
முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கு ஏகாதிபத்தியமாக பரிணமிப்பது பற்றி ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற முறையில் ஆய்வு செய்த தோழர் லெனின் அதற்கு இணையாகவே பாட்டாளி வர்க்க இயக்கத்தை சீரழிக்கின்ற, ’தொழிலாளி வர்க்கத்தின் பிரபுக் குலத்தவர்’ என்று குட்டி முதலாளித்துவ கும்பலை அம்பலப்படுத்துகிறார்.
ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலத்திற்குப் பின்னர் ஏகாதிபத்திய முதலாளித்துவம் பல மடங்கு பல்கி பெருகி நிதி மூலதன ஏகபோகமாக உலகையே சூறையாடி வருகின்ற இந்த காலகட்டத்தில், மார்க்சியத்தின் பெயரால் உலவுகின்ற பல்வேறு குட்டி முதலாளிகள் மற்றும் ஆய்வாளர்கள் மார்க்சியத்தின் மீதும், கம்யூனிச இயக்கத்தின் மீதும் அவநம்பிக்கையை உருவாக்குகின்ற, ’திருப்பணியை செவ்வனே’ செய்கிறார்கள்.
புரட்சிகர அமைப்புகளில் சில காலம் வேலை செய்துவிட்டு சொந்தக் காரணங்களுக்காக வெளியேறும் சிறு பிரிவினர், தான் ஏதோ சித்தாந்த வேறுபாடு காரணமாக தான் மா.லெ அமைப்புகளை விட்டு வெளியேறியதாக கதைக்கின்றனர். இந்த வகையினரில் ஒருவர்தான் ஆய்வாளர் மா.சிவக்குமார் மற்றும் இவர் தலைமையிலான அணி. “அரசியல் சித்தாந்த கோட்பாடுகளில் தெளிவில்லாமலும் கட்சி மற்றும் அமைப்பு விசுவாசத்தின் அடிப்படையில் மட்டுமே கட்சிக் கட்டமைப்புகளை உருவாக்கி புதிய பண்ணையடிமைகளை உருவாக்கி வளர்த்தெடுப்பது எப்பேற்பட்ட கேடுகெட்ட நிலை என்பதை எங்களது பட்டறிவின் மூலம் புரிந்து வைத்திருப்பதால் ஆள்பிடிக்கும் வேலையில் ஒருபோதும் நாங்கள் ஈடுபடப் போவதில்லை” என்று அறிவித்துக் கொண்டுள்ள இவரது குழுவினர் சார்பில் இவர் கலந்துக் கொண்டு இந்திய கம்யூனிச இயக்கத்தின் வளர்ச்சி பற்றி ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார்.
ஆனால், இவர்களின் உள்ளடி வேலைகளுக்கு எதிராக பாட்டாளி வர்க்க இயக்கம் எப்போதும் விழிப்புணர்வு கொண்டே உள்ளது என்பதும், ”ஏகாதிபத்தியமும், பாட்டாளி வர்க்க புரட்சியும்” என்ற லெனினிச சகாப்தத்தில் ஏகாதிபத்தியம் பற்றிய தோழர் லெனினது ஆய்வுகளையும், அந்த கண்ணோட்டத்தில் உலகை ஆய்வு செய்து மூன்றுலகக் கோட்பாடாக முன்வைத்த தோழர் மாசேதுங்கின் ஆய்வு முறைகளையும் தனது கண்ணோட்டமாக வரித்துக் கொண்டு உலகில் ஏற்படக்கூடிய மாற்றங்களை பற்றி ஆய்வு செய்கிறது. அந்த அடிப்படையில் தனது அணிகளை மட்டுமின்றி, பாட்டாளி வர்க்கத்திற்கும் கண்ணோட்டத்தை உருவாக்குகிறது.
ஆனால் இவற்றையெல்லாம் தனது அறிவு மேட்டிமைத்தனத்தால் புறம் தள்ளுகின்ற குட்டி முதலாளித்துவ ஆய்வாளர்கள், பாட்டாளி வர்க்க இயக்கத்தின் நடைமுறையின் மீது தாக்குதலை தொடுப்பதற்கு முக்கியமாக கீழ்க்கண்ட சித்தாந்த அடிப்படையும், பின்னணியும் உள்ளது. இதனையும் தோழர் லெனின் நமக்கு சுட்டிக் காட்டுகிறார்.
பகுதி 1
”மார்க்சியமும், பிழைப்புவாதமும்!” தத்துவ மாரீசன்களை விரட்டியடிப்போம்!
