இந்திய ஒன்றியத்தின் நிதிநிலை அறிக்கை 2022-23:

2022-23 நிதியாண்டுக்கான இந்திய ஒன்றியத்தின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022, ஃபிப்ரவரி 1ல் தாக்கல் செய்தார்.

நிதிநிலை அறிக்கையில் அரசு அடுத்த நிதி ஆண்டில் தன் திட்டங்களை செயல்படுத்த ஒட்டுமொத்தமாகவும் துறைவாரியாகவும் எவ்வளவு நிதிஒதுக்கீடு செய்யவுள்ளது, அதற்கான வருவாயை எவ்வாறு பெறவுள்ளது என்பது குறித்த மதிப்பீடுகளை வெளியிடவேண்டியது அவசியம். அத்துடன் சென்ற நிதிஆண்டில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எவ்வளவு நிறைவேற்றப்பட்டுள்ளது. திட்டங்களை சரியாக நிறைவேற்றமுடியாவிடில் அதற்கான காரணங்கள் என்ன என்பதையும் அரசு தெளிவுபடுத்துவது நலம் பயக்கும். அவ்வாறில்லாமல் பாஜக அரசு தன் தோல்விகளையும், இயலாமையையும் மறைக்கவும், இன்றைய பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவும் தொலைநோக்கு திட்டங்கள் என்ற பெயரில் நீட்டி முழக்குவதன் மூலம் தன் சந்தர்ப்பவாத அரசியலை காக்க முடியாது.

இன்றைக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், இடர்பாடுகளையும் கண்டுகொள்ளாதவர்கள் 25 ஆண்டு தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை வகுத்து அறிவித்துள்ளனராம், அதை நாமும் நம்பவேண்டுமாம். இந்த ஆண்டில் நாங்கள் எதுவுமே செய்யப்போவதில்லை என்பதிலிருந்து திசைதிருப்ப செய்யப்படும் கண்துடைப்பு நாடகம் தான் இது.

இந்தியாவின் 100வது சுதந்திர தினத்தைக் முன்னோக்கி, நீண்டகால திட்டங்களுக்காக நான்கு முக்கிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். அவையாவன: பிரதமர் கதிசக்தி, உள்ளடக்கிய வளர்ச்சி, உற்பத்தி மேம்பாடு, முதலீடு, புதிய வாய்ப்புகள், காலநிலை செயல்பாடாக எரிஆற்றல், திட்டம், முதலீட்டிற்கான நிதி.

2022-23 நிதியாண்டிற்கான, மூலதன செலவினத்திற்கு சென்ற ஆண்டைவிட 35.4% கூடுதலாக ரூ.7.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டிலும் இதே போல் மூலதன செலவிற்கு 34% கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும் அதில் 50 விழுக்காட்டிற்கும் குறைவாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனும் போது வரும் நிதி ஆண்டில் 35.4% கூடுதலாக மூலதன செலவினத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. 2021-22 நிதியாண்டின் மூலதனச் செலவினத்தின் திருத்திய மதிப்பீடு ரூ. 6.03 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ஏர் இந்தியாவின் நிலுவையிலுள்ள கடன்தொகை ரூ. 51,971 கோடியும் அடங்கும். இதை எவ்விதத்தில் மூலதன செலவு என ஏற்றுக்கொள்ளமுடியும்?.

