அன்பார்ந்த வாசகர்களே!

கடந்த 39 ஆண்டுகளாக அச்சு ஊடகமாக செயல்பட்டு வரும் மார்க்சிய லெனினிய அரசியல் ஏடான புதிய ஜனநாயகம் தற்போது அன்றாடம் நிகழும் சர்வதேச, தேசிய பிரச்சினைகளைப் பற்றிய கட்டுரைகளை புதிய ஜனநாயகம் தினசரி முகநூல் பக்கத்திலும் நமது மக்கள் அதிகாரம் இணையதளத்தில் வெளியீடு செய்கிறது. புதிய ஜனநாயகம் இதழையும் மக்கள் அதிகாரம் இணைய தளத்தையும் ஆதரித்து வரும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் தொடர்ந்து இந்த முயற்சிக்கு ஆதரவை அளிக்கக் கோருகிறோம்.

தோழமையுடன்,

ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்

000

லக மேலாதிக்க போட்டியில் சரிந்துக் கொண்டுள்ள அமெரிக்கா தன்னை நிலைநாட்டிக் கொள்வதற்கு உலகில் உள்ள காலனி, அரைக்காலனி, நவீன காலனி, மற்றும் மறுகாலனிய நாடுகளில் உள்ள மக்களின் மீது அந்தந்த பிராந்தியத்தில் உள்ள பிராந்திய வல்லரசுகளின் தாக்குதல்களை ஆதரித்து வருகிறது.

நேட்டோவை (NATO) பயன்படுத்தி மீண்டும் உலகில் கம்யூனிசம் பரவாத அளவிற்கு தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. முன்னாள் சோசலிச நாடுகளாகவும், இந்நாளில் ஏகாதிபத்திய மற்றும் நவீன ஏகாதிபத்தியமாக சீரழிந்து போயுள்ள ரசியா, சீனா ஆகியவற்றின் ஆதிக்கம்  உலகில் வளர்ந்து விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் செயல்படுகிறது அமெரிக்க மேல்நிலை வல்லரசு.

மத்திய கிழக்கு நாடுகளில் தனது செல்வாக்கை நிலைநாட்டிக் கொள்வதற்கு கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி வருகின்ற அமெரிக்கா, அந்த வகையில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடந்து வருகின்ற இஸ்ரேலின் யூத-ஜியோனிச இன அழிப்பு போரை ஆதரித்து பல்வேறு வகைகளில் உதவி புரிந்து வருகிறது.

2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7–இல் துவங்கிய பாலஸ்தீனத்தின் பகுதியான காஸாவின் மீதான இஸ்ரேலின் இன அழிப்பானது ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி இதுவரை 14,500 குழந்தைகள் 8,400 பெண்கள் மற்றும் 141 பத்திரிக்கையாளர்கள் உட்பட 34,388-க்கும் அதிகமான பாலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 77,437 பேர் மேல் காயமடைந்துள்ளனர். 8,000-த்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காணாமல் போயுள்ளனர்.

பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக நடத்தப்படும் இவ்விதமான கொடூரமான இன அழிப்பு போரை எதிர்த்து சென்ற ஆண்டு நவம்பர் முதல் உலகம் முழுவதிலும் கடும் எதிர்ப்புகள் உருவாகி ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் வீதிகளில் துவங்கி காலனி, அரைக்காலனி, நவீன காலனி, மற்றும் மறுகாலனிய நாடுகளில் உள்ள  வீதிகள் வரை போராட்டம் பற்றி படர்ந்தது.

சமகாலத்தில் நடந்து வரும் இத்தகைய பயங்கரவாத தாக்குதலை கண்டித்து உலகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள உழைக்கின்ற மக்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் குட்டி முதலாளித்துவ அறிவுத்துறையினர் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து இஸ்ரேலுக்கு எதிராக போராடி வருவது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

ஐநாவின் சமாதானங்கள், ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் ஒரு சிலவற்றின் எச்சரிக்கை, பல்வேறு நாடுகளில் நடந்து வரும் போராட்டங்கள் போன்ற எதையும் பற்றி கவலைப்படாத இஸ்ரேலின் பிரதமரான பாசிச பயங்கரவாதி நெதன்யாகு, ஹமாசை அழித்து ஒழிப்பது என்ற பெயரில் பாலஸ்தீனத்தை முற்றாக தனது காலனியாக மாற்றுவதற்கு முயற்சித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:

இந்தப் போருக்கு எதிராக இஸ்ரேலில் உள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள் போராடுகிறார்கள் என்பது ஒரு புறமிருக்க தற்போது வரை இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் இன அழிப்பு-பயங்கரவாத போருக்கு எதிராக இரண்டாவது கட்டமாக அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களின் போராட்டம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. 

அமெரிக்காவின் சிகாகோ, கலிபோர்னியா, நியூயார்க், பிரான்சிஸ்கோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காசா மீதான இனப்படுகொலைப் போரை நிறுத்தக்கோரி பாலஸ்தீனத்தை ஆதரித்து அமெரிக்க மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கும் பற்றிப் படர்ந்துள்ளது. அமெரிக்காவிற்கு வெளியில் ஐரோப்பாவின் பகுதிகளுக்கும் பரவத் துவங்கியுள்ளது.

உலகின் கொடிய பயங்கரவாதியான அமெரிக்காவில் அந்த நாட்டு அரசாங்கத்திற்கு எதிராகவும், பாலஸ்தீனம் காசாவில் இன அழிப்பு போரை நடத்தி வருகின்ற இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிராகவும், அமெரிக்காவில் உள்ள மாணவர்கள்-இளைஞர்கள் மற்றும் பாட்டாளி வர்க்கம் போராடி வருவது புதிய நம்பிக்கையாக உருவாகியுள்ளது.

”ஒடுக்கப்படும் நாடுகளைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் போராடுவதை காட்டிலும், ஒடுக்குகின்ற நாட்டைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கம், ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடுவது தான் ஜனநாயகமானது மற்றும் முன்னிபந்தனையானது” என்று பாட்டாளி வர்க்க ஆசான்கள் உலகம் முழுவதுமுள்ள பாட்டாளிகளுக்கு வழிகாட்டியுள்ளனர்.

கடந்த இருநூறு நாட்களுக்கு மேலாக பாலஸ்தீன மக்களின் மீது ஒரு இன அழிப்பு யுத்தத்தையும் நடத்தி பல உயிர்களை பலியிட்டும், பல்வேறு விதமான கொடுமைகளை உருவாக்கிக் கொண்டும், உலக பொருளாதாரத்தில் ஒரு பாதிப்பையும் உருவாக்கியுள்ள, இஸ்ரேலை எதிர்த்து நடத்தப்படும் இத்தகைய போராட்டங்களை ஆதரித்து நாமும் ஒன்றிணைவோம். சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையை கட்டியமைப்போம். இஸ்ரேலின் இன அழிப்பு போருக்கு துணை போகும் இந்தியா மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் மட்டுமின்றி, மீண்டும் உயிர் பெற்று எழுவதற்கு முயற்சித்து வரும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் கொட்டத்தையும் சேர்த்தே அடக்குவோம்.

  • மணிமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here