கல்வி தொலைக்காட்சிக்குள் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ்!

தீவிர ஆர்.எஸ்.எஸ்காராக அறியப்பட்டுள்ள சாணக்கியா யூ டுயுப் சேனலின் உரிமையாளரான ரங்கராஜ் பாண்டேயின் கூட்டாளியான மணிகண்ட பூபதி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது

0
180

கல்வி தொலைக்காட்சிக்குள் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ் ! 


மிழ்நாடு அரசு நிர்வாகத்திற்குள் ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கம் எப்படி எல்லாம் நுழைந்து இடம் பிடிக்கிறது என்பதற்கு இன்னும் ஒரு சாட்சியாக கல்வித் தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பு ஆர்.எஸ்.எஸ்காரர் கைகளுக்கு போயுள்ளது கவலையுடன் விவாதிக்கப்படுகிறது.

2019 ஆகஸ்டில் அன்றைய அதிமுக ஆட்சியில் கல்வி தொலைக்காட்சி ஒன்று தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களுக்காக தோற்றுவிக்கப்பட்டது. இந்த தொலைகாட்சியானது கொரோனா காலகட்டத்தில் பள்ளிக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் இதில் அவரவர்களுக்கு உரிய பாடதிட்டங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் போட்டித் தேர்வுக்கு மாணவர்கள் தயாராவது தொடங்கி தன்நம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சிகளும் இடம் பெற்று வருகின்றது.

தற்போதைய திமுக அரசு கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமைச் செயல் அதிகாரியை (CEO) நியமிக்க  முடிவு செய்து, அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை 5 முதல் 8 ஆண்டுகள் நடத்திய முன் அனுபவம் மிக்க ஊடகவியல் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் CEO பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் மே 28 ஆம் தேதி அறிவித்தது.

இதற்கு தமிழ் புலமை, தொடர்பு திறன், கணினிகளை கையாளும் திறன், நடைமுறைக்கேற்ப அனைவரும் விரும்பும் வகையிலான நிகழ்ச்சிகளை வடிவமைக்கும் திறன், நிர்வாகத்திறன் ஆகியன கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பொறுப்புக்கு எவ்வளவோ தகுதியான பலர் இருக்க, தீவிர ஆர்.எஸ்.எஸ்காராக அறியப்பட்டுள்ள சாணக்கியா யூ டுயுப் சேனலின் உரிமையாளரான ரங்கராஜ் பாண்டேயின் கூட்டாளியான மணிகண்ட பூபதி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது அரசியல், சமூக தளத்தில் மட்டுமின்றி ஊடகத் துறையிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மணிகண்ட பூபதி

மணிகண்ட பூபதி ஊடகத் துறையில் தினமலர் இதழில் ரங்கராஜ் பாண்டேவுடன் வேலை செய்தவராவார். பிறகு அவர் அங்கிருந்து தந்தி டிவியில் வேலைக்கு சேர்ந்தார்.

ரங்கராஜ் பாண்டேவுக்கு தினமலரில் பொய் செய்தி தந்ததால் ஒரு நெருக்கடி ஏற்பட்டது. காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த இளம்பெண் செங்கொடி என்பவர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை மறுக்கப்பட்டு நீண்ட நெடுங்காலமாக சிறையில் வாடும் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த உயிர் தியாகம் பெரும் நெகிழ்ச்சியையும், அனுதாபத்தையும் தமிழகத்தில் உருவாக்கிய நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டது காதல் தோல்வியால் என தினமலருக்கு நியூஸ் தந்தார் ரங்கராஜ் பாண்டே. பின்னர் விசாரணையில் அது பொய் செய்தி என தெரிய வந்ததில் நிர்வாகம் ரங்கராஜ் பாண்டேவுக்கு எந்த அசைன்மெண்டும் தராமல் மூலையில் உட்கார வைத்துவிட்டது.

