துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கர் பாராளுமன்றத்தின் மாநிலங்கள் அவையின் தலைவராக (அதாவது சபாநாயகராக) இருந்து அவையை வழிநடத்தி வந்தவர். இவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீர் என்று தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். தனது உடல் நலக்குறைவு காரணமாக பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

‘2027 ஆகஸ்ட் வரை பதவியில் இருந்து விட்டு சரியான நேரத்தில் விலகி விடுவேன்’ என்று கடந்து பத்து நாளைக்கு முன்பு கூட ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார். ஜூலை 21ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மாநிலங்களவையின் அலுவல் ஆலோசனைக் கூட்டத்தில் மாலை 4:30 மணி வரையிலும் கலந்து கொண்டிருந்து விட்டு, மறுநாள் 22ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் ஒரு மணிக்கு மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார்.

இப்படி அறிவித்து விட்டு சென்ற தன்கர் 22ஆம் தேதி அன்றே இரவு 9:30 மணிக்கு தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இடைப்பட்ட நான்கரை மணி நேரத்தில் நடந்தது என்ன? அவரது ராஜினாமாவிற்கான உண்மையான காரணம் என்ன? என்பதுதான் இப்பொழுது  ஊடகங்களில் பேசு பொருளாக உள்ளது.

இவரின் ராஜினாமா குறித்து பார்ப்பதற்கு முன், இவர் எப்படிப்பட்டவர் என்பதை முதலில் பார்த்து விடலாம்.

மாநிலங்களவையில் தன்கரின் சதிராட்டம்!

அவைத் தலைவராக இருப்பவர் ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி என்ற வேறுபாடின்றி, பக்கச்சார்பின்றி அவையை வழிநடத்த வேண்டும் என்பது மரபு. எனவே இந்த பதவியில் அமர்பவர்கள் நாசுக்கான முறையில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக அவையை வழிநடத்திச் செல்வது என்பதுதான் வழக்கமானது.

ஆனால் அந்த வழக்கத்தை எல்லாம் குப்பையில் வீசிவிட்டு ஆளுங்கட்சியான பாஜக-விற்கு ஆதரவாகவும்  எதிர்க்கட்சியினருக்கு எதிராகவும் அவையை நடத்திச் சென்றவர் தான் ஜகதீப் தன்கர். பல நேரங்களில் தானே மிகப்பெரிய சங்கிதான் என்பதை எதிர்க்கட்சியினரை பேச விடாமல் தடுத்ததன் மூலமும் சங்கித் தனமான தனது பேச்சின் மூலமாகவும் வெளிப்படுத்திக் கொண்டவர். துளிகூட ஜனநாயகம் அற்ற முறையில் அவையை நடத்தி இழிபுகழ் பெற்றவர்.

இவரின் சங்கித் தனங்களை பொறுக்க முடியாமல், இந்திய வரலாற்றிலேயே இல்லாத வகையில், துணை ஜனாதிபதிக்கு எதிராக அதாவது மாநிலங்களவையின் தலைவரான ஜகதீப்  தன்கர் மீது எதிர்க்கட்சிகள் பதவிநீக்கத்  தீர்மானம் கொண்டு வந்தன. அப்பொழுது பாஜக கூட்டணிக் கட்சி உறுப்பினர்களின் வாக்குகள் மூலமாக அந்த தீர்மானம் முறியடிக்கப்பட்டு இவரது பதவி காப்பாற்றப்பட்டது.

மாநில சட்டமன்றங்கள் இயற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது கவர்னர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுத்தாக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்
தமிழக ஆளுநர் R.N.ரவியின் அயோக்கியத்தனத்திற்கு எதிராக தீர்ப்பளித்தது. அப்பொழுது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் “சூப்பர் பார்லிமெண்டாக” செயல்படுகின்றனர் என்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 142வது  உறுப்பு நீதிபதிகளுக்கு கொடுத்திருக்கக் கூடிய சுயேட்சையான அதிகாரத்தை “ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஆயுத ஏவுகணையை” போன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பயன்படுத்துவதாகவும் மிகமிகக் கடுமையாக விமர்சித்தார்.

