அன்பார்ந்த தமிழக மக்களே!

இந்திய புரட்சிகர வானத்தில் பலவிதமான அரசியல், அமைப்பு போக்குகள் மத்தியில் மொத்த நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கின்ற புரட்சிகர அரசியலை முன்வைத்து செயல்படுகிறது மக்கள் அதிகாரம்.

2015ஆம் ஆண்டு துவங்கியது முதல் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றது. “ஆள அருகதை இழந்தது அரசு கட்டமைப்பு இதோ ஆள வருகிறது மக்கள் அதிகாரம்” என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் மத்தியில் தனது பிரச்சாரத்தை கொண்டு சென்றது என்பதை அறிவீர்கள்.

தற்போது நாட்டையும் மக்களையும் பாதிக்கின்ற பிரதானமான அரசியல் போக்காக கார்ப்பரேட்- காவி பாசிசம் முன்னிலைக்கு வந்துள்ளது. இதற்குப் பொருத்தமாக மக்கள் அதிகாரத்தின் கொள்கை அறிக்கை மற்றும் அமைப்பு விதிகளை திருத்தி உள்ளோம்.

இவ்வாறு திருத்தப்பட்ட கொள்கை அறிக்கை மற்றும் அமைப்பு விதிகளின் அடிப்படையில் எமது முதல் அரசியல் – அமைப்பு மாநாட்டை நடத்துவதாக தீர்மானித்து கடந்த 20-03- 22 அன்று அமைப்பு மாநாட்டை விருத்தாசலத்தில் நடத்தி முடித்தோம்.

வட்ட, மாவட்ட, மாநில அளவில் நடந்த அமைப்பு மாநாடு மற்றும் அதன் தொடர்ச்சியாக 26-03- 2022 அன்று திருச்சியில் நடந்த அரசியல் மாநாடு ஆகியவற்றின் தொகுப்பை விரைவில் வெளியிடுகிறோம்.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானங்களை அதன் அரசியல் முக்கியத்துவம் கருதி உடனடியாக தற்போது வெளியிடுகிறோம்.


மக்கள் அதிகாரம்
முதல் மாநில மாநாடு
நாள் 20-3-2022 ஞாயிறு விருத்தாசலம்
மாநாட்டு தீர்மானங்கள்


