முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி     கொலையை ஒரு துன்பியல் சம்பவம் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு இடையில் தெரிவித்தார் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன். ஆனால் அந்தக் கூற்று மிகைப்படுத்தப்பட்ட தன்னிலை விளக்கமாகும்.

இலங்கையின் மீது இந்திய ஆளும் வர்க்கங்களின் அணுகுமுறை, குறிப்பாக இலங்கையை இந்தியாவின் ஒரு பகுதியாகவே கருதுகின்ற அகண்ட பாரத கண்ணோட்டம் நேருவின் காலத்தில் இருந்தே துவங்கிவிட்டது. அதுவும் 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் வாங்கியதாக கூறிக்கொள்ளும் முன்னரே அந்த ஆக்கிரமிப்பு நோக்கம் வெளிப்பட்டுவிட்டது. அது தனியே விவாதிக்கப்பட வேண்டிய விவகாரமாகும்.

  “அடையாளம் தெரியாத அளவிற்கு துண்டுதுண்டாக பிய்த்தெறியப்பட்டு ராஜீவ் காந்தி அழித்தொழிக்கப்பட்டு விட்டார். அவரது எலும்புகளையும் சதைகளையும் மூவர்ணக் கொடியில் மூட்டை கட்டி அள்ளிப் போட்டுத்தான் சடலம் எடுத்துச் செல்லப்பட்டது.

நன்றி : Indian Express

நாட்டையே சூறையாடிய ஒரு ஊதாரியும், பீரங்கி திருடனும், ஏகாதிபத்திய அடிவருடியும், கொலைகார பாசிஸ்டுமான ஒரு நபர் இப்படி சாகடிக்கபடுவது பொருத்தமானதுதான். அதைக் கண்டிப்தோ, அனுதாபப்படுவதோ அவசியமில்லை.

அதே வேளையில் ஒரு தனிநபரை கொன்று விடுவதன் மூலம் அவர் சார்ந்த அமைப்பையும் அதன் வர்க்கத் தன்மையையும் மாற்றி விட முடியாது. அவ்வமைப்பை அம்பலப்படுத்தி பரந்துபட்ட மக்களை அரசியல் படையாக திரட்டி மட்டுமே ஒழிக்க முடியும் என்பதே வரலாற்று அனுபவமாகும்.” என்று ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட உடன் 1991ஆம் ஆண்டு வெளியான புதிய ஜனநாயகம் இதழில் கட்டுரையாக வெளியிட்டு இருந்தோம்.

நேரு-இந்திரா பரம்பரையில் வாரிசு என்ற ஒரே தகுதியில் இந்திரா காந்தியின் பிணத்தைக் காட்டி அரசியலுக்கு வந்த ராஜீவ்காந்தி நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பாடுபட்ட தலைவர் கிடையாது. அதுமட்டுமின்றி இயல்பிலேயே பாசிச குணாம்சத்தை கொண்ட கொடுங்கோலர் என்பதை 1975 அவசரநிலை பாசிசத்தை நியாயப்படுத்தி பேசியது மட்டுமன்றி தேவைப்பட்டால் மீண்டும் அப்படி ஒரு ஆட்சி கொண்டு வருவேன் என்று பேசியவர்.

தன்னை சுற்றி அதிகாரவர்க்க பாசிச கும்பலை வைத்துக்கொண்டு, பல அரசு பயங்கரவாத கருப்புச் சட்டங்களை உருவாக்கி, மக்களை அடக்கி ஒடுக்கி தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் அதில் சிக்கல் உண்டானால் அதிகபட்சம் பாசிச ஆட்சியை கொண்டு வருவதற்கும் தயாராக இருந்தவர்.

இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து டெல்லியிலும், வட இந்தியாவிலும் ஏறக்குறைய 5,000-க்கும் மேற்பட்ட அப்பாவி சீக்கியர்கள் கொன்று குவிக்கப்பட்ட உடன் அந்த குற்றவாளிகளுக்கு அமைச்சர் பதவி கொடுத்து பாராட்டியவர். நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்ட காங்கிரஸ் குண்டர்களுக்கு வக்காலத்து வாங்கியவர். “ஒரு ஆலமரம் விழுந்தால் சில அதிர்வுகள் ஏற்படுவது இயல்புதான்” என்று நியாயப்படுத்திய கிரிமினல் குற்றவாளி.

