முன்னுரை:

இந்தப் பொதுத் தலைப்பில் ( உலக மறுகாலனியாக்கக் கட்டத்தின் கீழே )மூன்று ஆசிய நாடுகளின் அதிர்ச்சிதரும் தற்போதைய சில நடப்புகளைப் பார்க்கப் போகிறோம். முதலில் ஆஃப்கானிஸ்தான் ; இரண்டாவது, பாகிஸ்தான் ; மூன்றாவது, இந்தியா. பாகிஸ்தானைத்தான் முதலிடத்தில் போடவேண்டும் ; ஆனால், மிகப் பிற்போக்கான கும்பல்கள் ஆளும் ஆஃப்கானிஸ்தானை முதலில் பரிசீலிக்கத் தொடங்குகிறோம்.

ஆஃப்கானில் கடந்தகால யுத்தப்பிரபுக்களின் ஓயாத சண்டைகளின், வன்முறைகளின் எதிரொலியும் ஆறாத ரணங்களும் நீங்கிடவில்லை; மாறிக்கொண்டேயிருக்கும் அரசாங்கங்களின் கையாலாகாத நிர்வாகங்கள்; வறுமை, பசி, பஞ்சம், சத்துணவுக் குறைபாட்டால் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை நோய்கள், சோற்றுக்காகக் குழந்தைகள் விற்கப்படும் அவலம், சுகாதாரம் இல்லாமை, மக்கள் நலவாழ்வுத் திட்டங்கள் இல்லாமலிருப்பது … இவை அத்தனையும் சேர்ந்து குழந்தைகளின் வாழ்வின் முதல் அத்தியாயங்களை வழிநடத்துகின்றன என்றால் மிகையில்லை.

உலக அளவில் இன்னமும் உணவுப்பஞ்சம், சத்துணவுப் பற்றாக்குறையால் நோய்கள், நிமோனியா, டையோரியா, மலேரியா ஆகியவற்றால் பல லட்சம் குழந்தைகள் சாகின்றன என்பது நடப்பு உண்மைகளே. குழந்தைச் சாவுகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் மிகக் கொடூரம்; ஆசியாவில் ஆஃப்கனில் 45%, பாகிஸ்தானில் 56%, இந்தியாவில் சுமார் 30%.

இதுநாள்வரை ஆஃப்கானிஸ்தானத்துக்கு ஏகாதிபத்திய ஊதுகுழல்களான அரசுசாரா (என்ஜிஓ) நிறுவனங்கள் கைமாத்தாக நிதிகளைத் தருவித்துக் கொடுத்தன; பெயர்மட்டும் மிக நாகரீகமாக “மனிதாபிமான இலவச உதவிகள்” என்று அவை தங்களை அழைத்துக் கொண்டன

ஆட்சிக்கு தாலிபான்கள் வந்த உடனே என்ஜிஓக்களுக்குத் தடைபோட்டார்கள். மிகச் சரிதான். ஆனால் வந்த உடனே அவசரமாகக்கூட தாலிபான் ஆட்சி தன் சார்பாக ஒரு சின்ன முயற்சியாவது எடுக்கவேண்டுமல்லவா? இல்லை என்பதுதான் அவலம்.

ஆஃப்கான் இப்படி என்றால், பாகிஸ்தான் இன்னமும் மோசமான நிலைமை. சுகாதாரம், மருத்துவம், கல்வி மூன்றிலும் இந்தியாவையும் சேர்த்து மூன்று நாடுகளிலுமே அவை மக்களுக்கானதாக இல்லை, அங்கெல்லாம் நடைமுறைப்படுத்த ஏற்ற அரசுகளும் இல்லை. அந்த நாடுகளின் பிற்போக்குநிலையை ஒட்டி ஆட்சிகள் — அவை திணிக்கப்பட்டுள்ள பலரகப் பாசிச ஆட்சிகள். இதிலிருந்தெல்லாம் மீள வேண்டுமானால், அடுத்தடுத்த தலைமுறைகளான குழந்தைகள் உயிரோடு வாழ வேண்டுமானால், மூன்று நாடுகளுமே புத்தம் புதிய, புதிய ஜனநாயகத்தை நோக்கி நகரவேண்டும்.