படிக்க: ஜக்தீப் தன்கர், உச்சநீதிமன்றத்தின் மீது பாய்ந்து குதறுவது ஏன்?

இதைக் கண்ட, நாட்டின் மீது அக்கறை கொண்டுள்ள உண்மையான ஜனநாயக சக்திகள் ‘பாஜக கொடுத்துள்ள பரிசிற்கும் (பதவிக்கும்)  மேலாக ஜெகதீப் தன்கர் கூவுகிறார்’ என்று பேசிக் கொண்டனர்.

பதவி விலகல் குறித்து ஊடகங்களின் புலனாய்வு

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிரான தன்கரின் ‘கூவல்’ பாஜகவிற்கு நெருடலை ஏற்படுத்திவிட்டது என்றும்  உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஸ்வந்த் வர்மா வீட்டில் பல கோடி கணக்கான ரூபாய் பணம் சிக்கியது காரணமாக அந்த நீதிபதியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தை தன் ஏற்றுக் கொண்டுடதுடன் இந்தத் தீர்மானத்தை விவாதத்திற்கு கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநிலங்களவை செயலருக்கு தன்கர் உத்தரவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று பேசப்படுவதாக தினகரன் தலையங்கம் கூறுகிறது. இதே போன்ற கருத்து சமூக ஊடகங்களிலும் விவாதிக்கப்படுகிறது.

ஜகதீப் தன்கர் - துணை ஜனாதிபதி பதவிக்கு நேர்மையாக நடந்து கொண்டாரா என்பதே நம் கேள்வி!

நீதிபதி யஸ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை மக்களவையில் பாஜக கொண்டு வரும் நிலையில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளும் கொண்டு வந்தன. ஒரே நேரத்தில் இரு அவைகளிலும் ஒரு குறிப்பிட்ட தீர்மானம் கொண்டுவர முயற்சிக்கப்படும் பொழுது ஏதோ ஒரு அவையில் மட்டும் அந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு விவாதத்திற்கு எடுத்துக் கொண்டால் போதுமானது என்பது நடைமுறை.

பாஜக கொண்டு வரும் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டால் ‘ஊழல் கறை படிந்தவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தாலும் அவரை பதவியில் இருந்து தூக்கி எறிவதற்கு பாஜக தயங்காது; மோடி தயங்கமாட்டார்’ என்ற பிம்பத்தை மக்களிடையே பரப்பலாம் என்று பாஜக விரும்புகிறது.

ஆனால் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த தீர்மானத்தை தன்கர் ஏற்றுக்கொண்டதால் இந்த பெருமை எதிர்க்கட்சிகளுக்கு போய்விடும்; பாஜக விற்கும் மோடிக்கும் கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் மோடி அமித்ஷா கும்பல் இவரை ராஜினாமா செய்யச் சொல்லி விட்டது என்று சமூக ஊடகங்களில் விவாதங்கள் செல்கின்றன.

75 வயதுக்கு மேல் உள்ளவர்களை பதவிகளில் நீடிக்க விடக்கூடாது என்பது ஆர்எஸ்எஸ்-ன் விதி. அதன் அடிப்படையிலேயே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றோர் பாஜகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டனர். அதேபோன்று மோடியையும் தனது பதவியில் இருந்து விலகுமாறு ஆர்எஸ்எஸ் வற்புறுத்தியும் மோடி விலகுவதாக இல்லை.

படிக்க: பஹல்காம் தாக்குதலும், ஆர்எஸ்எஸ் – பாஜகவால் தூண்டப்படும் தேசிய வெறி – இஸ்லாமிய எதிர்ப்பு வெறியும்!

