கேள்வி: புதிய ஜனநாயகம் ஜனவரி இதழில் தலையங்க கட்டுரையில் பெண்கள் மீதான அனைத்து வகையான தாக்குதல்களுக்கும் முடிவு கட்ட தற்காலிக தீர்வாக ஆயுதம் ஏந்தும் உரிமை வேண்டும் என எழுதப்பட்டுள்ளது. இது சரிதானா? இதுவரை இப்படி எங்கும் எழுதப்பட்டதில்லையே?!

செல்வா, சென்னை.

பதில்: இந்தியாவில் புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி தற்போது நிலவி வருகின்ற பெரும்பான்மை மக்களுக்கு எதிரான அரசியல், சமூக கட்டமைப்பை அடித்து நொறுக்குவது என்ற லட்சியத்தை முன்வைத்து செயல்பட்டு வரும் புதிய ஜனநாயகம் இதழானது ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து முறியடிப்பதற்கு, ”அனைத்து மக்களுக்கும் ஆயுதம் ஏந்தும் உரிமை இருக்க வேண்டும்” என்பதை பகிரங்கமாகவே முன்வைக்கின்றது.

கம்யூனிஸ்டுகள் தனது லட்சியத்தையும், கொள்கையையும் மறைத்துக் கொண்டு பேசுவதில்லை. இந்த அடிப்படையில் பெண்கள் மீதான அனைத்து வகையான தாக்குதல்களுக்கும் முடிவு கட்ட தற்காலிக தீர்வாக ஆயுதம் வேண்டும் உரிமை வேண்டும் என எழுதப்பட்டுள்ளது சரிதான்.

இன்னமும் அழுத்தமாக சொல்வதென்றால், நிலவுகின்ற அரசு கட்டமைப்பும் சரி! சமூகமும் சரி! பெண்களுக்கு எதிரான பல்வேறு கிரிமினல் குற்றச் செயல்களை அது குடும்ப வன்முறை என்பதில் துவங்கி பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் வரை ஆணாதிக்கத்தின் வழியாகவும், நிலப்பிரபுத்துவ சமூகத்தின் வழியாகவும் ஏவி விடுகிறது.

இத்தகைய அடக்குமுறைகளுக்கும், ஒடுக்கு முறைகளுக்கும் எதிராக மக்கள் தொகையில் சரி பாதி மற்றும் அதற்கு மேலாகவே உள்ள பெண்கள் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கும், சமூக மாற்றத்தில் முன்னணியில் நின்று போராடுவதற்கும் ஆயுதம் என்னும் உரிமை அவர்களுக்கு உண்டு.

நீண்டகால அடிப்படையில் பெண்களை இவ்வாறு தயார்படுத்துகின்ற போதே உடனடி தீர்வாகவும், தற்காலிகமான தீர்வாகவும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துவதற்கு எதிர்த்துப் போராடுவதற்கு கையில் மரபு வழி ஆயுதங்கள் வைத்துக் கொள்வது; தற்காப்பு பயிற்சிகளை கற்றுக் கொள்வது’ உடலியல் ரீதியாக ஆண்களுக்கு இணையாக தன்னை தயார்படுத்திக்கொள்வது போன்றவை மட்டுமின்றி, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை களுக்கு எதிராக பெண்கள் எதிர்வினையாற்றுவது என்ற அடிப்படையில் மிளகாய்த்தூள் ஸ்பிரே வைத்துக் கொள்ளலாம், பல நாடுகளில் பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்காக பெப்பர் ஸ்பிரே, Electric Shock Gun உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்துகிறார்கள். இதுவும் ஒரு வகையான ஆயுதமே. இவை அனைத்தையும் உள்ளடக்கியது தான் இந்த தற்காப்பு ஆயுதம் ஏந்தும் உரிமை.

பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை பெண்கள் மட்டுமே நின்று முறியடித்து விட முடியும் என்று புதிய ஜனநாயகம் கருதவில்லை. அது சரியானதும் அல்ல! இன்னும் சொல்லப்போனால் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஆண்கள் முன்னிலையில் நின்று போராடுவது தான் பெண்களை நிலவுகின்ற சமூக அமைப்பு நடத்தி வருகின்ற சமத்துவமற்ற நிலைமை, போகப் பொருளாகவும், பண்டமாகவும் பார்க்கின்ற கண்ணோட்டத்தில் இருந்து விடுவித்துக் கொள்வதில் முக்கிய பங்காற்றும் என கருதுகிறோம்.

கேள்வி
வணக்கம், வடமாநில தொழிலாளர்கள் நமது தமிழகத்திற்க்கு வந்த பின், நமது தமிழக மக்களின் வேலையை பறிக்கின்றனரே அந்த பிரச்சனையை தீர்க்க முடியுமா? நிரந்தர தீர்வு என்ன?

பிரகாஷ், மேட்டூர்.

பதில்: வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வந்த பின்பு தமிழக மக்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கின்றனர் என்ற பிரச்சாரம் தொடர்ச்சியாக தமிழின பிழைப்புவாத கும்பலாலும், தமிழ் பாசிச அமைப்புகளாலும் முன் வைக்கப்படுகிறது.

முதலில் ஓர் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் இந்தியா என்ற நாட்டில் பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், பண்பாடுகள் ஆகியவற்றின் ஒன்று கலப்பாக, அதாவது பல்வேறு தன்மைகளைக் கொண்ட மக்கள், பன்முகத்தன்மை கொண்ட மக்கள் ஒன்றிணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதில் ஒவ்வொரு மாநிலமும் சில தேவைகளுக்காக குறிப்பாக நீராதாரம்,உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், மின்சாரம், தொழில்நுட்பம் போன்ற தேவைகளுக்காக அதற்கு அருகில் உள்ள மாநிலங்களை சார்ந்து இருப்பதோ அல்லது இயற்கையாக அமைந்துள்ள ஆறுகள் மற்றும் பூமிக்கு அடியில் புதைந்து கிடக்கும் கனிம வளங்கள் ஆகியவற்றை பங்கிட்டு கொள்ளவோ செய்கின்றன. இதில் சில சிக்கல்களும், சில ஒற்றுமைகளும் உள்ளன.

இந்திய ஒன்றிய அரசாங்கமானது அமல்படுத்துகின்ற மறுகாலனியாக்க கொள்கைகள் குறிப்பாக விவசாயத்தில் இருந்து விவசாயிகளை வெளியேற்றுவது; சிறு குறு தொழில் முனைவர்களை அவர்களின் தொழில்களில் இருந்து அப்புறப்படுத்துவது; சிறு கடை வைத்து பிழைக்கின்ற வியாபாரிகளை, வர்த்தகர்களை அவர்களின் தொழிலில் இருந்து வெளியேற்றுவது, என்ற நிகழ்ச்சி போக்கு கடந்த பத்தாண்டுகளாக அதிகரித்துக் கொண்டே போவதால், வாழ்க்கை தேவைக்காக வேலைவாய்ப்பு உத்தரவாதம் உள்ள பகுதிகளைத் தேடி நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேசிய இன மக்கள் குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் இருந்தும், மத்திய இந்தியாவில் இருந்தும் புலம்பெயர்ந்து செல்கிறார்கள்.

இவ்வாறு இவர்கள் புலம்பெயர்ந்து சென்று வேலை தேடுபவர்களை தொழில் நடத்துபவர்கள் முதல் சாராரண கடை வியாபாரிகள், வர்த்தகர்கள், ஹோட்டல்கள் ஆகிய அனைத்திலும் குறைந்த கூலிக்கு இவர்களை சுரண்ட முடியும் என்ற கண்ணோட்டத்தில் பணியில் அமர்த்தி உண்ணவும் உறங்கவும் கொடுக்கப்படும் நேரம் போக மீதமுள்ள நேரத்தில் அவர்களின் உழைப்புச் சக்தியை மிகவும் மலிவான விலையில் உறிஞ்சி கொள்ளையடிக்கின்றனர்.