ரங்கராஜ் பாண்டே

இந்த நிலையில் தினமலரில் முடங்கித் தவித்த பாண்டேவை தினத்தந்தி தொலைக்காட்சிக்கு அழைத்து வந்தவர் இந்த பூபதி தான்! பின்னர் இவர் புதிய தலைமுறையிலும் சில காலம் வேலை செய்தார். பாண்டே தினத்தந்தியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு தனியாக சாணக்கியா யூ டியூப் சேனல் தொடங்கிய போது, அதில் ஒரு பங்குதாராக பூபதியும் இணைந்து கொண்டார். இவர்கள் இருவருமே ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தத்தில் அழுத்தமான நம்பிக்கை உள்ளவர்களாவர். சாணக்கியா யூ ட்யுப் சேனலில் ஆர்.எஸ்.எஸ்சின் அரசியல் அஜந்தாக்களைத் தான் இவர்கள் செய்து வந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே!

கல்வி தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளான நிலையில் தற்போது ஏன் தலைமைச் செயல் அதிகாரி பதவி உருவாக்கப்பட வேண்டும் எனத் தெரியவில்லை. ஒரு நிறுவனத்தின் கொள்கை வழிப் போக்கை தீர்மானிப்பவர் அதன் சி.இ.ஓ என சொல்லப்படும் தலைமைச் செயல் அதிகாரி தான்.


இதையும் படியுங்கள்: மருத்துவக் கல்வியிலும் இந்துத்துவ சித்தாந்தமா..?


 

தமிழகத்தில் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பிலான ஒரு தொலைக் காட்சிக்கு இது போன்ற நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது இளம் மாணவர்கள் நெஞ்சில் நஞ்சை விதைப்பதாக ஆகிவிடாதா..?” என்ற கேள்வி பல தரப்பிலும் எழுப்பப்படுகிறது.

இந்தப் பதவிக்கு மொத்தம் எழுபது பேர் விண்ணப்பித்தனர் என்றும், அதில் 16 பேர் தேர்வாகி முதல் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டதில் 11 பேர் பங்கேற்று உள்ளனர். பிறகு கடைசி நேர்காணலில்  மூன்றே மூன்று பேர் மட்டுமே அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அபிநயா, தேவப் பிரியன், பூபதி ஆகிய மூவரில் பூபதி மட்டும் தேர்வாகி உள்ளார். இதெல்லாமே ஒப்புக்காக செய்யப்பட்ட நடவடிக்கைகள் என்பதைப் போல சொல்லப்படுகிறது. பூபதியை தேர்வு செய்ய வேண்டும் என்பது முன்பே தீர்மானிக்கப்பட்டது எனவும், இதில் தமிழக கவர்னர் ஆர்வம் காட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இதே பதவிக்கு விண்ணப்பித்து இருந்த சுசி திருஞானம் என்ற மூத்த ஊடகவியலாளர் முதல் அமைச்சருக்கு ஒரு திறந்த மடல் என பகிரங்க கடிதம் ஒன்றை ஊடகங்களில் வெளியிட்டு உள்ளார்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கான ஜீனியஸ் புன்னகை, கிட்ஸ் புன்னகை கல்வி மாத இதழ்களின் ஆசிரியரும், சன் நியூஸ் தொலைக்காட்சியின் முன்னாள் Channel Head டுமாக இருந்தவர் திருஞானம். இன்றைய பல பிரபல பத்திரிகையாளர்களுக்கு குருவாகத் திகழும் இவர்,

முதல்வருக்கு எழுதியுள்ள திறந்த மடலில் கூறியிருப்பதாவது :

“தமிழ் மக்களிடையே மதப்பிரிவினைவாதத்தை தூண்டிவிட்டு அம்பலப்பட்டு நிற்கும் ‘சங்கி’ பாண்டேவின் சாணக்யா டிவி யின் பங்குதாரரும் மதப்பிரிவினைவாத கோட்பாட்டாளருமான மணிகண்ட பூபதி என்பவர், தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் CEO வாக நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூத்த பத்திரிகையாளர் சுசி.திருஞானம்

தன்னம்பிக்கையை விதைக்கும் ஆக்கபூர்வ ஊடகவியலாளர்’ என்று டாக்டர் கலாம் அவர்களால் பாராட்டப்பட்ட நான் கல்வி தொலைக்காட்சியின் CEO பொறுப்புக்கு விண்ணப்பத்திருந்தபோதும், என்னை நேர்காணலுக்குக்கூட அழைக்காமல் திட்டமிட்டு புறக்கணித்ததன் காரணம் இதுதானா?