எனவே தற்பொழுது 75 வயது நிறைவடைய  உள்ள தன்கரை பதவிவிலகச் சொல்வதன் மூலம் மோடியையும் பதவி விலகுமாறு ஆர்எஸ்எஸ் நிர்பந்திக்கிறது என்றும் ஒரு கருத்து சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட “ஆபரேஷன் சிந்தூர்” குறித்தும், பீகாரில் நடத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்தும் அதில் நடைபெற்று வரும் அயோக்கியத்தனங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விவாதிக்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி உள்ளன. இதுகுறித்து இந்திய மக்களிடையேயும் விவாதங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

நாட்டு மக்களின் கவனத்தை இந்த விஷயங்களில் இருந்து திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார் என்றும் ஒரு கருத்து உலவுகிறது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, மோடி பதவி விலகாததால் அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதற்கான வேலைகளை ஆர்எஸ்எஸ் செய்து வருகிறது. இந்த நிலையில் மாநிலங்களவையில் ஆர்எஸ்எஸ்-ன் வழிகாட்டுதலின்படி செயல்படும் தன்கரை மாநிலங்களவை தலைவர் பதவியில் விட்டு வைப்பது மோடியின் பிரதமர் பதவிக்கு ஆபத்தாக முடியலாம் என்று மோடி – அமித்ஷா கும்பல் கருதுவதால் இக்கும்பல் அவரை பதவி விலகச் செய்து விட்டது என்றும் ஒரு கருத்து உலவுகிறது.

ஜெகதீப் தன்கர் குறித்து பாஜக அல்லாதாரின் பாராட்டுரைகள்!

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ்: …..”2014 க்கு பிந்தைய இந்தியாவை எப்போதும் பாராட்டிய தன்கர் விவசாயிகளின் நலனிலும் அதிக அக்கறை கொண்டு தைரியமாக கருத்து தெரிவித்து வந்தார். பொது வாழ்வில் அதிகரித்து வரும் அகங்காரம் குறித்தும் கருத்து தெரிவித்தார். அவையில் அவர் ஆளுங்கட்சியையும் எதிர்க்கட்சிகளையும் சமமாக நடத்தினார். முடிந்த வரை எதிர்க்கட்சிகளுக்கு இடமளிக்க விரும்பினார்.

விதிமுறைகள், உரிமைகள் மற்றும் நெறிமுறைகளை கடைபிடிப்பவராக இருந்தார். இதனால் அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக நம்பினார்.” ….

…..”அவர் தனது முடிவை மறுபரிசலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். பிரதமர் மோடி தன்கரின் மனதை மாற்றச் செய்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது நாட்டின் நலனுக்கானது.”…. என்று தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார். (தினகரன் 23/7/2025 நாளிதழ்)

ஜெகதீப் தன்கர் “ஆளுங்கட்சியையும் எதிர்க்கட்சிகளையும் சமமாக நடத்தினார்”; “விதிமுறைகள், உரிமைகள் மற்றும் நெறிமுறைகளை கடைபிடிப்பவர்களாக இருந்தார்” எனும் பொழுது அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதற்காக பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வந்தன என்பதற்கு ஜெயராம் ரமேஷின் – காங்கிரசின் விளக்கம் என்ன? இப்படி காங்கிரஸ் பேசுவது அயோக்கியத்தனம்; மக்களை ஏமாற்றும் வேலை என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.

ஜெகதீப் தன்கர் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் காரர் அல்ல. அவர் ஜனதா தளத்தில் இருந்து காங்கிரசுக்கு வந்து, பிறகு பாஜகவிற்கு வந்தவர். இந்த நிலையில் தனக்குமேல் உள்ளவர்கள் சொல்வதைத்தான் தான் பேச வேண்டி இருந்தது காரணமாக ஜனநாயகவாதியான ஜெகதீப் தன்கர் வருத்தம் அடைந்தார் என்றும் இந்த நிலையில் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு விருந்து வைத்தார்; காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வை சந்தித்து பேசினார்  என்றும் கூட அதாவது ஜெகதீப் தன்கர் ஒரு ஜனநாயகவாதி. ஆனால் அவர் பாஜகவின் கருத்தைத்தான் பேச வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டவர். அப்படி பேசுவதற்காக மனவருத்தம் கொண்டிருந்தவர் என்றும் கூட கொஞ்சம் கூட யோசனை இன்றி, உண்மைக்கு புறம்பாக சமூக ஊடகங்களில் ஜனநாயகவாதிகள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவர்களின் பேச்சைக் கேட்டு எங்கே போய் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை.