”முதலாளித்துவத்தின் புல்லுருவித்தனமும் சீரழிவுமேதான், முதலாளித்துவ வளர்ச்சியின் மிக உயர்ந்த வரலாற்றுக் கட்டமாகிய ஏகாதிபத்தியத்தின் தனி இயல்பேதான் இந்த அடிப்படை. இந்த வெளியீடு தெளிவுபடுத்துவது போல், ”சீட்டு கத்தரித்தே” உலகமனைத்தையும் சூறையாடும் அளவுகடந்த செல்வமும் வலிமையும் வாய்ந்த விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய (புவிபரப்பில் வாழ்வோரில் பத்தில் ஒன்றுக்கும் குறைந்தவர்கள்: மிக ”தாராள” மனப்பாங்குள்ள மிதமான, கணக்கீட்டின்படி ஐந்தில் ஒன்றுக்கும் குறைந்தவர்கள்) ஒரு சில அரசுகளை முதலாளித்துவம் இப்போது தனியாக பிரித்துக் காட்டுகிறது.”
”போருக்கு முந்தைய விலைகளின்படி, போருக்கு முந்தைய முதலாளித்துவ புள்ளி விவரங்களின்படி மூலதன ஏற்றுமதியானது ஆண்டுதோறும் 800-1000 கோடி பிராங்கு வருவாய் அளித்தது. இப்பொழுது நிச்சயமாக, அது மேலும் மிக அதிக வருவாய் அளிக்கிறது.
தெளிவாக இத்தகைய மாபெரும் விலை இலாபங்களை (முதலாளிகள் தமது ”சொந்த” நாட்டுத் தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிந்து பெறும் இலாபங்களைவிடக் கூடுதலானவை) பயன்படுத்தி, தொழிலாளர் தலைவர்களுக்கும், தொழிலாளர் பிரபுக்குலத்தோரின் மேல் மட்டத்தினருக்கும் லஞ்சம் கொடுக்க முடிகிறது. ”முன்னேறிய” நாடுகளின் முதலாளிகள் இதையே தான் செய்கிறார்கள். இந்த மேல்மட்டத்தினருக்கு வெவ்வேறான ஆயிரம் வழிகளில் நேர்முகமாகவும், மறைமுகமாகவும், வெளிப்படையாகவும், திருட்டுத்தனமாகவும் லஞ்சம் கொடுக்கிறார்கள்.
முதலாளிகளாக மாறிய இந்த தொழிலாளர்கள் அல்லது ”தொழிலாளி பிரபுக்குலத்தோர்” தங்களது வாழ்க்கை முறையிலும், ஊதியத்தின் அளவிலும் தங்கள் கண்ணோட்டம் முழுவதிலும் குட்டி முதலாளித்துவ அற்பவாத மனப்பான்மைக் கொண்ட இவர்கள், இரண்டாவது அகிலத்தின் பிரதான தூண்கள் ஆவர்; தற்காலத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதான சமூக தூண்கள் (இராணுவ தூண்கள் அல்ல) ஆவர். ஏனெனில் அவர்கள் தான் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் மெய்யான கையாட்களாக, முதலாளித்துவ வர்க்கத்தின் தொழிலாளர் சேவர்களாக (labour lieutenants of the capitalist class) சீர்திருத்தவாதத்திற்கும், தேசிய வெறிக்குமான மெய்யான வாகனங்களாக இருக்கின்றன.
பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையில் நடைபெறும் உள்நாட்டுப் போரில் அவர்கள் தவிர்க்க இயலாதபடி பெரிய எண்ணிக்கையில் முதலாளித்துவ வர்க்கத்தின் தரப்பை ஏற்கின்றனர். ”கம்யூனார்டுகளுக்கு” எதிராய் ”வெர்சேய்லர்கள்” வரிசையில் தரப்பிலே நிற்கின்றனர்.” என்று குட்டி முதலாளிகளின் மன இயல்பை அம்பலப்படுத்துகிறார் தோழர் லெனின்.
காலனி, அரைக்காலனி, நவீன காலனி ஆகிய ஏகாதிபத்திய சுரண்டல் வடிவங்களுக்கு பிறகு 70-களில் தோன்றிய ஏகாதிபத்திய முதலாளித்துவ நெருக்கடி புதிய வகையில் சுரண்டல் வடிவத்தை மேற்கொள்வதற்கான சூழலை உருவாக்கியது.