விஜய் டிவி நியூஸ், சன் நியூஸ், பாலிமர் நியூஸ், நியூஸ் ஜெ உள்ளிட்ட முக்கிய தொலைக்காட்சிகளில் 10 ஆண்டு காலம் தலைமைப் பொறுப்பு அனுபவமும், தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் உலகத் தரமான ஜீனியஸ் புன்னகை, கிட்ஸ் புன்னகை கல்வி மாத இதழ்களுக்கு 15 ஆண்டு காலம் ஆசிரியர் பணி அனுபவமும் கொண்ட எனது விண்ணப்பத்தைப் புறக்கணித்து, நேர்காணலுக்குக்கூட அழைக்காமல் தவிர்த்ததன் காரணம் இதுதானா?

தமிழ்நாட்டின் இளைய தலைமுறையினரிடையே அறிவியல் பார்வையையும் தன்னம்பிக்கையையும் விதைப்பதில் மவுனமான பெரும் பங்களிப்பை நான் செய்திருப்பதை தலைமைச் செயலரும், முதல்வரின் முதன்மைச் செயலாளரும் நன்கறிவார்கள்.

சன் நியூஸ், நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சிகளில் எனது ‘சந்திப்போம் சிந்திப்போம்’ நிகழ்ச்சியும், ‘நம்பிக்கை’ நிகழ்ச்சியும் மாணவர்களின் உயர்கல்வி – வாழ்க்கைப்பணி தேர்வுக்கான முன்னோடி நிகழ்ச்சிகள் என்பதை முன்னணி ஊடகவியலாளர்கள் அனைவரும் அறிவார்கள்.

சமத்துவம், சமூக நீதி தத்துவங்களில் புடம்போடப்பட்ட என்னை திட்டமிட்டு தவிர்த்து விட்டு, கோமிய கோட்பாட்டாளரை கல்வி டிவி யின் தலைமைப் பொறுப்பில் நியமித்தது யார்? தமிழக அரசின் கல்வி சார்ந்த முடிவுகள் நாக்பூரில் இருந்து எடுக்கப்படுகின்றனவா?

இதற்காகவா தமிழ்நாட்டின் ஆக்கபூர்வ ஊடகவியலாளர்கள் இரவுபகலாக உழைத்தோம்? ‘திராவிட மாடல் அரசு’ என்ற கம்பீரமான தமிழக அரசு ஓராண்டு சாதனை மலரில், “நான் முதல்வன் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் தொடங்கி வைத்த நாள் தமிழ்நாட்டின் பொன்னாள்” என்று எத்தனை நம்பிக்கையோடு எழுதினேன். அதற்குள் எத்தனை மாற்றங்கள் வெட்கம் தான் மிஞ்சுகிறது.

கல்வி தொலைக் காட்சியில் சி.இ.ஓ பொறுப்பு வேண்டும் என்ற சுயநலத்தில் நான் இதனை எழுதவில்லை. குறைந்தபட்ச அறிவியல் நோக்கும், சமூக அக்கறையும் கொண்ட வேறு யாரையாவது அங்கு நியமியுங்கள். இளைய தலைமுறையின் மனங்களில் நச்சு விதையைத் தூவும் கோமியக் கோட்பாட்டாளர்கள் அங்கு வேண்டவே வேண்டாம்”

என திருஞானம் குறிப்பிட்டு உள்ளார்.

என்னதான் நடந்து கொண்டிருக்கிறது தமிழக அரசியலில் என்பது விளங்கவே இல்லை.

அஜிதகேச கம்பளன்

நன்றி..

அறம் இணைய இதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here