2021-22 நிதியாண்டிற்கான செலவினம் ரூ.34.83 லட்சம் கோடியாக மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில் திருத்திய மதிப்பீடுகளில் ரூ.37.70 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 2021-22ன் ஏப்ரல்-நவம்பர் காலக்கட்டத்தில் அரசு மேற்கொண்ட மொத்த செலவினம் மதிப்பீடு செய்யப்பட்டதில் 60 விழுக்காட்டிற்கு குறைவாகவும், இதே காலக்கட்டத்தில் அதற்கு முந்தைய ஆண்டில் செய்யப்பட்ட செலவினத்தை விடக் குறைவாகவும் உள்ள நிலையில் இரு மாதங்களில் எஞ்சிய தொகை முழுவதும் செலவு செய்யப்படும் என்பது நம்பத் தகுந்ததாய் இல்லை.
2022-23ஆம் நிதியாண்டிற்கான மொத்த செலவினம் ரூ.39.45 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2022-23-ல் கடன் தவிர்த்த மொத்த வரவுகள் ரூ.22.84 லட்சம் கோடியாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 2022-23-ம் நிதியாண்டின் செலவினங்களுக்காக, மத்திய அரசு ரூ.11.6 லட்சம் கோடி கடன் வாங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-23ஆம் நிதியாண்டிற்கான அரசின் மொத்த வருவாயில் வரிவருவாய் 58 விழுக்காடும் பங்குவிலக்கல் 2 விழுக்காடும், வரியில்லா வருவாய் 5 விழுக்காடும், கடன் 35 விழுக்காடும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை மதிப்பிடப்பட்ட 6.8 விழுக்காட்டை விட 0.1 விழுக்காடு கூடுதலாக 6.9% உயரும் எனத் திருத்தப்பட்டுள்ளது. நிதியாண்டு 2022-23ல் நிதிப் பற்றாக்குறை 6.4 விழுக்காடாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2025-26-க்குள் 4.5 விழுக்காட்டிற்கும் குறைவாக நிதிப்பற்றாக்குறையைக் குறைக்கும் நிதி ஒருங்கிணைப்பிற்கு வழிவகுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

25 ஆண்டு தொலைநோக்குப் பார்வையுடன் பல திட்டங்களை அறிமுகப்படுத்திய பாஜக அரசு ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளைக் குறைத்து தன் மக்கள் விரோதப் போக்கை மீண்டும் இன்னொரு.முறை உறுதிபடுத்தியுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை நகர்ப்புறங்களிலும் நடைமுறைபடுத்தவேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும் அதை அலட்சியம் செய்த பாஜக அரசு சென்ற நிதியாண்டை விட 34.2 விழுக்காடு குறைத்து 73000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் உணவு, உரம், பெட்ரோலிய பொருட்களுக்கு மத்திய அரசு தரும் மானியம் ரூ.4.33.108 கோடியாக 39% குறைந்துள்ளது. 2022-23-ம் நிதியாண்டிற்கான மதிப்பீடுகளில் இந்த மானியம் மேலும் 27% குறைக்கப்பட்டு ரூ.3.17.866 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும் என்று எளிய மக்களை வஞ்சித்துள்ளது பாஜக அரசு. உரமானியம் 2021-22ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளை விட 25 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. உணவு மானியம் 28 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியத்திற்கான மானியம் 10 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. கிராம மேம்பாட்டுத் துறைக்கான ஒதுக்கீட்டில் 0.31 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது.சுகாதாரத்துறைக்கு சென்ற ஆண்டை விட 0.8விழுக்காடு மட்டுமே கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

. ஒட்டுமொத்தமாக, விவசாய ஆராய்ச்சி, கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளம் உள்ளிட்ட வேளாண் துறைக்கு 2021-22ல் ₹1.35 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 2022-23ல் வேளாண்துறைக்கு சென்ற ஆண்டை விட வெறும் 2விழுக்காடு கூடுதலாக ₹1.38 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கு 3 விழுக்காடு குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா காப்பீட்டுத் திட்டத்திற்கு 43 விழுக்காடு குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உணவு தானிய கொள்முதலுக்கு 20 விழுக்காடு குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்திற்கு 15 விழுக்காடு குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.

