ந்தியாவில் அன்றாடம் மக்கள் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்கள், காய்கறிகள், எண்ணெய், சமையல் பொருட்கள் ஆகியவற்றின் விலை கட்டுப்படுத்த முடியாமல் ஏறிக் கொண்டே போகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் அரிசி, பருப்பு, தானியங்கள் உள்ளிட்டவைகளின் விலை மட்டுமல்ல! சமையலுக்கு ஆதாரமாக உள்ள எரிவாயு, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு பயன்படுத்தக்கூடிய இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் ஆகியவற்றின் விலையும் அதிகரித்துக் கொண்டுள்ளது.

இந்தியாவில் உள்ள குறைந்த எண்ணிக்கையிலான மேட்டுக்குடியினர், அதிஉயர் பணக்காரர்கள் தவிர வாங்கும் சக்தி கொண்ட உத்தரவாதமான வருவாய் பின்னணியுள்ள நடுத்தர பிரிவினரே இந்த விலைவாசி உயர்வால் கழுத்து நெரிக்கப்பட்டு கடும் மன உளைச்சலுக்கும் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

அடிப்படையான உணவு பொருட்களை வாங்குவதற்கு செலவிடும் தொகையை காட்டிலும் கல்வி மற்றும் மருத்துவத்திற்கு பல ஆயிரம் ரூபாய்களை செலவு செய்ய வேண்டிய நெருக்கடியான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வருமான உத்தரவாதம் கொண்டவர்களுக்கு இதுதான் நிலைமை என்றால் அன்றாடம் உழைத்து கூலி பெறக்கூடிய பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை தரமும் இன்னமும் கடும் நெருக்கடியாக உள்ளது.

உணவுப் பொருட்களின் கடுமையான விலையற்றத்திற்கு அடிப்படையான கார்ப்பரேட் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ள பொருளாதார கொள்கைகளை, அது ஏற்படுத்தும் விளைவுகளை எதிர்த்து போராடுவதற்கான எழுச்சி இந்தியாவில் ஒரு சில சந்தர்ப்பங்கள் தவிர பெரும்பாலும் உருவாவதில்லை.

“வயிறு பட்டினியாகக் கிடந்தாலும், மூளை காலியாக இருப்பதில்லை”. அந்த மூளையை ஆக்கிரமிப்பதற்கு சினிமா, விளையாட்டு, பொழுதை கழிப்பதற்கு என்று உருவாக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்கள் போன்றவை வயிற்றுப் பட்டினி பற்றி சிந்திக்க விடுவதில்லை., ஏற்கனவே சிந்திப்பதற்கு திராணியற்ற வகையில் மூளையை ஆக்கிரமித்துள்ள சாதி, மத பிற்போக்கு பழக்கவழக்கங்கள், மதப் பண்டிகைகள் ஆகியவற்றுடன் மேற்கண்ட அம்சங்களும் இணைந்து மூளையின் செயல்பாட்டை முழுக்க, முழுக்க கட்டுப்படுத்துகின்றன.

இந்த அம்சங்களில் குறிப்பிடத்தக்க அளவிற்கு இளைஞர்களின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற விளையாட்டு துறையில் மிக முக்கிய பங்களிப்பை செலுத்துகிறது கிரிக்கெட்.

இந்த கிரிக்கெட்டின் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம் பல்லாயிரம் கோடிகளை வருமானமாக ஈட்டுகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. முதலீடு போட்டு, கச்சா பொருட்களை இறக்குமதி செய்து, தொழிலாளர்களை வைத்து தொழிற்சாலைகளை நடத்துகின்ற முதலாளிகளை விட கிரிக்கெட் மூலம் பல்லாயிரம் கோடி லாபமாக கொட்டுகிறது என்ற தகவல் இந்திய சமூகத்தின் உண்மையான, கேடுகெட்ட நிலைமையை நமக்கு வெளிக்காட்டுகிறது.

படிக்க: 

  கிரிக்கெட் வீரர்கள் அடிமைகளா? களைக்கட்டும் ஐபிஎல்  ஏலம்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒழிப்பது எப்போது?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2023-24 நிதியாண்டில் ₹9,741.7 கோடி வருமானத்தை லாபமாக ஈட்டியுள்ளது. இதன் மூலம் உலகளவில் சக்திவாய்ந்த மற்றும் நிதி ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் கிரிக்கெட் வாரியமாக அதன் நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) ₹5,761 கோடியை பங்களித்தது, இது பிசிசிஐயின் மொத்த வருவாயில் கிட்டத்தட்ட 60 சதவீதம் ஆகும். இவை தவிர இதுவரை கிடைத்துள்ள லாபம் சுமார் 30,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதன் வாயிலாக ஆண்டுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் வட்டியாக மட்டுமே கிடைத்துக் கொண்டுள்ளது என்கிறார் இந்திய தொழிலதிபரான சந்தீப் கோயல்.

