விடுதலைப் போரின் வீரமரபு – 14

தொடர்ச்சி…

1914-இல் முதல் உலகப்போர் துவங்கியபோது இந்தத் தளபதியிடம் உதவுவதற்குப் படை இல்லை. ஆகவே பிரிட்டனுக்கு 14,000 ரூபாம் மொய் எழுதுகிறான்; இரண்டாம் உலகப் போரின்போது 1,60,000 ரூபாய் மொய் எழுதுகிறான். 1915-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்ற தொண்டைமான் அங்கு மோலி எனும் வெள்ளையினப் பெண்ணைக் திருமணம் செய்து கொள்கிறான். 20 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு 1920 ஆம் ஆண்டு பாரிசில் குடியேறுகிறான். அவர்களுக்குப் பிறந்த மகனின் பெயர் சிட்னி மார்த்தாண்டன்.

‘ராஜாதிராஜ ராஜகுல திலக ராஜகம்பீர சிறீ சிறீ சிறீ’ விஜயரகுநாதத் தொண்டைமானின் பரம்பரை தங்களுடைய துரோக வரலாற்றுக்காக கடுகளவும் கூச்சமோ, குற்றவுணர்வோ கொள்ளவில்லை. தொண்டைமான் என்ற பட்டத்துடன் கம்பீரமாகப் பவனி வந்து கொண்டிருக்கிறார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி மாநகர மேயர் சாருபாலா.

துரோகிகளின் வரிசையில் அடுத்து வருபவன் ஆற்காட்டு நவாப். வணிகம் செய்து இலாபமீட்டுவதற்குப் பதிலாக மக்களிடம் வரிவசூல் கொள்ளை நடத்தியே இலாபமீட்டலாம் என்பதற்கான வாய்ப்பை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு உருவாக்கிக் கொடுத்து, இந்தியாவை ஆக்கிரமிப்பதற்கான கனவையும், அதற்குத் தேவையான களத்தையும் அவர்களுக்கு உருவாக்கித் தந்தவன் ஆற்காட்டு நவாப்.

இன்றைய தமிழகப் பகுதிகளில் வரிவசூல் செய்வதற்காக மொகலாய மன்னர் ஔரங்கசீப்பால் 1698இல் உருவாக்கப்பட்டதுதான் நவாப் எனும் பதவி. முதலில் மொகலாய வம்சாவழியினரான நேவாயெட்ஸ் எனப்படுவோரே நவாப்புக்களாக பதவியேற்கின்றனர். முகலாயப் பேரரசு நலிவுற்ற காலத்தில் வாலாஜா எனப்படும் வம்சா வழியினரும் பட்டத்திற்கு வருகின்றனர். இந்த இரு கோஷ்டிகளும் எல்லா வகையான அரண்மனைச் சதிகளிலும், கொலைகளிலும் ஈடுபடுகின்றனர். பதவிக்காக உடன் பிறந்தோரையும், ரத்த உறவுகளையும் கொலை செய்தே வளர்ந்த இந்த வம்சம், நாட்டையும் மக்களையும் ஆங்கிலேயருக்குக் கூட்டிக் கொடுத்ததில் வியப்பில்லை.

1750களில் நேவாயெட்ஸ் வம்சத்தைச் சேர்ந்த சந்தா சாகிப்பிற்கும் வாலாஜா வம்சத்தைச் சேர்ந்த முகம்மது அலிக்கும் நடந்த பதவிச் சண்டையில், சந்தாசாகிப் பிரெஞ்சுக்காரர்களையும், முகமது அலி

ஆங்கிலேயர்களையும் அடியாள் படையாக அழைத்தனர். இரண்டு படைகளுமே (படை என்றால் ஆயிரம் இரண்டாயிரம் அல்ல, சில நூறு பேர்தான்) ஐரோப்பா செல்வதற்கான தடக் காற்றுக்காகக் (சீசன்) காத்திருந்தனர். சும்மாயிருக்கும் நேரத்தில் கைச்செலவுக்கு ஆகுமே என்று இரண்டு படைகளும் நடத்திய ஆஃப் சீசன் சண்டைதான் ‘கர்நாடகப் போர்’. இந்தக் கேலிக்கூத்தில் முகம்மது அலி வென்றான். கம்பெனி குமாஸ்தாவான ராபர்ட் கிளைவ் ‘மாவீரன்’ ஆனான். ஒப்பீட்டளவில் முறையாகப் பயிற்றுவிக்கப்பட்ட எண்ணிக்கையில் குறைவான ஐரோப்பியப் படை, எண்ணிக்கையில் அதிகமான இந்தியப் படைகளைத் தோற்கடிக்க முடிகிறது என்பதைத் தம் அனுபவத்தில் உணர்ந்த ஆங்கிலேயர்களின் மனதில் ஆக்கிரமிப்புக் கனவு முளைவிடத் தொடங்கியது.

