மாண்பமை நீதிஅரசர்களே ….

“திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை” என என் அம்மா அடிக்கடி சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் உண்மையில் சொல்லப்போனால் “திக்கற்றவர்களுக்கு அந்நாட்டின் சட்டமே துணை”. ஆம் எல்லாரும் சமம் என்பதை நிலை நாட்டவே சட்டம் இங்கு வகுக்கப்பட்டது.

எத்தனையோ வழக்குகளை தாமாக முன்வந்து நீங்கள் சட்டத்தின் முன் நிறுத்துகிறீர்கள்.அப்படி இருக்க “காவல்நிலையங்களில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ” ஏற்படுவதையும் தாமாக முன்வந்து நீங்கள் விசாரிக்க வேண்டும் என பணிவன்புடன் வேண்டுகோள் வைக்கிறேன்.

நான் ஒரு அரசு மருத்துவர்.எந்த ஒரு அரசியல் கட்சியிலோ, அரசியல் சார்ந்த அமைப்புகளிலோ நான் அங்கம் வகிக்கவில்லை. ஆனால் ஒரு மனித உரிமை செயற்பாட்டாளராக என்னால் இயன்ற தளங்களில் எல்லாம் தன்னார்வலராக பயணிக்கிறேன் காரணம் எனக்குள் இருக்கும் பொதுஉடைமை சிந்தனைகளே ஆகும்.

இந்நிலையில் “காவல்நிலைய கழிவறை சார்ந்த எலும்புமுறிவுகள்” குறித்து அரசு ஊழியரான நான் பொதுநலமனு அளிக்க இயலுமா என்று தெரியவில்லை.

இதற்காக நான் யாரையாவது அணுகினாலும் அது அரசியலாக்கப்படுமே தவிர இதில் தீர்வு கிடைக்குமா எனத் தெரியவில்லை.ஆகையால் இதுகுறித்து நான் பேசவேண்டிய சரியான தளம் எதுவாக இருக்க முடியும் என்று தெரியாததால் இதை மாண்பமை நீதிபதிகள் முன்பே என் முகநூல் வாயிலாக வைக்கிறேன்.

சட்டத்தை மதிப்பவள் நான். அதனால் தான் சொல்கிறேன் “திக்கற்றவர்களுக்கு சட்டமே துணை,நீதிமன்றங்களே துணை”.

எனக்குள் எழும் கேள்விகள்.

1)தமிழக காவல்நிலைய கழிவறைகளின் தரம் எவ்வாறு உள்ளது?

2)காவலர்கள் யாரும் காவல்நிலைய கழிவறைகளை பயன்படுத்துவது இல்லையா?

ஆம் எனில் ஏன் இதுவரை ஒருகாவலர் கூட வழுக்கி விழுந்து எலும்பு முறித்துக்கொள்ளவில்லை?

இல்லை எனில் அவர்களின் கழிப்பிடம் தனியாக இருக்கா? அதுமட்டும் வழுக்காமல் இருக்கும் அளவிற்கு பராமரிக்கப்படுகிறதா?

3)PWD துறையினர் தானே காவல்நிலைய கழிவறைகளை கட்டியிருப்பர். அப்படியிருக்க வழக்குக்காக செல்பவர்கள் எல்லாம் வழுக்கிவிழும் நிலையில், இதுவரை காவல்நிலைய கட்டிடங்களை குறிப்பாக கழிவறைகளை கட்டிய PWD துறையினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதா? விளக்கம் கேட்கப்பட்டுள்ளதா?

4)உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தின் முதலாளியும் தொழிலாளியும் வழக்குக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்படுகிறார்கள் என்றால் இதுவரை எந்த முதலாளியும் காவல்நிலையத்தில் வழுக்கி விழுந்து எலும்பு முறித்து கொண்டதாக எந்த செய்தியும் நான் பார்க்கவில்லை.ஆனால் காவல்நிலையத்தில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்படுபவர்கள் எல்லாம் தொழிலாளிகளாக உள்ளனர்.

மனிதன் மட்டுமே சாதி மத வர்க்க பாலின நிற வேறுபாடுகளை பார்ப்பான்.கழிவறைகள் அப்படி பார்க்காது, காரணம் அது அஃறிணை. அப்படி இருக்க இதுவரை காவல்நிலையத்தில் வழுக்கிவிழுந்து எலும்புமுறிந்தவர்கள் எல்லாம் பாட்டாளிகளாக மட்டுமே இருப்பதன் காரணம் என்ன ???

5)தமிழக காவல்நிலைய கழிவறைகள் மட்டுமே இப்படி இருப்பதுபோல் உணர்கிறேன். வேறு மாநிலங்களில் இதுபோன்ற செய்திகள் வந்து நான் பார்க்கவில்லை.

மாண்பமை நீதிபதிகளே இத்தகைய நடைமுறையை கடந்த ஏழு ஆண்டுகளா நான் கவனித்து வருகிறேன் தமிழகத்தில்.

அதற்குமுன்பும் இந்நிலை இருந்ததா என தெரியவில்லை.இதுகுறித்து தாமாக முன்வந்து நீங்கள் வழக்குவிசாரணை நடத்தவேண்டும்.

ஒருவரை சந்தேகத்தின்பேரில் காவல்நிலையம் அழைத்துச்செல்லலாம், ஆனால் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றமே தண்டனை வழங்கவேண்டும்.மாறாக காவல்துறையினர் யாரையும் கொடூரமாக தாக்க கூடாது(தற்காப்பு நிலை தவிர).

காவல்நிலையம் செல்லும் பாட்டாளிவர்க்க இளஞர்கள் மாவுக்கட்டோடு வரும் நிலை நீடிக்க கூடாது.ஆகையால் தமிழக மாண்பமை நீதிபதிகள் இதுகுறித்து தாமாக முன்வந்து விசாரிக்கவேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

மருத்துவர்.அனுரத்னா

முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here