காலனிய நாட்டு மக்களின் மீது நேரடியான காலனிய அடக்குமுறையையோ அல்லது தனது அடிவருடிகளை கொண்ட நவீன காலனியாதிக்க அடக்குமுறைகளையோ அல்லது அந்த நாட்டில் உள்ள ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவை தனது கைக்குள் வைத்துக் கொண்டு அரைக்காலனிய தன்மையில் அடக்குகின்ற வழிமுறைகளையும் இனி மேலும் கடைபிடிக்க முடியாது என்ற சூழலில் மறுகாலனி என்ற புதிய வடிவத்தை கொண்டு வந்தது ஏகாதிபத்திய முதலாளித்துவம்.
ஏகாதிபத்தியம் தோன்றிய காலத்தில் தோழர் லெனின் வரையறுத்ததை போல ”கார்டல்கள், டிரஸ்டுகள், சிண்டிகேட்டுகள் போன்ற முதலாளித்துவ கூட்டு கம்பெனி முறை படிப்படியாக வளர்ந்து 70-களில் தேசங்கடந்த தொழிற்கழகங்களாகவும், பன்னாட்டு நிறுவனங்களாகவும் வளர்ச்சி பெற்றது. நிதி மூலதனத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சியானது மூலதனத்தின் ஏற்றுமதியை புதிய வடிவங்களில் அமல்படுத்தியது.
ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கு சவாலாக நின்ற முன்னால் சோசலிச நாடுகளான ரஷ்யா மற்றும் அதன் தொங்குசதை நாடுகள் எண்பதுகளின் இறுதியில் படிப்படியாக வீழ்ச்சியடையத் துவங்கியவுடன் தேசங்கடந்த தொழிற்கழகங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் அடுத்த கட்ட நிதி மூலதன சுரண்டல் வடிவத்திற்கு மாறியது. அதுவே இன்றைய கார்ப்பரேட்டுகள் என்று அழைக்கப்படுகிறது.
பண்ட உற்பத்தியில் மனித குலத்திற்கு தேவையான உணவு முதல் நுகர்வு பொருட்கள் வரையில் அனைத்தையும் ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகள் கைப்பற்றுவதை இந்த காலகட்டத்தில் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
எடுத்துக்காட்டாக, வேளாண் துறையில் விதை முதல் விவசாயத்திற்கு தேவையான உள்ளீடு பொருட்கள் மற்றும் விவசாய விளைபொருட்களை சந்தைப்படுத்துவது வரை அனைத்தையும் தனது கைக்குள் வைத்துக் கொண்டுள்ள ஜெர்மனியின் பாயர், அமெரிக்காவின் மான்சான்டோ, எக்ஸான் போன்ற நிறுவனங்கள் உலகளாவிய விவசாய உற்பத்தியையும் அதன் விற்பனையையும் கட்டுப்படுத்த துவங்கியது.
இதுபோல நவீன தொழில்நுட்பத்தில் ஒவ்வொருவர் கையிலும் உள்ள அலைபேசிகள் அமெரிக்காவின் ஆப்பிள், blackberry, nokia மற்றும் ஜப்பானின் சாம்சங் போன்ற நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக சென்றது. இத்தகைய அலைபேசிகளின் உற்பத்தி கூடங்கள் அதாவது manufacturing hub சீனா போன்ற நாடுகளில் முதலிடத்தை பெற்றது.
அதுபோல நான்காம் கட்ட தொழில்நுட்ப புரட்சியின் விளைவாக உருவாகியுள்ள குவாண்டம் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு திறன், கிளவுட் மவுண்ட், மிஷின் லேர்னிங், 3D பிரிண்டிங் போன்ற புது வகையான நவீன தொழில்நுட்பங்கள் மூலம் உலகை கட்டுப் படுத்துவதற்கு அமெரிக்காவின் கூகுள், மெட்டா போன்ற நிறுவனங்களும் சீனாவின் பைடு, டென்சென்ட் போன்ற நிறுவனங்களும் முன்னிலை வகிக்கின்றன.
புவிப் பரப்பை சூறையாடியது போதாது என்று புவிக்கு வெளியில் உள்ள அண்டவெளியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு துடித்துக் கொண்டிருக்கின்ற விண்வெளி ஆராய்ச்சி கார்ப்பரேட்டுகளான எலன் மாஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் சீனாவின் சிஏஎஸ்சி போன்ற நிறுவனங்கள் அலைக்கற்றை முதல் நியூட்ரினோ வரை அனைத்தையும் கட்டுப்படுத்துகின்ற கார்ப்பரேட்டுகளாக உள்ளன.
