சட்டக் கல்லூரி மாணவரை அடித்துக் கொன்ற மகாராஷ்டிரா காவல் துறை!

மூன்று நாட்கள் காவல்துறையின் கொட்டடியில் சித்திரவதை செய்யப்பட்ட பிறகு சிறைக்கு அனுப்பப்பட்ட சோம்நாத் டிசம்பர் 15 ஆம் தேதி அன்று இறந்துவிட்டார்.

0
கொல்லப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர் சோம்நாத் 

காராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பார்பானி நகரின் ரயில் நிலையத்திற்கு அருகில் அம்பேத்கரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. அம்பேத்கரின் சிலைக்கு அருகில் கண்ணாடிப் பேழைக்குள் அரசியல் சாசனத்தின் பிரதியும் வைக்கப்பட்டு உள்ளது.

டிசம்பர் 10ஆம் தேதி அன்று கண்ணாடி பேழைக்குள் இருந்த அரசியலமைப்பின் பிரதி ஒரு நபரால் சேதப்படுத்தப்பட்டது.

இதைக் கண்டித்தும் இதற்கு நீதி கேட்டும் டிசம்பர் 11ஆம் தேதி அன்று கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற அம்பேத்கரியர்களை கலெக்டர் சந்திக்க மறுத்தார். இதை தொடர்ந்து துவங்கிய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறையை தொடர்ந்து களத்தில் இறங்கி கம்பு சுற்றிய காவல் துறை, தலித்துகளின் குடியிருப்பிற்குள் புகுந்து கண்ணில் பட்டவர்கள் அனைவரையும் அடித்து நொறுக்கி உள்ளது. இந்தப் போராட்டத்திற்கு தொடர்பே இல்லாத பெண்ணை அடித்து நொறுக்கியதுடன் பிறப்புறுப்பில் மிதித்துள்ளது. மேலும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகளையும் அடித்து நொறுக்கியதுடன் அந்த சிறுமிகளின் பெயரை முதல் தகவல் அறிக்கையில் இணைத்துள்ளது. அதாவது இந்த 12 வயது சிறுமிகளும் வன்முறையில் ஈடுபட்டனர் என்று குற்றம் சாட்டுகிறது காவல்துறை. என்ன ஒரு அயோக்கியத்தனம்?

இதில் திருப்தி அடையாத காவல்துறை தலித் குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவையும் இரண்டு சக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கியது. சிசிடிவி கேமராவில் பதிவான இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தப் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாக சோமநாத் வயங்காட் சூரியவன்சி (Somnath Vyankat Suryawanshi) என்ற சட்டக் கல்லூரி மாணவர் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்த காவல்துறை அவர்களை அடித்து நொறுக்கி உள்ளது.

இந்த சோமநாத் நாடோடி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். தலித், பழங்குடியினரின் உரிமைகளுக்காக போராடக் கூடியவர். இன்னும் கூடுதலாக இவர் சட்டம் பயின்று கொண்டிருக்கக் கூடியவர். இவையெல்லாம் அதிகார வெறிபிடித்த மனங்களில் என்ன விதமான வெறியை ஏற்படுத்தியிருக்கும் என்பது நம்மால் யூகிக்க முடிகிற ஒன்றுதான்.

மூன்று நாட்கள் காவல்துறையின் கொட்டடியில் சித்திரவதை செய்யப்பட்ட பிறகு சிறைக்கு அனுப்பப்பட்ட சோம்நாத் டிசம்பர் 15 ஆம் தேதி அன்று இறந்துவிட்டார். அவுரங்காபாத்தில் உள்ள தடய அறிவியல் துறை இவர் மீது பட்ட காயங்களின் அதிர்ச்சியால் தான் இவர் உயிர் பிரிந்துள்ளதாக கூறியுள்ளது.


படிக்க: கையை உடை! காலை உடை! பல்லை உடை! சட்டப் பூர்வ கிரிமினல் கும்பல் போலீசு ஆட்சி!


ஆனால் இவருக்கு முன்பே மூச்சு விடும் பிரச்சனை இருந்ததாகவும் அதன் காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்ததாகவும் போலீஸ் கதை அளக்கிறது.

‘சோம்நாத் காவல்துறையினர் அடித்ததால் இறக்கவில்லை. அது கொட்டடி கொலை அல்ல. அவருக்கு ஏற்கனவே இருந்த உடல்நலக் குறைவு காரணமாகத்தான் இறந்துவிட்டார்’ என்று மகாராஷ்டிராவின் பாஜக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அடித்துக் கூறுகிறார். இறந்தவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் அரசின் சார்பில் நிதி அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.


படிக்க: காவல்நிலையங்களில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு  உழைக்கும் மக்களுக்கு மட்டும் ஏன்?


அதே சமயம் இந்த சம்பவம் தொடர்பாக அசோக் ஜோடான் என்ற காவல்துறை ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் அவர் மீது நீதித்துறை விசாரணை நடைபெற உள்ளதாகவும் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். நடந்தது கொட்டடிக்கொலை இல்லை எனில் எதற்காக பணியிடை நீக்கம்? எதற்காக நீதிமன்ற விசாரணை?

இந்த பிரச்சினையில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக தான் மேற்கண்ட நடவடிக்கைகள், கண்துடைப்பிற்காக, எடுக்கப்பட்டு உள்ளன.

அம்பேத்கர் எழுதிய சட்டப் புத்தகத்தின் பிரதி வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் சிலை உள்ள இடத்திலிருந்து சிறிது தொலைவில் ஒரு வீரசிவாஜி சிலை உள்ளது.

அதன் அருகில், டிசம்பர் 10 ஆம் தேதியன்று ‘வங்கதேசத்தில் இஸ்லாமியர்களால் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து’, ஒரு இந்து அமைப்பு திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் நடந்த ஒரு மணி நேரத்தில் அம்பேத்கர் சிலை அருகில் இருந்த அரசியல் சாசனப் பிரதி சேதப்படுத்தப்பட்டுள்ளது. இவை இரண்டிற்கும் தொடர்பு இல்லை என்று நம்மால் நம்ப முடியவில்லை.

ஏனெனில் மகாராஷ்டிராவில் நடப்பது காவி பாசிஸ்டுகளின் இரட்டை எஞ்சின் ஆட்சி. எனவே இம்மாதிரியான தாக்குதல்கள், கொலைகள் மகாராஷ்டிரா மாநிலத்திலும் தொடரும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here