தன்கரின் பதவி விலகலை நாம் எப்படி பார்க்க வேண்டும்?

சுயநலனுக்காக பாசிச பாஜகவின் ஊதுகுழலாக செயல்பட்ட தன்கரின் பதவி விலகல் என்பது மோடி அமித்ஷா கும்பலின் நிர்பந்தத்தால் நடந்திருந்தாலும் சரி அல்லது ஆர்எஸ்எஸ் நிர்பந்தத்தால் நடந்திருந்தாலும் அதனால் இந்திய ஜனநாயகத்திற்கோ மக்களுக்கோ எவ்வித நன்மையோ தீமையோ செய்து விடப் போவதில்லை.

ஏனெனில் தன்கரை பதவி விலகச் செய்தவர்கள் அவரைவிட தமக்கு விசுவாசமான, வீரியமிக்க பணியாளராக இருக்கும் ஒருவரை கண்டறிந்து அவரை தன்கரின் இடத்தில் பொருத்தி விடுவர் எனும் பொழுது இந்த விஷயத்தில் நாம் அக்கறை செலுத்துவதற்கு எதுவும் இல்லை.

ஆனால் இப்படி பாஜக – ஆர்எஸ்எஸ்-ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி அளிக்கப்படும் நபர்கள் தங்களின் கவனத்தில் கொள்வதற்கு ஒரு விசயம் உள்ளது. பாஜக – ஆர்எஸ்எஸ்-ன் தலைமையில் இருப்பவர்களுக்கு தேவைப்படும் வரை மட்டுமே தங்களுக்கு மரியாதையும் பதவியும் இருக்கும் என்பதையும் அவர்களுக்கு தேவையில்லை என்று முடிவு செய்து விட்டால் உடனடியாக தாங்கள் கழிப்பறை காகிதமாக குப்பைத் தொட்டியில் வீசப்படுவோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

இப்படித் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் இந்த விசயத்தை நன்கு உணர்ந்தே இருப்பர் என்பதும் பதவியில் இருக்கும் பொழுதே தங்களால் முடிந்தவரை ஆதாயம் அடைந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு நொடி கூட மறக்கத் துணிய மாட்டார்கள் என்பதும் உறுதி.

  • குமரன்

1 COMMENT

  1. கட்டுரை துவக்கம் முதல் ஏறத்தாழ இறுதிவரை பல்வேறு ஊடகங்களின் வாயிலாக நாம் அறிந்தவற்றை சஸ்பென்சாகவே கொண்டு செல்லப்படுகிறது. ஜெகதீப் தன்கரின் படுமோசமான ஆர்எஸ்எஸ் பற்றுறுதி கொண்ட இழி செயல்களை அவர் மேற்குவங்க ஆளுநராக இருந்த காலத்திலேயே அனைவராலும் உணர முடிந்தது. பொதுவாக நமது பார்வையில் இவர் இப்பதவியில் இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன? எதற்கும் நாயக் கற்றவர் தான் என்பதனை கட்டுரை விலக்கி இருந்தாலும் ஊகங்கள் அடிப்படையில் விலகலுக்கான காரணங்கள் பலவிதத்தில் பரவலாக்கப்பட்டிருக்கும் சூழலில் நமது கண்ணோட்டம் என்ன? நமது வினையாற்றல் எதுவாக இருக்க முடியும்? என்பதை இணைத்து கட்டுரை தெளிவுபடுத்தி இருக்குமேயானால் இன்னும் சற்று கூடுதலான சிறப்பைப் பெற்றிருக்கும். தோழர் குமரன் அவர்களுடைய பல்வேறு கட்டுரைகள் ஆழம் பொருந்தியவையாக இருந்ததை நான் அறிந்தவனே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here