நவாப்போ வேறு விதமாகக் கனவு காணத் தொடங்கினான். பிரிட்டிஷாரின் படையைப் பயன்படுத்தியே இலங்கை உள்ளிட்ட தென்னிந்தியாவின் சக்ரவர்த்தியாகி விடலாம் என்பது அவன் கனவு. எனவே, பாளையக்காரர்களுடன் வரிவசூல் தொடர்பாக எழும் பிரச்சினைகளில் தொடங்கி எல்லா விவகாரங்களுக்கும் கம்பெனியின் படைகளையே கூலிப்படையாகப் பயன்படுத்த ஆரம்பித்தான். காலப்போக்கில் கம்பெனியின் படைச்செலவுக்கு அடைக்க வேண்டிய தொகை கடனாய் ஏறி ஒரு கட்டத்தில் நவாப் திவால் அடையும் நிலைக்குச் சென்றான். இறுதியில் வேறுவழியின்றி தன் ஆளுகைக் குட்பட்ட பகுதிகளை ஒவ்வொன்றாய் வெள்ளையர்களுக்கு எழுதிக் கொடுக்கத் தொடங்கினான். ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்ட ஆரம்பித்தது.இந்த அளவுக்கு அடி முட்டாளாயிருந்த நவாப் அதற்கேற்ற முறையில் நகைக்கத்தக்க வகையில் ஆட்சியிழந்தான். 1787 மற்றும் 1792 ஆம் ஆண்டுகளில் கம்பெனி இவனுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி பெரும்பான்மைப் பகுதிகளின் வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றது. இறுதியில் ஆட்சியதிகாரம் மட்டும் மாற்றப்பட வேண்டும் என்ற நிலையில் 1795-ஆம் ஆண்டு முகம்மது அலி செத்துப் போனான். சாகும்போது தன் மகன் உம்தத் உல் உம்ராவை அழைத்து, “மகனே 1792-ஆம் ஆண்டு ஒப்பந்தத்திலிருந்து மயிரளவேனும் மாறுபடும் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்துப் போட்டு விடாதே. உன் நன்மைக்காகத்தான் என்று சொல்வார்கள். நம்பி விடாதே” என்று

சொல்லிவிட்டுக் கண்ணை மூடினான். “தலை போய்விட்டது என்ற படியால் முடியாவது மிஞ்சட்டும்” என்று அவன் நினைத்திருக்கக் கூடும்.

ஆனால், வெள்ளையர்கள் அப்படி நினைக்கவில்லை. அடுத்த ஒப்பந்தத்திற்கு ஆயத்தமானார்கள். உல் உம்ராவோ மன்றாடினான். திப்புவுக்கு எதிரான 1799 இறுதிப் போருக்கு படையும் உணவும் தந்து வெள்ளையருக்கு உதவி அவர்களுடைய நல்லெண்ணத்தைப் பெற முயன்றான். அனைத்தையும் வெள்ளையர்கள் பயன்படுத்திக் கொண்டனர். போர் முடிந்தபின் “உனக்கும் திப்புவுக்கும் ரகசிய உறவு இருந்ததை நிரூபிக்கும் ஆவணங்களைக் கண்டுபிடித்து விட்டோம்” என்று நவாபை மிரட்டினான் வெல்லெஸ்லி. ஆதாரமே இல்லாத இந்த வெற்று மிரட்டலைக் கேட்ட மாத்திரத்தில் நோயில் விழுந்து 1801ல் செத்துப் போனான் உம்தத் உல் உம்ரா

அடுத்து அவனது மகன் அலி ஹுசைன் ஆற்காட்டு நவாப்பாக பதவியேற்கிறான். துரோகிகள் கொஞ்சம் கவுரவமாக நடத்தப் படுவதற்குக் கூட வீரர்கள் உயிர் வாழ்வது ஒரு முன் நிபந்தனையாக இருக்கிறது. திப்பு கொல்லப்பட்ட மறுகணமே தனக்கு இதுகாறும் உதவி வந்த தென்னிந்திய துரோகிகள் அனைவரையுமே செருப்புக்குச் சமமாக நடத்தத் தொடங்கினார்கள் வெள்ளையர்கள். ”அரசாளும் முழு உரிமையையும் எங்களுக்கு எழுதிக்கொடு” என்று அலி ஹுசைனை மிரட்டியது கம்பெனி. அதை ஒப்புக்கொள்ளவும் முடியாமல், மறுக்கவும் தைரியம் இல்லாமல் அவன் திண்டாடுகிறான்.