***

1. ஆப்கானிஸ்தான்
(“கண்முன்னே குழந்தைகள் செத்துவிழுவதை, செய்வதறியாது பார்த்துக், கொண்டே இருக்கிறோம்.”)

தயாபுல்லா மூன்றே வயது நிரம்பிய குழந்தை. பேச்சுமூச்சில்லை. படுக்கையில் கிடக்கிறான்.அவன் தாய் நிகார் அவன் மூக்கின் அருகே இருக்கும் ஆக்சிஜன் குழாயை நகர்த்தி விரல்வைத்துச் சோதிக்கிறார்.
“மூச்சுவிடுகிறானா?” என்று பார்க்கிறார்.

மூச்சு சிறிதுசிறிதாகப் பின்வாங்கி அடங்குகிறது; நிகார் அழத் தொடங்குகிறார்.

ஆஃப்கானிஸ்தானில் உள்ள இந்த அரசுமருத்துவமனையில் ஆபத்துக்கு உதவும் செயல்படும் நிலையில் ஒரே ஒரு வென்டிலேட்டர் (மூச்சுக்கான திறப்பு ஜன்னல்) கூட இல்லை.

குழந்தைகள் மூக்கருகே ஆக்சிஜன் குழாய்களை தாய்மார்கள் பிடித்துக் கொள்கிறார்கள். முகக் கவசம் இணைந்துள்ள குழாய்கள் இல்லை. பயிற்சி பெற்ற நர்ஸ் அல்லது இயங்கக் கூடிய கருவியைச் சீராக்கி இயக்குவதும் பெற்றோர்களே.

ஒவ்வொருநாளும், காப்பாற்றிவிடக்கூடிய நோய்கள்தான் என்றாலும், காக்க முடியாமல் 167 குழந்தைகள் சாகின்றன.அந்த நோய்களுக்குச் சரியான மருந்து மாத்திரை கொடுத்தால் காப்பாற்றிவிடலாம் என்கிறது ஐநா-வின் யூனிசெஃப் குழந்தைகள் நிதியம். இது ஒரு தோராயமான அளவீட்டுக் கணக்கு மட்டுமே.

கோர் பிராந்தியத்தின் மேற்குப்பகுதியில் உள்ள முக்கியமான மருத்துவமனை வளாகத்தில், மக்கள் ஏராளமாக வரும் குழந்தைகள் பிரிவில்தான் அதிர்ச்சி கொடுக்கும் இந்த நிலைமை. இதுவே குறைத்துக் காட்டப்படும் நிலைமைதான்.

அறைகளில் எல்லாம் முழுக்க நோய்ப்பட்ட குழந்தைகள்; ஒவ்வொரு படுக்கையிலும் இரண்டு குழந்தைகள். நிமோனியா (நுரையீரல் சளிக்காய்ச்சல்) அந்தக் குழந்தைகளைப் புரட்டிப் போட்டிருக்கிறது. 60 குழந்தைகளைக் கவனிக்க இரண்டே நர்சுகள்.

ஒரு அறையில் மிகமோசமான நிலையில் சுமார் 24 குழந்தைகள். அவசர சிகிச்சைப் பிரிவில் ஒவ்வொரு நிமிடமும் தொடர்ந்து கவனிக்கப்படவேண்டிய பச்சிளம் குழந்தைகள். எந்த ஏற்பாடும் இல்லை.

கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்தோமே அந்தச் சிறுவன் தயாபுல்லாவைப் பிழைக்கவைக்கப் போராடினார்கள். டாக்டர் அகமது சமதி தயாபுல்லாவைச் சோதிக்க அவசரமாக அழைக்கப்பட்டார். களைப்பும் வேலை அழுத்தமும் முகத்தில் கவலை வரிகளாக ஓடின. தயாபுல்லாவின் மார்பில் ஸ்டெத்தாஸ்கோப்பை வைத்துச் சோதித்தார் அவர். அவனது இதயத்துடிப்பு மெலிந்து தேய்ந்து எங்கோ ஆழத்துக்குப் போய்விட்டிருந்தது.