ஒரு லட்சம் மக்களை நிரந்தர நோயாளியாக்கி, ஒரே நாளில் ஆயிரக்கணக்கானவர்களை காவு வாங்கிய போபால் விஷவாயு படுகொலைக்கு காரணமான ஆண்டர்சனை ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்ப விட்ட கொடூரன் என்பது மட்டுமின்றி, விபத்துக்கு நட்ட ஈடு கேட்டு போராடிய மக்களை ஒடுக்கியவர்.

இந்திரா காந்தியை கொலை செய்த சிலர் சீக்கிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை பழிவாங்குவதற்காக ரா, ஐபி போன்ற உளவுப் படைகள் மூலம் பல்வேறு சதிச் செயல்களில் ஈடுபட்டு, சீக்கியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்பதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி, பஞ்சாப் மாநிலத்தையே ரத்தக்களறி ஆக்கிய கொலைகாரன். அதுமட்டுமின்றி பஞ்சாபிலும், காஷ்மீரிலும் போலீசுக்கு கிரிமினல் கும்பலை தேர்வு செய்து ரகசிய கொலைக் குழுக்களை உருவாக்கி, இளைஞர்களையும் போராடுகின்ற தலைவர்களையும் இலக்கு வைத்து கொலை செய்த கொலைகாரன்.

பஞ்சாப், காஷ்மீர் மட்டுமன்றி திரிபுரா, அசாம், போடோலாந்து போன்ற அனைத்திலும் ரா உளவு நிறுவனத்தின் மூலம் போராளி குழுக்களின் உள்ளே புகுந்து அவர்களுக்குள் அடித்துக்கொள்ள வைத்து அதையே காரணம் காட்டி இனப்படுகொலை செய்த கொலைகாரன்.

தனது பதவியை தக்க வைத்துக்கொள்வதற்கு இந்து-முஸ்லிம் மத வெறியர்களுடன் கள்ளக் கூட்டு சேர்ந்து மதவெறியை தூண்டி பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை பலிகொடுத்தார். அது மட்டுமின்றி குஜராத், ஆந்திரா போன்ற மாநிலங்களில் இடஒதுக்கீடு பற்றிய எதிர் நிலைப்பாடு மூலம் சாதிக் கலவரங்களை தூண்டினார்.

போபர்ஸ் பீரங்கி ஊழல் மூலம் கோடி கோடியாக பணத்தை கொள்ளையடித்த கொள்ளைக்காரர் என்பது மட்டுமின்றி, அந்த ஊழல் அம்பலமானதால் அதை மூடி மறைப்பதற்கு ஸ்வீடன் அரசுடன் உடன்பாடு செய்துகொண்டு ஊழலை முடக்குவதற்கு பல்வேறு சதி செயல்களை செய்த அயோக்கியன்.

நாடாளுமன்றத்தில் தனது மிருகபலத்தை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சியினரை விவாதிக்க விடாமல் தடுப்பது, தனது அமைச்சரவையில் இருந்த ஊழல் அமைச்சர்கள் மீது கொண்டுவரப்பட்ட லோக்பால் மசோதாவை காலாவதி ஆக்கியது, அதை அம்பலப்படுத்திய பத்திரிகைகளின் குரல்வளையை நெறிப்பது, அவதூறு தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது பத்திரிக்கை காகிதத்தின் விலையை பல மடங்கு உயர்த்தியது என்று சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக முறைகளுக்கு எதிராக செயல்பட்டார்.

தேவைப்பட்டபோது அவசரநிலை பிறப்பிக்கும் 59 ஆவது சட்டத்திருத்தம், பயங்கரவாத தடைச்சட்டம், கலவரப் பகுதி தடைச்சட்டம் போன்ற பல கருப்புச் சட்டங்களை கொண்டு வந்தவர்தான் ராஜீவ்.

ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டை சூறையாட கதவுகளைத் திறந்துவிட்டதன் மூலம் பல கோடி ஆதாயம் அடைந்த அரசியல் தரகர். தரகு முதலாளிகள் நாட்டைச் சூறையாடுவதற்கு முழு அனுமதி கொடுத்த ஏகாதிபத்திய, தரகு முதலாளித்துவ விசுவாசி.

பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவில் இந்தியை திணிப்பதற்கு பலமுறை முயற்சி மேற்கொண்டு செயல்பட்டவர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல மாநிலங்களின் ஆட்சியை கவர்னர் மூலம் 10 க்கும் மேற்பட்ட முறை கலைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை நசுக்குவதில் முன்னின்று செயல்பட்டவர்.

குஜராத் முதலாளியான அம்பானிக்கு அரசு விதிமுறைகளை மீறி பல்வேறு அனுமதிகளை வழங்கியதோடு, ஹர்சத் மேத்தாவின் பங்கு மார்க்கெட் ஊழலுக்கு உடந்தையாகவும் ராஜீவ் செயல்பட்டார். அனைத்து சட்டங்கள், அரசின் கொள்கைகள் மற்றும் நீதிமன்றம் அனைத்தும் அதற்காக ஒன்றுபட்டு செயல்பட்டது.

ராஜீவ் மற்றும் குடும்பத்தினர் இந்தியாவை சூறையாடி ஏறக்குறைய 650 கோடி (91 ஆம் ஆண்டு மதிப்பு) பொறுமான சொத்துக்களை கொண்டு இத்தாலியில் தொழில் துவங்கி உள்ளனர் ராஜீவ் அதற்கு உடந்தையாக இருந்தார்.

இந்தியாவில் சூறையாடிய பணத்தை சுவிட்சர்லாந்து வங்கியில் முதலீடு செய்வது என்ற கேடுகெட்ட முறைகேடு ராஜீவ் காலத்தில்தான் துவங்கியது. இந்திய தரகு முதலாளிகள் பெரும் வியாபாரிகள் மற்றும் ராஜீவின் பாசிச கூட்டாளிகள் அனைவராலும் ஏறக்குறைய 20 ஆயிரம் கோடி ஸ்விஸ் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டது. அது மட்டுமின்றி வெளிநாடுகளில் 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. இவை அனைத்திற்கும் காரணமானவர்தான் ராஜீவ்..

நாட்டின் இளைய பிரதமர் என்ற அடைமொழியுடன் உல்லாச ஊதாரி வாழ்க்கையில் முதலாளித்துவ பத்திரிகைகளே விமசிக்கும் அளவிற்கு நடந்து கொண்டவர். அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆடம்பர உல்லாச வாழ்க்கை நடத்தியவர். லட்சத்தீவு முதல் கேரளா வரை தனி விமானத்தில் பறந்து குடும்பம் நடத்தியவர். உச்சகட்டமாக ராஜீவ் மனைவி சோனியாவிடம் 6000 பட்டுப்புடவைகள் இருந்ததாக அப்போதே கணக்கு செய்யப்பட்டிருந்தது.

சர்வதேச ஆயுத பேர தரகன் சந்திராசாமி, சர்வதேச ஆயுத பேர தரகன் அதனன் கஷோகி ஆகியோரின் நெருங்கிய கூட்டாளியான ராஜீவ். ஏர்பஸ், பீரங்கி, நீர்மூழ்கி கப்பல் போன்ற அனைத்திலும் முறைகேடுகளில் ஈடுபட்டவர். நிர்வாகத் திறன் இல்லாததால் அவரது ஆட்சிக்காலத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு கடன் பல லட்சம் கோடி ரூபாயை தாண்டியது.

அனைத்திற்கும் மேலாக ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசுகளின் பிராந்திய அடியாளாக செயல்பட்டு நேபாளம் முதல் இலங்கை வரை அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும், இலங்கையில் நடந்த ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை போராட்டத்தை பயன்படுத்தி, அதை ஒடுக்குவதற்கு இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலம் இந்திய ராணுவமான IPKF  என்ற கொலை படையை அனுப்பி ஏறக்குறைய 20 ஆயிரம் பேரை கொன்று குவித்தவர்.

