
மே 7ஆம் தேதி அதிகாலை 1.05 மணிக்கு துவங்கிய “ஆபரேஷன் சிந்தூர்” என்று பெயரிடப்பட்ட தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போர் இன்று மதியத்துடன் அதிகாரப்பூர்வமாக நிறுத்திக் கொள்ளப்பட்டதாக இந்திய ஒன்றிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதுபோலவே பாகிஸ்தானும் தனது “பன்யான்-உன்-மர்சூஸ்” என்ற தாக்குதல் நடவடிக்கையை நிறுத்திக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) இன்று பிற்பகல் 3:35 மணிக்கு இந்திய DGMOவை அழைத்துப் பேசினார்.
அதன்படி, இரு தரப்பினரும் நிலம், வான் மற்றும் கடல் வழியாக அனைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்த உடன்பாட்டைப் புரிந்துக் கொண்டு செயல்படுத்துமாறு இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் மே 12 ஆம் தேதி மதியம் 12:00 மணிக்கு மீண்டும் பேசுவார்” என்று அறிவித்துள்ளார்.
“பாகிஸ்தானும், இந்தியாவும் உடனடியாக அமலுக்கு வரும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக” பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் டார் தெரிவித்துள்ளார்.
படிக்க:
♠ ஆப்ரேஷன் சிந்தூர்: ஆர்எஸ்எஸ் பாஜக உருவாக்கும் போலி தேசபக்தி – உண்மைப் போர் வெறி!
♠ பாதுகாப்பு குறைபாட்டிற்குப் பொறுப்பு ஏற்காமல் போர்வெறியைத் தூண்டும் மோடி அரசு!
“இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடியாக பேசியதாகவும் அதன் முடிவாக கூட்டு புரிதல் எட்டப்பட்டதாகவும்” இஷாக் டார் ஜியோ டிவியிடம் கூறியுள்ளார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடியாகவே பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்தி விட்டதாக இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை வட்டாரங்கள் அறிவிக்கின்றன.
ஆனால் ‘உலக பேரரசரான,’ டொனால்ட் ட்ரம்ப் இந்த இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பாகவே, “இந்தியா பாக் போர் நிறுத்தத்திற்கு வருவதாகவும், புத்திசாலித்தனமான முடிவின் அடிப்படையில் இரு நாடுகளும் போரை நிறுத்திக் கொண்டுள்ளதாகவும்” தனது ட்ரூத் சோஷியலில் அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தப் போரில் மூன்றாம் தர மத்தியஸ்தம் தேவையில்லை என்று வெளியுறவுத்துறை செயலாளரான விக்ரம் மிஸ்ரி சவடால் அடித்துக் கொண்டிருந்த சூழலில், அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான ஜே.டி.வான்ஸ் கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகிய இருவருடன் ராணுவ, வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு இரண்டு நாடுகளும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
உண்மையில் என்ன நடந்தது என்பது இன்னும் சில மணி நேரங்களில் அல்லது சில தினங்களில் வெளியாகலாம்.
ஆனால் இந்தப் போர் தொடர்ச்சியாக நடந்தால் இந்தியாவில் பல லட்சம் கோடி முதலீடு செய்துள்ள அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் கார்ப்பரேட்டுகளின் முதலீடு பாதிப்புக்குள்ளாகும் என்ற அடிப்படையிலேயே அமெரிக்கா இதில் மத்தியஸ்தராக தலையிட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
ஆனால் கடந்த மூன்று தினங்களாக இந்தியாவின் ஊடகங்கள் இந்திய மக்களுக்கு எதிராக நடத்திய பொய்ச் செய்தி போர் (fake news war) அதிகாரப்பூர்வமாக எப்போது முடிவடையும் என்று தெரியவில்லை.
பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றி விட்டதாக கூறத் துவங்கியது முதல் பாகிஸ்தானின் ராணுவ தளபதியான அசிம் முனிர் கைதாகி விட்டார் என்பது வரை பல்வேறு பொய் செய்திகளை வெளியிடுவதில் மோடி ஆதரவு பெற்ற, ‘கோடி மீடியாக்கள்’ முன்னிலை வகித்தன என்பது உலக அளவில் நேர்மையான பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களால் காரி துப்பப்பட்டு வருகிறது.
இன்னொரு புறம் இந்தப் போர் ஜனநாயகம், இறையாண்மை, நாட்டின் பாதுகாப்பு, பாசிச எதிர்ப்பு என்றெல்லாம் சண்டமாருதம் செய்து கொண்டிருந்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் உண்மையான வர்க்கத் தன்மையை அம்பலப்படுத்தி காட்டி விட்டன.
தேசபக்தி பஜனையில் இடதுசாரிகள் முதல் அம்பேத்கர், பெரியாரிஸ்ட் அமைப்புகள் வரை அனைவரும் ஒன்றிணைந்து மோடியின் கரத்தை வலுப்படுத்துவதாகவும், ‘ஒற்றுமையான இந்தியாவை’ முன்னிறுத்துவதாகவும் வெவ்வேறு வார்த்தைகளிலும், வெவ்வேறு அலைவரிசைகளிலும் வெளிப்படுத்தியதன் மூலம் இப்படிப்பட்ட கட்சிகள் எந்த அளவிற்கு எதிரிகளுக்கு எதிராக அதாவது ஆர்எஸ்எஸ் – பாஜக பாசிச பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியாக நிற்பார்கள் என்பதை அம்பலப்படுத்திக் கொண்டுள்ளனர்.
மற்றொருபுறம் சமூக வலைதளங்களில் பார்ப்பனக் கும்பல் துவங்கி கருப்பு பார்ப்பனர்கள், பதிலி பார்ப்பனர்கள் என்று மாபெரும் போலி தேசபக்தி கொண்ட சங்பரிவார குண்டர் படை தன்னால் முயன்ற அளவிற்கு போருக்கு எதிரான கருத்து பேசுபவர்களை மிரட்டுவது, கேரக்டர் படுகொலை செய்வது என்று பல்வேறு கோணங்களில் தனது ‘புத்திக் கூர்மையை’ வெளிக்காட்டினர்.
நாட்டின் பொது எதிரியாக உருவெடுத்துள்ள கார்ப்பரேட் – காவி பாசிசத்தை எதிர்த்து முறியடிப்பது இத்தகைய பல்வேறு விதமான போக்குகளைக் கொண்ட சக்திகளை எதிர்த்து முறியடிப்பது மற்றும் சரியான முறையில் கையாள்வது ஆகியவற்றின் மூலமே சாத்தியம் என்பதே “ஆபரேஷன் சிந்தூர்” அறிவிக்கும் அரசியல் செய்தியாகும்.
- கணேசன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி






