இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரனும், உலக அளவில் 22 ஆவது பெரிய பணக்காரனுமான கௌதம் அதானி மீது சூரிய சக்தி மின்சார ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஒப்பந்தங்களை பெற்றதாக அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் ஒன்றை பிறப்பித்துள்ளதாக பரபரப்பாக செய்திகள் வெளி வருகின்றது. அதாவது இந்தியாவில் அவரின் Adani Green Energy Ltd 12 கிகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான சோலார் திட்டத்தில் கையெழுத்து போட்டு உள்ளது. இதற்காக பல கோடிகளை லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு தந்துள்ளது
இவ்வாறு லஞ்சம் தர முயன்றதாகவும், இந்த உண்மைகளை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் கௌதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2100 கோடி ரூபாய் முறைகேட்டில் அவர் ஈடுபட்டதாக புகார்கள் வைக்கப்பட்டுள்ளது.
நினைவிருகின்றதா? இதே அதானியின் மீது ஹிண்டன்பர்க் அறிக்கை பங்கு சந்தை மூலம் பல்வேறு மோசடிகளை செய்து தனது வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. உடனே அதானியின் பங்குகள் அனைத்தும் வீழ்ச்சி அடைந்தது. அதுமட்டுமின்றி உலக பணக்காரன் வரிசையில் கீழே இறங்கினார் என்றெல்லாம் செய்தி வெளியானது.
ஹிண்டன்பர்க் என்ற தனியார் நிறுவனம் திட்டமிட்டு அதானியின் செல்வாக்கை வீழ்த்துவதற்காக இது போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாகவும் அதற்கு ஆதாரம் இருக்கின்றதா, இல்லையா என்று செபி விசாரிக்கும் என்றும், கார்ப்பரேட் கைக்கூலி பாசிச மோடி அரசால் முடிவு செய்யப்பட்டது.
இறுதியில் செபி விசாரணை செய்து அதானிக்கும், ஹிண்டன்பர்க் அறிக்கை முன் வைத்திருக்கின்ற விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஊத்தி மூடியதை அறிவோம். அதேபோலத்தான் இப்போதும் பரபரப்பாக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டில் நடப்பது அதானியின் ஆட்சி!
இவர்கள் இன்னமும் என்ன புரிந்து வைத்திருக்கிறார்கள் என்றால் அதானி என்ற ஒரு முதலாளி மோடியின் உதவியுடன் ஊழல் முறைகேடுகளை செய்து வருவதாகவும், இந்தியாவின் கனிம வளங்களை சூறையாடுவதற்கு பல்வேறு ஒப்பந்தங்களை போட்டுக்கொண்டு கொள்ளையடித்து வருவதாகவும் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் நாட்டில் நடப்பது அதானியின் ஆட்சி, அதானி எனற தேசங்கடந்த தரகு முதலாளியின் கார்ப்பரேட் ஆட்சி.
முன்பெல்லாம் முதலாளிகள் திரைக்குப் பின்னால் நின்று கொண்டு தனது விசுவாசிகளையோ, அடிமைகளையோ ஆட்சியாளர்களாக தேர்வு செய்வார்கள். ஆனால் ஏகாதிபத்திய நிதி மூலதனம் பல மடங்கு பரிணாம வளர்ச்சி பெற்றுள்ள இந்த காலகட்டத்தில் முதலாளிகள் நேரடியாகவே அரசியலில் குதிக்கின்றார்கள். திரை மறைவு என்பதெல்லாம் இல்லை.
அதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் அமெரிக்காவின் தேர்தலில் எலான் மஸ்க் நேரடியாகவே டொனால்ட் ட்ரம்பை ஆதரித்து பிரச்சாரம் செய்ததும், ட்ரம்ப் வெற்றி பெற்றவுடன் எலான் மஸ்க்கை தனது ஆலோசகராக நியமித்துக் கொண்டதுமாகும்.
முதலாளித்துவ ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகளையும், பரபரப்பாக தனது டிஆர்பி ரேட்டிங்குக்காக பல கோணங்களில் வெளியிடுகின்ற முதலாளித்துவ கழிசடை பத்திரிகைகளின் அலம்பல்களையும் பார்த்து நாம் ஏமாந்துவிடக்க்கூடாது. ஏனென்றால் இத்தகைய ஊழல் தொழிலதிபர்களுக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. இதனால் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் போக மாட்டார்கள்.அதனை புரிந்துக் கொள்ள வேண்டும்.
நாம் செய்ய வேண்டியது என்ன?
”எமது தேசத்தின் சொத்துக்களை சூறையாடிய கிரிமினல் கார்ப்பரேட் பயங்கரவாதியான அதானியின் சொத்துக்களை பறிமுதல் செய்வோம்” என்ற முழக்கத்துடன் வீதியில் இறங்குவோம் அதானியின் கொள்ளைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளர்கள் பிற வர்க்கங்க ளுடன் ஒன்றிணைந்து தெருவில் இறங்கி நேரடியாக நிர்பந்திப்பதும், அவனது சொத்துக்களை முடக்குவதற்கு போராடுவதும், படிப்படியாக அவனது தயாரிப்புகள், நுகர்வு பொருட்கள், ஆலைகள் ஆகியவற்றை புறக்கணிப்பது என்று முடிவெடுத்தால்தான் குறைந்தபட்சம் அதானியை ஆட்டவோ, அசைக்கவோ முடியும். இதெல்லாம் உடனே நடக்காது. சட்டப்படி என்ன முடியுமோ அதை மட்டும் பேசாலாம் என்று குட்டி முதலாளித்துவ அறிஞர்கள் வகுப்பெடுக்க கிளம்புவார்கள். அதையும் நிராகரிக்க வேண்டும்.
இந்த நேரத்தில் தமிழக முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக திமுக அரசு முன்வைத்த செய்தியையும் நினைவுபடுத்துகின்றோம். ”இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டில் அதானி குழுமம் மொத்தம் ரூ.42,768 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் 10,300 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் ரூ.24,500 கோடி முதலீடு செய்கிறது. இதன்மூலம் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இதேபோல் அதானியின் அம்புஜா சிமெண்ட் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதேபோல் அதானி கனெக்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ13,200 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் தமிழகத்தில் ரூ.1,568 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதுதான் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாத கும்பலான ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கும் பாசிசத்தை எதிர்ப்பதாக கூறிக் கொண்டே தேசங்கடந்த தரகு முதலாளிகளை வரவேற்கின்ற திமுகவிற்கும் உள்ள ஒத்த நிலைப்பாடாகும்.
கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு, காவியை மட்டும் எதிர்த்தால் போதாது! கார்ப்பரேட்டுகளையும் எதிர்த்துப் போராடுவது தான் அவர்களை முறியடிப்பதற்கான வழி. இதில் ஊசலாடுகின்ற திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளின் முதலாளித்துவ ஆதரவு நிலைப்பாட்டை அம்பலப்படுத்தி முறியடிப்போம். இதன் மூலமே உண்மையான எதிரிக்கு எதிரான போராட்டத்தில் முன்னேறிச் செல்ல முடியும்.
- மருது பாண்டியன்.