“என்னை நவாப் ஆக்குங்கள். நான் எழுதிக் கொடுக்கிறேன்” என்று வெள்ளையரிடம் பேரம் பேசுகிறான் முகமது அலியின் இரண்டாவது மகனும் அலி ஹூசைனின் சிறிய தந்தையுமான அசிம் உல் தௌலா உடனே அசிமை நவாப் ஆக்குகிறார்கள் வெள்ளையர்கள். அலி ஹுசைன் விஷம் வைத்துக் கொல்லப்படுகிறான். நவாபின் நாடு முழுவதும் கம்பெனியின் நேரடி ஆட்சிக்குள் வருகிறது: அரண்மனையை மட்டும் சொந்தமாகக் கொண்ட நவாப்புக்கு வரி வசூலில் ஐந்தில் ஒரு பங்கு ஓய்வூதியமாகத் தரப்படுகிறது.

இப்படி பங்காளியை விஷம் வைத்துக் கொன்று பதவியைப் பிடித்த பரம்பரையில் வந்தவர்தான் இன்று சென்னை அமீர் மகாலில் குடியிருக்கும் ஆற்காடு இளவரசர்’.

முசுலீம்கள் என்றாலே தேசத் துரோகிகள் என்று கூறும் இந்து மதவெறியர்களுக்கு ஆற்காட்டு நவாப்புகளின் வரலாறு மகிழ்ச்சியைத் தந்திருக்கும். ஆனால், அந்த மகிழ்ச்சியில் மண்ணள்ளிப் போடுகிறார்கள் தஞ்சை மராத்திய மன்னர்கள். அதுவும் ஆர்.எஸ்.எஸ் கொண்டாடும் மராத்திய சிவாஜியின் வழிவந்த மன்னர்கள்!

பொதுவில் தஞ்சை மராத்திய மன்னர்களும் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தனர். ஆனால், ஆற்காட்டு நவாபுக்கும் தஞ்சைக்கும் சிற்சில முரண்பாடுகள் இருந்தன. இந்தப் பின்னணியில் 1773-ஆம் ஆண்டு ஆற்காட்டு நவாப் தஞ்சையின் மீது படையெடுப்பதற்குக் கம்பெனியின் உதவியைக் கோரினான். இரு படைகளும் தஞ்சையைத் தாக்கி அப்போது மன்னனாக இருந்த துளஜாஜியைச் சிறைப் பிடித்தன. ஆனால், 1776இல் கம்பெனி துளஜாஜியிடமே ஆட்சிப் பொறுப்பை மீண்டும் ஒப்படைத்தது.

ஹைதர் அலி, திப்பு சுல்தானை வெல்வதற்கு பூனாவை ஆண்டுவந்த மராத்திய பேஷ்வாக்களின் ஆதரவு கம்பெனிக்குத் தேவைப்பட்டதுதான் வெள்ளையர்களின் இந்த நியாய உணர்ச்சிக்குக் காரணம். இதனால் கைதி துளஜாஜி மீண்டும் மன்னனானான். கம்பெனிக்கு ஆண்டுதோறும் 12 லட்சம் ரூபாய் பாதுகாப்புக் கட்டணம் தருவதாகவும், தேவைப்படும் போது கோட்டை கொத்தளங்களைக் கம்பெனிக்கு அளிப்பதாகவும் ஒப்புக்கொண்டான். இப்படி கம்பெனி போட்ட பிச்சையில் உயிர் பிழைத்தது தஞ்சை மராத்திய வம்சம்.

இந்த ‘மராத்திய வீரன்’ துளஜாஜி 1787ல் செத்துப் போனான். இவனது தத்துப் புத்திரன் சரபோஜிக்கும், துளஜாஜியின் காமக்கிழத்திகளில் ஒருத்தியின் மகனான அமர் சிங்குக்கும் பதவிச்சண்டை எழுந்தது. தீர்ப்பளிக்கும் பொறுப்பு ‘வேத சாஸ்திர வல்லுநர்களான ஏழு பார்ப்பனப் பண்டிதர்களிடம் விடப்பட்டது. பண்டிதர்களை அமர் சிங் நன்றாக ‘கவனித்த’படியால் “சரபோஜியைத் தத்தெடுத்தது சாஸ்த்திரத்துக்கு விரோதமானது” என்று அவர்கள் அறிவித்தார்கள். அமர்சிங் 10 ஆண்டுகள் நாடாண்டான். இடையில் இந்த விவகாரத்தில் கம்பெனி நுழைந்தது. “சரபோஜியை மன்னனாக்கினால் தஞ்சாவூர் அரசை சுலபமாக விழுங்கலாம்” என்று கம்பெனி கருதியது. அதே ஏழு பண்டிதர்களைக் கூப்பட்டது கம்பெனி. சாஸ்திரங்களை ஆராய்ந்த அந்தப் பார்ப்பனர்கள் சரபோஜியைத் தத்து எடுத்தது செல்லும் என்று இப்போது தீர்ப்பு கூறினார்கள். காலனியாதிக்கமும் பார்ப்பனியமும் தாங்கள் ஒன்றுபடும் புள்ளியைக் கண்டறிந்தன. மயிரிழையில் சரபோஜியும் மன்னனானான்.

 

விடுதலைப் போரின் வீரமரபு – 14

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here