடுகள் பொருத்தப்பட்ட கோயில் பிரகாரங்கள் என பக்தர்களை கவர்ந்திருக்கிறது.
ஸ்ரீபுரத்திற்கு மோடியே நேரில் வந்து சாமியாருடன் (அம்மாவுடன்) புகைப்படமும் எடுத்துச் சென்றுள்ளார். இங்கு உள்ளே நுழைந்தவுடன் கோவிலுக்குள் நவீன கட்டடங்களும், கட்டடங்களின் மேல் தளத்தில் 12 அடி விட்டம் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட ரிசீவர்களும் விழிப்புடன் பார்க்கும் நம் கண்ணில் படுகிறது.

யாருடன் ரகசியமாக தொடர்பு கொள்ள சேட்டிலைட்டுடன் அலைத்தொடர்பை தரும் பிரம்மாண்ட டவர்கள்? ஸ்ரீபுரம் மடாதிபதி நேரடியாக அமெரிக்காவுடனும், ஆஸ்திரேலியா உடனுமா பேசப் போகிறார்? இல்லை சொர்க்கத்திற்கு இணைய தொடர்பு உருவாக்குகிறாரா?
ஒரு ஐடி கார்ப்பரேட் நிறுவனம் கூட பிராட்பேண்ட் இணைப்பின் மூலமே செயல்படும் போது இங்கு நிறுவப்பட்டுள்ள வசதிகள் கண்ணை உறுத்துகின்றன.
இது போன்ற கேள்விகளை கோயிலுக்குள் சென்று பார்க்கும் பக்தர்கள் எழுப்புவதில்லை. இங்கு இதுவரை காணாமல் போன புகார்களோ, எலும்புக்கூடுகளோ வெளிவரவில்லை என்பதால் நாமும் கடந்து போகலாமா? ஆனால் ஸ்ரீபுரம் அம்மாவைப் போன்று திடீரென முளைத்தவர் அல்ல ஹெக்டேவும் அவரின் தர்மஸ்தலாவும்.
ஹெக்டே சாமானியனாக இருந்து சர்வாதிகாரம் பெற்றவர் அல்ல; துவக்கத்திலிருந்து வாரிசு அடிப்படையில் குடும்பத்தினரால் தயார் செய்யப்பட்டு சர்வாதிகார பீடத்தில் அமர்த்தப்பட்டவர்.
சர்வ வல்லமை படைத்த ஹெக்டே!
தற்போது நாம் பிரசித்தி வரும் தர்மஸ்தலா கோயில் நிர்வாகியாக இருப்பவரே பாஜகவின் ஆதரவுடன் பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அதாவது வீரேந்திர ஹெக்டே ஆன்மீகவாதி; அதை தொடர்ந்து இவரே அரசியல்வாதி. கொடுங்கரங்களை விரிக்கும் கார்ப்பரேட் முதலாளியும் கூட.
தர்மஸ்தலா கோயில் நிர்வாகத்தின் கீழ் பள்ளிகள், கல்லூரிகள், முதியோர் காப்பகங்கள், மருத்துவமனைகள் என ஒரு சாம்ராஜ்யமாக கட்டமைக்கப்பட்டு செயல்பட்டு வருவதால், இவரே கார்ப்பரேட் முதலாளியாகவும் ஆவார்.
தற்போது எந்தக் கட்டத்திற்கு வளர்ந்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ள தர்மஸ்தலா கோயில் சொத்துக்கள் குறித்து இணையத்தில் தேடியதில் கிடைத்ததை பரிசீலிப்போம்.
பொதுவாகவே கார்ப்பரேட் சாமியார்கள் அரசுக்கு இணையாக பெரும் நிதிகளை கையாண்டு பல்வேறு சமூக வளர்ச்சி திட்டங்களில் மூலதனம் இடுகின்றனர். அதாவது, பள்ளி கல்லூரிகள் மருத்துவமனைகள் உள்ளிட்டவைகளை இவர்களே நடத்துகின்றனர்.
