வேளாண் விளை பொருட்களுக்கு
குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP)
வருங்கால அராஜகத்தை தவிர்க்கும்!
(குறைந்தபட்ச ஆதார விலை சம்பந்தமாக உள்ள எல்லாக் கேள்விகளுக்கும், அதை ஒட்டி எழும் வாதங்களுக்கும் பொருளாதார நிபுணர் சுக் பால் சிங் பதில் தருகிறார். அவருடன் பேட்டி கண்டு கட்டுரையை எழுதியவர் அஜாஸ் அஷ்ரப், நியூஸ் கிளிக் இதழில் இந்த கட்டுரை வேளாண் சட்ட திருத்ததிற்கு எதிரான வீரம் செறிந்த ஓராண்டு போராட்டம் திரும்ப பெறாத போது எழுதப்பட்டது. எனினும் விவசாய விலை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து புரிந்துக் கொள்ள உதவும் என்பதால் வெளியிடுகிறோம். –ஆசிரியர் குழு)
மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெற்ற உடனே விவசாயிகள் கூடாரங்களை சுருட்டிக்கொண்டு வீட்டுக்குப் போய் விடுவார்கள் என்று மோடி எதிர்பார்த்தார். விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பின் அறிவிப்பு வேறு வகையில் இருந்தது.
இந்திய ஒன்றிய அரசு எல்லாருக்குமான குறைந்தபட்ச ஆதார விலை பற்றி (MSP) சட்டபூர்வ உத்தரவாதம் கொடுத்தால் மட்டுமே ஓராண்டாக நீடிக்கிற போராட்டத்தை திரும்பப் பெற முடியும் என்று அறிவித்துவிட்டனர். விவசாயிகளின் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க பொருளாதார நிபுணர்களும் இருவேறு கருத்து சொல்லி ஒருவருக்கொருவர் முட்டி கொண்டார்கள். சிலர் இது இந்தியப் பொருளாதாரத்தை அழித்துவிடும் என்றார்கள். மற்றவர்கள் விவசாயிகளை பெரும் நாசத்துக்கும், சாவுக்கும் இரையாகாமல் குறைந்தபட்ச ஆதரவு விலை காப்பாற்றும் நடவடிக்கை என்றார்கள். இந்த விவாதத்தில் தெளிவை உண்டாக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயத்தில் ஆற்றும் பங்கு என்ன, அதற்கு சட்டபூர்வ உத்தரவாதம் ஏன் தேவை என்பதற்கு பேராசிரியர். சுக் பால் சிங் விளக்கம் தருகிறார்.
இவர் லூதியானாவில் உள்ள பஞ்சாப் விவசாய பல்கலைக்கழகத்தில் முதன்மை பொருளாதார நிபுணராக வேலை செய்கிறார். விவசாய பொருளாதாரம் பற்றி கள ஆய்வுகள் செய்தவர். MSP ஆய்வு செய்து பற்றி நிறைய கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். விவசாயிகளின் வேதனை பற்றியும், இந்தத் துறையில் சீர்திருத்தங்கள் ஏன் அவசியம் என்றும் ஆய்வுகளைச் செய்ததோடு, தீர்வுகளையும் முன் வைத்து வாதிட்டு வருகிறார். பஞ்சாப் வேளாண் பல்கலைக் கழகத்தில், பொருளாதாரம் மற்றும் சமூகவியல் துறைகளில் தலைமைப் பொறுப்பிலும் வேலை செய்தவர். முக்கிய பயிர்களின் உற்பத்தி செலவு என்ற தலைப்பில் ஆய்வுக்கான சிறப்பு இயக்குனராகவும் பங்கு வகித்தார்..
கேள்வி: குறைந்தபட்ச ஆதரவு விலை, அதாவது MSP-யின் வரலாற்றில் இருந்து தொடங்கலாம். எப்போது ஏன் இந்த MSP அறிமுகப்படுத்தப்பட்டது.
