எழுத்துகளில் கொஞ்சம் மையைத் தடவி பேப்பரில் அச்சிட்டு வெளியிட்டால் அதுதான் செய்திப் பத்திரிக்கை. இந்த செய்திப் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் அனைத்தும் உண்மையானவை என்று புரிந்துக் கொள்ளும் வகையிலேயே இந்தியாவின் ’ஜனநாயக உணர்வு’ இருந்து வருகின்றது என்பதுதான் டிஜிட்டல் ஊடகம் பழக்கத்திற்கு வருவதற்கு முன்னாள் இருந்த நிலைமையாகும். இந்த நிலைமையானது டிஜிட்டல் ஊடகம் வந்த பிறகு பல மடங்கு அதிகரித்துள்ளது.
தனது பத்திரிகைகளின் முகப்பில் ’நடுநிலை நாளேடு’ என்ற பெயர் பொறித்துக் கொள்வதையும், ’உண்மைகளை உள்ளதுபடியே கூறுகின்ற நாளேடு’ என்று பெயரைக் பொறித்துக் கொள்வதையும் கண்டு உண்மையாகவே இந்த செய்தித்தாள்கள் நடந்த செய்திகளை அப்படியே மக்களுக்கு தெரிவிக்கின்றன என்று தான் மக்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் உள்ள மைய நீரோட்ட செய்திப் பத்திரிகைகளானாலும் சரி! மாநில அளவில் வெளிவருக்கின்ற செய்திப் பத்திரிகைகளானாலும் சரி! அவை மிகப்பெரிய பண மூட்டைகளின் பின்னணியில்தான் இயங்குகிறது என்பதால் அந்தப் பண மூட்டைக்கு ஒரு வர்க்கத் தன்மை உள்ளது என்பதை நாம் தான் தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டியுள்ளது.
பரபரப்பான செய்திகள் தேவை என்ற கண்ணோட்டத்தில் ஒன்றுக்கும் உதவாத உப்புசப்பில்லாத, வெறுத்து ஒதுக்க வேண்டிய செய்திகளையும், வெறுத்து ஒதுக்க வேண்டிய நபர்களைப் பற்றிய அலம்பல்களையும் இப்படிப்பட்ட செய்தி ஊடகங்கள் டிஜிட்டல் யுகத்திலும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.
நாடு முழுவதும் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதம் கொடூரமாக தலைவிரித்தாடுகின்ற இந்த காலகட்டத்தில் அதனால் கடுமையாக பாதிக்கப்படும் பெரும்பான்மை மக்களின் நலனிலிருந்து செய்திகளை வெளியிடுவதில்லை. அதாவது விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு குறு தொழில் முனைவர்கள் மற்றும் இந்த நாட்டை பாதுகாக்க வேண்டும் என்று போராடுகின்ற பல்வேறு சமூக செயல்பாட்டாளர்கள், புரட்சிகர, ஜனநாயக சக்திகள் போன்றவர்களின் மீது தொடுக்கப்படுகின்ற அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகளை பற்றி இத்தகைய ஊடகங்கள் (விதிவிலக்கானவை தவிர) வாயை திறப்பதில்லை. அவர்கள் நடத்தும் போராட்டச் செய்திகளை வெளியிடுவதில்லை.
நாம் பாசிசத்தை எதிர்த்து ஐக்கிய முன்னணி கட்டுவோம் என்ற கண்ணோட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது ஊடகங்களையும் பாசிசத்திற்கு எதிராக திரட்ட முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் ஊடகங்களின் நிலைமை பாசிசத்தை நேரடியாக ஆதரிக்காவிட்டாலும் பாசிச உளவியல் உருவாக்குகின்ற தனிநபர்வாதம், தன்னை மட்டும் பிரபலப்படுத்திக் கொள்வது, தனது கருத்துகளே சரியானது என்று அடித்துப் பேசுவது, பிறரது கருத்துகளுக்கு சிறிதும் மதிப்பளிக்காமல் இருப்பது போன்ற குறைந்தபட்ச ஜனநாயகமற்ற பாசிச ஆதரவு நடவடிக்கைகளே தலைவிரித்தாடுகிறது.
