இன்று தேசிய அளவிலும், சர்வதேசிய அளவிலும் உழைக்கும் மக்களுக்கு ஓர் விடியல் தேவைப்படுகிறது. அதை புரட்சிகர இயக்கங்களால் மட்டுமே சாதிக்க முடியும். வழி காட்டவும், தலைமை தாங்கவும் முடியும்.
அப்படிப்பட்ட இயக்கத்தை அடியொற்றிப் பயணிப்போர், பல்வேறு அரிய மார்க்சிய- லெனினியத் தத்துவங்களை உள்ளடக்கிய நூல்களைப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகிறது.
ஆனால் பல்வேறு தோழர்களுக்கு வாசிப்புப் பழக்கம் என்பதோ வேப்பெண்ணையைக் குடிப்பது போலக் குமட்டுகிறது. அந்தக் கேடானப் பழக்க வழக்கத்தை கைவிடுவது மிகவும் அவசியம். அதை ஒட்டி ‘மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி” என்ற ஒரு அரிய நூலை ‘மாரிஸ் கார்ன் ஃபோர்த்’ என்ற தோழர் எழுதியுள்ளார். அதனுடைய ஒரு பத்தியை மட்டும் புதிய வாசகர்களுக்காகக் கீழே பதிவிடப்
படுகிறது.
–எழில்மாறன்.
000
“அனுபவம் இல்லாத வாசகர்களுக்கோர் அறிவுரை”
“மார்க்சிய இலக்கியங்களைப் படிக்கும் போது, ஒருவர் எடுத்து எடுப்பில் புரிந்து கொள்ளக் கடினமானதாக இருக்கும் பகுதிகளை அடிக்கடிக் காண்கின்றனர். இது சில சமயங்களில் விசயத்தின் கடினமான தன்மையாலும் ஏற்படுகிறது; சில சமயங்களில் பழக்கமில்லாத சொற்களாலும் நேர்கின்றது; சில நேரங்களில் முன் எப்போதும் கேட்டிராதவர் களுக்கு எதிரான வாதங்களை அறிமுகப்படுத்துவதாலும் எழுகிறது. விளக்கமில்லாத அல்லது தாறுமாறான கருத்துக்களை முன்வைப் போருக்கு எதிரான வாதங்களை முன் வைப்பதால் தோன்றுகிறது. இவ்வாறான சிரமங்களை எதிர்கொள்ளும் போது, குறிப்பிட்ட இடத்தில் அழிந்து சிக்கிக் கொள்ளாதீர்கள். அந்தப் பகுதியை நீங்கள் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் தொடர்ந்து மேற்கொண்டு படியுங்கள். கடினமான பகுதி முடிவுற்றதும், மீண்டும் நீங்கள் வழித்தடத்திற்கு வருவதை உணர்வீர்கள். இன்னும் விரிவான படிப்புடனும், விஷயத்திற்கு இன்னும் அதிகமான பரீட்சயத்துடனும் நீங்கள் அந்த நூலுக்கு மீண்டும் திரும்பலாம். உங்களது முதல் சிரமம் தற்போது அறவே இல்லை என்றோ, எப்படியும் குறைந்திருக் கிறது என்றோ காண்பீர்கள். ஆனால் நீங்கள் அந்த விளங்காத பகுதியில் அழுந்தி, அது பற்றியே குழம்பிக் கொண்டிருந்தால், நீங்கள் விரக்தியுற்று புத்தகத்தை முடிக்காமல் போய்விடலாம்”
–மாரிஸ் கார்ன் ஃபோர்த்.
(இவர், இங்கிலாந்து நாட்டு மிகச் சிறந்த கம்யூனிஸ்ட்; மிகச் சிறந்த தத்துவ மேதை; மிகச் சிறந்த பாட்டாளி வர்க்கப் பண்பாளர்; மிகச் சிறந்த பன்முக ஆளுமை!)
குறிப்பு:- “மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி” என்ற அவரது நூல் “கீழைக்காற்று” வெளியீட்டகத்தில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.