பதில்: இந்திய உணவுக் கொள்கையை பல்வேறு அரசியல் காரணிகள் தீர்மானிக்கின்றன இதில் MSP. மிக முக்கிய கூறு ஆகும். 1943 வங்காளப் பஞ்சத்தின் போது இக்கொள்கை தொடங்கப்பட்டது. இந்த வங்கப் பஞ்சம் 10 லட்சத்திற்கும் மேலான மக்களை காவு கொண்டது. போதிய அளவு உணவு தானியங்கள் விநியோகம் இல்லாததால்தான் அந்த பஞ்சம் வந்தது. அதனால் பிரிட்டன் காலனிய அரசு உணவு தானியப் பொருட்கள் கொள்கை குழு ஒன்றை அமைத்தது. அதற்கு ஜார்ஜ் தியோடார் என்பவர் தலைமை வகித்தார். உணவு தானியங்களை பங்கீடு செய்து வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் உணவு தானிய பற்றாக்குறை கலவரத்தையும், அராஜகத்தையும் உருவாக்கிவிடும் என்று பிரிட்டிஷார் அஞ்சியதாக பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பிரிட்டிஷ் அரசு மேற்கொண்ட தனியக் கொள்கையானது பசுமைப்புரட்சியின் முன்மாதிரி என்று அவர்கள் விவரித்தார்கள். உண்மையில் அதுவே பின்னாளில் அறுபதாம் ஆண்டுகளில் பசுமைப்புரட்சி திட்டமாக செயல்படுத்தப்பட்டது என்பதை பார்க்கிறோம்.
கேள்வி 2: 1947 க்கு பிறகு என்ன நடந்தது
பதில்: நேருவின் ஆட்சி காலத்தில் பசுமைப் புரட்சிக்கான அடித்தளம் மெல்லமெல்ல போடப்பட்டது. 1964-இல் உணவுப் பொருள்களின் விலை கொள்கையை தயாரிக்க முதல் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் LK ஜா கமிட்டி மூலம் அப்போது நடைமுறையில் இருந்த விவசாய விளைபொருள் செலவீனங்கள் பற்றிய கொள்கை ஆணையம், (Commission for Agricultural Costs and Prices-CACP) முன் வைத்த அம்சங்கள் சிலவற்றையும் உள்ளடக்கி, விவசாய விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் (Agricultural Prices Commission-APC) ஒன்றை உருவாக்க முன்மொழிந்தது. இந்த விவசாய விளைபொருள் விலை நிர்ணய ஆணையமானது (APC), குறைந்த பட்ச ஆதரவு விலையையும் (MSP-ஐயும்), கொள்முதல் விலையையும் (PP) அறிமுகப் படுத்தியது.
கேள்வி 3: குறைந்த பட்ச ஆதரவு விலைக்கும் (MSP), கொள்முதல் விலைக்கும் (PP) என்ன வேறுபாடு?
பதில்: உணவுப் பயிர்களை உற்பத்தி செய்ய விவசாயிக்கு வழங்கப்படவேண்டிய குறைந்தபட்ச விலையை நிர்ணயிப்பது குறைந்த பட்ச ஆதரவு விலை (MSP) ஆகும். செலவினங்களை ஈடுகட்டவும் குறிப்பிட்ட லாபவிகிதம் கிடைக்கவும் அது வகை செய்யும். உணவுப் பயிர்கள் விளைந்து சந்தையில் ஒரு குறிப்பிட்ட விலைக்கு விற்கும். இதன் பெயர் கொள்முதல் விலையை நிர்ணயிப்பது ஆகும் (PP). இவ்வாறு அரசாங்கம் உணவு உற்பத்திப் பொருளுக்கு உத்தரவாதமாக ஒரு விலை கொடுத்து வாங்கும். இந்த நோக்கத்தில் உருவானது தான் விவசாய விளைபொருள் விலை நிர்ணய ஆணையம்.
ஆனால் விவசாய விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் (APC) விளைச்சலுக்கு இரண்டு விலைகளை அறிவிக்கும் என்பதே மக்களின் நினைவில் இருந்து நீங்கிவிட்டது. அதாவது ஒன்று MSP மற்றொன்று PP. 1970-இல் நடுப்பகுதிக்கு பிறகு அரசாங்கம் PP. அறிவிப்பை நிறுத்திவிட்டது, மக்களின் நினைவில் PP மங்கி மறைய இதுவே முதல் காரணம்.
கேள்வி 4: அரசாங்கம் ஏன் அப்படி செய்தது?
பதில்: குறைந்த பட்ச ஆதரவு விலையை அறிவித்து (MSP) உணவு தானியங்களை விலைக்கு எடுக்காத அரசாங்கம் கொள்முதல் விலையை (PP) அறிவிக்க வேண்டும் என்பதே இல்லைதானே. ஜா கமிட்டியானது ஒன்றிய அரசாங்கத்திடம், விவசாயிகள் விளைவித்த பொருள்களுக்கு லாபகரமான விலை அளிப்பதையும், அதேபோல அவ்வாறு வாங்கிய தானியங்களை மக்களுக்கு, நுகர்வோருக்கு மலிவாக அளிப்பதையும் நோக்கமாக கொண்டு. இந்திய உணவுக் கழகத்தை (FCI) அமைக்கக் கோரியது. அதன் அடிப்படையில் 1965 ஆம் ஆண்டு இந்திய உணவுக் கழகம் நிறுவப்பட்டது. இந்த உணவுக் கழகம் உணவு தானியங்களை சேமித்து வைத்து தேவைப்படும் காலத்தில் பயன்படுத்தும் தாங்கு பொறி வகை சேமிப்பை இருப்பு வைக்கும். உணவுப் பஞ்சத்தை சமாளிக்க இது உதவிகரமாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டது.
அதுபோலவே உணவு தானியங்கள் பொது வழங்கல் துறை மூலமாக (PDS) விற்கப்படும். இந்த உணவு தானியங்களை ரேஷன் கார்டு உள்ளவர்கள் ரேஷன் கடைகள் மூலமாக வாங்கலாம். இது அனைவருக்குமானது. இந்த ரேஷன் கடைகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களின் விலையானது பொதுச்சந்தை விலையைவிட மலிவானது, குறைவானது. தற்போது அனைவருக்குமான PDS குறிப் பிட்ட பிரிவு மக்களுக்கு மட்டும் என்று மாற்றப்பட்டு விட்டது. அதாவது மூன்றில் ஒரு பாகம் மக்கள் இந்த ஏற்பாட்டில் இருந்து சதித்தனமாக நீக்கப்பட்டார்கள். இதைவிடக் கொடுமையாக, PDS முறை யையே அரசாங்கம் மெல்ல மெல்ல கலைத்துவிட முயற்சிக்கிறது என்பது தான் வெளிப்படை.
கேள்வி 5: MSP ஐ நடைமுறைப்படுத்துவதில் என்னென்ன பிரச்சினைகள்?
பதில்: MSP மூலம் மொத்த விவசாய உற்பத்தியில் மிகக் குறைவான அளவே பயிர்கள் வாங்கப்படுகின்றன தானியங்கள் வாங்கப்படுகின்றன அதிலும் மாநிலத்துக்கு மாநிலம் இது வேறுபடுகிறது. பஞ்சாப், அரியானா, மேற்கு உத்தரபிரதேசம் ஆகிய மாநில அரசாங்கங்கள் கோதுமை, அரிசி விளைச்சலில் அனேகமாக MSP. மூலம் உணவு தானியங்கள் முழுவதுமாகவே கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.
2014இல் அரசாங்கம் சாந்தகுமார் கமிட்டியை உருவாக்கியது. மொத்த உற்பத்தியில் ஆறு சதவிகிதம் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் இதையும் கூட நிறுத்திக் கொள்ளலாம் என்று கமிட்டி கூறியது. MSP மூலம் ஆறு சதவிகிதம் விவசாயிகள் மட்டுமே பயன்படுவதாக ஒரு தவறான கருத்தையும் அது உருவாக்கியது. இது அடிப்படையில் தவறான வாதமாகும்.. அரசாங்கம் கொள்முதல் செய்கிற 6 சதவிகித விவசாய உற்பத்தியை கூட மிகப்பெரிய அளவிலான விவசாயிகள், பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகல் உற்பத்தி செய்கிறார்கள். பஞ்சாப், அரியானா, மேற்கு உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த ஒவ்வொரு விவசாயி மட்டுமல்லாது, மற்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகளும் MSP திட்டத்தால் பயன் அடைந்து வருகிறார்கள்.
கேள்வி 6: MSP மூலம் கோதுமை அரிசி போன்றவை மட்டுமே அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுவதால், பயிர் பல்வகை படுத்தும் முறை (பன்முகப் பயிர் முறையை) பாதிக்கப்பட்டுள்ளதா?
பதில்: ஆமாம். கோதுமையும், நெல்லும் இடர்பாடு இல்லாத பயிர் வகைகள். ஆனால், பருத்தி அப்படி அல்ல (பருத்தி வயல்களை) பூச்சிகள் சேதப்படுத்திவிடும். கோதுமை மற்றும் நெல் இரண்டின் உற்பத்தியும் சந்தைப்படுத்தலும் நிச்சயமானது. விவசாயிகள் வேறு வகைக்கு மாறாமல் இருப்பதற்கு இவை முக்கிய காரணிகள். அதுமட்டுமல்ல மாறுவது லாபகரமானது அல்ல. இந்த ஒற்றைப் பயிர் விவசாயம் என்பது நிலத்தடி நீரை வற்ற வைத்து விட்டது. மண்ணின் வளத்தை குறைத்துவிட்டது அடிக்கடி பயிர் தாள்களை எரித்து மறு பயிர் வைக்க வேண்டியிருப்பதால் காற்று மாசுபடுவதற்கு ஒரு காரணியாக ஆகிவிட்டது.
தொடரும்…