அரசியல் உள்நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் இத்தகைய சட்டங்கள், முதலில் ஊடகங்களையும் போராட்டக்காரர்களையும் தாக்கும்; இறுதியில் அமைதியாக இருக்கும் சாதாரணப் பிரஜையின் வீட்டுக்கதவையும் தட்டும்.

2024 தேர்தலுக்குப் பிறகு பதவியேற்ற புதிய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம், PTA ஐ ரத்து செய்வதாக உறுதியளித்திருந்தது. இருப்பினும், இந்த ஆண்டு முன்மொழியப்பட்ட PSTA பழைய சட்டத்தின் “மீண்டும் தொகுக்கப்பட்ட” பதிப்பாக இருப்பதாகவும், மனித உரிமைகள் பாதுகாப்புகளில் எதிர்பார்க்கப்படும் சீர்திருத்தங்களை ஒழித்துக் கட்டுகின்ற வகையிலும் செயல்படவே அதிகபட்சமான வாய்ப்புகள் இருப்பதாக இலங்கையில் போராடும் அமைப்புகள் குறிப்பாக சமூக நீதிக்கான மலையக வெகுசன அமைப்பு விமர்சித்துள்ளது..

இலங்கையில் தற்போது ஆட்சி நடத்தி வரும் அனுர திசநாயக தலைமையிலான ஜேவிபி ஆட்சி ஒரு முற்போக்கான ஆட்சி என்றும், இடதுசாரிகள் இலங்கையை கைப்பற்றி விட்டார்கள் இனிமேல் அங்கு சிங்கள பேரினவாதத்திற்கு பதிலாக ஜனநாயகம் பூத்துக் குலுங்க போகிறது என்றெல்லாம் போலி இடதுசாரிகளும், அரசியல் ‘ஆய்வாளர்களும்’ குதியாட்டம் போட்டனர்.

ஆனால் அங்கே நடப்பது முற்போக்கு என்ற பெயரில் நடந்து வரும் அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் இந்திய மேலாதிக்கத்தின் அதிகாரத்தை ஏற்றுக் கொண்ட ஒரு குட்டி முதலாளித்துவ அமைப்பு ஒன்றின் அரசியல்தான் என்பதும், சிங்கள இனவாத அரசியலில் இருந்து இன்னமும் இவர்கள் முழுமையாக விடுபடவில்லை என்பதை சமீபத்தில் அவர்கள் அமல் படுத்தியுள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம் அம்பலப்படுத்தியுள்ளது. இலங்கையில் செயல்படுகின்ற இடதுசாரி அமைப்புகள் இதனை கண்டித்துள்ளன.

“இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதாக சர்வதேச சமூகத்திற்கும் உள்நாட்டு மக்களுக்கும் NPP வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள் வெறும் கண்துடைப்பா என்கிற கேள்வியை இப்போது இலங்கையின் ஜனநாயகத் தரப்பில் எல்லோரும் எழுப்பி வருகிறார்கள். இந்த விமர்சனங்களை எதிர்க்கட்சிகளே ஊதிப் பெருக்குகின்றன என்று புறந்தள்ளத் தேவையில்லை.

படிக்க:

 இலங்கையில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம்(ATA) | காணொளி
 புதிய ஜனாதிபதியும் பழைய இலங்கையும்

மக்கள் ஆணையை மதித்து ஏற்கெனவே உள்ள சட்டத்தை நீக்கி தவிர்க்க முடியாத சில பிரிவுகளை ஏற்கெனவே உள்ள அதனுடன் தொடர்புடைய சட்டங்களுடன் சேர்த்துக் கொள்வதாகவே முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.

‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டமூலமானது, பழைய PTA-வை விடவும் பலமடங்கு வீரியம் கொண்ட ஒரு அடக்குமுறை ஆயுதமாக ஆகப்போகிறது. இது பயங்கரவாதத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கானது அல்ல, மாறாக மக்களிடமிருந்து அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு கவசமாகவே கருத வேண்டி இருக்கிறது.

இந்த புதிய PSTA சட்டமூலம், நவீன காலத்திற்கு ஏற்ற சீர்திருத்தம் என்ற போர்வையில் முன்வைக்கப்பட்டாலும், அதன் உள்ளடக்கமானது அப்பட்டமான ஜனநாயக மீறலாகும். குறிப்பாக, ‘பயங்கரவாதம்’ என்பதற்கான வரைவிலக்கணம் இதில் மிகவும் இன்னும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பிழையான கொள்கைகளை விமர்சிப்பதோ, வீதியில் இறங்கிப் போராடுவதோ அல்லது ஒரு ஊழலை அம்பலப்படுத்துவதோ கூட “அரசின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்” என முத்திரை குத்தப்பட இச்சட்டம் வழிவகுக்கிறது.