நர்ஸ் எடிமா சுல்தானி மிக வேகமாக எங்கிருந்தோ ஆக்சிஜன் பம்ப் எடுத்துக் கொண்டு ஓடிவந்தார்; தயாபுல்லாவின் வாயில் நுழைத்து காற்றை ஊதிநிரப்பினார் ; டாக்டர் சமதி தனது கட்டைவிரலால் அந்த மெலிந்த உடல்மீது அழுத்தங் கொடுக்க முயற்சித்தார்.

பையனின் பாட்டன் கவாசுதீன். அவர் முகத்தில் சிறு நம்பிக்கைக் கீற்றுகூடத் தெரியவில்லை. தயாபுல்லாவுக்கு நிமோனியா. கூடவே சத்துணவுப் போதாமையாம். பாவம், இதையும் ஒரு நோய் என்றே அவர் சொல்லிக் கொண்டிருந்தார். அது உடல் நோயல்ல, சமூகம் சிறுவன்மீது சுமத்தியுள்ள சமூக நோய் என்பது அவருக்குப் புரியவில்லை.

“சார்சத்தா மாவட்டத்திலிருந்து சரளைக்கல் – மண் சாலைகள் வழியா வந்து சேரவே எட்டுமணி நேரம்…” என்றார் கவாசுதீன். குடும்பத்தின் போக்குவரத்துச் செலவுக்கு மட்டும்தான் காசு இருந்தது. அவர்களின் சாப்பாடு எல்லாநேரமும் ரொட்டித் துண்டுகளும் துணுக்குகளும் மட்டுமே.

அரைமணிநேரம் டாக்டரும் நர்சும் தயாபுல்லாவை உயிர்பிழைக்க வைக்கப் போராடினார்கள். பிறகு நர்ஸ் சுல்தானி மெல்ல நிகாரிடம் சென்று தயக்கத்தையெல்லாம் உதறிவிட்டு தயாபுல்லா இறந்துவிட்டான் என்று சொன்னார்.

அறைக்குள் சூழ்ந்திருந்த கனமான அமைதியை உடைத்து நிகார் விசும்பினார், கதறினார், மயங்கினார். ஒரு துணியில் சுற்றிய தயாபுல்லா சடலம் , சிகிச்சை சர்டிபிகேட்டோடு பாட்டன் கவாசுதீனிடம் கொடுக்கப்பட்டது. ஒருவழியாகத் தேற்றப்பட்ட நிகாரோடு குடும்பத்தினர் ஒரு சின்ன இறுதி ஊர்வலம் போல வீடுநோக்கிக் கிளம்பினார்கள்.

தயாபுல்லாவைப் பிழைக்கவைத்திருக்க முடியும். அந்த நோய் குணப்படுத்தக் கூடியதுதான், இங்கே நாங்கள் என்ன செய்யமுடியும் என்று புலம்பிக் கொண்டிருந்தார் டாக்டர் சமதி.

“நானும் ஒரு தாய்தான். தயாபுல்லா கண்எதிரே செத்துக் கொண்டிருந்தபோது என் மகன் சாகிறான் என்றுதான் நினைத்தேன். நிகார் ஆத்தமாட்டாமல் கதறி அழுதபோது, என் இதயம் சுக்குநூறாக வெடித்துவிட்டது; என் மளசாட்சியைப் பலமாக உலுக்கி எடுத்துவிட்டது,” என்றார் சுல்தானி. இவர் இச்சிறுவனுக்காகவும் பல நோயாளிகளுக்காகவும் தொடர்ந்து 24 மணிநேரம்கூட கண்காணித்துப் பழியாகக் கிடந்திருக்கிறார் என்றார்கள் சக நர்சுகள்.

