நெசவு தொழிலில் இருந்து நெசவாளர்களை வெளியேற்றும் சதித்தனம்!

திமுக ஆட்சிக்கு வந்து கடந்த ஓராண்டு காலத்தில் விலையை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக நூல் விலை ஏற்றத்திற்கு இந்திய ஒன்றிய அரசின் மீது பழி சுமத்தி விட்டு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.

மிழகத்தில் பின்னலாடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள திருப்பூர், கரூர், சேலம் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள கைத்தறி, விசைத்தறி தொழில் கூடங்கள் மற்றும் பின்னலாடை நிறுவனங்கள் அனைத்தும் கடந்த மே 15,16 ஆகிய இரண்டு நாட்கள் முழு வேலை நிறுத்தத்தை அறிவித்து வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்ட 36 அமைப்புகள் இந்த இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கு எடுத்துக் கொண்டன. ஏறக்குறைய 30 லட்சம் பேர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்துள்ளனர் என்று தொழிற்சங்க கூட்டமைப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

2014 ஆம் ஆண்டு பாசிச மோடி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது முதல் சுயசார்பு பொருளாதாரத்தை கட்டமைக்கும் சிறு, குறு தொழில்களின் மீது தொடர்ச்சியான தாக்குதலை நடத்தி வருகிறது.

உள்நாட்டில் பருத்திக்கு தேவை இருந்தபோதிலும் பருத்தி பேல்களை வெளிநாட்டுக்கு தாராளமாக ஏற்றுமதி செய்து அதன் மூலம் பல கோடிக்கணக்கான ரூபாயை ஈட்டுகிறது.

அதிலும் குறிப்பாக கடந்த ஒன்றரை மாதங்களாக பருத்தி நூல் மற்றும் கேண்டி நிலை அதிகரித்துக் கொண்டே போவதால் பின்னலாடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சிறு, குறு தொழில்களின் உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

கடந்த ஒன்றரை மாத காலத்தில் மட்டும் ஏறக்குறைய கிலோவுக்கு 70 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. 356 கிலோ எடையுள்ள கேண்டி 76,000 ரூபாயிலிருந்து 1,05,000 ரூபாய்க்கு விலை ஏறி உள்ளது. இதற்கு இணையாக நூல் விலையும் கடுமையாக ஏறியுள்ளது.

தேர்தலில் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்த தமிழகத்தின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த விலை ஏற்றத்திற்கு முடிவு கட்டுவதாகவும் பருத்தி ஏற்றுமதியை கட்டுப்படுத்தி பின்னலாடைத் தொழிலை வாழ்விக்க போவதாகவும் வாக்குறுதி அளித்தார்.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து கடந்த ஓராண்டு காலத்தில் விலையை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

மாறாக நூல் விலை ஏற்றத்திற்கு இந்திய ஒன்றிய அரசின் மீது பழி சுமத்தி விட்டு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.

கொங்கு மண்டலத்தில் பல ஆண்டுகளுக்குப் பின் ஆட்சிக்கு வருவதற்கு பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக தற்போது எது ஒன்றையும் அமல்படுத்தாமல் மக்களை எடுத்து வருகிறது.

மற்றொருபுறம் இந்தியாவின் சுயசார்பு பொருளாதாரத்தை பாதுகாத்து நிற்கின்ற நெசவுத் தொழிலை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு இந்திய ஒன்றிய அரசான பாசிச பாஜக தொடர்ந்து வேலை செய்கிறது

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பருத்தி மற்றும் பஞ்சு பேல்கள், நூல்கள் அனைத்தும் ரிலையன்ஸ் போன்ற பகாசுர நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றிக் கொண்டு மொத்தமாக குடோன்களில் அடைத்து வைத்து செயற்கையாக ஒரு தட்டுப்பாட்டை உருவாக்கி தாறுமாறாக விலையை ஏற்றி கொழுத்து வருகிறது.

 

எனவே இந்தியாவில் உற்பத்தி ஆகின்ற பருத்தி அனைத்தையும் அரசே விவசாயிகளிடமிருந்து நேரடியாக கட்டுப்படியாகும் விலை கொடுத்து கொள்முதல் நடத்தி அதன் மூலம் நெசவு தொழிலுக்கு தேவையான பருத்தி, பஞ்சை குறைந்த விலைக்கு கொடுத்து விவசாயத்திற்கு அடுத்தபடியாக பெரும்பான்மை மக்கள் பங்கெடுக்கும் நெசவுத்தொழிலை காப்பாற்று என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பின்னலாடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் போராடும் போது அவர்களுடன் ஒன்றிணைந்து பிற பிரிவு மக்களையும் போராட தூண்டுவதன் மூலம் இந்திய ஒன்றிய பாசிச பாஜக அரசையும் அதை வேடிக்கை பார்க்கும் தமிழக அரசையும் கோரிக்கைகளை ஏற்கச் செய்யும் வகையில் பணிய வைக்க முடியும்.

  • சண்.வீரபாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here