அச்சடித்த செய்தி மீடியாக்கள் (Print media) படிப்படியாக குறைந்து வருகிறது என்றும், அதற்கு பதிலாக காட்சி ஊடகங்கள் (digital media) அதாவது யூடியூப் போன்ற பல்வேறு விதமான டிஜிட்டல் ஊடகங்கள் பெருகி வருகிறது என்றும், இதனால் மக்களிடம் நேரடியாக சென்றடைவதற்கு இந்த ஊடகங்கள் உதவும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட தருணத்தில் முக்கியமான எதிரி யார்/ முக்கியமான பிரச்சனை என்ன என்பதை பற்றி இத்தகைய யூடியூப் நடத்துகின்ற தனிநபர்களின் வர்க்கப் பார்வையும், கண்ணோட்டமும் தான் தீர்மானிக்கின்றது.
எடுத்துக்காட்டாக பார்ப்பன கழிசடை நடிகையான கஸ்தூரி அவ்வப்போது அபத்தமாக பேசுவதும், அது விமர்சிக்கப்படுவதும் நடக்கிறது. அந்த கழிசடை திராவிட இயக்கங்களை சேர்ந்தவர்களை ’திராவிடியா’ என்று இழிவாக கொச்சைப்படுத்துவதும், அவதூறு செய்வதும் நடக்கின்ற போது இவரைச் சுற்றியே செய்திகள் பின்னி பின்னி எடுக்கப்படுகின்றன.
படிக்க: ஆஸ்திரேலியாவில் சமூக வலைதள பயன்பாட்டுக்கு தடை! ’கருத்துரிமைக் காவலன்’ எலான் மஸ்க் எரிச்சல்!
அவர் தலைமறைவாக இருக்கின்றார்; கைது செய்யப்பட்டுள்ளார்; சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்; மீண்டும் ஜாமினில் வெளிவந்துள்ளார்; மீண்டும் திமிராக பேசுகின்றார் என்பதே கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சமூக ஊடகங்களில் சுற்றி சுற்றி வருகிறது.
அதுபோல சினிமா நடிகர் சூர்யா நடித்த கங்குவா படம் பார்ப்பன பாசிசத்தை எதிர்த்த மக்கள் பிரச்சனையை முன்வைத்த திரைப்படம் என்பதைப் போல சித்தரிப்பதும், அதன் இயக்குனர் முன்னர் ’தரமான மசாலாப்’ படங்களை எடுத்தார் என்ற ஒரே காரணத்திற்காக இந்த படத்தையும் ப்ரொமோட் செய்ய வேண்டும் என்று ஒரு தரப்பினரும், இதில் ஒன்றுமே இல்லை ஊற்றிக் கொண்டது என்பதை பற்றி மற்றொரு தரப்பும், இதனால் மனமடைந்து சூர்யா மும்பைக்கு ஓடிவிட்டார் என்றெல்லாம் செய்திகளை பரப்பி இதுதான் முக்கியமான செய்தி என்பதைப் போல கருத்துருவாக்கம் செய்கின்றனர்.
அதேபோல ஏ ஆர் ரகுமான் தனது மனைவியை விவாகரத்து செய்தது பற்றியும் அவர் ஏற்கனவே சின்ன வீடு வைத்திருந்தார் என்று கிசுகிசு பாணியில் தோண்டித் துருவி அதுவே தேசிய பிரச்சனை என்பதைப் போல சமூக ஊடகங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
அதுபோல கரூரைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி யோகஸ்ரீ விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியரில் கலக்கினார்; பிக்பாஸ் தொகுப்பாளராக விஜய் சேதுபதி கமலைவிட நன்றாக நடத்துகிறார்; சின்னத் திரை நடிகை கயல் தன் மக்னுக்கு சாதி சான்றிதழ் தராமல் சேர்த்துள்ளார்; இந்த வாரத்தில் விவாகரத்துக் கோரிய பிரபலங்கள்; கிரிக்கெட்டில் இந்தியா தொடர் தோல்வி போன்ற சமூக அக்கறையுள்ள செய்திகளை வெளியிட்டு ’மக்கள் சேவை’ செய்கின்றனர்.
படிக்க: கல்வி தொலைக்காட்சிக்குள் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ்!