  1. தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற புதிய தாராளவாத கொள்கைகள் நமது நாட்டை மீண்டும் அமெரிக்கா உள்ளிட்ட மேல் நிலை வல்லரசுகளின் வேட்டைகாடாக மாற்றி நாடு மீண்டும் மறுகாலனியாக்கபட்டு வருகிறது. இந்தியாவில் மோடி அமித்ஷா அதிகாரத்திற்கு வந்த பிறகு நாட்டின் இயற்கை வளங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மக்கள் உழைப்பு, மக்களின் சேமிப்பு அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளால் குறிப்பாக குஜராத் பார்ப்பன பார்சி பனியாக்களால் சூறையாடப்படுகிறது. இதன் விளைவாக இந்திய பொருளாதாரம் சீர்குலைந்து உலகிலேயே மிக பெரும் ஏற்றத்தாழ்வு கொண்ட நாடாக இந்தியா மாற்றப்பட்டு இருக்கிறது. விவசாயிகள் மேலும் மேலும் கடனாளியாகின்றனர். இளைஞர்கள் வரலாறு காணாத வேலை இல்லாத் திண்டாட்டத்தில் சிக்கி தவிக்கின்றனர். லட்சக்கணக்கில் சிறு குறு தொழில்கள் அழிந்துள்ளன. இத்தகைய கார்ப்பரேட் கொள்ளைக்கும் பொருளாதார சீர்குலைவிற்கும், ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் இந்து மதவெறி கூட்டம் துணை போகிறது. இத்தகைய தேச துரோக, மக்கள் விரோத செயலை, தேசபக்தி, தீவிரவாத அபாயம், எல்லையில் அச்சுறுத்தல், என்று பிரச்சாரம் செய்து மக்களை திசை திருப்புகிறது. இந்த மக்கள்விரோத நடவடிக்கைகளை அம்பலபடுத்தி மக்கள் உரிமைக்காக போராடுகின்ற அறிவுத்துறையினர், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், உள்ளிட்டவர்களை அர்பன் நக்சல் என தீவிரவாத முத்திரை குத்தி ஊபா, என்.ஐ.ஏ போன்ற கொடூர சட்டத்தில் கைது செய்து விசாரணையின்றி பல ஆண்டுகள் சிறையிலடைத்து சித்திரவதை செய்கின்றனர். இவற்றிற்கு அடிப்படையான கார்ப்பரேட் – காவி பாசிசத்தை தமிழக மக்கள் ஒன்று பட்டுப் போராடி வீழ்த்த வேண்டும் என இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.
  2. ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கூட்டம் லவ் ஜிகாத், மதமாற்றம், ஹிஜாப் தடை, மாட்டுக்கறி, என பல்வேறு வெறுப்பு பிரச்சாரங்களை இஸ்லாமிய, கிறித்தவ, தலித் மக்களுக்கு எதிராக செய்வதுடன் கொடூரமான கும்பல் வன்முறைகளையும் தொடர்ந்து செய்து வருகிறது. அதே போல ஆணாதிக்க, நுகர்வு வெறி ஊட்டப்பட்டு குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். இதற்கு அடிப்படையாக இருப்பது மனுதர்மத்தின் அடைப்படையிலான இந்து மதவெறி அரசியலே. தமிழகத்திலும் இத்தகைய போக்குகள் தலை தூக்குகிறது. எனவே தமிழக மக்கள், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து இந்த காவி பாசிச கூட்டத்தை போராடி முறியடிக்க வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
  3. கோவில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்கிற ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கூட்டத்தின் சூழ்ச்சி பிரச்சாரத்திற்கு தமிழக மக்கள் இரையாக கூடாது. கோவில்கள் மசூதிகள் தேவாலயங்கள் ஆதினங்கள், மடங்கள் இவற்றிற்கு சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்து வரும் சிறு குறு விவசாயிகளின் குத்தகை நிலுவையை ரத்து செய்ய வேண்டும். மற்றும் ஏழைகள் குடியிருக்கும் மனைகளை அவர்களுக்கே பட்டா வழங்கி உரிமையாக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
  4. ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு உரிமை மீண்டும் வழங்கப்பட வேண்டும். காஷ்மீர் மக்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகள் உடனடியாக நிறுத்தபட வேண்டும். பல்வேறு தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவில் அனைத்து தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். என இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.