இவ்வாறுதான் தமிழகத்திற்கு வருகின்ற வடமாநில தொழிலாளர்கள் தங்களது உழைப்பு சக்தியை குறைந்த மலிவான விலைக்கு விற்று தன்னை பாதுகாத்துக் கொள்கிறார்கள் தனது வாழ்வாதாரத்தை, உயிரை வைத்துக் கொள்கிறார்கள்.

இதுபோன்று தமிழகத்திலிருந்து வடமாநிலங்களுக்கு வேலை தேடி செல்பவர்களும் உள்ளனர் என்பதையும் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டுமே தவிர இவர்களால் நமது வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது என்று சுருக்கி பார்க்கக் கூடாது.

இந்தியாவில் உள்ள 40 முதல் 50 கோடி வரையிலான இளம் தொழிலாளி மற்றும் ரிசர்வ் பட்டாளமாக அதிகரித்துக் கொண்டிருப்பதால் இவர்களை குறைந்த கூலிக்கு கொள்ளையடிப்பதற்கு முதலாளிகள் தயாராக இருக்கிறார்கள். அதனை எதிர்த்து போராடி முடிவு கட்டும் வரை இது போன்ற பிரச்சனைகள் தொடரத்தான் செய்யும்.

குறிப்பிட்ட மாநிலத்தில் வாழும் மக்களுக்கு அம்மாநிலத்தில் வேலை வாய்ப்பை உருவாக்குவது மாநில அரசுகளின் கடமை. அதன்படி அம்மாநில தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதும் சரியானதே. ஆனால் மாநிலத்தில் தங்களது மாநிலத்தில் உள்ளவருக்கு மட்டுமே வேலை பிற மாநில தொழிலாளர்களுக்கு வேலை தர கூடாது என்பது தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கும் இனவாத அரசியலே.

இந்த இடத்தில் நிலவுகின்ற அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சில அம்சங்களையும் சுட்டிக் காட்ட விரும்ப்புகிறோம். கடந்த 1984ஆம் ஆண்டில் நடந்த டாக்டர் பிரதீப் vs இந்திய அரசு என்ற அந்த வழக்கில் “அரசியலமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது பிரிவைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதை, இந்தியாவை வசிப்பிடமாகக் கொண்டவர் என்று மட்டுமே பொருள்கொள்ள வேண்டும்” என்று தீர்ப்பளித்ததில் இருந்து குறிப்பிட்ட மாநிலத்தில் குறிப்பிட்ட இனத்தவருக்கு மட்டுமே வேலை என்ற முறை படிப்படியாக குறைந்து வந்தது.

எனினும், சில மாநில அரசுகள் தங்களது ஓட்டு வங்கிக்காகவும் அரசியல் தேவைக்காகவும் குறிப்பிட்ட இனத்தவருக்கு மட்டுமே வேலை என்ற சட்டத்தை அமல்படுத்த முயற்சிக்கின்றனர். குறிப்பாக, 2016 ஆம் ஆண்டில் அப்போதைய கர்நாடக அரசு கன்னடருக்கே வேலை என்ற சட்டத்தை கொண்டு வந்தது.ஆனால், இது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 மற்றும் 16 ஐ மீறுவதாகக் கூறி நிறுத்தி வைக்கப்பட்டது. அரியானா அரசு இதேபோன்ற சட்டத்தைக் 2020 ஆம் ஆண்டில் கொண்டு வந்தது. ஆனால், அந்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19ஐ மீறுவதால் அந்தச் சட்டம் அரியாணா மற்றும்பஞ்சாப் மாநில உயர்நீதிமன்றங்களால் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