இதன் மூலம் உலகளாவிய அளவில் உருவாகியுள்ள ஏகபோக நிதிமூலதனம் இன்று குறிப்பிடத்தக்க கார்ப்பரேட்டுகளின் கையில் அதாவது அவர்களது பிடிக்குள் சென்று விட்டது என்றே கூற முடியும். ’அங்கிங்கெணாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளாக’ நிதி மூலதன ஏகாதிபத்தியம் உலகை சூறையாடிக் கொண்டிருக்கிறது.
தோழர் லெனின் காலத்தில் வரையறுத்த ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற வரையறுப்பானது இன்றைய நவீன காலத்தில் நிதி மூலதன ஏகபோகங்களை உருவாக்கி புதிய வடிவில் உலகை சூறையாடுகின்றது என்பதன் தற்போதைய வடிவம்தான் மறுகாலனியாதிக்கம்.
மேற்கண்ட ஆய்வாளர்கள் மா.லெ இயக்கத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் விலகியது மட்டுமின்றி ஆய்வுக்கென்றே தனி அமைப்பைக் கட்டினர். அதன் மூலமாக, ”இந்தியாவின் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் நிலை என்ன? இந்தியாவில் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட வர்க்கப் போராட்ட வடிவங்கள் என்ன? ஆளும் வர்க்கங்கள் பெரும்பான்மை உழைக்கும் மக்களை கீழ்ப்படுத்தி சுரண்டி ஒடுக்கும் வடிவங்கள் என்ன? சாரமாக சொன்னால் இந்தியாவின் வர்க்கப் போராட்டத்தில் சுழல் எங்கே மையம் கொண்டிருக்கிறது? இதை கண்டறிவது மிகவும் முக்கியமானது.
உழைக்கும் வர்க்கம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை முன்வைத்து அவர்களை தொழிற்சங்கங்களில் அல்லது விவசாய சங்கங்களில் அணிதிரட்டுவது, அதற்கும் கூட வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட போராட்ட வடிவங்கள், முழக்கங்களை அப்படியே இறக்குமதி செய்து பயன்படுத்துவது என்பது மட்டுமே உள்ளது. இதன் மூலம் பரந்தபட்ட மக்களுடனான அரசியல் ஒற்றுமையை சாதிக்க முடியுமா? நமது அனுபவங்கள் உணர்த்துவது என்ன?
இந்தியாவில் உழைக்கும் வர்க்கத்தின் மீதான சுரண்டலின் முதன்மை வடிவங்கள் என்ன? அத்தகைய சுரண்டல் வடிவங்களை பாதுகாக்கும் கவசம் எது? இந்திய வர்க்க போராட்ட வரலாற்றில் அதற்கு எதிரான மக்கள் போராட்டங்களை எப்படி கிளர்ந்தெழுகின்ற வகையில் செய்வது. 1) இவற்றை ஆய்வு செய்து அவற்றை கோட்பாட்டாக்கம் செய்து வர்க்கப் போராட்டத்தின் தேசிய அடித்தளத்தை ஆழமான பகுப்பாய்வின் அடிப்படையில் உருவாக்குவதும், 2) கோட்பாட்டாக்க பணியை முடித்தவுடன் அன்றாட நடைமுறையுடன் இணைத்து ஒன்றாக முன்னெடுத்துச் செல்வதும், 3) கட்சி நடைமுறையின் அரசியல், அமைப்பு வடிவங்களை உருவாக்குவதில் ஆகப்பெரும்பான்மையான மக்களின் உணர்வு நிலையை கணக்கில் கொள்வதும், உழைக்கும் மக்களுடனான நமது ஐக்கியத்துக்கும், ஒற்றுமைக்கும் இவையே முதன்மையானவை” என்று மிகப்பெரும் பீடிகையுடன், ”என்ன? என்ன?” என திருவிளையாடல் ஒளவையார் பாடல் கணக்காக கம்யூனிஸ்டுகளின் ஐக்கியத்திற்கு போதனை செய்கின்றார் ஆய்வாளர் மா.சிவக்குமார்.
படிக்க: சீனா நவீன சமூக ஏகாதிபத்தியம் | புதிய ஜனநாயகம் வெளியீடு
இந்திய சமுதாயப் பொருளாதாரப் படிவத்தை பற்றி ஆய்வு செய்யப் போவதாக கிளம்பிய ஆய்வாளர் மா.சிவக்குமார் தலைமையிலான அணி கடைசியில் சீனாவை ஒரு சோசலிச நாடு என்று முன்வைத்து தனது உண்மை முகத்தை காட்டிக் கொண்டது. அதுமட்டுமின்றி 2008 உலகப் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் சீனா கடைபிடித்துவரும் பாதையானது சோசலிசத்தை நோக்கி படிப்படியாக முன்னேறி வருவதாக தனது ’ஆய்வுத் திறனின்’ மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவை நவீன சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்துள்ள நாடு என்று மார்க்சிய லெனினிய அமைப்புகளும், புதிய ஜனநாயகமும் முன்வைத்துக் கொண்டு அதற்கு தேவையான ஆய்வுகளை நடத்தி அறிவித்துள்ள போதே, அதற்கு எதிராக சீனாவை சோசலிச நாடு என்று புகழ்ந்து நட்பு பாராட்டுகின்றனர்.