யூடியூபுகள், சமூக வலைதளங்கள் போன்றவை அனைத்தும் நடுநிலையானது என்பதே அப்பட்டமான பித்தலாட்டமாகும். பாசிச பாஜக லட்சக்கணக்கானவர்களை பணம் கொடுத்து உலாவவிட்டுள்ளது. போலிச் செய்திகளை உருவாக்குவது முதல் பாசிச ஆதரவு செய்திகளை பரப்புவது வரை எட்டு நிமிடத்தில் நாடு முழுவதும் தனது கருத்துக்களை பரப்பும் வேலையைச் செய்கிறது. அதே சமயம் பாசிச பாஜகவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்; அதன் பாசிச நடவடிக்கைகளை அம்பலப்படுத்துகின்றோம் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் பெரும்பான்மை மக்கள் பக்கம் நின்று பேசாமல், திமுகவிற்கு அல்லது மாநில கட்சிகளுக்கு ஆதரவாக பேசுவது அல்லது மக்களிடம் நேரடியாக தொடர்பில்லாத அறிவுஜீவிகளை உயர்த்தி பிடித்துக் கொண்டு தொங்குவது என்று செயல்படுகின்றன.
ஒரு பக்கம் பண மூட்டைகளின் பிடியில் உள்ள மைய நீரோட்ட, மாநில அச்சு செய்தி மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள், மற்றொருபுறம் குட்டி சமஸ்தானங்களை நடத்திக் கொண்டிருக்கும் குறைந்தபட்சம் 1 லட்சத்திலிருந்து 5 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ள சமூக ஊடகங்கள் இவை இரண்டும் குறிப்பிட்ட தருணத்தில் முக்கியமான பிரச்சனை என்ன என்பதை பற்றி அவர்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானிக்கிறார்களே ஒழிய நாட்டு நடப்புகளில் இருந்து அல்ல!
கார்ப்பரேட் காவி பாசிச அபாயத்தின் பற்றி எரிகின்ற பிரச்சனைகளைப் பற்றியோ; மணிப்பூரில் மீண்டும் உருவாகியுள்ள கலவரம் பற்றியோ; காஷ்மீரில் நடத்தப்பட்ட தேர்தலின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட உமர் அப்துல்லாவை கவிழ்க்க முயற்சிப்பது பற்றியோ; மகாராஷ்டிரா மற்றும் சில மாநிலங்களில் மீண்டும் பாசிச பாஜக தேர்தலில் அதிகாரத்தை கைப்பற்றி இருப்பது பற்றியோ; அதானி பல்லாயிரம் கோடி லஞ்சம் கொடுத்து இந்தியாவின் பொதுத் துறை நிறுவனங்களையும் கனிம வளங்களையும் சூறையாடுவது பற்றியோ எதையும் குறிப்பிடுவதில்லை. மக்களையும், ’சொல்லிக் கொள்ளப்படும்’ ஜனநாயகத்தையும் பாதிக்கும் இத்த்கைய முக்கியமான பிரச்சனைகளை பற்றி கவலைப்படுவதில்லை.
இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போதே ஆர்எஸ்எஸ் மாநாடு நடத்துவது; இந்து மதவெறி அமைப்புகள் பகிரங்கமாகவே ஆயுதப் பயிற்சி எடுப்பது; ரவுடிகள், பொறுக்கிகள், குண்டர்களை தனது அமைப்புகளில் இணைத்துக் கொண்டு தலைவர்களாக உருவாக்குவது, நாட்டு மக்களுக்கு பகிரங்கமான சவால் விடுக்கப்படுவது போன்றவற்றை இத்தகைய ஊடகங்கள் கண்டுக் கொள்வதில்லை.
இதனால்தான் சொல்கின்றோம், ஊடக மாமாக்கள் செய்திகளை உருவாக்குவது மட்டுமின்றி அதை வைத்து வயிற்றுப் பிழைப்புக்காக நாட்டு மக்களுக்கும் உண்மையான பிரச்சனைகளுக்கும் எதிராக செயல்படுகிறார்கள் என்பதுதான் மிகவும் அபாயகாரமான, எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டிய முக்கியமான சிக்கலாகும். அதனால் இவர்களின் ஊடக தர்மத்தைக் கண்டு ஏமாறாதீர்கள் என்றும் எச்சரிக்கிறோம்.
- பார்த்தசாரதி.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி
ஊடகங்கள் யார் கையில் இருக்கிறது, அது யாருக்காக செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
ஜனநாயகத்தின் பாதுகாவலன் பத்திரிக்கை செய்தி ஊடகங்கள் என்பது ஏமாற்று என்பதை உணர்த்தம் விதமாக கட்டுரை எளிமையாக உள்ளது.