புதிய சட்டத்தின் 19 மற்றும் 55-வது உறுப்புரைகள் பிரஜைகளின் டிஜிட்டல் சுதந்திரத்தின் மீது நேரடித் தலையீடு செய்கிறது. இதன் பிரகாரம் ஒரு போராட்டத்தை சமூக வலைத்தளத்தில் நேரலை செய்வதோ அல்லது போலிஸ் அத்துமீறல்களைப் பதிவிடுவதோ “ரகசியத் தகவல்களை வெளிப்படுத்தல்” என வகைப்படுத்த முடியும்.

இலங்கைக்குள் இருப்பவர்களை மட்டுமன்றி, புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களையும் அச்சுறுத்தும் அம்சங்களும் இதில் உள்ளன. வெளிநாடுகளில் இருந்து கொண்டு தாய்நாட்டின் அநீதிகளைத் தட்டிக்கேட்கும் புலம்பெயர் சமூகத்தின் குரல்களை ஒடுக்குவதற்கு இது ஒரு சர்வதேசப் பிடியாணைக் கருவியாகப் பயன்படுத்த முடியும். அவ்வாறானவர்கள் நாட்டிற்குள் நுழையும்போது சர்வதேச பிடியாணைகள் மூலம் வேட்டையாடப்படும் அபாயம் இதில் உள்ளது.

WhatsApp, Signal போன்ற செயலிகளின் பாதுகாப்புத் தன்மையை உடைத்து, தனிநபர்களின் கடவுச்சொற்களைப் பலவந்தமாகப் பெற்று உரையாடல்களைக் கண்காணிக்கும் அதிகாரம் பாதுகாப்புத் தரப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு பிரஜையையும் அரசுக்குக் கீழ்ப்படிந்திருக்கும் ‘டிஜிட்டல் கைதியாக’ மாற்ற இயலும்.

இந்தச் சட்டத்தின் மிக மோசமான பகுதி 15-வது உறுப்புரையாகும். ஒரு நபர் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகம் எழுந்தால், அந்தத் தகவலை வழங்கத் தவறும் எவருக்கும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இது ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களை ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்கும் ‘ஒற்றர்களாக’ மாற்றத் தூண்டுகிறது. இது சமூகத்தில் நிலவும் பரஸ்பர நம்பிக்கையைச் சிதைத்து, அச்சத்தை ஒரு நிர்வாகக் கருவியாகப் பயன்படுத்துகின்ற அரச பயங்கரவாதத்தின் உச்சக்கட்டமாக மாறிவிடும்.

அரசியல் உள்நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் இத்தகைய சட்டங்கள், முதலில் ஊடகங்களையும் போராட்டக்காரர்களையும் தாக்கும்; இறுதியில் அமைதியாக இருக்கும் சாதாரணப் பிரஜையின் வீட்டுக்கதவையும் தட்டும்.

இந்தச் சட்டமூலத்தில் “பயங்கரவாதம்” என்பதற்கு வழங்கப்பட்டுள்ள மிகப்பரந்த, தெளிவற்ற வரைவிலக்கணமானது, அரசாங்கத்தின் எந்தவொரு விமர்சகரையும் பயங்கரவாதியாகச் சித்திரிக்க இடமளிக்கிறது. குறிப்பாக 9, 10 மற்றும் 11-வது உறுப்புரைகளின் கீழ், சமூக வலைதளங்களில் பகிரப்படும் விமர்சனங்கள் அல்லது நையாண்டிகள் கூட “பயங்கரவாதத்தைத் தூண்டுவதாக” அர்த்தப்படுத்தப்படலாம். ‘நல்லெண்ணத்துடன்’ செய்யப்படும் விமர்சனங்களுக்குப் பாதுகாப்பு உண்டு என கூறப்பட்டாலும், அதன் முடிவை எடுக்கும் அதிகாரம் பாதுகாப்புத் தரப்பினரிடமே விடப்பட்டிருப்பது தந்திரமான ஏற்பாடாகும்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தாலும், அவசரகால சட்டத்தாலும் இந்த நாட்டில் அதிக விலையைக் கொடுத்த கட்சி ஜேவிபி. 1971 இலும் 1987-1989 காலப்பகுதியிலும் தமது அதிகளவு உறுபினர்களின்  உயிர்களை இச்சட்டங்களுக்கு ஊடாக பலியாக்கிய அனுபவத்தைக் கொண்ட அந்த ஜேவிபி தலைமையிலான ஆட்சி இன்று அரசாங்கமாக மாறி இருக்கிறது. அவர்களின் சொந்த அனுபவமே போதும் இத்தகைய ஒரு சட்டத்தை இல்லாது ஒழிப்பதற்கு. அவர்களுக்கு இருக்கும் தார்மீக பொறுப்பும், கடமையும் அளவுக்கு தென்னிலங்கையில் வேறெந்த அரசியல் சக்திக்கும் கிடையாதென்று கூறலாம்.