வீரேந்திர ஹெக்டேவால் உருவாக்கப்பட்ட வறுமை ஒழிப்புத் திட்டமான ஸ்ரீ க்ஷேத்ர தர்மஸ்தலா கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம் (SKDRP) 1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது பெல்தங்கடி மாவட்டத்தின் 81 கிராமங்களையும் உள்ளடக்கியது, இதில் 18,000 குடும்பங்கள் அடங்கும். இது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் கிராமப்புற வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு வருவாயும் ஈட்டியுள்ளது. 1995 ஆம் ஆண்டில் SKDRP அதன் சிறந்த சாதனைகளுக்காக FICCI விருதைப் பெற்றது.
1972 ஆம் ஆண்டு தர்மஸ்தலத்தில் ஸ்ரீ ஹெக்கடே ‘சமூக திருமணம்’ என்ற பெயரில் அனைத்து மதங்களும் சாதிகளும் வரவேற்கப்பட்டு நூற்றுக்கணக்கான ஜோடிகள் தங்கள் தனிப்பட்ட மத சடங்குகளின்படி திருமணம் செய்து கொண்டனர். திருமண உடை, மங்களசூத்திரம் மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தம்பதியினரின் திருமண விருந்துக்கான செலவுகள் அனைத்தையும் க்ஷேத்திரமே ஏற்றுக்கொண்டது என்கிறது Jainworld.com
படிக்க: கிரிமினல் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவை பாதுகாக்கும் உச்சநீதிமன்றம்!
தர்மஸ்தலாவில் உள்ள அன்னதான கூடத்தில் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் முதல் அதிகபட்சம் 70 ஆயிரம் பேருக்கு காலை, இரவு என இரு வேளைகளில் உணவு போடப்படுகிறது.
தர்மஸ்தல மஞ்சுநாதேஸ்வரா மருத்துவ அறக்கட்டளையால் ஒரு நவீன TB சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. உடுப்பி மற்றும் ஹாசனில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைகள் பண்டைய நூலின்படி ஆயுர்வேத மருந்துகளை வழங்குகின்றனவாம். நேத்ராவதி நதிக்கரையில் கட்டப்பட்ட இயற்கை சிகிச்சை மருத்துவமனை, காற்று, பூமி, ஆகாயம், நீர் மற்றும் ஒளி ஆகிய ஐந்து கூறுகளை அடிப்படையாகக் கொண்ட அமைப்பில் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையை உருவாக்கியுள்ளதாகவும் பெருமையடிக்கின்றன ஜெயின் ஊடகங்கள் .
மங்களூரில் உள்ள SDM கண் மருத்துவமனை, மிகவும் நவீன அலோபதி கண் சிகிச்சை மையங்களில் ஒன்றாகும். SDM பல் மருத்துவமனை வழக்கமான பல் தேவைகள் மற்றும் வாய்வழி உள்வைப்புகள், பிளவுபட்ட உதடு அறுவை சிகிச்சை மற்றும் பிற பல் அறுவை சிகிச்சைகள் போன்ற சிறப்பு சிகிச்சைகளை வழங்குகிறது.
4 உயர்நிலைப் பள்ளிகள், 12 கல்லூரிகளை நிறுவிய ‘பெருமைக்குரியவர்தான்’ ஹெக்டே. பண்டைய உடற்பயிற்சி முறையான யோகா பயிற்சியைப் பரப்புவதில் ஸ்ரீ ஹெக்டே தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சூரிய நமஸ்கார முகாம்கள் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்படுகின்றன, அங்கு மக்களுக்கு யோகா கற்பிக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் 250 உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது, அவர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தது 100 மாணவர்களுக்கு யோகா கற்பிக்கிறார்கள்.
கோயில்களைப் பாதுகாப்பதற்காக ஸ்ரீ தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா தர்மோத்தனா அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பெரிய கோயில்களை இத்தகைய கார்ப்பரேட் – காவி அதிகார மையங்களாக மாற்றவே இந்து சமய அறநிலையத் துறைச் சட்டத்தை ரத்து செய்ய சொல்கின்றனர் சங்கிகள்.
கிரிமினல்தனத்திற்கான அங்கீகாரமாக தேசிய விருதுகள்!
2015இல் இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியிடம் பத்ம விபூஷண் விருதை வாங்கினார் ஹெக்டே. அடல் பிகாரி வாஜ்பாய் உள்ளிட்டவர்களிடமிருந்தும் கூட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் ஹெக்டே.
தர்மசாலாவின் ‘அதிபர்’ ஹெக்டே மோடி உள்ளிட்ட காவி பாசிஸ்டுகளுடன் மிக நெருக்கமாக இருப்பதோடு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடகாவின் துணை முதல்வர் சிவக்குமார் உள்ளிட்டவர்களோடும் உறவை பராமரிக்கிறார். கர்நாடகத்தை பொருத்தவரையில் இவரை எதிர்த்து குரல் கொடுப்பது கம்யூனிஸ்டுகள் மட்டும்தான். தற்போது காங்கிரசாரும் இணைந்துள்ளனர்.
சர்வ கட்சிகள் கொண்டாடும் ஹெக்டேவை, அரசுக்கு இணையாக ஆதிக்கம் செலுத்தி வரும் கிரிமினலை, கண்ணை மூடிக்கொண்டு துணை போகும் அதிகார வர்க்கத்தை வைத்து முறியடிக்க முடியுமா? அரசின் எந்தத் துறையை நம்பி நீதி கேட்பது? இதற்கு பதில் தெரியாமல் தான் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தவித்து நிற்கின்றன.
பிரச்சனை ஹெக்டேவோ, தர்மசாலாவின் கோவில்கள் மட்டுமோ அல்ல. உண்மையான எதிரிகள் இத்தகைய கார்ப்பரேட் சாமியார்களை வளர்த்து தனக்கு சாதகமாக ஆட்டி படைக்கும் தேசங்கடந்த தரகு முதலாளிகள் தான். மக்களை மதரீதியில் அணி திரட்டி இந்துத்துவாவை திணிக்க நிற்கும் ஆர்எஸ்எஸ் தான் உண்மையான எதிரி. உள்நாட்டில் மட்டுமா எதிரிகள்; பிற்போக்குத்தனங்களை ஊக்குவிப்பதற்காகவே நிதிகளை வாரி வழங்கி, உழைக்கும் மக்களை ஆன்மீக வழியில் திசை திருப்பி நம் நாட்டை கொள்ளையிட்டு வரும் ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளும் தான் நமது முதன்மையான எதிரிகள்.
இத்தகைய உண்மையான எதிரிகளை நாம் இனம் கண்டு மோதி வீழ்த்தாமல், ஆன்மீக கிரிமினல்களின் சாம்ராஜ்யங்களை முறியடிக்க முடியாது. அதாவது கார்ப்பரேட் காவி பாசிசமாக எழுந்துள்ள கூட்டணியை வேரோடு பிடுங்கி எறிய தேவை ஒரு மக்கள் கூட்டணி. பக்தர்கள், நாட்டுப் பற்றாளர்கள், மொழிப் பற்றாளர்கள், உழைக்கும் மக்கள் என அனைத்து தரப்பினரையும் ஒன்று திரட்டும் ஓர் மக்கள் முன்னணி.
- இளமாறன்







கர்நாடகா தர்மஸ்தலா பெண்களை விழுங்கும் ஹெக்டேவின் சாம்ராஜ்யம் !