2021-22 நிதியாண்டில் பங்குவிலக்கல் மூலம் 1.75 லட்சம் கோடி திரட்டப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசால் வெறும் 9,364 கோடி ரூபாய் மட்டுமே திரட்ட முடிந்தது மகிழ்ச்சியான செய்தி என்ற போதும் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் பங்குவிலக்கல் இலக்கு 78000 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2022-23ல் பங்குவிலக்கல் மூலம் 65000 கோடி ரூபாய் திரட்டப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த முதலீடுகளை ஊக்குவிப்பதில் மாநிலங்களுக்கு உதவ 2022-23-ல் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன்கள், அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு முக்கியமாக பிரதமரின் ‘கதிசக்தி’ திட்டத்திற்கே பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசு மாநிலங்களுக்கு அளித்துவந்த திட்டநிதிகளையும், மானியங்களையும் குறைத்தே இத்தகைய திட்டத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளார். சமீப காலங்களில் மத்திய அரசு மூலதனச் செலவுகளை கூடுதலாகக் காண்பிக்க வருவாய் செலவினங்களைக் குறைத்து நிதிநிலை அறிக்கையில் ஆக்கமிகுக் கணக்கீட்டு முறையை (creative accounting) பின்பற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களின் நிதிப்பற்றாக்குறைக்கான வரம்பு 4 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. அதில் 0.5 விழுக்காடு மின் துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டது.
மாநிலங்களின் உரிமைகளை அபகரிக்கும் விதமாக ஒரே நாடு ஒரே ஆவணப் பதிவு’ என்ற திட்டத்தின் கீழ் அனைத்து நில ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் மேலாண்மை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு அவசரகால கடன் உத்தரவாத திட்டத்திற்கு (ECLGS) ரூ.50,000 கோடி அதிகரிக்கப்பட்டு மொத்தம் ரூ. 5 லட்சம் கோடியாக விரிவுபடுத்தப்படும் என்றும் இத்திட்டம் 2023ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்படவுள்ளது. கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 50,000 கோடி ரூபாய் உணவகம், சுற்றுலா சார்ந்த சேவைத்துறைகளுக்கு மட்டுமே அளிக்கப்படும். சிறு, குறு நிறுவனங்ளுக்கான கடன் உத்திரவாத அறக்கட்டளையின் (CGTMSE) கீழ் சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி கூடுதல் கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 75 விழுக்காட்டினர் மத்திய அரசின் திட்டங்களின் கீழ் கடன் பெறுவது மிகக் கடினமாக உள்ளதாகவே பதிலளித்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

2022-23-ல் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு 25,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு விரிவாக்கப்படும். தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு விரிவாக்கத்திற்கான ரூ.20,000 கோடி திரட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1.5 லட்சம் தபால் அலுவலகங்களில் முகமை வங்கி அமைப்புக்குள் கொண்டுவரப்பட்டு வங்கிகளுக்கிடையிலான பரிவர்த்தனை எளிமைபடுத்தப்படும் என்றும் இதன்மூலம் எங்கிருந்தும் அஞ்சலக கணக்குகளை இயக்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதியை ஊக்குவிக்க சிறப்பு பொருளாதார மண்டலங்களில் மாநிலங்களையும் பங்குதாரரர்களாக்க சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளது .

2022-23 உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் திறன் அதிகரித்தலுக்கு கவாஜ் திட்டத்தின் கீழ் 2000 கிலோ மீட்டர் ரயில்வே கட்டமைப்பு கொண்டு வரப்படும் எனவும் அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய தலைமுறை வந்தே பாரதம் ரயில்கள் தயாரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் வர்த்தகம் மற்றும் விநியோக சங்கிலிக்கு உதவும் வகையில், ஒரு ரயில் நிலையம், ஒரு பொருள் என்ற கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அடுத்த 3 ஆண்டுகளில் பன்மாதிரி சரக்குப் போக்குவரத்துக்கான 100 பிஎம் கதிசக்தி சரக்கு முனையங்கள் உருவாக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

2022-23-ல் பாதுகாப்புத்துறைக்கான மூலதன கொள்முதலில் உள்நாட்டு தொழில் நிறுவனங்களிடமிருந்து 68% கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ரசாயன கலப்பற்ற இயற்கை வேளாண்மை மேம்படுத்தப்படும். கங்கை நதியின் குறுக்கே 5 கிலோ மீட்டர் அகல வழித்தடத்தின் விவசாய நிலங்களில் முதலில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்திற்கு ₹450 கோடி (2021-22 பட்ஜெட் மதிப்பீடு) ஒதுக்கப்பட்டது, ஆனால் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் அந்த ஆண்டில் வெறும் ₹100 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. தற்போது அத்திட்டம் உற்பத்தித்திறன், விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா என்ற குடைத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டதில் இருந்து 2022-23 ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் எவ்வளவு பெறப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

உதயம், இ-ஷ்ரம், என்சிஎஸ் மற்றும் அசீம் (ASEEM) இணையதளங்கள் ஒன்றாக இணைக்கப்படவுள்ளது.

