அவதூறுகளுக்கு மறுப்பு:

தங்களை முன்னிறுத்திக் கொள்ள சரியான கொள்கையை தீர்மானித்து மக்களைத் திரட்டுவதற்கு இயலாதவர்கள்  கீழ்த்தரமான யுத்திகளை கையாள்கின்றனர்.

– ம.க.இ.க அறிக்கை


அன்பிற்குரிய தோழர்களே வணக்கம்!

சமீபத்தில் மரக்காணத்தில் நடந்த விசச்சாராயச்சாவிற்கு 25 உயிர்கள் பலியானதை ஒட்டியும், மூடு டாஸ்மாக் இயக்கத்தை ஏன் தொடரவில்லை போன்ற கேள்விகளுக்கு  கடந்த 11.5.23 அன்று  ஆனந்தவிகடன் பத்திரிக்கைக்கு தோழர் கோவன் அளித்த பேட்டியின் மீது விமர்சனம் என்கிற பெயரில் எங்களிடமிருந்து பிரிந்து சென்று மக்கள் அதிகாரம் பெயரில் செயல்படும் போலி அணியின் செய்தி தொடர்பாளரான மருது, எமது அமைப்புகளின் செயல்பாடுகள் மீதும், தோழர் கோவன் மீதும் தொடர்ந்து பல அவதூறுகளை பரப்பி வருகிறார். அத்தகைய அவதூறுகளுக்கு எமது அமைப்பான மக்கள் கலை இலக்கிய கழகத்தின் முன்னாள் இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் காணொளியில் பேசி பதில் தந்துள்ளார். இதுவன்றி, எமது தோழமை முகநூல் மற்றும் ‘பிளாக்’ஆன வினைசெய் பக்கத்திலும் மருது செய்துவரும் அவதூறுகளுக்கு அடிப்படை என்ன, அவர் எந்த மேடையில் நின்று கொண்டு மக்கள் அதிகாரத்திற்கு எதிராக அவதூறுகளை செய்து வருகிறார் என்று பதில் தரப்பட்டுள்ளது.

தோழர் கோவன் மீது விமர்சனம் வைக்கும் பொழுதெல்லாம் அவர் சார்ந்துள்ள மக்கள் கலை இலக்கியக் கழகம் மட்டுமின்றி மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய எமது அமைப்புகள் அனைத்திற்கும் தோழர் மருதையன்தான் மூளையாக செயல்பட்டு வருவதாக ஒரு அபாண்டமான பழியை சுமத்துவதோடு, அவர் பிறப்பால் பார்ப்பனர் என்றும், அவரது பார்ப்பனிய சதித்திட்டப்படிதான் எமது அமைப்புகள் அனைத்தும் இயக்கப்படுகின்றன என்றும், எமது அரசியல் எதிரிகள் கூட விமர்சிக்கத் தயங்குகின்ற இழிந்த முறையில் தரம் தாழ்ந்து அவதூறு செய்து வருகிறார். இதே போன்ற ஒரு கட்டுக்கதையைத்தான் 2020 ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் தேதிக்குப் பிறகு மொத்த அமைப்பிலும் பரப்பி வந்தார் மருது.

மேலும்,மருதையன் அமைப்பை பிளவுபடுத்தினார் என்ற அவதூறை திட்டமிட்டு பரப்புகின்றனர். உண்மையில், மருதையன் வெளியேறுவதாக கடிதம் அளித்தார். மருதையன் வெளியேறியபோது மதுரையைச் சேர்ந்த முன்னாள் மாநிலசெயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் மற்றும் மதுரை கிளைச் செயலர் தோழர் ராமலிங்கம் தவிர மற்ற அனைவரும் ஒன்றாகவே இருந்தோம். இப்போதுவரை ஒன்றாகவே செயல்பட்டு வருகிறோம். அவரது விலகலுக்குப் பிறகு அடுத்தநாளே கூடிய மாநில செயற்குழு அவரது கடிதத்தை ஏற்கவில்லை. செயற்குழுவின் முடிவை ம.க.இ.க.வின் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் அங்கீகரித்தனர். மாநில மாநாட்டிலும் இது உறுதி செய்யப்பட்டது .

தனது வழக்கறிஞர் மூளையைக் கொண்டு எந்தவித ஆதாரமும் அற்ற குற்றச்சாட்டுகளை கற்பனையாகப் புனைந்து முகநூலில் கதை எழுதி வரும் மருதுவும், அவர் சார்ந்திருக்கும் ‘வெள்ளைக்கை’ அடையாள மக்கள் அதிகாரமும் எம்மை இழிவு படுத்துவதன் மூலமாக தங்களை ஒட்டுமொத்த புரட்சிகர அமைப்புகளின் பிதாமகர்களாகவும், தளக்கர்த்தர்களாகவும் முன்னிறுத்திக்கொள்ள படாத பாடுபட்டுவருகின்றனர்.