“எங்களிடம் கருவிகள் இல்லை. போதிய பெண் நர்சுகள் இல்லை. மிக மோசமான நிலமையோடு ஒரே நேரம் பலகுழந்தைகள் வந்து சேரும்போது அவர்களில் யாரை முதலில் கவனிப்பது ? இது ஒரு தார்மீகக் கேள்வி. எதுவும் செய்வது அறியாமல் கண் எதிரே குழந்தைகள் ஒவ்வொன்றாய்ச் சாவதைப் பார்த்துக் கொண்டிருப்போம். இது சரியா? இது மற்றொரு தார்மீகக் கேள்வி. அறம் சார்ந்த கேள்விகளைத் தள்ளமுடியாமல் தவிப்போம்” என்றார்கள் அத்தனைப் பேரும். காரணங்கள் தெரியாமல் இல்லை, அவர்களால் ஏதும் செய்யமுடியவில்லை, கையறுந்த நிலை என்பது இதுதான்.

000

அதே மருத்துவமனை, குழந்தைகள் பிரிவு, தயாபுல்லா இருந்த அறைக்கு அடுத்த அறை. தயாபுல்லா இறந்து சில நிமிடங்கள் கழித்து மற்றொரு குழந்தை நெருக்கடியில்….இருந்த ஒரே ஆக்சிஜன் மாஸ்க்கோடு அந்தக் குழந்தை உயிருக்குப் போராடியது.

அந்தக் குழந்தை இரண்டு வயதே நிரம்பிய குல்பதன். பிறப்பிலேயே இதயத்தில் உள்ள நிலைத்த நாளத் தமனியில் (PDA — Patent Ductus Arteriosus) பிரச்சினை.
இதே மருத்துவமனை மருத்துவர்கள்தான் அதைச் சரியாகக் கண்டுபிடித்தார்கள். இதுவும்கூட எளிதாகக் குணப்படுத்திவிடலாம் என்றுதான் சொன்னார்கள் ; ஆனால் அறுவைச் சிகிச்சைக் கருவிகளோ , தேவையான மருந்துகளோ இல்லை.

இதையும் படியுங்கள்:

குல்பதனின் அப்பா நவ்ரோஸ் ஒரு தினக்கூலி. “பணமிருந்தா குல்பதனுக்கு வைத்தியம் பார்த்திருப்போம். அவளும் கஷ்டப்பட்டிருக்கமாட்டாள். ஒரே ஒரு கப் டீ வாங்கக்கூட எங்கிட்ட காசுஇல்லே. அவசர ஆத்திரத்துக்குக் கூட கடன்தான் …..” என்றார் நவ்ரோஸ்.

” ஒவ்வொரு நிமிடமும் இரண்டு லிட்டர் ஆக்சிஜன் தேவை, சின்ன சிலிண்டர் தீர்ந்துவிட்டால் , வேறு சிலிண்டர் தேவை, இல்லை என்றால் குல்பதன் இறந்து விடுவாள்….” என்றார் டாக்டர் சமதி.

சமதி சொன்னதுபோலவே சிலிண்டர் தீர்ந்துவிட்டது, குல்பதன் நிராதரவாகவே இறந்து போனாள். அந்த அரசு மருத்துவமனைக்கு இரவு மட்டுமே மின்சாரம் கொடுப்பார்கள். ஆக்சிஜன் உற்பத்திக்கான கச்சாப் பொருள் வரத்தும் தொடர்ச்சியாக இல்லை. எனவே அங்கே ஆக்சிஜன் இல்லை.

டாக்டர் சமதிக்கும் சக நண்பர்களுக்கும் இதெல்லாம் வழக்கமாகிவிட்டாலும் அடுத்தடுத்து வந்த சாவுகள் தாங்க முடியாத இடிகள் என்றே அவர்கள் சொல்லிச்சொல்லி வருந்தினார்கள்.

அந்த ஏழைக் குடும்பங்கள் அரசு மருத்துவமனைகளை நம்பியே வாழ்ந்தன. வருவாய் இல்லை, வெளியே போகவர போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை. பல நாட்கள் பனிபுதைந்த பாதைகளைக் கடக்க வேண்டும்.

