ஓம் “நமோ” நாராயணா!
ஜெய் இராமானுஜ மோடிஜி!
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று அரசியல் சட்டத்தில் முன்வைக்கப்பட்டு இருக்கிறது என்பதை இந்த நாட்டின் மெத்தப் படித்த அறிவாளிகள் இன்னும் நம்பிக் கொண்டு இருக்கின்றனர். அரசியல் சட்டம் பார்ப்பன (இந்து) மதத்தை பாதுகாப்பதற்கு பொருத்தமான பல்வேறு சட்ட திட்டங்களை தன்னுள்ளே வைத்துள்ளது என்பது ஒருபுறம் கிடக்கட்டும்.
ஒரு நாட்டின் பிரதமர் எந்தக் கட்சியில் இருந்து அல்லது எந்த மதத்தில் இருந்து வந்திருந்தாலும் அவர் தனக்கு விருப்பமான மதத்தை உயர்த்திப் பிடிப்பது கூடாது, அவர் அனைவருக்கும் பொதுவானவர் என்றெல்லாம் வண்டி வண்டியாக நமக்கு பாடத்தை போதிக்கிறார்கள். பள்ளிகளில் இருந்து கல்லூரிகள், நீதிமன்றங்கள் வரை அனைத்திலும் இந்த பாடம் ஓதப்படுகிறது.
இவ்வாறு ஓதுபவர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் துவங்கி பேராசிரியர்கள் வரை என்பது குறிப்பிடத்தக்கது.
2022 பிப்ரவரி 5ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் ஹைதராபாத் நகருக்கு அருகிலுள்ள முசிந்தலா எனும் கிராமத்தில் “சமத்துவ ராமானுஜர்” சிலையை திறப்பதற்கு சென்ற பிரதமர் நெற்றியில் அய்யங்கார் போல நாமத்தை போட்டுக்கொண்டு கோவிலை சுற்றி வலம் வந்ததும், சிலை திறப்பு நிகழ்ச்சி வரை நாமத்துடன் உட்கார்ந்துகொண்டு பிறகு உரையாற்றியதும் கேடு கெட்ட செயலாகும்.
எளிமையை போதித்து, விசிஷ்டாத்வைதம் என்ற வழிமுறையை முன்வைத்த ராமானுஜருக்கு, அவரது எளிய வாழ்க்கை முறைக்கு முரணாக ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சிலை அமைத்து இந்த சிலை இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய சிலை என்று மார் தட்டுவது இராமானுசர் முன்வைத்த சமத்துவத்தை போதிப்பதற்கு அல்ல!
ராமானுஜரின் பெயரால் ஜெய் ராமானுஜ மோடிஜி, அரசியல் செய்வதற்கும், வைணவர்களுக்கு குழைத்து நாமத்தை சாத்துவதற்கு பயன்படுமே ஒழிய இவர்கள் முன்வைக்கும் “பார்ப்பனப் பேரரசு” சமத்துவத்தை கொண்டுவர ஒருபோதும் அனுமதிக்காது!
அதைவிட கேலிக்கூத்தாக மூச்சுக்கு முன்னூறு முறை சீனாவை வசை பாடுகின்ற இந்து தேசிய வெறியர்கள், கீழ்வாயை மூடிக்கொண்டு 7000 டன் எடையுள்ள பஞ்சலோக சிலையை அதாவது தங்கம், வெள்ளி, வெண்கலம், , துத்தநாகம் ஆகியவை அடங்கிய பஞ்சலோக சிலையை தயாரிப்பதற்கு சீனாவின் எரோஜன் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு டெண்டர் கொடுத்து சிலையை நிறுவியுள்ளனர்.
ராமானுஜரின் திருமேனி புதைக்கப்பட்டதாக கருதப்படும் ஸ்ரீரங்கத்தில் ‘தானான திருமேனி’ என்று கதை அளந்து கொண்டு, உடல் இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதை போல, ராமானுஜர் உயிர்த்தெழுந்தார் என்று நிலைநிறுத்த அவரது பூத உடல் பாதுகாக்கப்படுகிறது என்று அறிவியலுக்கு முரணாக புளுகி வருகின்றனர்.
அந்த புளுகு மூட்டைகளின் தொடர்ச்சியாக வைணவ மரபில் இல்லாத சடங்கு சம்பிரதாயங்களை சின்ன ஜீயர் முன் வைக்க பிரதமர் மோடி அந்த சடங்குகளை செய்து கொண்டிருந்தார்.
அய்யங்கார் வகையறாக்களில் வடகலை, தென்கலை என்று இரண்டு பிரிவுகள் உள்ளது. அதேபோல நாமம் போடுவதிலும் ஒய் டைப் நாமம் யூ டைப் நாமம் அதிலும் நாமத்திற்கு கீழே பாதம் வைத்து நாமம் போடுவது என்று பலவித நாமங்கள் உள்ளது. எனினும் இதில் ஒருவகை நாமத்தை போட்டுக்கொண்டு மொத்த மக்களையும் “நமோ நாராயணா” என்று பஜனை பாடல் பாட வைத்துவிட்டார் பிரதமர்.
அதுமட்டுமின்றி பார்ப்பன (இந்து) மதத்தில் சீர்திருத்தங்களை முன்வைத்த ராமானுஜரை அவமானப் படுத்துகின்ற வகையில் அவரது சிலை திறக்கின்ற போது பார்ப்பன (இந்து) மத சடங்கு ஆச்சாரங்களை உயர்த்திப் பிடித்து கொச்சைப்படுத்தி உள்ளார்.
தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி ராமானுஜர் பற்றி, ‘மதத்தில் புரட்சி செய்த மகான்’ ஒரு தொடரை எழுதி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி கொண்டிருந்தார். ஒரு நாத்திகராக இருந்த போதிலும் பார்ப்பன (இந்து) மதத்தில் சீர்திருத்தங்களை முன்வைத்த ராமானுஜரை பிரபலப்படுத்தினார்.
ஆனால் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி (நமோ) துணிச்சலுடன், பார்ப்பன இந்து மதத்தின் வர்ணாசிரம கொள்கைகளை எதிர்த்து தன்னால் முடிந்த அளவிற்கு கேள்வி கேட்ட ராமானுஜருக்கு பூணூல் மாட்டி, பார்ப்பன மயமாக்கிய அயோக்கியத்தனத்தை கண்டு காரி உமிழ்வதா? பிரதமரே இதுபோல் உலா வருவதைக் கண்டு கொதித்தெழுவதா என்று, இன்னமும் இந்த நாடு மதச்சார்பற்றது என்று நம்பிக் கொண்டிருக்கும் மெத்தப் படித்த அறிஞர்கள் புரிந்துக் கொண்டு கேள்வி எழுப்ப வேண்டும்.
ஏனென்றால் அவர்கள்தான் கருத்தை உருவாக்கும் என்ற இடத்தில் இருக்கிறார்கள்.
- இளஞ்செழியன்.