பிரதமரின் இ-வித்யா திட்டத்தின் ‘ஒரு வகுப்பு- ஒரு டி.வி சேனல்’ அனைத்து மாநில மொழிகளிலும் ஒளிபரப்புமாறு 200 டி.வி சேனல்களாக விரிவுபடுத்தப்படும் என்றும் டிஜிட்டல் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டில் 3.8 கோடி வீடுகளுக்கு இணைப்பு வழங்க ரூ.60,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாரத் நெட் திட்டத்தின் மூலம் அனைத்துக் கிராமங்களிலும் இணைய வசதி கிடைக்கும்படி செய்யப்படும் என்றும் 2025-ம் ஆண்டுக்குள் அனைத்துக் கிராமங்களுக்கும் இணைய வசதி கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டில் 80 லட்சம் வீடுகள் கட்டி முடிக்க வெறும் ரூ.48,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மின்னணு சிப்கள் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

பசுமை கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி திரட்ட பசுமை நிதிப்பத்திரங்கள் வெளியிடப்படும் என்றும் 2022-23-லிருந்து இந்திய தலைமை வங்கி டிஜிட்டல் மின்ம ரூபாயை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிர் வகைகளை மதிப்பீடு செய்யவும், நில ஆவணங்களை சரிபார்க்கவும், பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டை கண்காணிக்கவும் ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய நிலங்களில் அறுவடைக்குப் பின் விவசாயக்கழிவுகளை எரிக்காமல் உயிரி உருண்டைகளாக மாற்றப்பட்டு, அனல் மின் நிலையங்களில் ஆண்டுக்கு 38 மில்லியன் மெட்ரிக் டன் கரியமில வாயுவை குறைக்க 5-7% உயிரி உருண்டைகள் இணை எரிபொருளாக பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏவிஜிசி ஊக்குவிப்பு குழு: அனிமேஷன், விஷூவல் எபெக்ட்ஸ், விளையாட்டு மற்றும் காமிக்ஸ் (AVGC) ஆகியவற்றின் ஊக்குவிப்புக்கு இத்துறையில் தனி குழு உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தில், வெளிநாட்டுப் பல்கல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடங்க அனுமதிக்கப்படும் என்றும், சச்சரவுகளுக்கு குறித்த காலத்திற்குள் தீர்வு காண ஏதுவாக சர்வதேச சச்சரவுத் தீர்வு மையம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வரிப்புகலிடமாக செயல்படுத்தும் விதத்தில் குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தின் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முற்றிலும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது அங்கே செயல்படும் நிறுவனங்களின் வரி 15 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.

2022-23ல் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 5 பெரிய நதிகள் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நதிநீர் இணைப்புப் பற்றி சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ஒருபுறம் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்துவிட்டு மறுபுறம் பேராபத்தை ஏற்படுத்தும் நதிநீர் இணைப்புத் திட்டங்கள் பற்றி அறிவித்து மோடி அரசு அழிவுப்பாதையில் செல்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடக்க நிறுவனங்களுக்கான வரிச் சலுகைகளைப் பெறுவதற்கான கால அவகாசமும் 2023-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 14 துறைகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை பெரும்பாலும் அதிகவேலைவாய்ப்பு அளிக்காத மூலதன செறிவு மிகுந்த பெருநிறுவனங்களுக்கே அளிக்கப்படும் நிலையில் இது வெறும் வெற்று வாய்ச் சவடால் அறிவிப்பே.