இன்று நாட்டிற்கு பேராபத்தாக ஏறித்தாக்கி வரும் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை முறியடிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது மக்கள் கலை இலக்கியக் கழகம். தமிழகத்தில் இயங்கி வரும் இடதுசாரி, பெரியாரிய, அம்பேத்கரிய, ஜனநாயக மற்றும் சிறுபான்மை மக்களின் குரலாய் ஒலிக்கின்ற அனைத்து அமைப்புகளும் தோழர் கோவன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்பதை ஏற்றுக்கொள்வது மட்டுமின்றி, தமது மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் போன்ற அனைத்திலும் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் எமது தோழமை அமைப்புகளைத்தான் அங்கீகரித்து தங்களது செயல்பாட்டிற்கும், செயல்களத்திற்கும் அழைப்பு விடுக்கின்றனர்.

கார்ப்பரேட் – காவி பாசிசத்திற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் பாஜகவைத் தவிர அனைத்து ஜனநாயக சக்திகள் மற்றும் புரட்சிகர அமைப்புகள் அனைத்தையும் பரந்த ஒரு பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணியை கட்டுவதற்கு எடுத்துவரும் முயற்சிகளை பொறுத்துக் கொள்ளமுடியாத மருது மற்றும் வெற்றிவேல்செழியன் சார்ந்திருக்கும் ‘வெள்ளைக்கை’ மக்கள் அதிகாரத்தினருக்கு எரிச்சலையும் மக்கள் அதிகாரத்தின் பெயரில் செயல்படும் இந்தப்போலிகளின் கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாக கரைவதால், அவர்களின் அணிகளே அவர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்துவதால் அதனைத்தடுக்க எம்மை இழிவு படுத்துவதையே செயல்திட்டமாக்கிக் கொண்டு செயல்படுகின்றனர். குறிப்பாக, தோழர் மருதையனை பார்ப்பனர் என்றும், அவரால்தான் எமது தரப்பு அமைப்புகள் இயக்கப்படுகின்றன எனவே எமது அமைப்புகள் பார்ப்பன தன்மை கொண்டவை என்றும் முத்திரை குத்தி தனிமைப்படுத்த இழிவான யுத்தியை கையாளுகின்றனர். இத்தகைய விமர்சனம் மார்க்சிய லெனினிய இயக்கத்திற்கு புதிது அல்ல. ஆரம்ப காலங்களில் திராவிடர் கழகத்தினர் மார்க்சிய லெனினிய அமைப்புகளில் உள்ள பார்ப்பனர் அல்லாதோர் சிந்தனைக்கு என்று வெளியீடு போட்டும், தற்போது தமிழ் இன பிழைப்புவாதிகள் பார்ப்பனத் தலைமை என்று தொடர்ச்சியாக அவதூறு பரப்பி வருவதும், தம்மை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்ளும் சிலரும்கூட சாதிய சிந்தனையுடன் பார்ப்பனத் தலைமை என்று அவதூறு பரப்புவதும் நடந்து கொண்டுதான் உள்ளது.

2020 மார்ச் மாதம் அவர் அமைப்பை விட்டு வெளியேறுகின்றவரை ஏறக்குறைய நாற்பதாண்டு காலமாக இயக்கத்தில் அவரோடு பணியாற்றிய தோழர்களுக்கு அவருடைய செயல்பாடுகள் பற்றி நன்றாகத் தெரியும். அவர் எந்த தருணத்திலும் தான் இப்படி ஒரு பின்னணியைச் சேர்ந்தவன் என்பதை வெளிப்படுத்திக் கொண்டதே இல்லை. 2020 மார்ச் வரை இந்தக்கும்பல் தமிழகம் முழுவதும் உள்ள எமது அமைப்பு தோழர்களுக்கு அனுப்பிய எந்த கடிதத்திலும் இது போன்ற ஒரு விமர்சனத்தை முன் வைத்ததும் இல்லை. பிறப்பால் பார்ப்பனராகவும், இருப்பால் ஒடுக்கப்பட்ட மக்களைப் போன்ற வாழ்க்கையையும் வாழ்ந்து வந்த அவர் இந்தியாவில் நிலவும் சாதித் தீண்டாமை மற்றும் பார்ப்பன பாசிசத்திற்கு எதிராக அரை நூற்றாண்டுகளாக தனது பேச்சு, எழுத்து, பாடல்கள் மூலம் தீவிரமாய் செயல்பட்டு வந்தார் என்கிற உண்மை, அவதூறு பரப்பும் மருது தரப்பினருக்கும் தெரியும். என்றாலும், எமது தரப்பின் ஒட்டுமொத்த அமைப்புகளையும் இழிவுபடுத்துவதற்கு அவர்கள் கையில் கிடைத்த சதிஆயுதம் மருதையன் பார்ப்பான், எமது அமைப்புகளில் இருந்து வெளியேறிய பின்னரும் அவர்தான் எங்களை இயக்குகிறார் என்பது தான்.

