சென்னை மாகாணத்தில் கோடி மக்களைக் கொன்ற செயற்கை பஞ்சம்

கிழக்கு இந்திய கம்பனியரால் தங்கள் லாபத்துக்காக உருவாக்கப்பட்ட பஞ்சத்தினால் லட்சகணக்கணக்கோனோர் மடிந்நனர்

இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சில ஆகியவற்றைத் தமது கப்பல் படைகள் மூலம் வெற்றி கொண்ட தமிழர்கள், பஞ்சம் பிழைக்க இந்த நாடுகளுக்குக் கூட்டம் கூட்டமாகக் கப்பல்களில் சென்றார்கள்.

வரலாற்றின் குரூர நகைச்சுவை இது. இப்பஞ்சம் தாக்கிய (1876-77) வருடங்களில் சென்னை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இலங்கைக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை 3.30 லட்சத்துக்கும் அதிகம். தமிழ் இலக்கியத்திலும் இப்பஞ்சம் தன் சுவடுகளைப் பதித்து, இறவாப் புகழ் பெற்றிருக்கிறது.

தமிழகத்தின் சமூக ஆவணங்களாகத் திகழும் இலக்கியங்களில் கும்மிக்கு முக்கிய இடம் உண்டு. தாது வருஷப் பஞ்சத்தில் ஏற்பட்ட கொடும் விளைவுகளைத் தாது வருஷக் கரிப்புக் கும்மி எடுத்துக் காட்டுகிறது. பஞ்சகாலத்தில் காஞ்சிபுரத்தைச் சுற்றிய பகுதிகள் பாதிக்கப்பட்ட விதங்களையும், மக்கள் பட்ட அல்லல்களையும், அறநெறிகளின் வீழ்ச்சியையும் இந்தக் கும்மி விவரிக்கிறது. இதைப் பருவத சஞ்சீவி என்னும் மலைமருத்தன் என்ற புலவர் 1877இல் எழுதியதாகத் தெரிகிறது.

ஓலைச் சுவடியாக இருந்த இந்த நூலைத் தஞ்சை சரஸ்வதி மஹால் நிலையம் 1985இல் பதிப்பித்துள்ளது. பஞ்சம், அதைத் தொடரும் காலரா சாவுகள், நீண்ட நாள் பட்டினிக்குப் பின் திடீரென உணவு உண்டவர்கள் இறந்த விதங்கள், குடும்பப் பெண்கள் பசியிலிருந்து தப்ப விபச்சாரத்தில் ஈடுபட்டது, கொள்ளைகள் உள்ளிட்ட பல அவலங்கள் இந்த நூலில் சித்திரிக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்படுகின்றன.

மக்கள் உணவு தேடி அலைந்த பாடுகளைக் காட்டும் பகுதி இது. மக்கள் தானியம் கிடைக்காமல் எறும்பு வளைகளைத் தோண்டி அங்கிருந்த தானியத்தை எடுத்துப் பசியாற முற்பட்டனராம்.

எறும்பு வளைகளை வெட்டியதில் இருக்கும் தானியம் தானெடுத்து,
முறத்தால் கொழித்துக் குத்திச் சமைத்து
உண்ணுகிறார் சிலர் பாருங்கடி
பட்டினியிருந்து சாப்பிட்டவர்க்கு,
பருத்த மேல்மூச்சுண்டாகி
அட்டியில்லாமல் களையை அடைந்து
அப்போதே சாகிறார் பாருங்கடி

அக்காலத்தில் விற்ற தானியங்களின் விலை பற்றி நூலில் காணப்படும் குறிப்புகள்:

ஒரு ரூபாய் கேவறுகள், ஒன்றேகால்
மரக்கால் விற்குறார்கள்
ஒரு ரூபாய்க்கு பதக்கு நெல்லை
உண்மையாய் விற்குறார் பாருங்கடி

பஞ்சம் பிழைக்க வந்த மக்கள் பற்றி இந்த நூல் தெரிவிக்கும் விவரங்கள்-

வாணியம்பாடி திருப்பத்தூர், சேலம்
மற்றும் மாமூர் குழியம் முதல்
வேளாவூரிலுள்ள ஆட்டக்காரரெல்லாம்
மேவி வந்ததைக் கேளுங்கடி
வடக்கிலுள்ள தாழ்ந்த சாதிகள்,
வகையுடன் கையில் சட்டிகளை
எடுத் தூரூராய் போய் கூழை
இரந்து குடிக்குறார் பாருங்கடி.