  5. ஓராண்டுக்கும் மேலாக போராடி ஒன்றிய அரசைப் பணிய வைத்து நாட்டு மக்களுக்கு எதிரான புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வைத்த விவசாயிகளை இம்மாநாடு வாழ்த்தி பாராட்டுகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளான குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டபூர்வ உத்திரவாதம், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுதல், லக்கிம்பூர்கேரியில் விவசாயிகளின் படுகொலைக்கு காரணமான ஒன்றிய அமைச்சரைக் கைது செய்தல் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற கார்ப்பரேட் காவி பாசிச அரசுக்கு எதிராக உறுதியாகப் போராட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
  6. பல்வேறு தேசிய இனங்கள் மொழி பண்பாடு கலாச்சாரத்தை உடைய இந்திய ஒன்றியத்தில் அறிவியலுக்குப் புறம்பான தேசிய இன உரிமைகளுக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை என்ற இந்தியா முழுமைக்குமான ஒரே கல்வி திட்டத்தையும் கிராமப்புற ஏழை மாணவர்களின் உயர் கல்வி உரிமையைப் பறிக்கின்ற நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வு முறைகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதையும், கல்வி முழுவதுமாக மாநில பட்டியலுக்கு மாற்றவும் போராட வேண்டும் என தமிழக மக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
  7. படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை கண்ணியமாக வாழ்வதற்குரிய மாதாந்திர பராமரிப்பு தொகை வழங்கப்பட வேண்டும் எனவும், அதே சமயம் எட்டுமணி நேர வேலை, ஆண் பெண் பாகுபாடின்றி சம வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
  8. நாட்டில் அதிக வேலை வாய்ப்பை வழங்கி வரும் சிறு குறு தொழில்களுக்குப் போதிய கடன் வசதி, வரிச்சலுகை போன்ற உதவிகள் செய்து பாதுகாக்கவும், நெசவாளர்கள், மீனவர்கள் போன்ற அனைத்து பிரிவினருடைய வேலைவாய்ப்பு தொழிலை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக பருத்தி நூலுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட வேண்டும். அதுபோல மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பன்னாட்டு கப்பல்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடிப்பது முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் அதற்கு மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
  9. நாட்டின் கோடிக்கணக்கான தொழிலாளிகள் போராடிப் பெற்ற உரிமைகளை பறித்து கார்ப்பரேட் முதலாளிகளின் கொத்தடிமைகளாக மாற்றும் தொழிலாளர் சட்டத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. இக்கோரிக்கைக்காக வருகிற மார்ச் 28, 29 நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தப்போராட்டத்தில் தமிழக மக்கள் அனைவரும் பங்கேற்று வெற்றிபெறச் செய்ய வேண்டும் என இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.
  10. நாட்டின் கனிம வளங்களைக் கார்ப்பரேட் முதலாளிகள் வரைமுறையின்றி கொள்ளையடிப்பதற்கு, காடுகளை பாதுகாத்து அவற்றை நம்பி வாழும் பழங்குடியின மக்களை ஒன்றிய அரசு ஈவு இரக்கமின்றி வெளியேற்றுவதுடன் போராடுபவர்களைத் தீவிரவாத முத்திரை குத்தி கொலை செய்வதுமான கொடுமைகளை ஒன்றிய மோடி அரசு செய்து வருகின்றது. இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கார்ப்பரேட் – காவி பாசிச அரசை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது
  11. தற்போது உக்ரைனில் நடந்து வரும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். உலக முழுவதையும் ராணுவ ரீதியாக கட்டுப்படுத்தவும் பிற நாடுகளைப் பணிய வைக்கவும் உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பும், பிற ராணுவக் கூட்டும் கலைக்கப்பட வேண்டும். வளரும் நாடுகள், ஏழை நாடுகளைச் சுரண்டி கொள்ளையடிக்க உருவாக்கப்பட்ட சமனற்ற விதிகள் கொண்ட உலக வர்த்தக கழகம் கலைக்கப்பட வேண்டும். இதற்கு காரணமான ஏகாதிபத்தியங்களை வீழ்த்த உலக பாட்டாளி வர்க்கத்தினரும் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் அணிதிரண்டு ஒன்றுபட்டு போராட வேண்டும். என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
