2018 மே.22 இல் அனில் அகர்வாலின் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக நின்ற தமிழக அதிமுக அரசும், ஒன்றிய பாஜக அரசும் உயிர்வாழும் உரிமையை கேட்ட சொந்த நாட்டு மக்களை காக்கை, குருவிகளைப் போல் சுட்டுத்தள்ளிப் படுகொலையை அரங்கேற்றிய கருப்பு நாள்!

மக்கள் ஒன்றுபட்டால், உழைக்கும் மக்கள் சக்தியின் முன் எவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தையும், அதன் ஆணவத்தையும் தகர்த்தெறிய முடியும் என நிலைநாட்டப்பட்ட தியாகிகளின் நாளும் கூட.

நம்பிக்கை ஒளிக்கீற்றாய் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் !

ஸ்டெர்லைட் அல்லது வேதாந்தா என்ற ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக ஒரு ஊர் அல்ல; ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்த்து நின்று போராடியது. தமிழகம் முழுவதும் இருந்தும் பல்வேறு அமைப்பினர், அல்லது தனி நபர்கள் நேரில் வந்து தூத்துக்குடி போராட்ட களத்தில் உள்ள மக்களை பல்வேறு கிராமங்களுக்கும் சென்று சந்தித்து ஆதரவு தந்து களமாடிய வரலாற்று சிறப்புமிக்கது ஸ்டெல்லைட் எதிர்ப்பு போராட்டம்.

“லட்சம் பேர் கூடுவோம் ஸ்டெர்லைட்டை மூடுவோம்” என்ற முழக்கத்தை முன்வைத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் ஊரடங்கு உத்தரவு, அச்சுறுத்தலையும் மீறி உணர்வெழுச்சியுடன் போராட்டக் களத்திற்குச் வந்தனர் தூத்துக்குடி மக்கள்.

துப்பாக்கிச் சூடு வரை சென்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் தூத்துக்குடி மக்களின் முன்னெடுப்புக்கு முன்னரே பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சியினராலும் நடத்தப்பட்டது. ஆனால் அந்த போராட்டங்கள் ஒரு குறிப்பிட்ட வரம்போடு நின்று போயின. மக்கள் திரளின் போராட்டமாக பரிணமிக்கவில்லை.

இறுதியாக, தூத்துக்குடியை சுற்றியுள்ள கிராம மக்களின் விடாப்பிடியான போராட்டம், வேதாந்தாவின் பணத்திற்கு விலை போகாத போராட்டம், ஒட்டுமொத்த மாவட்டத்தின் போராட்டமாகவும், தமிழகத்தின் போராட்டமாகவும் பரிணமித்து ஒருபுறம் துப்பாக்கிச் சூட்டிலும் மறுபுறம் ஸ்டெர்லைட்டுக்குத் தடை விதித்து இழுத்துப் பூட்டுவதிலும் போய் முடிந்துள்ளது.

போராட்டக் களத்தில் தமது வாழ்வுரிமையை நிலைநாட்ட கார்ப்பரேட் அனில் அகர்வாலை தமிழ் மண்ணில் இருந்து விரட்டி அடிக்க முழக்கமிட்டு சென்ற போராளிகளின் உயிர் சாலையிலும், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலும் பறித்தெடுக்கப்பட்டது.

தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து ஸ்டெர்லைட்டை மூடுவதாக அறிவித்தாலும் கூட இன்றுவரை கண் முன் அந்த ஆலை நின்று கொண்டு தான் உள்ளது. அதனை பிரித்து அகற்றும் திசையில் வேலைகள் முன் நகராதது ஏன்?

ஆலையைத் தான் பிரித்து அகற்ற உருப்படியாக எதையும் செய்யவில்லை. குறைந்தபட்சம் தியாகிகளின் நினைவை போற்ற ஒரு மணிமண்டபத்தையாவது கட்டியிருக்க வேண்டும் அல்லவா? அதுவும் நடக்கவில்லை.

மணிமண்டபம் அமைக்க எது தடை?

நாசகார ஸ்டெர்லைட்டை எதிர்த்து களப்பலியான தியாகிகளின் நினைவாக மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆண்டுகள் பல கடந்தும் நிறைவேற்றப்படாமலேயே அரசின் முன்னெடுப்புக்காக காத்து நிற்கிறது.

திமுக அரசு உண்மையிலேயே மக்கள் போராட்டத்தை ஆதரிக்கிறது; போராடிய மக்களின் தரப்பில் தான் நிற்கிறது என்றால், உடனடியாக பணிகளை துவங்க வேண்டும்.

உச்ச நீதிமன்றம் வரை சென்றும் முட்டி பார்த்து மண்ணைக் கவ்வியுள்ள அனில் அகர்வாலை தலையில் கொட்டி உட்கார வைக்காமல், கார்ப்பரேட் காவிபாசிச மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு கிரிமினல் குற்றவாளியுடன் கூடிக் கொஞ்சி குலவிக் கொண்டுள்ளது.

பாஜகவை எதிர்த்து களமாடும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் ஆலையை நிரந்தரமாக மூடவும் முழுமையாகப் பிரித்து அகற்றவும் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் மௌனம் சாதிக்கிறது. இது கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமானதாக மாறியுள்ளது.

வேலை போய்விட்டதால் ஆலையை திறக்க வேண்டுமாம்!

