பட்ஜெட் 2022 -23:  மோடியின் மோசடி வித்தை

” 2022-ஆம் ஆண்டில் 75-வது சுதந்திரதினக் கொண்டாட்டத்தின்போது  விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகி இருக்கும்”  என்று பிப்ரவரி 28, 2016 அன்று  மோடி முழங்கினார்.  விவசாயிகளின் வருமானத்தை   இரட்டிப்பாக்குவதை 2021-22 பட்ஜெட் குறிக்கோளாகக் கொண்டு உள்ளதாக அன்றைய, ஒன்றிய விவசாயத் துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர் சொல்லியிருந்தார்.  தற்போது வந்துவிட்டது 2022-ஆம் ஆண்டு. இரட்டிப்பாகி விட்டதா விவசாயிகளின் வருமானம்?

2015-16-ல்  விவசாயிகளின் மாத வருமானம் ரூ.8059-ஆக இருந்தது என்று Doubling Farmers’ Income Committee Report கூறியுள்ளது.  விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களை எடுத்துக் கொண்டு பார்த்தால் 2022-ல் விவசாயிகளின் மாத வருமானம் சுமார் ரூ. 21,000-ஆக இருந்தால் தான் மோடி சொன்னபடி வருமானம் இரட்டிப்பாகி உள்ளதாக கொள்ளமுடியும்.

இன்றைய நிலையில் விவசாயிகளின் மாத வருமானம் சுமார் ரூ. 21,000-ஆக இருக்கிறது என்று யாரும் கூறத் துணிய மாட்டார்கள். ஏன் பொய்யுரைப்பதில் வல்லவர்களான மோடி கும்பலே அவ்வாறு  சொல்ல துணிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட் உரையிலும் பிற  சமயங்களிலும் விவசாயிகளின் வருமானத்தை 2022-ல் இரட்டிப்பாக்குவோம் என்று கடந்த 6 ஆண்டுகளாக பா.ஜ.க. தலைவர்கள் கூறிக்கொண்டு இருந்தனர். அவர்கள் கூறிய 2022-ஆம் ஆண்டு வந்துவிட்டது இதுபற்றி இந்த பட்ஜெட் உரையில் ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை.

ஆறு ஆண்டுகளாக மோடி கும்பல் சொல்லிக்கொண்டிருந்த பொய் மறுக்கவே இயலாதபடி அம்பலப்பட்டுப் போன ஆண்டு இது. உலக வரலாற்றில் எங்கும் இல்லாதபடி இந்திய விவசாயிகள் ஒன்று திரண்டு, 700-க்கும்  மேற்பட்ட உயிர் தியாகம் புரிந்து ஆண்டுக் கணக்கில் போராடி மோடி அரசை மண்டியிட செய்துள்ள நிலையில் வெளிவரும் பட்ஜெட் இது.

விவசாயிகளின் வாழ்க்கை மேம்பட இந்த பட்ஜெட்டிலாவது ஏதாவது கூறியுள்ளனரா என்று பார்த்தால் ஒன்றுமில்லை. விவசாயிகளின்  நலனுக்கு எதிரானதாகத்தான் இந்த பட்ஜெட் உள்ளது.

எல்லா விவசாயிகளும் தங்களது விளைபொருட்களை குறைந்த பட்ச ஆதார விலைக்கு  விற்பதை உத்தரவாத படுத்துவதாக 2018-ஆம் ஆண்டின் பட்ஜெட் உரையில் பா.ஜ.க.-வின் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். அப்போதிருந்து மோடி அரசு குறைந்த பட்ச ஆதார விலை குறித்து திரும்பத் திரும்ப உறுதியளித்து கொண்டே இருந்தது.  இப்படி ஒருபுறம் சொல்லிக் கொண்டே, இன்னொரு புறத்தில் குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக உத்தரவாதப் படுத்துவது  நடைமுறை சாத்தியமற்றது என்று மோடி அரசு கூறிக்கொண்டு இருந்தது. இதுதான் இந்த அரசின் நடைமுறை.

கொரோனா பெருந்தொற்றின் துவக்கத்தில், மே 2020-ல், விவசாய உள்கட்டமைப்பிற்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் (ஆத்மநிர்பார் பாரத்  பேக்கேஜ்-ல்)  ஒதுக்குவதாக ஒன்றிய அரசு அறிவித்தது.  இதன் மூலம் பொருளாதாரத்தை நெருக்கடியிலிருந்து மீட்கப் போவதாகச் கூறியது. ஆனால் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகும் கூட ரூ. 2694 கோடி  தான் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது என்பதை வைத்து மோடி கும்பலின் அறிவிப்புகள் எந்த லட்சணத்தில் செயல்படுத்தப்படுகின்றன என்பதை புரிந்து கொள்ளலாம்.