கூட்டுறவு சங்கங்களுக்கான குறைந்தபட்ச வரி 15 விழுக்காடாகவும், ரூ.1 கோடிக்கும் அதிகமாகவும், ரூ.10 கோடி வரையிலும் மொத்த வருமானம் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான கூடுதல் வரி 7 விழுக்காடாகவும், குறைக்கப்பட்டுள்ளது.

மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சகி இயக்கம், வாத்சல்யா மற்றும் ஊட்டச்சத்து 2.0 என்கிற மூன்று திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் / காப்பாளர்களின் வாழ்க்கை காலத்தில் அதாவது பெற்றோர்கள் / காப்பாளர்கள் 60 வயதை அடையும் போது, அவர்களை சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு காப்பீட்டு திட்டத்தில் இருந்து கிடைக்கும் வருடாந்திர தொகை அல்லது மொத்த தொகை அனுமதிக்கப்படும்.
மாநில அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் செலுத்தப்படும் வரிப்பிடித்த வரம்பு 10 சதவீதத்லிருந்து 14 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.
31.03.2024 வரை புதிதாகத் தொடங்கப்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கான வரி 15 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கிரிப்டோ நாணயங்களில் முதலீடு செய்வதை தடைசெய்ய நாடாளுமன்ற மசோதா எதுவும் இதுவரை அறிமுகப்படுத்தப்படாத நிலையில் மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்களின் பரிவர்த்தனைகளுக்கு 30 விழுக்காடு வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. எந்தவொரு மெய்நிகர் டிஜிட்டல் சொத்து பரிமாற்றத்திலிருந்து கிடைக்கும் வருவாய்க்கு 30 சதவீத விகிதத்தில் வரி விதிக்கப்படும். மெய்நிகர் டிஜிட்டல் சொத்து பரிமாற்றத்தில் தொடர்பாக வழங்கப்பட்ட தொகைக்கு ஒரு சதவீத அளவிற்கு டிடிஎஸ் (வருவாயிலிருந்து வரிப்பிடித்தம்) பிடித்தம் செய்யப்படும்.

 

பட்டியிலப்பட்ட நிறுவனங்களின் பங்கு முதலீடுகளின் நீண்டகால மூலதன லாபங்கள் மீதான துணை வரி 15 விழுக்காடு உள்ளது. தற்போது பட்டியிலப்படாத நிறுவனங்களின் பங்கு முதலீடுகளின் நீண்டகால மூலதன லாபங்கள் மீதான துணை வரியும் 15 விழுக்காட்டிற்கு குறைக்கப்பட்டுள்ளது
புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காக வருவாய், லாபங்கள் மீதான துணை வரி வர்த்தக செலவாக அனுமதிக்கப்பட மாட்டாது.
வணிக மேம்பாட்டு முகவர்களுக்கு வழங்கப்படும் பணப்பயன்களின் மொத்த மதிப்பு ரூ.20,000-ஐ கடக்கும் போது வரிப்பிடித்தம் செய்யப்படும்.