அங்கிருந்த போராளிக் குழுக்கள் அனைத்திலும் ராவின் மூலம் உள்ளே புகுந்து மோதல்களை உருவாக்கி ஈழத்தமிழர்களின் போராட்டத்தை திசை திருப்பியவர், சீர்குலைத்தவர்.

இது போன்ற கிரிமினல் குற்றங்கள், பாசிச ஒடுக்குமுறைகள், ரகசிய கொலை குழுக்களை அமைத்து செய்த கொலைகள், நாட்டையே சூறையாடிய கொடும் குற்றங்கள் அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது அவரது மரணம் மக்களுக்கும், நாட்டுக்கும் எதிரானது அல்ல என்பதை நிலைநாட்டியது புதிய ஜனநாயகம்.

அதுமட்டுமன்றி ராஜீவ்காந்தி பிலிப்பைன்சின் அதிபராக இருந்த ஃபெர்டினண்டு மார்கோஸ், அவனது மனைவி இமெல்டா மார்கோஸ் போன்ற ஒரு பாசிச சர்வாதிகாரி. அப்படிப்பட்டவர் படுகொலைக்கு கண்ணீர் சிந்த தேவையில்லை என்றும், தமிழக மண்ணில் இந்த கொலை நடந்து இருக்கிறது என்பதற்காக அவமானப்பட தேவையில்லை என்றும், அவரது கொலைக்கு நீலிக்கண்ணீர் வடித்து அதிமுக, தமிழின பிழைப்புவாதிகள், அரசியல் அரைவேக்காடுகளான குட்டி முதலாளித்துவ அறிஞர்கள் மற்றும் ஊடகங்கள் கண்ணீர் விடுவதையும் அம்பலப்படுத்தியது..

அதுமட்டுமன்றி ராஜீவ் மரணத்தினால் காங்கிரஸ் நெல்லிக்காய் மூட்டை போல் சிதறிவிடும். ஏனென்றால் பதவி வெறியர்கள், ஊழல் பெருச்சாளிகள், சாதி, மத, இன வெறியர்களின் கூடாரமாக, நிலப்பிரபுத்துவ பண்ணையார்களின் கட்சியாக நிலவிய காங்கிரஸ் முற்றாக அழிந்துவிடும் என்று சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே புதிய ஜனநாயகம் அறுதியிட்டு எழுதியது.

அதுதான் 2014 ஆண்டுவரை ஆட்சியில் இருந்த போதும், இன்று ஒரு சில மாநிலக் கட்சியாக சிறுத்துபோயுள்ள காங்கிரசின் நிலைமை. அது மட்டுமில்லை காங்கிரசு ராஜீவ் காலத்தில் இருந்தது போல பலமாகவோ, ஆளும் கும்பலின் நம்பகமான எடுபிடியாகவோ இல்லை,

இந்த பாசிச கொலைகாரன் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் மீது அடக்குமுறை தலைவிரித்து ஆடியது. தடா, என்.எஸ்.ஏ போன்ற வழக்குகளின் கீழும், 124 ஏ போன்ற வழக்குகளின் கீழும் நூற்றுக்கணக்கான தோழர்கள் கைது செய்பட்டனர்.

விடுதலைப்புலிகளின் தளபதி கிட்டு, “ராஜீவ் கொலையின் போது அருகில் இருந்த நபர், புதிய ஜனநாயகத்தின் செய்தியாளர்தான், அவரது பெயர் சிவராசன்” என்று பொய்யான அறிக்கையை வெளியிட்டு தனது அரசியல் நேர்மையை அம்பலப்படுத்திக் கொண்டார். ஆனால் அன்று முதல் இன்றுவரை எமது நிலைப்பட்டில் எந்த மாற்றமும் இல்லை.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 1991 ஜூன் மாதம் 11 அன்று தனது 19 வயதில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் 31 ஆண்டுகள் கழித்து 2022 மே மாதம் 18 அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். மே 18 இலங்கை வரலாற்றில் ஒரு முக்கிய தினமாகும். 30 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற ஈழவிடுதலைப் போராட்டத்தை இந்தியா உள்ளிட்ட 7 நாடுகள் ஒன்றிணைந்து கொடூரமாக அழித்து ஒழித்த இனப்படுகொலை தினம்.