சொத்துக்கள் குறைந்த விலையில் விற்கப்படுதல், சென்னை நகரத்திலிருந்து வந்த வணிகர்கள் அங்கு கொள்ளை வர்த்தகத்தில் ஈடுபட காஞ்சியிலிருந்து நெல்லை வண்டி வண்டியாகக் கடத்திச் சென்ற சம்பவங்கள் உள்ளிட்ட, பஞ்சத்தின் அத்தனை விவரங்களும் கொண்ட நூல் இது.

சென்னை நகரின் சரித்திரம், அதன் சமூகம் பற்றி ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த நூலில் பல தகவல்கள் கிட்டும்.

சென்னையில் நடந்த அடிமை வர்த்தகம்
”உங்களிடம் நூறு ரூபாய் இருக்கிறதா? ஒரு நல்ல அடிமையை எளிதில் வாங்கலாம். பெண் அடிமைகளுக்குச் சற்றுக் கூடுதல் விலை.” ஏதோ ஆஃப்ரிக்காவில் அல்ல, தமிழகத்தில்: அதுவும் சென்னை கோட்டையில். 350 வருடங்களுக்கு முன்னால் சென்னையில் இப்படி ஒரு நிலை இருந்தது என்றால் இப்போது நம்ப முடியாமல் இருக்கும். ஆனால் இந்த உண்மைக் கதை நடந்தது 1646 இல்.

அந்த ஆண்டிலிருந்து சென்னையின் சாந்தோமும், கோட்டைப்பகுதியும் அடிமை வர்த்தகத்தின் முக்கியக் கேந்திரமாக இருந்தன. எட்டணாவில் டீ குடிக்க முடியாத காலத்தில் இன்று வாழ்கிறோம், இதே சென்னை நகரில் அன்று ஒரு அடிமையைப் பதிவு செய்ய எட்டணா, வெறும் எட்டணாதான் ஆயிற்று.

அடிமை வர்த்தகம் தொடர்பாக கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் பிரிட்டிஷ் ஆவணங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் இவை.

1646 ஆம் ஆண்டுப் பஞ்சம்தான் இந்த அடிமை வர்த்தகம் சென்னையில் செழித்து வளர்வதற்கான மூல காரணம். சென்னை ஒரு நகரமாகிய பிறகு அதைத் தாக்கிய முதல் பஞ்சம் இதுதான். இந்தப் பஞ்சம் சென்னையை மட்டுமன்றி, இதர மாவட்டங்களையும் தாக்கியது, பசியின் கோரப்பிடியிலிருந்து தப்ப தமிழக மக்களில் பலர் தங்களை அடிமைகளாக விர்றுக் கொண்டனர்.
இன்று செயிண்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்திலுள்ள சௌல்ட்ரி கேட் பகுதியில் அடிமைகள் சகாய விலையில் பதிவு செய்யப்பட்டனர்.

அடிமை வர்த்தகர்கள் அவர்களைக் கப்பலில் ஏற்றி போர்ச்சுகீஸிய, டச்சு காலனிகளுக்கு அனுப்பினர். தமிழ்நாட்டு அடிமைகள் ஜாவா, சுமத்திரா போன்ற அன்றைய டச்சுக் காலனிகளின் வயல்வெளிகளில் உழைத்து உயிர் விட்டனர்.

நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 400 அடிமைகள் பசியால் குற்றுயிரும் குலையுயிருமான நிலையில் போர்ச்சுகீஸிய கப்பல் ஒன்றில் பயணம் செய்ததை பிரிட்டனின் அருங்காட்சியகக் கையெழுத்துப் பிரிவிலுள்ள ஒரு ஆவணம் தெரிவிக்கிறது.

சென்னையில் நெடுங்காலம் வசித்த வெனிஸ் நகர வர்த்தகன் நிகோலாய் மனூச்சியின் ‘ஸ்டோரியா டொ மொகொர்’ என்ற புத்தகத்தில் சென்னையின் அடிமை வர்த்தகம் பற்றி நெஞ்சை உருக்கும் தகவல்கள் உள்ளன. அடிமைப் பெண் ஒருத்தி தன்னை வாங்கிய டச்சுக்காரர்களிடமிருந்து தப்பி சாந்தோம் பிஷப்பின் இல்லத்தில் அடைக்கலம் புகுந்தாள், அவளை அவர் காப்பாற்றி அடிமை வர்த்தகர்களிடமிருந்து மீட்டார் என்று அப்புத்தகம் தெரிவிக்கிறது.

இந்த வர்த்தகத்தில் பல இடைத்தரகர்கள் இந்தியர்களே என்பது ஒரு கொடூரம். அதை விட, இந்த வர்த்தகத்துக்காகக் குழந்தைகளையும், பெண்களையும் அவர்கள் கடத்தி விற்றது கொடுமையின் உச்சம்.

நன்றி- எஸ் சிவகுமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here