தற்போது தமிழகத்தில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவீத வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்க சட்டம் இயற்றப்படும்” எனக் கூறியது. ஆனால் இதற்கான முயற்சியை திமுக அரசு மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தொழிலாளர் பல்வேறு தியாகங்களைப் புரிந்து தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக மாற்றி அடிமைகளாக தொழிலாளர்களை மாற்றும் வேலையை பாசிச மோடி அரசு செய்து விட்டது. தொழிலாளர்கள் உரிமைக்காக போராடினால் ஒடுக்குவதற்கு கிரிமினல் சட்டங்களை போலீசுக்கு அதிகாரம் அளித்து மாற்றிவிட்டது. இனி உரிமைகளுக்காக பேசினாலே சிறை எனும் கொடூர பாசிச சூழலிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இப்படிப்பட்ட பாசிச சூழலில் தொழிலாளர்கள் இனம், மதம், மொழி, கலாச்சாரம் எனப் பிரிந்து கிடப்பதை தூக்கி எறிந்து பாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டியது அவசியம். இதனைத் தவிர்த்து எனது தேசியம், எனது இனம் என பேசினால் அது பாசிசத்திற்கு சாதகமாகவே அமையும். பாசிசத்திற்கு எதிராக களமாடும் அனைவரையும் ஒன்றிணைத்து குறைந்தபட்ச செயல் திட்டத்தின் கீழான ஐக்கிய முன்னணியில் இணைக்கும் போது மட்டுமே ஒவ்வொரு மாநிலத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும். மாநிலத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் பாதுகாக்கப்படும்.

கேள்வி: தொழிலாளர்களால் கடந்த காலங்களை போல வீரியம் மிக்க போராட்டங்களை நடத்துவதில்லையே. ஏன்? என்ன காரணத்தால் விவசாயிகள் போல் ஒன்றுதிரள முடியவில்லை? தொழிற்சங்கங்கள் கூட்டுபேர உரிமையை மட்டும் நடத்துவதினாலா?

சிவகாமு, கரூர்.

பதில்: தொழிலாளர்கள் கடந்த காலங்களைப் போல ஒன்று திரளவில்லை என்ற வாதம் மிகவும் தவறானது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள மத்தியப்படுத்தப்பட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தங்களை அறிவிப்பதும், அந்த வேலை நிறுத்தங்களின் போது குறிப்பிட்ட சில கோரிக்கைகளுக்காக நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் ஒன்று திரண்டு போராடுகின்றனர்.

இது கடந்த காலங்களை விட படிப்படியாக மேம்பட்டு வருகிறது என்ற போதிலும் விவசாயிகள் ஒன்றிணைந்து போராடுவதைப் போல ஒன்றிணையவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது தான். இதற்கு அவர்களை வழிநடத்துகின்ற தொழிற்சங்கங்கள் அரசியலை கற்றுக் கொடுக்காமல் வெறும் தொழிற்சங்கவாதத்திலும், பொருளாதார வாதத்திலும் மூழ்கடிப்பது முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.

இதற்கு மாறாக புதிய ஜனநாயகத்தின் தோழமை அமைப்பான புரட்சிகர தொழிற்சங்கம் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தொழிலாளர்களை அரசியல் ரீதியாக பயிற்றுவிப்பதற்கு தொடர்ச்சியாக முயற்சித்து வருகிறது. அரசியல் ரீதியாக அவர்களை அணி திரட்டுவதற்கும், நாட்டின் பொது எதிரியாக மாறியுள்ள கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிராக முன்னணி படையாக நின்று செயல்படுவதற்கும் அவர்களை பயிற்றுவித்து வருகிறது.

ஆனால் இன்றைய தேவைக்கும் தொழிலாளி வர்க்கத்தின் தயார் நிலைக்கும் ஒரு இடைவெளி இருப்பது உண்மைதான் இதனை உணர்ந்து தொழிற்சங்கங்கள் தமது வழக்கமான வேலை பாணியிலிருந்து விலகி அரசியல் தொழிற்சங்கமாக நடத்த வேண்டும் என்பதை முன்வைக்கின்றோம்.

வாசகர் முன் வைத்திருக்கின்ற கூட்டு பேர உரிமை என்பதற்கும், தொழிலாளி வர்க்கம் அரசியல் உணர்வற்று இருப்பதற்கும், ஒன்று திரளாமல் இருப்பதற்கும் நேரடியாக தொடர்பு இல்லை.

புதிய ஜனநாயகம்
பிப்ரவரி 2025

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here