அதே தினத்தில் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் எதிரான உல்லாச ஊதாரி வாழ்க்கை வாழ்ந்த ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது தற்செயலான ஒரு வரலாற்று பொருத்தமாகும்.

1998 ஆம் ஆண்டு ராஜீவ் படுகொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் ராஜீவ் கொலைக்கான காரணம் தனிநபர்களின் விரோதமாக இருந்ததே தவிர இதனை தேசம் சார்ந்த அச்சுறுத்தலாக கருத முடியாது என்பதை தெளிவாக முன்வைத்திருந்தது. எனினும் ராஜீவ் படுகொலையை தேச பிரச்சினையாக மாற்றி காங்கிரசு மற்றும் பாரதீய ஜனதா கட்சி இரண்டு கட்சிகளும். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு எதிரான, ஆளும் வர்க்கத்தின் ஏவல் நாயாக வன்மத்துடன் அணுகியது என்பதை மறக்க முடியாது.

உச்ச நீதிமன்றம் “ராஜீவ் கொலை என்பது ஒரு பயங்கரவாத நடவடிக்கை அல்ல” என்று தந்து தீர்ப்பில் கூறிய பின்னரும் ஆள்தூக்கி தடா சட்டத்தின் கீழ் தண்டணைகள் உறுதி செய்ய்பட்டன. இதுவே முதலில் சட்டம் மற்றும் சமூக நீதிக்கு எதிரானது ஆகும். உச்ச நீதிமன்றம் முதலில் குற்றம் சுமத்தப்பட்ட பலரை விடுதலை செய்தும், முருகன், சாந்தன், நளினி. பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு மட்டும் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது 2011 ஆம் ஆண்டு இவர்களுக்கு கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது.

அதன் பிறகு தமிழகத்தில் புரட்சிகர அமைப்புகள், பல்வேறு ஜனநாயக இயக்கங்கள் தொடர்ந்து போராடியதன் விளைவாக தற்போது முதற்கட்டமாக பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு இலங்கையில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். முள்ளி வாய்க்கால் உள்ளிட்ட ஈழத்தமிழர்களின் இனஅழிப்பு குற்றத்தில் ஈடுபட்ட இந்திய ஆளும் வர்க்கங்கள் செய்த கொடூரமான குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

குஜராத்தில் 3000 இசுலாமியர்களை இனப்படுகொலை செய்து நாடு முழுவதும் கலவர பூமியாக மாற்றி தனது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் – பாரதிய ஜனதா கட்சி, தற்போது வரை இஸ்லாமியர்கள் மீதும், காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு தேசிய இன மக்களின் மீதும் வன்மத்துடன் அடக்குமுறையை ஏவி வருகிறது.

இந்தப் பாசிச ஒடுக்குமுறையில் பல ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவை அனைத்திற்கும் மக்கள் மத்தியில் வீதியில் நிறுத்தி தண்டிப்பதற்கு காலம் நெருங்கிக் கொண்டுள்ளது.

சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக இனவெறி, மதவெறியைத் தூண்டும் பாசிஸ்டுகளின் மரணத்தை யாராலும் தடுக்க முடியாது. தவிர்க்க முடியாது. மக்கள் எழுச்சியின் மூலம் அதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். இலங்கை தற்போது கடைசி சாட்சியமாக உள்ளது. வெறும் ஆட்சி பறிப்பு, நாட்டை விட்டு வெளியேற்றுவது என்று நின்றுவிடாமல் மீண்டும் இப்படிப்பட்ட சர்வாதிகார சிந்தனை யாருக்கும் தோன்றாத வகையில் வெகுஜன தண்டனையை நிறைவேற்றுவது ஒன்றே தீர்வாக அமையும்.

பேரறிவாளன் விடுதலை நமக்கு புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இந்த உத்வேகத்துடன் கார்ப்பரேட்-காவி பாசிசத்திற்கு எதிரானப் போராட்டத்தில் முன்னணியாக நின்று களம் காண்போம். எதிரிகளின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் நாட்டையும் மக்களையும் பாதுகாத்து நிற்போம்.

  • சிவராசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here