தங்களை முன்னிறுத்திக் கொள்ள சரியான கொள்கையை தீர்மானித்து மக்களைத் திரட்டுவதற்கு இயலாத இவர்கள், இந்த கீழ்த்தரமான யுத்தியை கையாள்கின்றனர். சமீபத்தில் மதுரையில் இவர்கள் நடத்திய மாநாடு தமிழகத்தின் விடுதலைப் போராட்ட வீர மரபு, பொருள் முதல் வாத மரபு, துவளாது போராடு போன்ற பலவிதமான கதம்பவாத முழக்கங்கள் மூலம் இவர்களால் 500 பேருக்கு மேல் திரட்ட முடியவில்லை என்ற ஆத்திரத்தில் எமது அமைப்புகளின் மீது அவதூறு பரப்புவது மட்டுமின்றி, எமது அமைப்பின் செயல்பாடுகள் அனைத்தும் மருதையன் மூலமாகவே நடப்பதாக கட்டுக்கதைகளை பரப்பி வருகின்றனர். தோழர் மருதையன் தற்பொழுது மக்கள் கலை இலக்கிய கழகத்திலோ அல்லது அதன் தோழமை அமைப்புகளிலோ எந்த பொறுப்பிலும் இல்லை. அரசியல் ரீதியாக சில கருத்து வேறுபாடுகள் இருப்பினும் கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிராக மக்கள் கலை இலக்கியக் கழகம் எடுத்து வரும் போராட்டங்களையும், பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி கட்டுவதற்கான முயற்சிகளையும் அங்கீகரித்து எமக்கு ஆதரவாய் செயல்பட்டு வருகிறார்.

அந்த வகையில் தோழர் கோவன் மீது மருது தரப்பினரால் தொடுக்கப்படுகின்ற தாக்குதலைக் கண்டிக்கிறார். உண்மை இவ்வாறு இருக்க அவர்தான் ஒட்டுமொத்த அமைப்பையும் இயக்குகிறார் என்று அவதூறு செய்வதன் மூலம் எமது மொத்த அமைப்பும் பார்ப்பனத்தலைமையால் இயக்கப்படுகிறது என்கிற மிகவும் கிழடு தட்டிய, குழம்பிய குட்டையில் இருக்கும் சேற்றை அள்ளி வீசுகின்றனர். பார்ப்பனத்தலைமை பற்றி பேசிவந்த திராவிட இயக்கத்தினரும், தமிழினவாதிகளும் கூட தற்போது அவரை சமூக செயல்பாட்டாளர் என்று அங்கீகரித்து தமது மேடைகளில் ஏற்றி வருகின்றனர். உண்மை இவ்வாறிருக்க புரட்சிகர அமைப்புகளின் மீது ஆதாரம் இன்றி தன்மனப்போக்கில் அவதூறு பரப்புகின்ற இத்தகைய கேடுகெட்ட, சாதிய அரசியல் பேசும் வக்கிர பேர்வழிகள் தம்மையும் கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொண்டு திரிவது சமூகத்தையே சீரழிக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. இவர்களின் இந்த இழிசெயலுக்கு ‘எதையும் சந்தேகி ‘ என்ற காரல் மார்க்சையும் துணைக்கு அழைத்து கொள்ளவும் கூடும்.

தோழர்களே, எமது செயல்பாடுகளை கடந்த 40 ஆண்டு காலமாக, நெருக்கமாக, அக்கறையுடன் கவனித்து வருகின்ற தோழர்கள், ஜனநாயக சக்திகள், மக்கள் அனைவரும் எம்மையும், எமது அமைப்பில் சாதி, மத வேறுபாடுகளை கடந்து செயல்படுகின்ற அனைவரையும் நன்றாகவே அறிவர். எனினும் சமகாலத்தில் உண்மையைத் திரித்து தொடர்ந்து அவதூறுகளையும் பொய்ப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வரும் போலி மக்கள் அதிகாரத்தின் பித்தலாட்டங்களை அறியப்படுத்தவே இந்த செய்தியை வெளியிடுகிறோம். இதைத்தாண்டி இத்தகைய கெடுமதி கொண்டவர்களுக்கு வேறெந்த பதிலையும் அளிப்பது தேவையற்றது என கருதி முடித்துக் கொள்கிறோம்.

தோழமையுடன்….

மாநில செயற்குழு,
மக்கள் கலை இலக்கிய கழகம்,
தமிழ்நாடு.
03.06.23

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here