மார்க்சிய லெனினிய அமைப்புகளில் ஒரு சில பத்தாண்டுகள் வேலை செய்துவிட்டு சின்ன முரண்பாடுகளைக் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியேறி சென்ற இத்தகைய நபர்கள் இந்திய திருத்தல்வாதிகளான சிபிஐ மற்றும் சிபிஎம் பாணியில், ’சீனா ஒரு சோசலிச நாடு’ என்று முன் வைப்பது சிறந்ததொரு ஆய்வு முறைதான். ஆனால் ஒரு சிறிய வித்தியாசம். 1970-களுக்கு முன்பு என்ற சிறிய திருத்தத்துடன் இந்த ஆய்வை ஏற்கலாம்.
ஆனால் இந்த அபத்த ஆய்வுக்கு மாறாக, ”1978-ஐ ஒப்பிடும் போது சீனப் பொருளாதாரம் 10 மடங்குக்கும் மேலாக வளர்ச்சியடைந்துள்ளது. சீனா, அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது ஆற்றல் மிக்க பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக உயர்ந்துள்ளது. உலகளவில் மிகப்பெரிய வர்த்தக உபரியைக் கொண்ட நாடாகவும் வளர்ந்துள்ளது. அந்நிய நாணய உபரியில் ஏறத்தாழ 25 சதவீதத்தை இருப்பாகவும் வைத்துள்ளது. இதன் விளைவாக உலகின் மிகப் பெரிய நிதிமூலதன ஏற்றுமதியாளராக சீனா உருவெடுத்துள்ளது.
குறிப்பாக, கடந்த 2008-ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியைச் சாதகமாக்கிக் கொண்டு, அத்தகைய சிக்கலில் பெரிதும் மாட்டிக்கொள்ளாத சீனா, ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளுக்கே கடன் கொடுப்பதும், கடன் பத்திரங்களை வாங்குவதுமாக முன்னேறியது. 2012-இல் சீனாவின் மூலதன ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவின் மிக முன்னேறிய முதலாளித்துவ நாடுகளுக்கும் சென்றுள்ளது.
கடன் நெருக்கடிகளால் தத்தளித்து கொண்டிருக்கும் பல ஐரோப்பிய நாடுகள் சீனாவின் மூலதனத்தைப் பெரிதும் நம்பியுள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சீனாவும் தனது மூலதனத்தை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. (heriberto aravjo and jvan pablo cardenal “china’s empire” new york times, june-1 2013) மேலும், இதர ஏகாதிபத்தியங்களுடன் போட்டியிட்டு செல்வாக்கு மண்டலங்களை கைப்பற்றி தக்கவைத்துக் கொள்ளவும் சீனா தனது ராணுவத்தை மேலும் வலுபடுத்தி விரிவுபடுத்தி வருகிறது. அது சொல்லில் சோசலிசம், செயலில் ஏகாதிபத்திய உலக மேலாதிக்க வெறியில் உள்ளதால், சீனாவை நவீன சமூக ஏகாதிபத்தியம் என்று வரையறுக்கிறோம்.” என புதிய ஜனநாயகம் வரையறுத்துள்ளது.
– தொடரும்…
◾ ஆல்பர்ட்







தக்க தருணத்தில் வெளியிடப்படும் இத்தொடர் கட்டுரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது மட்டுமல்ல; தக்க தருணத்தில் வெளிவந்துள்ள கட்டுரை இது. கட்டுரை தொடர் இரண்டையும் டேப் மூலமாக முழுமையாக எளிதில் படித்து முடித்து விட்டேன். முழு தொடர் கட்டுரையும் வெளிவந்து முடிந்தபின் இறுதியாக எனது கருத்துக்களை பதிவிடுவதே சரி எனக் கருதுகிறேன். புதிய ஜனநாயகத்திற்கும், கட்டுரையாளருக்கும் வாழ்த்துக்கள்.
தோழர்கள் அனைவரும் இக்கட்டுரையை படிப்பர் என நம்புகிறேன்.