” ஒரு குழந்தை இப்படி ஒருமுறை வந்துசேர்ந்தது. உடலில் பல கூட்டுப் பிரச்சினைகள். ஒரே ஒரு இன்ஜெக்சன் மட்டும் போட்டோம். வேறு மருந்துகளும் கைவசம் இல்லை…..” என்றார் நர்ஸ் சுல்தானி. குழந்தையின் அப்பா, “அவன் சாகப் போவது முடிவாகி விட்டால் வீட்டில் சாகட்டும். இங்கே வேண்டாம்,” என்று சொல்லி அவனை வீட்டுக்கே அழைத்துப்போக முடிவு செய்தார்.

000

மேலே கொடுக்கப்பட்ட அத்தனை நிலைமைகளும் ஆஃப்கனில் பொதுமருத்துவம் ஏன் வேகமாகச் சிதைந்து வருகிறது என்ற கேள்விகளை எழுப்புகின்றன. ஏன்?

2021 வரை உலகளாவிய தனியார் நிறுவனங்கள் இங்கே மருத்துவத் துறையில் பல லட்சம் டாலர்களைக் கொட்டிய பிறகுமா இப்படி நடக்கிறது? அந்தப் பணமெல்லாம் எங்கே போயிற்று ? மூச்சுக்குத் தவிக்கும் குழந்தைகளுக்காக வென்டிலேட்டர் கூடவா வாங்கமாட்டார்கள்!

பழைய ஆட்சியின் கதை காலாவதியாகிப் போன கதை . புதிய நிலைமையோ இன்னமும் மோசம். தாலிபான் ஆட்சி வந்தபின், உலக அளவில் அதற்கு அங்கீகாரம் இல்லாததால், ஒருசில மனிதாபிமானிகள் போராடி அனுப்பிய பணத்தில்தான் இப்போதுள்ள அளவாவது மருத்துவம் நீடிக்கிறது. தற்போதைய அரசில் பெண்கள் சுதந்திரம் இல்லை , சர்வதேசச் சட்டங்கள் மறுக்கப்படுகின்றன என்பவை மேலை நாடுகளின் குற்றச்சாட்டுகள்.

தாலிபான் ஆட்சி அடக்குமுறைகளை நாம் மறுப்பதற்கில்லை; ஐ.நா- வின் கடந்தகால “அமெரிக்கச் சார்பான மனிதாபிமானத்தை” அளவாகக் கொண்டு இதை நாம் பார்க்கவே கூடாது; ஈராக், ஈரானில், வியட்நாமில், ஆஃப்கானில் அமெரிக்க ராணுவத்தின் கொலை வெறிக்கும் பாலியல் வக்கிரங்களுக்கும் அந்தந்த நாடுகளின் பெண்களும் குடும்பங்களும் தானே சாட்சி? அமெரிக்கா மட்டுமல்ல, ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் போர்க் கொடுமைகளையும் சேர்த்தே பார்ப்போம். இதெல்லாம் தாண்டி நடந்த வாழ்க்கைக்கும் பெண்களே சாட்சியாக இருக்கிறார்கள். இன்றைய சமூகக் கொடுமைகளுக்கும் அவர்களே சாட்சி, குழந்தைச் சாவுகள் நடப்பதன் மனச் சுமைக்கும் அவர்களே சாட்சி.

அடுத்த தலைமுறை இளம் குழந்தைகளே வருங்கால ஆஃப்கான். இவர்கள் சாவையே வாழ்ந்தாக வேண்டுமா என்று பெற்ற தாய்மார்கள் கேட்கிறார்கள். எத்தனைப் பெரிய முரண். ஆஃப்கனின் வருங்காலமான இளம் தலைமுறை காக்கப்பட வேண்டுமானால் புதிய அத்தியாயங்களை ஆஃப்கன் எழுதவேண்டியிருக்கும்!

( தொடரும் அடுத்த பாகம் , பாகிஸ்தான் குழந்தைச் சாவுகள் பற்றி.)

ஆதாரம் : ஆஃப்கான் பற்றி பிபிசி ( BBC ) ஆய்வுகள்.
தமிழில் ஆக்கம் : இராசவேல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here