இது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள தகவல் ஆனால் அதிகாரப்பூர்வமில்லாத வகையில் கிரிக்கெட் துறையில் வணிகமாக சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் புழங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் விளையாட்டு துறை மூலம் கிடைக்கின்ற 16,633 கோடியில் சென்ற ஆண்டு கிரிக்கெட் மூலமாக கிடைத்த அதாவது ஐபிஎல் மேட்ச்களின் மூலமாக கிடைத்த வருவாய் மட்டும் 9741 கோடி ரூபாய் ஆகும்.
விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும், சினிமா மோகத்திலும் இந்தியாவில் உள்ள இளைய தலைமுறை 35 வயதுக்குட்பட்ட துடிப்புள்ள இளம் பருவத்தினர் 60 கோடி பேர் இத்தகைய மூளையை காலியாக்குகின்ற துறைகளினால் தனது சிந்திக்கும் திறனை இழந்து கொண்டுள்ளனர்.

நாட்டில் எவ்வளவு வறுமை தலைவிரித்தாடினாலும், வீட்டில் எவ்வளவு சிக்கல்கள், நெருக்கடிகள் உருவானாலும் அதைப்பற்றி கவலைப்படாத அளவிற்கு மூளை சலவை செய்யப்பட்டுக் கொண்டுள்ளது. இத்தகைய போதை அவர்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டுள்ளது.

ஆனால் இதற்கு நேர் மாறாக கிரிக்கெட் விளையாட்டு வீரர்களும், சினிமா நடிகர், நடிகைகளும் கதாநாயகர்களாகவும் போற்றத்தக்க முன்னுதாரணமிக்கவர்களாகவும் காட்டப்படுகின்றனர்.

கஞ்சா, அபின், ஹெராயின் உள்ளிட்ட போதைகள் வரிசையில் குறிப்பிட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி அதுவும் கிரிக்கெட் போன்ற சோம்பேறி விளையாட்டு களுக்கு அடிமையாகி, பெரிய திரை, சின்னத்திரை ஆகியவற்றைத் தாண்டி தற்போது கைபேசியில் எந்த நேரமும் கிரிக்கெட்டை பார்க்கின்ற காட்சி போதைக்கு அடிமையாகியுள்ளனர் இளைய தலைமுறையினர்.

இதன் மூலம் அடிமைத்தனம் இயல்பாக மாற்றப்பட்டுள்ளது. கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகவோ, கார்ப்பரேட் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளையோ எதிர்த்து பேசவோ, போராடவோ அதில் நடக்கின்ற ஊழல்கள், மோசடிகள், வருவாய் ஆகியவை பற்றி சிந்திக்கவும் தயாராக இல்லாத மூளை இந்தியாவில் அதிகரித்துக் கொண்டுள்ளது என்பதுதான் பாட்டாளி வர்க்க இயக்கம் கவலை கொள்ள வேண்டிய முக்கியமான பிரச்சனையாகும்.

முகம்மது அலி.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி 

1 COMMENT

  1. கிரிக்கெட் தொடர்பான மேட்டுக்குடி வர்க்கத்தினரை பங்கேற்கும் விளையாட்டாக இருந்தாலும் சரி; அது ஒரு சோம்பேறிக் கூட்டங்களை வளர்க்கும் ஒரு விளையாட்டு முறையே அன்றி உடற்பயிற்சி சார்ந்து வீரங்களை வெளிப்படுத்தும் விளையாட்டு அது என்றும் இருந்ததில்லை; இருக்கப் போவதுமில்லை. மாறாக இந்த விளையாட்டில் தான் இவ்வளவு ஊழல்களும் நிறைந்து நிற்கின்றன என்பதனை கட்டுரையாளர் பல்வேறு உதாரணங்கள் மூலம் விளக்கி இருக்கிறார். பாராட்டுக்கள்.
    கால்பந்து, கைப்பந்து, கபடி, டென்னிகேட், பேட்மிட்டன், கிளித்தட்டு, கோக்கோ இன்ன பிற விளையாட்டுக்களில் நிரம்பி வழியும் உடற்பயிற்சியும் வீரமும் சோம்பேறி கிரிக்கெட் போட்டியில் இல்லை என்பது தெரியும் நாம் சேர்த்தே பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here