  12. கர்நாடக அரசு, பள்ளி கல்லுரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு விதித்த தடையை கர்நாடக உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த தீர்ப்பு அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் தனிநபர் சுதந்திரம், மத சுதந்திரத்திற்கு எதிரானது. இந்தியா முழுவதும் பா.ஜ.க அரசுகள் இஸ்லாமிய சிறுபான்மையினரின் அடையாளங்களை அவர்களது மத உரிமைகளை அழிக்கும் நடவடிக்கையில் இறங்கி இருக்கின்றன. இத்தகைய நடவடிக்கைகளுக்கு நீதிமன்றங்கள் துணைபோகும் போக்கு அதிகரித்து வருகிறது. இது மதசார்பின்மைக்கு மிக ஆபத்தானது. இதற்கு எதிராக அனைத்து மக்களும் போராட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
  13. சிதம்பரம் நடராசர் கோவில் சிற்றம்பல மேடையில், வழக்கம்போல் பக்தர்கள் நின்று வழிபடுவதையும், தமிழில் பாடுவதையும் தடுக்கும் தீட்சிதர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தமிழ் பாடும் உரிமைக்கான அரசாணையினை உடனே அமல்படுத்த வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. மேலும் தீட்சிதர்களின் நிதி முறைகேடு, சட்டவிரோத கட்டுமானங்கள், தீண்டாமை குற்றங்கள், கோவில் சொத்து விற்பனை, ஆகிய தீவிர குற்றச்செயல்கள் மீது உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும், உடனடியாக கோவிலை இந்து அறநிலையத்துறையின் கட்டுபாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றும், தீண்டாமையின் காரணமாக தீட்சிதர்களால் அகற்றபட்ட, 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என்றும், நந்தனார் நுழைந்த தெற்கு வாயில் சுவரை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பிய தீண்டாமைச்சுவரை அகற்ற வேண்டும் என்றும் இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.
  14. தமிழக கோவில்களில் தற்போது தலித் மக்கள், பெண்கள் உட்பட அனைவரும் கோவில் நிர்வாகத்தில் பங்கேற்கின்றனர். அதே போல் தமிழ் வழிபாடு, அனைத்து சாதி அர்ச்சகர் உரிமை, ஆகியவற்றிற்கும் அடிப்படையாக உள்ள இந்து அறநிலையத்துறை சட்டத்தை ஒழிக்கவும், ஆலயங்களை, ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் அமைப்புகளின் அதிகார மையமாக மாற்றவும், பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவிக் கொள்ளவுமான சதியே, இந்து ஆலயங்களை இந்துக்களிடம் ஒப்படை என்ற பிரச்சாரம். ஆகவே தமிழக மக்கள் இந்த பேராபயத்தை தடுத்து நிறுத்த போராட வேண்டும் என இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.
  15. கார்ப்பரேட் – காவி பாசிச அரசை வீழ்த்த அவர்கள் வழியிலேயே இந்துத்வா முனைவாக்கத்திற்கு சென்றால் பலன் தராது என்பதற்கு நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் பாசிச பா.ஜ.க சக்திகளின் வெற்றி ஒரு உதாரணம். வெளிப்படையாக இந்துத்வா என்ற சனாதன கருத்துக்களுக்கு எதிராக தமிழக மரபான பகுத்தறிவு, முற்போக்கு, மூடநம்பி்க்கை எதிர்ப்பு, தாய்மொழிப்பற்று சமூகநீதி, சமத்துவம், போன்ற பார்ப்பனீய எதிர்ப்பு கருத்துக்களை வலிமையாக உயர்த்தி பிடிப்பதோடு அவற்றை நாடு முழுவதும் கொண்டு செல்ல அனைத்து அமைப்புகளையும், கட்சிகளையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
  16. இந்தியாவை ஆரிய-பார்ப்பன சாம்ராஜ்ஜியமாக, மாற்ற வெறி கொண்டு அலையும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பாஜக வின் கனவை நிறைவேற்றத் துடிக்கும் காவி பாசிச கொள்கையும், நாட்டை கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் நலனும் இணைந்ததுதான் கார்ப்பரேட் – காவி பாசிசம். நாட்டு மக்கள் சந்திக்கும் அவலங்கள் அனைத்திற்கும் காரணம் இந்த கார்ப்பரேட் – காவி பாசிசம் தான். இதனை தனித்து ஒரு அமைப்பு மட்டும் போராடி வீழ்த்த முடியாது. எனவே புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகள், அரசியல் கட்சிகள், தனிநபர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக அய்க்கிய முன்னணியை உடனடியாக கட்டியமைக்க இம்மாநாடு உறுதியேற்கிறது.

மாநாட்டுக்குழு
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here