விவசாயம் மற்றும் விவசாயம் தொடர்பான நடவடிக்கைகளுக்காக 2021-22-ஆம் ஆண்டின் மொத்த பட்ஜெட்டில் 4.3 சதவீதம் ஒதுக்கப்பட்டது அது பிறகு திருத்தப்பட்டு 3.9 சதவீதமாக குறைக்கப்பட்டது. அது இந்த பட்ஜெட்டில் மேலும் குறைக்கப்பட்டு 3.8 சதவீதமாக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

உரங்கள் வாங்குவதற்காக முன்பு ரூ.1,49,663.28 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த பட்ஜெட்டில் ரூ. 40,421.05 கோடிகளைக் குறைத்து  ரூ.1,09,242.23 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இந்த அரசு விவசாயத்தை வளர்க்கும் லட்சணத்தை புரிந்து கொள்ள முடியும்.

மகாத்மா காந்தி ஊரக வேலை அளிப்பு திட்டத்திற்கு (MGNREGS) 2020-21-ஆம் ஆண்டில் ரூ 1,11,170 கோடி ஒதுக்கப்பட்டது. 2021-22-ல்  ரூ.98,000 கோடியாகக் குறைக்கப்பட்டது. 2022-23 நிதி ஆண்டிற்கான இந்த பட்ஜெட்டில் அது மேலும் குறைக்கப்பட்டு ரூ 73,000 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புற ஏழை மக்களின் தலையில் இறங்கியுள்ள பெரிய இடி என்பதே உண்மை.

 25 ஆண்டுகளுக்கான பொய்

25 ஆண்டுகளுக்குள் அதாவது 100-ஆவது சுதந்திர தினத்திற்குள் நாட்டை முன்னேற்றுவதற்கான திட்டத்துடன் உள்ளதாக தம்பட்டம் அடிக்கிறது மோடி கும்பல். எப்படி இதை ‘சாதிக்க’ போகிறார்கள்?  வேறு எப்படி? கார்ப்பரேட்டுகளுக்கு இந்தியாவை கூறு போட்டு விற்பதன் மூலமாகத் தான், உழைக்கும் மக்களை ஒட்டச்சுரண்டி கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை அளிப்பதன் மூலமாகத் தான்.

தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் 2019-20-ஆம் நிதியாண்டில் மட்டும் 18 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மொத்தம் ரூ. 3,441 கோடி நன்கொடையாக பெற்றுள்ளன. அந்த மொத்த தொகையில் ரூ 2500 கோடி, அதாவது 75 சதம் பா.ஜ.க. கணக்கில் வந்துள்ளது. எதற்காக இந்த  நிதி வந்துள்ளது? கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதற்காக. அதற்காகத்தான் பெருநிறுவனங்களின் கூடுதல் வரியை (Surcharge) 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைத்து விட்டனர்.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை ரூ. 18,000 கோடிக்கு  டாட்டா-க்கு விற்றுவிட்டனர். அதற்காக டாடாவுக்கு 18,000 கோடி அரசே (ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகள் மூலம்) கடனாக கொடுத்துள்ளது. அதுவும் 4.5 சதவீத வட்டியில். ஆனால் இந்திய அரசு 6.5 சதவீத வட்டிக்கு கடன் வாங்குகிறது.  அரசு பிறருக்கு கட்டும் வட்டியை விட குறைவான வட்டியில் கார்போரேட்டுகளுக்கு கடன் கொடுக்கிறது அரசு. அதே அரசு சிறுதொழில் முனைவோருக்கு 13 சதவீத வட்டியில்தான் கடன் கொடுத்துள்ளது.

ஆடம்பரப் பொருட்களான பட்டை தீட்டப்பட்ட வைரம், முத்துக்கள் மீதான இறக்குமதி வரி 7.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாவசிய பொருட்களான  குடை மீதான வரி 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.  மேலும்  குடையின் உதிரி பாகங்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்த வழியில்தான் இந்தியாவின் ஒவ்வொரு துறையையும் மக்களையும் ‘முன்னேற்ற’ போகிறார்கள்.

மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா என்று மோடி கும்பல் கதை சொல்லிக்கொண்டிருக்கும் போது விநாயகர் சிலை, முருகன் காலண்டர், கிறிஸ்துமஸ் மரம் போன்றவைகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. சீன காலண்டர் வரவால் சிவகாசி காலண்டர்  உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில்தான் 2047-ல் அதாவது 25 ஆண்டுகளில் இந்தியாவை முன்னேற்றுவதற்காக திட்டத்துடன் செயல்படுவதாக இப்பொழுது புதிதாக கதை சொல்ல ஆரம்பித்துவிட்டனர். இதை நம்பிக் கொண்டிருக்க தமிழக மக்கள் ஒன்றும்  தர்க்க அறிவற்ற மூடர்கள் அல்ல என்பதும் நாம் சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. அது  மோடிக்கே தெரியும்.

இந்த தர்க்க அறிவை இந்தியா முழுமைக்கும் பரப்புவோம்!
மோடி கும்பலை வீழ்த்துவோம்!!

  • பாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here