இந்தித் திணிப்பைக் கண்டித்து பிப்ரவரி 25 அன்று தமிழ்நாடு முழுவதும் மாணவர் அமைப்புகள் போராட்டம்
மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு (FSO-TN) கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
‘மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு’ கலந்துரையாடல் கூட்டம் 21.02.2025 அன்று காலை 9.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இந்திய மாணவர் சங்கம், சமூகநீதி மாணவர் இயக்கம், தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ், திராவிட மாணவர் கழகம், திராவிட மாணவர் பேரவை, திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் நீதி மய்யம், மதிமுக மாணவர் அணி,மாணவர் இந்தியா, முற்போக்கு மாணவர் கழகம், முஸ்லிம் மாணவர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன.
ஒருங்கிணைப்பாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று உரையாடினர். முடிவில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:
- மாணவர் அமைப்புகள் அனைத்திலும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அனைத்துப் பொறுப்பாளர்களுக்கும் வாழ்த்து தெரிவிப்பதுடன், மாணவர் நலனையும், கல்வி உரிமையையும் காக்க ஜனநாயக அடிப்படையில் தொடர்ந்து இணைந்து செயல்படுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
- தேசியக் கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதை தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டின் அனைத்து அமைப்புகளும் ஒட்டுமொத்தமாக அறிவித்த பின்னும், அதைத் திணிக்க, தொடர்ந்து பல்வேறு அதிகார அத்துமீறல்களில் ஈடுபட்டுவரும் ஒன்றிய பா.ஜ.க. அரசை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகளைப் பறிப்பதற்கான முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரவேண்டும் என்று தமிழ்நாடு மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்துக் கொண்டே இருக்கும் சூழலில், தற்போது இருக்கும் உரிமைகளையும் பறிக்க வேண்டும் என்னும் நோக்கில் செயல்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
- 2024, 2025-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டுள்ள யூ.ஜி.சி வரைவு விதிமுறைகள் முற்றிலும் சமூகநீதிக்கும், மாநில உரிமைக்கும் எதிரானவையாகும். யூ.ஜி.சி.யின் விதிமுறை வரைவினை “மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு” முற்றிலும் நிராகரிக்கிறது. முன்னேற்றத் திசையில் கல்வியைக் கொண்டு செல்லாமல், மீண்டும் மீண்டும் ஒரே செக்கில் சுழல்வதைப் போல, போராடிப் பெற்ற உரிமைகளுக்கே ஆபத்தை ஏற்படுத்தி, மீண்டும் போராட வைக்கும் ஜனநாயக விரோதமான மோசடியான செயல்பாடுகளை நிறுத்தி, மாணவர்களை போராட்டக் களத்திலிருந்து கல்விக் கூடங்களுக்குச் செல்லும் வகையில் அமைதியான சூழலை உருவாக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமையாகும். அன்றாடம் மாணவர் நலனுக்கு எதிராகச் சிந்திப்பதை விடுத்து, கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவந்து, இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வகை செய்ய வேண்டியதும் ஒன்றிய அரசின் கடமையாகும். யூ.ஜி.சி.யின் வரைவு அறிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பதையும் ஒன்றிய அரசுக்கு வலியுறுத்திக் கொள்கிறது.
- இந்தியையும், தேசியக் கல்விக் கொள்கையையும் திணிக்கும் நோக்கில் அடாவடியாகக் கருத்துத் தெரிவிப்பதுடன், தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வித் துறைக்குச் சேர வேண்டிய ரூ.2152 கோடியை நிறுத்தி வைப்பது இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தையும், கூட்டாட்சித் தன்மையையுமே கேள்விக்குள்ளாக்குவதாகும். ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்தை, அவரது தனிப்பட்ட கருத்தாக நாம் பார்க்க இயலாது. அது, ஆர்.எஸ்.எஸ்.சால் நடத்தப்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கருத்தே ஆகும். இந்த அடாவடிப் போக்குக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். மாநில மக்களிடமிருந்து பெற்ற வரியை, மாநிலங்களுக்கான திட்டங்கள் வாயிலாகத் திருப்பித் தர வேண்டிய ஒன்றிய அரசு பாரபட்சமாக நடந்துகொள்வதை இந்தக் கூட்டம் கண்டிக்கிறது. அந்த நிதியை உடனடியாக வழங்க ஆவன செய்ய வேண்டும் என்று இக் கூட்டம் வலியுறுத்துகிறது.
- ஒரே நாடு – ஒரே தேர்தல், ஒரே ரேசன் கார்டு, ஒரே… ஒரே… ஒரே… என்று செயல்படத் தொடங்கி, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்று இந்தியின் பின்னணியில் சமஸ்கிருத மொழியையும், பண்பாட்டையும் திணிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசுக்கு இக் கூட்டம் கடுமையாக எச்சரிக்கை விடுக்கக் கடமைப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு இருமொழிக் கொள்கை என்பதைச் சட்டமாகவே வைத்திருக்கும் மாநிலம் ஆகும். தமிழ்நாட்டின் மொழிக் கொள்கையில் கை வைக்க நினைப்பது குளவிக் கூட்டில் கை வைப்பதற்குச் சமமாகும். உலகமே தெரிந்த ஒரு பிரச்சினையையும், ஒன்றிய அரசுகள் ஏற்றுக் கொண்ட முடிவையும், மீண்டும் சர்ச்சைக்குள்ளாக்குவது கண்டனத்திற்குரியதாகும். தமிழ்நாட்டு மாணவர்களின் ஒன்றுபட்ட குரலை வெளிப்படுத்தும் வகையில் பிப்ரவரி 25 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்றும், இதே நிலை நீடித்தால் அடுத்தடுத்து அனைத்து மட்டங்களிலும் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
- தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பைச் சிதைக்கும் வகையில் நீட் என்னும் நுழைவுத் தேர்வைத் திணித்ததற்கு எதிரான போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மருத்துவ மேற்படிப்புகளில் 50% இடங்களை இதுவரை அபகரித்துவந்த ஒன்றிய அரசிடமே, ஒட்டுமொத்த 100% இடங்களையும் ஒப்படைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பது, மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயல், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானதாகும். இது தொடர்பாக சீராய்வு மனுவைத் தமிழ்நாடு அரசு கொண்டு வருவதை இக் கூட்டம் வரவேற்கிறது. மாநில உரிமையைப் பறிக்க உச்சநீதிமன்றம் வழிகோலக் கூடாது என்றும், இந்திய அரசியலமைப்பின் அடிப்படையான கூட்டாட்சித் தன்மையையும், சமூகநீதியையும் பாதுகாக்க வேண்டியது நீதித்துறையின் கடமை என்பதையும் இக் கூட்டம் கவலையோடு சுட்டிக் காட்டுகிறது.
- ‘மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு’ அமைப்பை மாவட்ட அளவிலும் விரிவுபடுத்தி, உறுதியான கட்டமைப்பைச் செய்வது அவசியமானது. அதைச் செயல்படுத்தி மாணவர் ஒற்றுமையை வலிமைப்படுத்த அனைத்து அமைப்புகளும் ஒத்துழைக்கவும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.