கைபேசி மின்னூக்கிகள், மின்மாற்றி, கைபேசி கேமராவுக்கான கேமரா லென்ஸ் ஆகியவற்றிற்கு இறக்குமதி சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.
மின்னணு பொருட்கள் உற்பத்தியை உள்நாட்டில் ஊக்குவிக்க அணியக் கூடிய உபகரணங்கள், கேட்கும் உபகரணங்கள், மின்னணு ஸ்மார்ட் மீட்டர்கள் ஆகியவற்றின் இறக்குமதி வரிகள் திருத்தியமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடைகள் மீதான இறக்குமதிவரி 20 விழுக்காடாக அதிகரிக்கப்படுகிறது. குடைகளுக்கான பாகங்களுக்கு வழங்கப்பட்ட சலுகை திரும்பப் பெறப்படுகிறது. இரும்புக் கழிவுகளுக்கு இறக்குமதி விலக்களிக்கப்படுகிறது. துருப்பிடிக்காத எஃகு, இரும்புக் கம்பிகள், உலோகக் கலவை எஃகு மீதான எதிர்வரி நீக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பின் மீது எவ்வித அக்கறையும் செலுத்தாத பாஜக அரசு வைரவியாபரிகள் மீது அதீத அக்கறை காட்டியுள்ளது. பட்டைத் தீட்டப்பட்ட வைரங்கள் மற்றும் வைரக்கற்கள் மீதான சுங்கத் தீர்வை 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. வைரங்கள் மற்றும் நகைப்பிரிவை ஊக்குவிக்கும் வகையில் அறுக்கப்பட்ட வைரங்களுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்துள்ள சமுகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க பாஜக அரசு எந்த முன்னெடுப்பும் மேற்கொள்ளவில்லை. அரசின் மொத்த வரி வருவாயில் சுற்றடியான வரிகளின் பங்கைக் குறைத்து நேரடி வரிகளின் பங்கை அதிகரித்து எளிய மக்கள் மீதான வரிச்சுமையைக் குறைக்கவேண்டும் என்பது நெடுங்காலமாக இடதுசாரி அமைப்புகளால் முன்வைக்கப்படும் கோரிக்கை. ஆனால் வரியமைப்பில் முற்போக்கான சீர்திருத்தங்களைக் கொண்டுவரத் தவறியுள்ளது.

பெருநிறுவனங்கள் மீதான வரியை உயர்த்தாமல் அவற்றின் மீதான கூடுதல் வரியை 12 விழுக்காட்டிலிருந்து 7 விழுக்காடாகக் குறைத்துள்ளது பாஜக அரசு.

புலப்படா உருவிலா சொத்துக்களுக்கு வரிவிதித்துள்ளது வரவேற்கத்தக்கதே. ஆனால் கண்ணுக்கெதிரே பெருஞ்செல்வந்தர்கள் எக்கச்சக்கமான சொத்துக்களைக் குவித்துவைத்துள்ளனர். அவற்றின் மீது வரிவிதிப்பது குறித்து எந்தப் பேச்சும் இல்லை. பெருஞ்செல்வந்தர்களின் பாதுகாவலனாக சொத்துவரியை நீக்கிய பாஜக அரசு மீண்டும் சொத்துவரியை அறிமுகப்படுத்துவதை விரும்பவில்லை. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை.
ஜனவரி மாதத்தில் ஒட்டுமொத்த சரக்கு சேவை வரி வசூல் இது வரையில்லாத அளவிற்கு 1,40,986 கோடி ரூபாயாக உச்சத்தை அடைந்துள்ளது என பெருமை கொண்ட நிதியமைச்சர் மாநிலங்களுக்கு சரக்கு சேவை வரி நிதியிழப்புத் தொகையை நீட்டிப்பது குறித்து எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கவேண்டும் ஆனால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவைக் கூட அளிக்காமல் வஞ்சித்துள்ளது பாஜக அரசு.

இந்தியாவில் வேலையின்மை பிரச்சினை அதிகரித்துள்ளதே தவிர குறைந்தபாடில்லை. மக்கள் வருவாய்க் குறைவால் அவதிப்படுகிறார்கள். விலைவாசி உயர்வு மக்களின் வாங்கும் சக்தியை மேலும் குறைத்துள்ளது. விரைவில் விற்பனையாகும் நுகர்வுப் பொருட்களின் துறைக்கான வேண்டலை ஊக்குவிக்க மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் விதத்தில் பணம் அளியுங்கள் என அத்துறை சார்ந்தவர்களும், பொருளியலாளர்களும் கோரிக்கையை முன்வைத்திருந்தனர். அதற்கும் செவிசாய்க்காத பாஜக அரசு மக்களுக்கோ, விவசாயிகளுக்கோ, சிறு, குறு நிறுவனங்களுக்கோ உதவாத வழக்கம் போல் வாய்ச்சவடால்கள் செறிந்த நிதிநிலை அறிக்கையையே அளித்துள்ளது.

  • Samantha ks

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here