அதை நீக்கி மக்கள் ஆணைக்கு இணங்க முடிவெடுக்க கிடைத்த சந்தர்ப்பத்தை அரசாங்கம் தவறவிட்டுவிடக் கூடாது என்பதே எமது நோக்கம். சட்ட மூலம் சட்டமாக உருவெடுப்பதற்கு முன்னர் நமது அழுத்தத்தை அரசாங்கத்துக்கு பிரயோகித்ததாக வேண்டும்.

படிக்க: 

 இலங்கை அனுரவின், ‘ சிவப்பு சாயம்’ வெளுத்தது!
 இலங்கையில் இடதுசாரி ஆட்சி? மாயையில் ஆழ்த்தும் போலிகள்!

இப்படித்தான் 1978ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தன இரண்டாம் குடியரசு அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியபோது, அதனை எதிர்த்துப் உரையாற்றிய கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா “இந்த ஜனாதிபதி முறைமை ஒரு “மனநோயாளியின்” கையில் கிடைத்தால், அது நாட்டிற்குப் பேரழிவை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.

அதுபோலவே அதற்குப் பின்னர் நிறைவேற்று அதிகார முறையை சுவைகண்ட ஆட்சியாளர்கள் அனைவரும் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அதை துஷ்பிரயோகம் செய்த வரலாற்றை நாம் கண்டோம். அதுபோலவே சிலவேளை NPP தனது ஆட்சி காலத்தில் இந்த சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ய மாட்டோம் என்று கூட வாக்குறுதியளிக்கலாம். ஆனால் நாளை அதிகாரத்தைக் கைப்பற்றும் வேறொரு மோசமான சக்தி இச்சட்டங்களை மக்கள் விரோத செயலுக்கு பயன்படுத்தக் கூடும்.

இன்று நாம் காக்கும் மௌனம், எமது எதிர்கால சந்ததியினரின் சுதந்திரத்தை அடகு வைக்கும் செயலாகவே அமையும். அநீதியான சட்டங்கள் அமுலுக்கு வரும்போது, மௌனமாக இருப்பது அந்த அநீதிக்குத் துணை போவதற்குச் சமம்”. என்று இலங்கையில் இருந்து வெளிவரும் தினகரன் வாரமஞ்சரி – இதழானது செய்தி வெளியிட்டது.

இந்தியாவில் காங்கிரசு ஆட்சிக் காலத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்த தடா, பொடா போன்றச் சட்டங்கள் பாசிச பாஜக ஆட்சியில் ஆள்தூக்கிச் சட்டமான ஊபா சட்டமாக மாற்றப்பட்ட பிறகு இந்தியாவில் போராடும் புரட்சிகர ஜனநாயக சக்திகள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்துக் கொண்டே போவது பற்றி நாம் அறிவோம்.

சொல்லிக் கொள்ளப்படும் அரசிலமைப்புச் சட்டம் வழங்கும் ஜனநாயக உரிமைகள் அனைத்தும் இந்த  பாசிசக் கும்பலின் ஆட்சியின் கீழ் பறிக்கப்பட்டுள்ளதைப் போலவே இலங்கையிலும் தற்போது அமுலாக துவங்கியுள்ளது. இதனை முளையிலேயே அம்பலப்படுத்தி தூக்கியெறிய  அங்குள்ள முற்போக்கு, ஜனநாயக சக்திகள் போராட வேண்டும். அதன் மூலம் முற்போக்கு முகமூடியுடன் திரியும் அனுரவின் முகத்திரை கிழித்தெறியப்பட வேண்டும்.

  • முகம்மது அலி.

புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here