அந்த ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்களின் வாழ்நிலை மோசமாக உள்ளதாகவும், அவர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளதாகவும் முன் வைக்கப்பட்டு ஆலை நிர்வாகத்தின் தூண்டுதலின் பெயரில் தொழிலாளர்கள் அந்த தொகுதியின் எம்பி- யான திமுகவின் கனிமொழி மற்றும் மா.சுப்பிரமணியன், அனிதா ராமச்சந்திரன் போன்றவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

மழையிலும், காடுகளிலும் நடக்கும் சட்டவிரோத போதை உற்பத்தியான கஞ்சா, அபின், சாராய ஊரல் போன்றவற்றிலும் கூட சிலருக்கு வேலை கிடைக்க தான் செய்கிறது. அது சட்ட விரோதம்; நாட்டு மக்களுக்கு தீங்கானது என்றே நாம் அதை அழிப்பதை வரவேற்கிறோம். இதனால் அத்தொழிலில் ஈடுபட்டுள்ள பலரும் வேலையை இழக்கத்தான் செய்கின்றனர். அதையெல்லாம் நாம் ஒரு பொருட்டாக எடுப்பதில்லை.

படிக்க:

 ஸ்டெர்லைட்டுக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பும்! கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக  தொடரும் மக்கள் போராட்டமும்.

♠ ஸ்டெர்லைட் முதலாளி தமிழகத்தில் நுழையக்கூடாது! – பத்திரிக்கைச் செய்தி

அதே போல் தான் மண்ணையும் நிலத்தடி நீரையும் காற்றையும் நஞ்சாக்கும் ஒரு நாசகார ஆலையை இழுத்து மூடும் பொழுது, அதில் பணியாற்றிய பலரும் வேலையிழந்து தவிக்கத்தான் செய்வார்கள். அந்த ஆலையை நம்பி வாகனங்கள், மேன் பவர் சப்ளை, உணவகம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்த தொழில்களை செய்து வரும் பலரும் பாதிக்கப்படத்தான் செய்கிறார்கள். அவற்றை சரிசெய்ய மக்களும் அரசும் வேறு வழிகளைப் பரிசீலிக்க வேண்டும். ஒட்டுமொத்த மக்களின் நலன்தானே முக்கியம்.

ஆனால் கார்ப்பரேட் நரியான அனில் அகர்வால் தனது அடிப்பொடிகளை ஏவி “எங்களுக்கு வேலைவாய்ப்பு போய்விட்டது. ஆலையை திறக்க வேண்டும்” என்று துணிச்சலாக அமைச்சர்களிடம் மனு கொடுத்து வருகின்றனர். பகிரங்கமாக ஆலையை திறக்க வேண்டும் எனக்கோரி கலெக்டரிடம் மனு கொடுப்பது உள்ளிட்ட வேலைகளிலும் கூட ஈடுபட்டு வருகின்றனர். திமுக அரசு இதையெல்லாம் கண்டும் காணாமலும் கடந்து செல்கிறது.

தமிழக அரசு நியமித்த அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைப்படி துப்பாக்கிச் சூடு நடத்திய கிரிமினல் குற்றவாளிகளான போலீசார் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது மட்டுமின்றி ஆலையை அங்கிருந்து அப்புறப்படுத்துவது குறித்தும் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வில்லை. திமுக அரசு தூத்துக்குடி மக்களுக்கு தந்த தேர்தல் வாக்குறுதியில் முக்கியமானது ஸ்டெர்லைட் மூடுவோம் என்பதுதான். அந்த ஒற்றை வாக்குறுதியை நிறைவேற்றி தனது வாய்மையை காப்பாற்றிக் கொள்வதே திமுகவிற்கு நல்லது; நம் நாட்டிற்கும் நல்லது. மண்ணைக் காக்க தம் இன் உயிரை ஈந்து தியாகிகளானவர்களுக்கு நினைவு மண்டபம் கட்டி நாம் நமது நன்றியை காணிக்கையாக வேண்டும்.

ஆலையை பிரித்து அகற்றுவது, மற்றும் தியாகிகளுக்கு நினைவு மண்டபம் அமைப்பது, மக்களை சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட உயர் அதிகாரிகளை தண்டிப்பது ஆகிய மூன்று கோரிக்கைகளுக்கும் செவி சாய்த்து திமுக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் தமிழக அரசின் மீதான, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் பிரதிதியான கனிமொழியின் மீதான நம்பிக்கையை மக்கள் படிப்படியாக இழப்பார்கள். ஆட்சியாளர்களின் அலட்சியம் அல்லது தாமதத்தால் மீண்டும் ஒரு போராட்டத்தை நோக்கி நாட்டு மக்கள் நகர்வார்கள் என்பதை ஸ்டாலின் அரசு உணரவும் வேண்டும். வரும் மே 22 இல் நாம் ஒரு சடங்காக அஞ்சலி செலுத்தி கடந்து செல்லாமல், அலட்சியம் காட்டும் ஆட்சியாளர்களை எச்சரிக்கும் வகையில் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்.

  • இளமாறன்

2 COMMENTS

  1. மே 22 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளின் செய்தி கட்டுரையாக தொகுக்கப்பட்டுள்ளது சிறப்பாக உள்ளது

  2. எந்த அரசாக இருந்தாலும் முதலாளித்துவ நலனில் அக்கறையாக இருக்கிறது என்பதைதான் இந்த கட்டுரை உணர்த்துகிறது.
    ஆளும் திமுக அரசு மக்களின் உணர்வுகளை மதித்து வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here