இந்த கட்டுரை தர்மசாலா உருவானது முதல் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் படுகொலை செய்து புதைக்கப்பட்டது பிச்சைக்காரர்களை மனித உறுப்புகளுக்காக காணாமல் செய்யப்பட்டது ஒரு சாம்ராஜ்ஜியத்தையே கர்நாடகாவில் நடந்த இந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியூட்டர் செய்தியாக வெளிவந்தாலும் உள்ளன இந்த நிலையில் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக இந்த கார்ப்பரேட் சாமியார்களின் சேவைகள் என்பது மடங்கள் ஆலயங்கள் இப்படி நீண்டு கொண்டே போகும் ஜக்கி வாசுதேவ் வேலூர் தங்க கோயில் இது போன்ற கோயில்களின் சாம்ராஜ்யங்களால் கோடிக்கணக்கான மக்களுடைய வருவாயை ஈட்டி பக்தர்களுக்கு சேவை என்ற பெயரில் அன்னதானம் இலவச திருமணம் இலவச உதவிகள் போன்ற செய்யப்பட்டு மக்கள் கவரப்பட்டு ஒரு கார்ப்பரேட் சாமியார்களின் சாம்ராஜ்யமாக இன்றைய பாசிச சூழலில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது இதற்கு நிதி உதவியாக கார்ப்பரேட்டுகள் நேரடியாக மடங்களுக்கும் மடாதிபதிகளுக்கும் வாரி வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர் அதனால்தான் கார்ப்பரேட் மற்றும் மடாதிபதிகளுடைய கூட்டினை வாள் பல முறைகேடுகள் நடைபெறுகிறது முறைகேடுகளை மூடி மறைப்பதற்கும் தன்னுடைய கிரிமினல் மடாதிபதி ஹெக்டே பல குற்றங்களை செய்து உள்ளூர் காவல் நிலையம் முதல் அதிகாரிகள் வரை 80க்கும் மேற்பட்ட கிராமங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்து ஒரு பேராசு சுயராஜ்யம் நடத்தியுள்ளான் என இந்த கட்டுரை அருமையாக பல விவரங்களோடு விளக்கப்படுகிறது கட்டு ஆசிரியர் தோழர் இளமாறன் அவர்களுக்கு நன்றி
தர்மஸ்தலா: பெண்களை விழுங்கும் ஹெக்டேவின் பேரரசு!
இக்கட்டுரை பாஜகவின் காவி பாசிசம் பெண்களை எந்த அளவுக்கு பார்க்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறது இதை மக்கள் மத்தியில் குறிப்பாக பெண்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.
பெண்கள் மீதான பாலியல் சுரண்டல் ஒடுக்குமுறை கொலை வன்கொடுமை போன்ற செயல்கங்களுக்கு அடிப்படையாக இருப்பது பார்ப்பனிய இந்துத்துவா சித்தாந்தம் கொண்ட கொண்ட கார்ப்பரேட் சாமியார்கள், மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கான கருப்பு பணத்தை பாதுகாப்பது போன்ற செயல்களுக்கும் இந்த ஆசிரமங்கள் மடாலயங்கள் செயல்பட்டு வருகிறது, இந்த ஆசிரமங்களிலும் மடாலயங்களிலும் சொந்தமாக சுடுகாடு வைக்கும் அளவுக்கு மிகவும் மோசமாக நிலையில் இருக்கிறது, அங்கு நடக்கும் விஷயத்தை வெளியில் சொற்பொழிவு சொல்பவர்களை கொள்வதும் நடக்கிறது தமிழ்நாட்டில் ஜக்கி வாசுதேவின் மடம் இதை போன்ற சூழலே இருப்பதை பார்க்க முடிகிறது.
மேலும்கடந்த 2019 மற்றும் 2021 க்கு இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் நாட்டில் 13.13 லட்சத்திற்கும் அதிகமான சிறுமிகளும் பெண்களும் காணாமல் போயுள்ளனர், இதில் மத்தியப் பிரதேசம் அதிகபட்சமாக கிட்டத்தட்ட இரண்டு லட்சமாகவும், அதைத் தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் காணாமல் போயுள்ளனர்.
2023 -ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய உள்துறை அமைச்சக தரவுகளின்படி, 2019 முதல் 2021 வரை நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட 10,61,648 பெண்களும், அந்த வயதுக்குட்பட்ட 2,51,430 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.
இந்தத் தரவுகளை தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) தொகுத்துள்ளது.
கட்டூரை சிறப்பு.
ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் கூட்டுக் களவாணிகளாக உள்ளபோது பாதிக்கப்பட்ட மக்கள் யாரிடம் நீதி கேட்பது மக்களின் நிலை
பரிதாபத்திற்குரியதாக உள்ளது. மக்களைத் திரட்டி மக்கள் முன்னணி மூலம் போராட்டங்களை கட்டி அமைப்பது இதற்கான தீர்வு என்பது சரியானது!